என் மலர்
சிறப்புக் கட்டுரைகள்
நம்புங்கள்! நம்மால் முடியும்!
- ’நம்மால் முடியும்’ எனப் பன்மைச் சொல்லாய்’ மாற்றி, நம்பிக்கையோடு செயல்பட்டால் வெற்றி நிச்சயமாக அமைந்துவிடும்.
- நாட்டில் எத்தனையோ பேர் எத்தனையோ காரியங்களில் நம்பிக்கை அடிப்படையிலேயே ஈடுபடுகிறார்கள்.
நம்மால் முடியும்! என்பதில் அசைக்க முடியாத நம்பிக்கை கொண்டுள்ள வாசகப் பெருமக்களே! வணக்கம்!.
ஒருவரை ஒருவர் சார்ந்து வாழும் உலகியல் வாழ்வில், 'நம்மால் முடியும்!' என்கிற நம்பிக்கைச் சொல்லைத் 'தன்மைச் சொல்லாய்' 'என்னால் மட்டுமே முடியும்!' என்று எண்ணிச் செயல்படுவது ஆணவச் செயலாய் அமைந்து தோல்வியில் கொண்டுபோய் விட்டுவிடும். அதையே கொஞ்சம் விரிவுபடுத்தி, "நாம்" என நம்மோடு ஒரு சிலரை இணைத்துக்கொண்டு, 'நம்மால் முடியும்' எனப் பன்மைச் சொல்லாய்' மாற்றி, நம்பிக்கையோடு செயல்பட்டால் வெற்றி நிச்சயமாக அமைந்துவிடும்.
வாழ்க்கையில் 'நம்பிக்கை' என்கிற சொல்லே மனத்திலும் செயலிலும், வலிமையை ஏற்படுத்துகிற சொல்லாகவே திகழுகிறது. ஒரு செயலில் ஈடுபடுவதற்குமுன் எந்த மனிதனும் அவநம்பிக்கையோடு, இந்தச் செயலில் நாம் தோற்றுவிடுவோம் என்று எண்ணிச் செயலில் இறங்குவதில்லை. எல்லாரும் செயல்திட்டம் வகுக்கும்போதே வெற்றி உறுதி என்கிற நம்பிக்கையோடுதான் ஈடுபடுகிறார்கள்; ஆனால் நம்பிக்கையோடு செயல்திட்டம் வகுக்கிறவர்கள் எல்லாருமா செயலின் இறுதியில் வெற்றிக்கனியைப் பறித்துவிடுகிறார்கள்? இல்லையே!; பலருக்குத் தோல்விதானே பரிசாகக் கிடைக்கிறது!. அப்படியானால் நம்பிக்கையில் கோளாறா? இல்லை திட்டமிடலில் கோளாறா? இல்லை செயல்படுத்தியதில் கோளாறா?. எப்படியாயினும் வலிமைமிக்க ஒரு காரியத்தில் ஈடுபடுவதற்குமுன் நான்குவிதமான செயல்களில் கவனம் வைக்கவேண்டும் என்று வள்ளுவர் சொல்கிறார்.
"வினை வலியும் தன் வலியும் மாற்றான் வலியும்
துணை வலியும் தூக்கிச் செயல்!"
அதாவது ஒரு காரியத்தில் அல்லது ஒரு போட்டியில் இறங்கி வெற்றிபெற வேண்டுமென்றால், முதலில் அந்தக் காரியம் அல்லது போட்டி எப்படிப்பட்டது? என்பதை எடைபோட்டுப் பார்த்து, அதில் வெற்றிபெறுவதற்கான வலிமைச் சாத்தியக்கூறுகளை ஆராய வேண்டும்; அப்போதுதான் அந்தக் காரியத்தில் நம்மால் முழு வெற்றி அடையமுடியும் என்கிற நம்பிக்கை ஏற்படும்.
காரியம் இலகுவானதோ கடினமானதோ அதைச் செய்துமுடிப்பதற்கான திறமையும் வலிமையும் தன்னிடம் இருக்கிறதா? என்கிற சுய பரிசோதனையில் அடுத்து இறங்க வேண்டுமென்கிறார் வள்ளுவர். தன் வலிமை உணர்தல் என்பது தன்னம்பிக்கை யைத் தவிர வேறொன்றுமில்லை. அடுத்து இந்தப் போட்டியில் நமக்கு எதிராக இறங்கக் கூடிய பகைவனின் வலிமையையும் துல்லியமாகக் கணித்து வைத்துக்கொண்டு அதற்கேற்பச் செயலில் இறங்க வேண்டுமாம். அதற்கும் முன்பாக வள்ளுவர் கவனமாகக் கணிக்கச் சொல்வது, இந்தப் போட்டியில் தனக்கும், மாற்றானுக்கும் துணையாக இறங்கக் கூடிய துணைவர்களின் பலத்தையும் பகுத்துக் கண்டறிய வேண்டும் என்பதுதான். இந்த இடத்தில்தான் 'நம்மால் முடியும்' என்கிற நம்பிக்கைச் சொல் பன்மைச் சொல்லாய் மாறி எதிரொலிக்கிறது.
