search icon
என் மலர்tooltip icon

    சிறப்புக் கட்டுரைகள்

    பயிற்சி செய்!
    X

    பயிற்சி செய்!

    • என்னதான் ஏட்டுப் படிப்பின் துணைகொண்டு பட்டங்களும் பதவிகளும் பணி வாய்ப்புகளும் பெற்றாலும், அந்தத் துறை சார்ந்த பயிற்சிகளே நம்மைப் புடம்போடுகின்றன.
    • ஒவ்வொரு மனிதருக்கும் பயிற்சிக்காலம் என்பது தவக்காலம் போன்றது.

    பண்பைப் பயிலும் அன்பானவர்களே! வணக்கம்!

    பயிற்சி இல்லாத எந்த முயற்சியும் பயன் விளைவிக்காது! என்பதே அனுபவம் கற்றுத் தரும் நற்பாடம் ஆகும்.

    'பயில்' என்கிற சொல்லின் அடியாகப் பிறந்ததே 'பயிற்சி'. ஒரு வேலையைச் செய்யத் தொடங்குவதற்கு முன் அதுதொடர்பான அடிப்படை அறிவினைக் கற்றுத் தெளிவதே பயிற்சி ஆகும். 'பயில்' என்பதும் 'கல்' என்பதும் கல்வி கற்றல் முறைகளையே நமக்கு உணர்த்துகின்றன. பயிற்சி தருகின்ற அனுபவப் படிப்பினைகளும் 'படி' என்கிற கற்றலிலிருந்தே தொடக்கம் பெறுகின்றன.

    எந்தத் தொழிலுக்கும் பயிற்சி முக்கியம்; அதுவே தொழிற் பயிற்சி ஆகிறது. எந்தப் போட்டிக்கு முன்னும், எந்தத் தேர்வுக்கு முன்னும் பயிற்சி அவசியம்; போட்டித் தேர்வுகளுக்கும் பயிற்சி அவசியம். அன்றாட வாழ்வியலில் நாம் செம்மையாக வாழ்வதற்கும் முறையான பயிற்சிகள் தேவைப்படுகின்றன.

    உடற் பயிற்சி, மனப் பயிற்சி,

    மூச்சுப் பயிற்சி, நடைப் பயிற்சி,

    எழுத்துப் பயிற்சி, பேச்சுப் பயிற்சி,

    உணவுப் பயிற்சி, உறக்கப் பயிற்சி…

    என வாழ்வியல் பயிற்சிகள் பலவகைகளில் வந்து நம்மைப் பண்படுத்துகின்றன. இப்போது சிரிப்பதற்குக் கூடப் பயிற்சிகள் வந்துவிட்டன.

    தொழில் சார்ந்த நிலைகளில் போர்ப் பயிற்சி முதல் சமையல் பயிற்சி வரை பலவிதமான பயிற்சிகள் உள்ளன.

    பயிற்சிகள் நம்மைப் பண்படுத்துகின்றன. என்னதான் ஏட்டுப் படிப்பின் துணைகொண்டு பட்டங்களும் பதவிகளும் பணி வாய்ப்புகளும் பெற்றாலும், அந்தத் துறை சார்ந்த பயிற்சிகளே நம்மைப் புடம்போடுகின்றன.

    பயிற்சிக்காலங்கள் நமக்குத் தோல்விகளைக் கற்றுத் தருகின்றன. அத்தோடு மட்டுமல்லாமல் தோல்விகளைச் சமாளித்து வெளியேறி வெற்றி காண்பதற்கான வழிகளையும் சொல்லித் தருகின்றன. அப்படிப் பார்க்கும்போது பயிற்சியின் ஒவ்வொரு அடியெடுத்து வைத்தலும் ஒரு படிப்பினையைக் கற்றுத் தருகின்றன. பயிற்சி நல்ல அனுபவப் பாடசாலையாகத் திகழுகிறது.

    பயிற்சி நமக்கு மன ஒருமைப்பாட்டைப் பயிற்றுவிக்கிறது. மனம் போன திசையிலெல்லாம் கவனத்தைச் சிதற விடாமல் கூர்நோக்குச் சிந்தனைக்குள் ஆட்பட வைக்கிறது.

    ஓட்டுநர் பயிற்சி இல்லாதோர் வாகன வண்டிகளை இயக்க முயற்சித்தால் முடிவு விபத்தாகவே விடியும். ஆசிரியர் பயிற்சி இல்லாதோர் பாடசாலை வகுப்பறைக்குள் கற்பிக்கச் செல்வதும், மருத்துவர் பயிற்சி இல்லாதோர் அறுவை சிகிச்சை அறைக்குள் நுழைவதும், விளையாட்டுப் பயிற்சி இல்லாதோர் விளையாட்டுப் போட்டியில் கலந்துகொள்ள மைதானத்திற்குள் புகுவதும் விபரீதங்களையே விளைவாகத் தரும்.

