என் மலர்
சிறப்புக் கட்டுரைகள்

காலைப்பொழுதை இப்படி தொடங்கலாமே...

- வெறும் வயிற்றில் தேநீர் அல்லது காப்பி குடிப்பதைத் தவிர்க்க வேண்டும்.
- சூரியன் தோன்றுவதை முதல் ஒரு நிமிடத்திற்குப் பார்க்கும்போது நம் மூளையில் உள்ள பீனியல் சுரப்பி தூண்டப்படுகிறது.
காலைப் பொழுதில் நேரமாக எழுவதை வழக்கமாகக் கொண்டிருப்பது நல்ல பழக்க வழக்கமாகும். இது இயற்கையாகவே அதிக விழிப்புடனும், ஆற்றலுடனும் இருக்க வைப்பதுடன் உற்பத்தி திறனுடன் இருக்க வைக்கிறது. மேலும் உற்சாகத்துடன் அதிகாலையில் எழுந்திருப்பது புத்துணர்ச்சியைத் தருவதுடன், அன்றைய பணிகளைச் சமாளிக்க எளிதாக அமைகிறது.
தினசரி வாழ்க்கையில் கவனச் சிதறல்கள் ஏதும் இல்லாமல் பணிகளில் கவனம் செலுத்துவதற்கு அமைதியான மற்றும் இடைவிடாத நேரம் வழங்குகிறது. அதிகாலையில் எழுந்திருப்பதன் மூலம் முக்கிய திட்டங்களைச் சமாளிக்கவும், அந்த நாளுக்கான இலக்குகளை அமைக்கவும் முடியும். மேலும், நாள் முழுவதும் தேவையான உற்பத்தி வேகத்தை அதிகரிக்கலாம். இது அதிக நேரம் சுறுசுறுப்பாகவும், நேர மேலாண்மைத் திறன்களைக் கொண்டிருப்பதாகவும் தெரிவிக்கிறது.
காலையில் எழுந்தவுடன் உள்ள முதல் மூன்று நிமிடங்களே நம்முடைய அன்றைய 24 மணிநேர மனநிலையில் 80 விழுக்காட்டை உறுதி செய்கிறது, என்று கூறினால் உங்களால் நம்ப முடிகிறதா? சற்றே சிந்தித்துப் பார்த்தால் இது உண்மையென்று புரியும். மிகவும் பதற்றத்துடன் எழுந்தோம் என்றால், அன்று முழுவதும் மனம் படபடப்பாய் உள்ளது போன்றே இருக்கும்.
பெரும்பாலானோர் இரவில் சமூக வலைத்தளங்களில் அதிகநேரம் செலவழித்துவிட்டு, காலம் தாழ்த்தி அலைபேசியில் இத்தனை மணிக்கு எழவேண்டும் என்று நேரத்தைப் பதிவுசெய்துவிட்டு, படுக்கைக்குச் செல்வார்கள். அதிக நேரம் வெளிச்சத்தைப் பார்த்துக்கொண்டே இருந்ததால், படுத்தவுடன் உறக்கம் வருவதில்லை.
உருண்டு புரண்டு எப்படியோ தூங்கிக் காலையில் தாமதமாக எழுந்து மிகவும் பதற்றத்துடன் வீட்டிலுள்ள அனைவரையும், ஒரு உலுக்கு உலுக்கிவிட்டு, வீட்டை விட்டுக் கிளம்புவார்கள். இதையே வழக்கமாகவும் வைத்திருப்பார்கள். இதனால் ஏற்படும் பின்விளைவுகள் பற்றி அவர்கள் எப்போதுமே சிந்திப்பதில்லை. இப்படிச் செய்பவர்களாக நீங்கள் இருந்தால் உங்கள் காலை வேலையை எப்படித் தொடங்கலாம் என்பதற்கு இப்பகுதி உங்களுக்கு வழிகாட்டும்.
அதிகாலை விரைவிலே எழுந்து அமைதியாக வேலையைத் தொடங்கும்போது, அன்று முழுவதுமே நிறைய நேரம் இருப்பது போன்று, மனம் அமைதியாக இருக்கும். எனவே வாழ்க்கை நலமாய் இருக்க, காலைப் பொழுதை எப்படி நாம் தொடங்குகிறோம் என்பது நம் நலனை உறுதிசெய்கிறது என்றே கூறலாம். எனவே காலையில் நீங்கள் செய்ய வேண்டியவற்றை இங்கே பார்ப்போம்.