செயலின் வலிமை, தனது வலிமை, மாற்றானுடைய வலிமை, தனக்கும் மாற்றானுக்கும் உள்ள துணைவர்களின் வலிமை, ஆகிய நான்கு வலிமைமைகளையும் ஆராய்ந்து உணர்ந்தே போட்டிக்கோ போருக்கோ இறங்க வேண்டும் என்பது அக்கால வழக்கு.
இன்று வாழ்க்கையில் நேரடிப் போட்டிகளோ நேரடிப் போர்களோ இல்லை; நாமும் மன்னர்கள் இல்லை!. ஆயினும் கண்ணுக்குத் தெரியாத ஆயிரம் முனைப் போட்டிகளில் நாம் வெற்றிபெறவேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்பட்டிருக்கிறோம். நம்முடைய வெற்றிகளைப் பங்கு போடவோ, அல்லது தட்டிப்பறிக்கவோ நேரடிப் பகைவர்கள் இல்லை என்றாலும், நம்முடைய தோல்விகளுக்காக உள்ளூற மகிழ்ச்சி அடையக்கூடிய வஞ்சக நண்பர்கள் புடைசூழ வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.
இவர்களுக்கு மத்தியில் காரியத்தின் வலிமையை , தன்னுடைய வலிமையை, தனக்கு உண்மையான துணைவர்களாக, நண்பர்களாக, ஊழியர்களாக இருந்து உதவப்போகிற உற்றவர்களின் வலிமையை உணர்ந்துகொண்டு செயல்பட்டாலே போதும். நம்மால் முடியும் என்கிற நம்பிக்கை நாற்று முளைவிட்டு, அமோக விளைச்சலைக் கொண்டுவந்து கொட்டும்.
ஒரு பெரும் தொழிலதிபர், ஒரு தொழிற்சாலையை நடத்தி வந்தார்.. அவரிடம் நூற்றுக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணியாற்றி வந்தனர். தொடங்கிய காலந்தொட்டு பத்தாண்டுகளுக்கு நல்ல லாபத்துடன் இயங்கிவந்த தொழிற்சாலை, கடந்த இரண்டு ஆண்டுகளாக நொடித்துப் போகத் தொடங்கியது. இரண்டு ஆண்டுகளில் நட்டம் ஐந்நூறு கோடி ரூபாயை எட்டிவிட்டது.
ஒருநாள் நடைப்பயிற்சிக்காக அந்த நகரத்தில் இருந்த பிரபலமான பூங்காவிற்குப் புதிதாக, தொழிலதிபர் சென்றார். மனமும் உடலும் தோல்வியில் துவண்டு நிற்கும்போது, நடையில் எப்படிக் கம்பீரம் வரும்?. அப்போது அவரைவிட வயதான ஒரு பெரியவர், மகிழ்ச்சித் துள்ளலோடு வந்து இவரது தோள்களைத் தட்டி," ஹலோ! மிஸ்டர்! நடந்து போனால் அதில் ஒரு மிடுக்கு வர வேண்டாமா?. அப்படி என்ன கப்பலா கவிழ்ந்து போய் விட்டது? என்னிடம் சொல்லுங்கள்! கவலையைத் தள்ளுங்கள்!. நான் மிஸ்டர்…………." என்று அந்த நகரத்திலேயே மிக முக்கியமான பணக்காரர் பெயரைத் தன்னுடைய பெயராகச் சொன்னார். நடைப்பயிற்சிக்கே சூட்டுக் கோட்டு சகிதம் வந்திருந்தார்.
தோல்வி கண்டிருந்த தொழிலதிபரை அரவணைப்பாக அழைத்துக்கொண்டு, அந்தப்பூங்காவின் ஓரமாக இருந்த சிமெண்ட் பெஞ்சில் அமர்ந்தார் பணக்காரர். " சொல்லுங்கள்! . உங்களிடம் ஏனிந்த சோகம்?" கேட்டார் செல்வந்தர். " ஐயா! நான் இந்த நகரத்தில் உள்ள அந்தத் தொழிற்சாலையின் உரிமையாளர்; கடந்த பத்தாண்டுகளுக்குமேல் நன்றாக இயங்கிக் கொண்டிருந்த தொழிற்சாலை, சமீபமாக இரண்டாண்டுகளில் பெரும் நஷ்டத்தைக் கண்டுவிட்டது!. ஐந்நூறு கோடி ரூபாய் நட்டம்" என்றார் தொழிலதிபர்.