    எந்தச் செயலுக்கு முன்பும் பயிற்சி அவசியமானதாகும்.

    ஓர் ஊரில் ஒருவர் தேநீர்க் கடையொன்று வைத்திருந்தார். அன்றாடம் அவருக்கு நல்ல வியாபாரமும் நடந்து வந்தது. ஊரின் பல்வேறு வகையான வாடிக்கையாளர்களும் வருகை தந்து அவரது தேநீரைப் பாராட்டிப் பருகி மகிழ்ந்தனர். அவரது வாடிக்கையாளர்களில், அந்த ஊரின் பிரபலமான மல்யுத்த வீரரும் ஒருவர்.

    ஒருநாள் மல்யுத்த வீரர் தேநீர்க் கடைக்காரரோடு வாய்த் தகராறில் ஈடுபட்டார். "என்ன தேநீர் இது? இனிப்பு, துவர்ப்பு எதுவுமில்லை! சுடுதண்ணீரைப் போல இருக்கிறதே!?" என்று கேட்டு விட்டார். தேநீர்க் கடைக்காரர் பதிலுக்கு ஒன்றுமே கூறவில்லை. ''என்ன ஒன்றுமே கூறாமல் இருக்கிறாய்? உனக்கு என்ன அவ்வளவு திமிரா? வேண்டுமென்றால் என்னோடு மல்யுத்தச் சண்டைபோட வருகிறாயா? சொல்! என்றைக்கு வைத்துக் கொள்ளலாம் சண்டையை?" என்று பேசிக்கொண்டே போனார் மல்யுத்த வீரர்.

    தேநீர்க்கடைக்காரர் அதற்கும் பதில் ஒன்றும் கூறவில்லை. " சரி! சரி! நீ சண்டைக்கு வருவதற்குத் தயாராகி விட்டாய் போலிருக்கிறது!. ஒரு மாதமில்லை! இரண்டு மாதமில்லை! மூன்று மாதங்கள் தருகிறேன். அதற்குள் பயிற்சி எடுத்துக்கொண்டு என்னுடன் மோத வா!. நீ டீக்கடை வைத்திருக்கிற இந்த இடத்திற்கு அருகில் உள்ள மைதானத்தில் மல்யுத்தப் போட்டியை வைத்துக் கொள்வோம். தயாராய் இரு!" என்று கூறிவிட்டு நடையைக் கட்டினார் மல்யுத்த வீரர்.

    'சாதாரணமாகச் சண்டை போடுவதற்கே தெரியாது! இதில் மல்யுத்தத்திற்கு எங்கே போவது? யாரிடம்போய் பயிற்சி எடுத்து வருவது?'; தேநீர்க் கடைக்காரர், அவர் குருவாக மதிக்கக்கூடிய ஒரு துறவியிடம் சென்று, நடந்ததைக் கூறி ஆலோசனை கேட்டார்.

    எல்லாவற்றையும் கேட்டுக்கொண்ட துறவி, "சரி பயிற்சியை ஆரம்பி!" என்று கூறினார். பதறிப்போன தேநீர்க் கடைக்காரர், ''என்ன குருவே! விளையாடுகிறீர்களா? எனக்குத் தெரியாத வேலையில் எப்படி நான் பயிற்சி எடுத்துக் கொள்வது?" என்று கேட்டார்.

    "அப்படியா? உனக்கு மல்யுத்தம் தெரியாதா?. சரி! உனக்குத் தெரிந்த தொழில் என்ன?"

    "தேநீர் போடுவது! அது மட்டுமே எனக்குத் தெரிந்த தொழில்!"

    "மிகவும் நல்லது! உனது தேநீர் போடும் தொழிலில் உள்ள மிக நேர்த்தியான நுட்பங்களையெல்லாம் நாள்தோறும் பயிற்சிகளின் மூலம் கற்று வா!. மூன்று மாதங்கள் கழித்து மல்யுத்த வீரன்வந்து உன்னைப் போட்டிக்கு அழைப்பான். போட்டிக்குச் செல்வதற்குமுன் ஒரு தேநீர் போட்டுத் தருகிறேன். அருந்திவிட்டு மல்யுத்தம் செய்வோம் என்று கூறித் தேநீர் போட்டுத் தா! பிறகு என்ன நடந்தது என்பதை வெற்றியோடு இங்கு வந்து சொல்! வெற்றி உனக்கே!" என்று ஆசி வழங்கிக் குருநாதர் அனுப்பி வைத்தார்.