காலையில் எழுந்து பல் துலக்குவதற்கு முன், ஒன்று முதல் ஒன்றரை லிட்டர் வரை தண்ணீர் குடிப்பதைப் பழக்கப்படுத்திக் கொள்ள வேண்டும். இதனால் ஏற்படும் நன்மைகள் பற்றிப் இப்பகுதியில் கீழே பார்க்கலாம். (குறிப்பு: சிறுநீரகம் மற்றும் இதயம் செயலிழப்பு உள்ளவர்கள் தண்ணீர் குடிப்பதைத் தவிர்ப்பது நல்லது).
வெறும் வயிற்றில் தேநீர் அல்லது காப்பி குடிப்பதைத் தவிர்க்க வேண்டும்.
நாம் உயிர் வாழ்வதற்குக் காரணமான ஐம்பூதங்களின் பகுதியான இயற்கைக்கு நன்றி கூறுவதை, வழக்கமாக்கிக் கொள்ள வேண்டும்.
இளங்காலைச் சூரியன் எழுவதைப் பார்ப்பது, வானின் அழகைக் கண்டு இன்புறுவது இவை நம் மனத்திற்குப் புத்துணர்ச்சியையும், அமைதியையும் நல்கும். சூரியனின் வெப்பத்தால்தான் இவ்வுலக உயிர்கள் அனைத்தும் உயிர்வாழ்கின்றன என்பதை நினைத்துப் பார்க்க வேண்டும்.
நாளும் கண்ணாடி பார்த்து, ஒரு சிறிய புன்னகை பூத்து, இந்த நாளை நான் மனஅமைதியுடனும், மனமகிழ்ச்சியுடனும் எதிர்கொள்கிறேன் என்று உங்களுக்குள் நீங்களே கூறிக்கொள்ள வேண்டும். இவ்வாறு செய்யும்போது உங்களுக்குள் புத்துணர்ச்சி ஏற்படுவதை உணர்வீர்கள்.
நாளும் முறையான உடற்பயிற்சி செய்ய வேண்டும். இப்படிச் செய்வதால் நாள் முழுவதும் சுறுசுறுப்பாக இருக்கலாம். எண்ணங்களே நம் வாழ்க்கையை உறுதி செய்கின்றன என்பதால், நேர்மறை எண்ணங்களை வளர்த்துக்கொள்ளக் காலைப் பொழுதைப் பயன்படுத்த வேண்டும். நேர்மறையான சொற்களோடுதான் பேசுவேன் என்று மனத்திற்குள் கூறிக்கொள்ள வேண்டும்.
இப்படிக் காலை எழுந்தது முதல் மூன்று நிமிடங்களைச் சரிவரப் பயன்படுத்திக் கொண்டோமேயானால், அன்றைய நாளை மகிழ்ச்சியுடன் தொடங்கலாம்.
காலையில் ஏன் தண்ணீர் குடிக்க வேண்டும்?
"நீர்இன்றி அமையாது உலகு" ஆம்! நம் உடல் 80 விழுக்காடு நீரினால் ஆனது. நாம், நம் வீட்டிலுள்ள தூய்மையற்ற பகுதியைத் தண்ணீர் ஊற்றி எப்படிக் கழுவித் தூய்மை செய்கிறோமோ, அதேபோல் நம் உடலில் உள்ள கழிவுகளை நீர் தான் அகற்றுகிறது. நலமாய் இருக்கும் ஒருவர், ஒரு நாளைக்கு 3 லிட்டருக்குமேல் தண்ணீர் குடிக்க வேண்டும். ஆனால் ஒரு சிலர் மட்டுமே இதைச் செய்கிறார்கள். நம் பண்பாட்டுச் சிதைவினால், காலையில் எழுந்தவுடன் காப்பி அல்லது தேநீர் அருந்தும் பழக்கம் எப்படியோ தொற்றிக்கொண்டது. இதுதான் அனைத்து நோய்களுக்கும் முதல் விதை. பகல் முழுவதும் வேலை பார்த்துவிட்டு, இரவில் உறங்கி எழும்போது நம் உடலில் தேங்கி இருக்கும் பல கழிவுகள் அகற்றப்படுகின்றன.