"ஏதாவது நிதி ஆதாரம் இருந்தால், தொழிலில் மறுபடியும் மீண்டு வந்துவிடமுடியும் என்கிற நம்பிக்கை இருக்கிறதா?" செல்வந்தர் கேட்டார். " நம்பிக்கை நிச்சயம் இருக்கிறது ஐயா!" தொழிலதிபர் சொன்னார். சிரித்துக் கொண்டே கோட் பாக்கெட்டுக்குள்ளிருந்து செக் புக்கையும் பேனாவையும் எடுத்தார் செல்வந்தர். காசோலையில் "ஐந்நூறு கோடிமட்டும்" என்று எழுதித் தன்னுடைய கையெழுத்தைப் போட்டுத் தோல்வியில் துவண்டிருந்த தொழிலதிபரிடம் நீட்டினார்.
" இந்தாருங்கள்!. இந்த நிதியை ஆதாரமாக வைத்துக்கொண்டு, இன்றே நம்பிக்கையோடு உங்கள் தொழிலில் ஈடுபடுங்கள். உங்களுக்கு ஓராண்டு அவகாசம் தருகிறேன்; அடுத்த ஆண்டு இதே நாள் இதே தேதி இதே நேரம் இங்கு வந்து, இதே ஐந்நூறு கோடிரூபாய்க்குக் காசோலை மட்டும் தந்தால்போதும். மகிழ்ச்சியாக இருங்கள்!" என்றார் செல்வந்தர்.
ஆச்சரியத்தோடும் நன்றிப்பெருக்கோடும் செல்வந்தரிடம் காசோலையைப் பெற்றுக் கொண்ட தொழிலதிபர், நேரடியாகத் தொழிற்சாலைக்கு வந்தார். வந்தவுடன் தொழிலாளர்களைத் தன்னுடைய அறைக்கு அழைத்தார். " இதோ பாருங்கள்!, ஐந்நூறு கோடி ரூபாய்க்கான காசோலை!. நாம் நட்டத்திலிருந்து மீண்டு வருவதற்கு நிதியாதாரமாக ஒரு வள்ளல் கொடுத்தது. இந்த முதலை ஒரு வருடத்திற்குள் புரட்டி, மீண்டும் அந்த செல்வந்தருக்குத் தந்துவிடவேண்டும்" என்றார் முதலாளி.
தொழிலாளர்கள் முகத்தில் ஆயிரம்கோடிச் சூரியப் பிரகாசங்கள்!; எல்லாரும் ஒருமித்த குரலில், "நம்பிக்கையோடு உழைப்போம்! இழந்த நட்டத்தை மீட்டெடுப்போம்!" என்று நம்பிக்கை முழக்கம் எழுப்பினர். தொழிலதிபர் பேசினார், "நீங்கள் இருக்கும் அதே நம்பிக்கையோடுதான் நானும் இப்போது இருக்கிறேன். இந்தக் காசோலையை, இப்போது நான் வங்கியில் போட்டுப் பணமாக்கப் போவதில்லை; மாறாக, என்னுடைய அறையிலுள்ள பீரோவில் பத்திரமாக வைத்துப் பூட்டப் போகிறேன்; அவசியமென்று வந்தால் பயன்படுத்துவோம். அதுவரை நம்முடைய நம்பிக்கையை மட்டும் மூலதனமாக வைத்துப் பாடுபடுவோம்!" என்று தீர்க்கமாகக் கூறினார்.
ஓராண்டு ஆயிற்று; அதே நாள் அதே தேதி வந்தது; தொழிற்சாலை முன்னிலும் பலமடங்கு லாபம் ஈட்டியிருந்தது. கம்பெனிக் காசோலையை எடுத்த தொழிலதிபர்,' 550 கோடிகள்' என ஐம்பது கோடி ரூபாய்களை அதிகமாக எழுதி எடுத்துக்கொண்டு, அதே பூங்காவிற்குள் சென்று அந்தச் செல்வந்த வள்ளலைத் தேடினார். அந்தப் பூங்காவில் கடந்த ஆண்டு அவர்கள் இருவரும் அமர்ந்திருந்த அதே சிமெண்ட் பெஞ்சில் அந்தச் செல்வந்தர் அமர்ந்திருந்தார்; அவரருகில் ஒரு வயதான அம்மாவும் அமர்ந்திருந்தார்.