    மல்யுத்தப் போட்டிக்கு அவன் அழைத்தால், இவர் தேநீர் போடும் பயிற்சியில் ஈடுபடச் சொல்கிறாரே! என்று யோசித்துக்கொண்டே வந்த தேநீர்க் கடைக்காரர், 'குருநாதர் சொல்லே மந்திரம்!' என்று நினைத்துக்கொண்டு நாள்தோறும் தேநீர் தயாரிக்கும் பயிற்சியில் நுட்பமாக ஈடுபடத் தொடங்கினார். குருநாதர், பத்து நாளுக்கு ஒருமுறை வந்து இன்னும் சிறப்பாகப் பயிற்சி செய்! என்று ஊக்கமளித்து உற்சாகப்படுத்திச் சென்றார்.

    'நடக்கப்போவது மல்யுத்தப் போட்டி! ஆனால் பயிற்சியோ தேநீர்த் தயாரிப்பில்' என்கிற எண்ணமெல்லாம் நாளடைவில் தேநீர்க் கடைக்காரர் சிந்தனையை விட்டு அகன்று விட்டது. முழு வாழ்க்கையும் தேநீர்த் தயாரிப்பது என்பதுபோல மனம் ஒருமைப்பட்டுப் பயிற்சியிலேயே ஆழ்ந்து விட்டார்.

    போட்டிக்குக் குறித்த நாளில் மல்யுத்த வீரர் வந்தார். "போட்டிக்குத் தயாரா? போட்டிக்கு வா!" என அழைத்தார். தேநீர்க் கடைக்காரர், "நீங்கள் என் கடையில் தேநீர் சாப்பிட்டு மூன்று மாதங்கள் ஆகிவிட்டன. இப்போது நான் உங்களுக்காக ஒரு தேநீர் போட்டுத் தருகிறேன், அதை அருந்திய பிறகுப் போட்டிக்குச் செல்லலாம்!" என்றார். ஒத்துக்கொண்ட மல்யுத்த வீரரும், தேநீர்க் கடைக்காரர் அப்போதுதான் போட்டுக்கொடுத்த தேநீரைப் பெற்றுப் பருகத் தொடங்கினார்.

    தேநீர்ச் சுவையில் அப்படியே ஆழ்ந்து போனார். 'அடடா! என்ன அற்புதமான சுவை! இந்த மூன்று மாதத்தில் இவர் பயிற்சியெடுத்துக் கொண்ட இந்தத் தேநீர்த் தயாரிப்பே இவ்வளவு பிரமாதமாக இருக்கிறதே!. அப்படியானால் இந்த மூன்று மாதத்தில் இவர் மல்யுத்தப் பயிற்சி எடுத்திருந்தால் எவ்வளவோ அதிநுட்ப விஷயங்களை யெல்லாம் அழகாகக் கற்றிருப்பாரே!. இவரிடம் போட்டியில் கலந்து கொண்டு தோற்றுப்போவதைவிட, விலகிக் கொள்வது மேல்!' என்று முடிவுக்கு வந்தார் மல்யுத்த வீரர்.

    "உனது தேநீர்ச் சுவையே உனது பயிற்சியின் சிறப்பை எடுத்துரைக்கிறது!. மல்யுத்தப் போட்டி வேண்டாம்! நான் தோற்றுப்போனதாக அறிவித்து விலகிக் கொள்கிறேன்!" என்று கிளம்பி விட்டார்.

    'பயிற்சியெடுத்தது ஒன்று! பலன் பெற்றதோ மற்றொன்று!'- தேநீர்க் கடைக்காரருக்கு மட்டுமல்ல; நமக்கும் இது புரியாத புதிராக இருக்கலாம். ஆனால் பயிற்சியின் ஆழமும் அடர்த்தியும் எல்லாவற்றிற்கும் ஒன்றுதான்.

    ஒருவர் ஒருதுறையில் விற்பன்னராக ஆகிவிட்டால், மற்ற துறையில் எளிதில் பயிற்சி பெற்று ஜொலிக்கத் தொடங்கி விடலாம்.

    ஒவ்வொரு மனிதருக்கும் பயிற்சிக்காலம் என்பது தவக்காலம் போன்றது. சிறுவராய் இருக்கும்போது சைக்கிள் ஓட்டப்பயிற்சி எடுக்கிறோம். கை கால்களில் சிராய்ப்பு ஏற்படாமல் சைக்கிள் ஓட்டக் கற்றுக்கொண்ட மனிதரை எங்காவது கண்டதுண்டா?.