இதற்கு உறுதுணையாகக் காலை எழுந்தவுடன் நாம் குடிக்கும் ஒரு லிட்டர் தண்ணீர் செயல்படுகிறது. முதல் நாள் இரவே பற்களைத் துலக்கிவிட்டுப் படுக்க வேண்டும். அப்போதுதான் காலையில் எழுந்தவுடன் தண்ணீர் குடிக்க வாய்ப்பாக இருக்கும். காலையில் எழுந்ததும் என் தந்தை ஒரு லிட்டர் தண்ணீர் குடிப்பார். அதன் மருத்துவப் பயனை மருத்துவரான பின்தான் நான் உணர்ந்தேன். அதனை யாவரும் தெரிந்து கொள்வது நல்லது என்பதால்தான் இப்பகுதி உருவானது.
மரு.அ.வேணி MD., DM(Neuro), 75980-01010, 80564-01010.
எவ்வளவு தண்ணீர் குடிக்க வேண்டும்?
இந்தக் கேள்வி அனைவரின் மனத்திலும் இருக்கும், 1 முதல் 1.5 லிட்டர் வரை குடிக்க வேண்டும், அதுவும் பல் துலக்குவதற்கு முன்பே குடித்துவிட வேண்டும். இப்படிச் செய்வதால், வயிறு, சிறுகுடல், பெருங்குடல் ஆகியவற்றின் உள்படலம் புத்துணர்ச்சி பெறுகிறது. ரத்தம் தூய்மையாகிறது. இதனால் குடல் புற்றுநோய், ரத்தப் புற்றுநோய் தடுக்கப்படுவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
தண்ணீர் அருந்திய பின் அடுத்த ஒரு மணிநேரத்திற்கு, வேறேதும் உட்கொள்ளக் கூடாது. வியர்வை வெளியாகாத சிலநேரங்களில் நான்கு முதல் ஆறு முறை சிறுநீர் கழிக்க வேண்டி வரும். நம் உடல் தூய்மையாகிறது என்ற மனநிறைவுடன் இதைச் செய்யுங்கள். உடல் எடையற்றது போன்ற ஓர் உணர்வு எழும், இது உங்களுக்கு மேலும் மகிழ்ச்சியைத் தரும். எனவே காலையில் எழுந்து தேநீர் அருந்தி நோயை விலைக்கு வாங்காமல், தண்ணீரைப் பருகி வாழ்வியல் முறை மாற்றங்களினால் வரும் நோய்களில் இருந்து விலகி இருக்கலாமே. சூரியன் தோன்றுவதை முதல் ஒரு நிமிடத்திற்குப் பார்க்கும்போது நம் மூளையில் உள்ள பீனியல் சுரப்பி தூண்டப்படுகிறது. மனிதனின் மூன்றாவது கண் என்று கூறப்படும் இந்தச் சுரப்பி காலைபொழுதில் தூண்டப்படுவது நம் நாளமில்லா சுரப்பிகளின் நலனுக்கு மிகவும் தேவையான ஒன்று.
காலையில் எழுந்து கண்ணாடி பார்த்து நமக்கு நாமே பேசிப் புத்துணர்ச்சியை ஏற்படுத்தும்போது, நம்முள் இருக்கும் தன்னம்பிக்கை மேலும் மேன்மையுறும். வாழ்வின் வெற்றிப் படிகளில் நம்மை இட்டுச் செல்வதற்கு, இப்பழக்கம் துணை நிற்கும். வாழ்க்கையின் வெற்றி என்பது, நாம் செய்யும் இதுபோன்ற சிறிய செயல்களில்தான் உள்ளது. சிறிய செயல்களைச் சரிவரச் செய்யும்போது, வாழ்க்கையில் பெரிய செயல்களினால் கிடைக்கும் வெற்றி தானாகவே நம்மை வந்து சேரும். எனவே காலைப்பொழுதை இனிதே தொடங்கி வாழ்க்கையை இன்புறச்செய்வோம்.