"ஐயா! வணக்கம்! நலமாக இருக்கிறீர்களா?" செல்வந்தரைப் பார்த்துத் தொழிலதிபர் கேட்டார்; இவரைக் கவனிக்காமல், செல்வந்தர் வேறுபக்கமாக முகத்தைத் திருப்பி அமர்ந்திருந்தார். " சமீபத்தில் இவர் உங்களுக்கு ஏதேனும் காசோலை தந்திருந்தாரா?" அந்தம்மா கேட்டார். "ஆமாம் என் நிலைமை கண்டு இரங்கி ஐந்நூறு கோடிக்குத் தந்தார்" தொழிலதிபர் சொன்னார்.
"இவர் என் கணவர்; வசதியானவர்தான்; ஆனாலும் கடந்த இரண்டாண்டுகளாக மனநிலை சரியில்லை; இந்தப் பூங்காவிற்கு வருகிற போகிறவர்களுக்கெல்லாம் காசோலை தரத் தொடங்கிவிட்டார்; தங்களுக்குத் தந்த காசோலை ஏதும் திரும்பி வந்துவிட்டதா?" கேட்டார் செல்வந்தரின் மனைவி. "அம்மா! ஐயா தந்த காசோலையை விட அவர் தந்த நம்பிக்கை வார்த்தை வலிமையானதாக இருந்ததால், நான் காசோலையைப் பயன்படுத்தாமல், நம்பிக்கையை மட்டும் கடைப்பிடித்து மீண்டு வந்திருக்கிறேன்!. நான் இப்போது சொந்தமாகச் சம்பாதித்த பணத்தில் எனது காசோலையை ஐயாவிடம் தந்துவிட்டுப் போக வந்திருக்கிறேன்!" என்றார் மீண்டுவந்த தொழிலதிபர். செல்வந்தர் ஏதுமறியாதவர்போல வானத்தைநோக்கி அமர்ந்திருந்தார்.
இங்கே 'நம்மால் முடியும்' என்கிற நம்பிக்கையை அந்தத் தொழிலதிபர், செல்வந்தர் தந்த காசோலையிலிருந்து பெற்றாரா? அல்லது அவரது நம்பிக்கை வார்த்தையிலிருந்து பெற்றாரா? அல்லது தன்னிடமிருந்தும் தன்னிடம் பணிபுரியும் தொழிலாளர்களிட மிருந்தும் பெற்றாரா?. எது எப்படி ஆயினும் கையில் கிடைத்த காசோலையை முழுமையும் நம்பி அவர், தொழிற்சாலையை மீட்கும் செயலில் ஈடுபடவில்லை என்பதே நிதர்சனமான உண்மை.
நாட்டில் எத்தனையோ பேர் எத்தனையோ காரியங்களில் நம்பிக்கை அடிப்படையிலேயே ஈடுபடுகிறார்கள்; இந்தத் திருமணம் நன்றாக அமையும்! என்கிற அடிப்படையில் தான் ஆணும் பெண்ணும் நம்பிக்கையோடு இல்லற வாழ்விற்குள் நுழைகிறார்கள். ஒவ்வொருவரும் ஒவ்வொருவிதமான தொழிலைக் கோடிக்கணக்கிலோ அல்லது சொற்ப அளவிலோ முதலீடுகளைப் போட்டுத் தொடங்குவதும் நம்பிக்கை அடிப்படையில்தான்., பள்ளிக்குச் செல்லும் பேருந்து, நேரத்திற்கு வந்துவிடும் என்று நம்பி பேருந்து நிறுத்தத்திற்குச் செல்வது முதற்கொண்டு, விண்ணிற்கு அனுப்பும் ராக்கெட் வெற்றிகரமாக விண்ணை எட்டும் என்று நம்பிக்கையோடு அனுப்புவது வரை எல்லாம் நம்பிக்கையின் அடிப்படையில் நிகழ்த்தப்படுவதுதான்.
நம்மால் முடியும் என்கிற கூட்டு முயற்சியில் வலிமையான நம்பிக்கை மட்டுமல்ல, பலருடைய வாழ்த்துகளும் பிரார்த்தனைகளும் அடங்கியிருப்பதால் அது நேர்முறையான வெற்றிகளை மட்டுமே வாரி வழங்கும். நம்புங்கள் நம்மால் முடியும்.
தொடர்புக்கு: 944319008