    குரங்குப் பெடல் போட்டே வண்டியைக் கொண்டு செலுத்திய அனுபவங்கள் மறந்தா போகும்?. பயிற்சி முடிந்து லாவகம் வந்தவுடன், பெடலை மிதிப்பதையும், ஹேண்டில் பாரைப் பிடிப்பதையும், பிரேக்கில் கைகள் இருப்பதையும் கவனத்தில் கொண்டா வண்டி ஓட்டுகிறோம்?. ஏதே நினைவுகளில் மனம் லயிக்கக் கைகளும் கால்களும் அதனதன் வேலைகளை அவையவை செய்கின்றன.

    பயிற்சிக் காலங்கள் கடினக் காலங்கள்தாம். எல்லாம் வலிதாங்கும் வாழ்வோ என எண்ண வைக்கும் பொழுதுகள் தாம். அவ்வப்போது தாங்கிக்கொண்டு மீண்டு வரவும் பயிற்சி பெற்றுவிட்டால் நம்மை வெல்ல வேறு எதுவும் கிடையாது என்று ஆகிப்போகும்.

    சைக்கிள் ஓட்டும் பயிற்சி, பிறகு இரு சக்கர வாகனங்கள் ஓட்டும் பயிற்சியை இலகுவாக்கிவிடும். இருசக்கர வாகனங்களை ஓட்டப் பழகிவிட்டால் நான்கு சக்கர வாகனங்கள் ஓட்டும் பயிற்சியும் நாலுகால்ப் பாய்ச்சலில் நமக்கு எளிதே கைகூடி விடும். இப்படித்தான் ஒவ்வொரு பயிற்சியும் இலகுவாக்கி வாழ்க்கையைச் சுலபமாக்கி விடும்.

    பொதுவாக எந்தவொரு தொழிலில் அல்லது செயலில் இறங்குவதற்கு முன்னும் அவற்றிற்கான பயிற்சியில் ஈடுபடுவது நல்லது. ஈடுபடுவது என்றால் முழு ஈடுபாட்டோடு இறங்கிச் செயல்படுவது; எத்தனை இடர்ப்பாடு வந்தாலும் முழு மன உறுதியோடு பயில்வது ஆகும்.

    பயிற்சி என்பது நம்மை முழுமையாகத் தயார்ப்படுத்திக்கொள்வது ஆகும். அதற்குப் பொறுமையும் காத்திருக்கும் பொறுப்புணர்வும் மிக மிக அவசியம்.

    ஒரு வனத்தில் ஒரே மாதிரியான இரண்டு பெரிய மரங்களை அடிப்பகுதியில் அறுத்து வீழ்த்த, ஒரே மாதிரியான இரண்டு ரம்பங்களுடன் இருவர் சென்றனர். ஒருவர் ஒரு மரத்தை மூன்று மணி நேரத்தில் அறுத்து வீழ்த்தி விட்டார். ஆனால் இன்னொரு நபரோ மரத்தை அறுத்து முடிக்க ஐந்து மணிநேரம் எடுத்துக்கொண்டார்.

    மூன்று மணி நேரத்தில் வீழ்த்தியவர் இடையிடையே அரை மணிநேரத்திற்கு ஒருமுறை ஐந்தைந்து நிமிடங்கள் அறுப்பதை நிறுத்தியிருந்தார். ஆனால் மற்றவரோ இடைவெளி விடாமல் அறுத்தார்; அப்படியும் ஐந்து மணி நேரம் ஆயிற்று?

    எப்படி?

    மூன்று மணி நேரத்தில் அறுத்தவர் இடையிடையே ரம்பத்தைக் கூர்மைப்படுத்த ஐந்தைந்து நிமிடங்கள் செலவழித்தார். அதுதான் லட்சியங்களை விரைவாக அடைவதற்கான பயிற்சியும் காத்திருப்பும். கூர்மைப்படுத்தலே மன ஒருமைப்பாடு. அதனால் அவர் விரைந்து செயல் முடித்தார்.

    முனைவர் சுந்தர ஆவுடையப்பன்

    பயிற்சி செயல் வெற்றியின் முன்னோட்டம்!

    பயிற்சி சோதனைகளைச் சாதனைகளாக்கும் பட்டறை!

    பயில்வோம்! ஒவ்வொரு செயலிலும் உயர்வோம்!

    தொடர்புக்கு - 9443190098

    Next Story
    ×