என் மலர்
சிறப்புக் கட்டுரைகள்
ஆழ்கடலுக்குள்ளும் கலக்கினேன்... மீனா மலரும் நினைவுகள்
- வாவ்... கடலின் மேற்பரப்பை பார்ப்பதற்கும் உள்ளே பார்ப்பதற்கும் எவ்வளவு வித்தியாசம்.
- ஆக்லாந்து நகரத்தின் மையப்பகுதியில் 635 அடி உயர கோபுரம் ஒன்று உள்ளது.
கோல்டு கோஸ்ட் கடற்கரையில் இருந்து அந்த மினி கப்பல் புறப்பட தயாரானது. கப்பலில் நான், மற்றும் இரண்டு வெளி நாட்டு சாகச பயணிகள்...
இந்த கடற்கரை ஆஸ்திரேலியா நாட்டில் குயின்ஸ்லாந்து மாநிலத்தில் இருக்கிறது. உலக அளவில் புகழ்பெற்ற சுற்றுலா நகரங்களில் ஒன்று.
இங்கு கடலில் அலைச்சறுக்கு விளையாட்டுகளும், ஆழ்கடலுக்குள் சென்று குதித்து சாகச பயணம் செய்வதும் பிரபலம். அந்த ஆழ்கடல் சாகசத்துக்குத் தான் நானும் தயாராகி கப்பலில் இருந்தேன்.
எங்களை கமந்து கடலுக்குள் கப்பல் பயணித்து கொண்டிருந்தது. கடலுக்குள் சென்ற பிறகு சுவாசிப்பதற்கு ஏதுவாக ஆக்சிஜன் மாஸ்க் முகத்தில் பொருத்தப்பட்டது. தண்ணீருக்குள் சென்ற பிறகு தெளிவாக பார்க்கும் வகையிலான கண்ணாடியுடன் கூடிய தலைக்க வசத்தால் ஆன பிரத்யேக உடையை அணிந்து கொண்டேன்.
பார்ப்பதற்கு விண்வெளி பயணத்துக்கு செல்லும் வீராங்னை போல் இருந்தேன். இந்த சாகச பயணம் என்பது நடுக்கடலில் சென்றதும் அந்த கப்பலில் இருந்து குதிக்க வேண்டும்.
குதித்து கடலின் ஆழமான பகுதிக்கு சென்று தரையை தொட்டு விட்டு வரவேண்டும். கொஞ்சம் ஆபத்தான பயணம் என்பதை மறுப்பதற்கில்லை.
கடலுக்குள் சென்ற பிறகு எப்படி நீந்தி செல்ல வேண்டும். சுவாசிப்பதில் ஏதாவது பிரச்சனை உள்பட வேறு என்ன பிரச்சனைகள் ஏற்பட்டால் கைகளில் எவ்வாறு சைகை காட்ட வேண்டும் என்பதை பற்றியெல்லாம் பயிற்சியாளர் கற்று தந்தார்.
சுமார் அரைமணி நேரம் இந்த பயிற்சி வகுப்பு நடந்தது. எல்லாவற்றையும் கவனமாக கேட்டுக் கொண்டேன். அதற்குள் கப்பலும் நடுக்கடலை வந்தடைந்தது.
எல்லோரும் குதிப்பதற்கு தயாரா? என்று கேட்டதும் உரத்த குரலில் கட்டை விரலை உயர்த்தி உற்சாகமாக ஆமாம்... என்றோம்.
கடலுக்குள் குதித்து பல அடி ஆழத்துக்குள் சென்று கொண்டிருந்தேன். வாவ்... கடலின் மேற்பரப்பை பார்ப்பதற்கும் உள்ளே பார்ப்பதற்கும் எவ்வளவு வித்தியாசம்.
நிலத்தில் பார்க்கும் சூரிய வெளிச்சத்தை உள்ளே பார்க்க முடியாது. நீருக்குள் ஒரு வித்தியாசமான உலகம் தெரிந்தது.
கடல் வாழ் தாவரங்கள்... விதவிதமான மீன்கள்.. அவைகளுக்கு இடையே ஒரு மனித மீனைபோல் நானும் நீந்தி கொண்டிருந்தேன். பெரிய மீன்கள் அருகில் வந்தபோது தான் கொஞ்சம் பயமாக இருந்தது. ஆனால் என்னடா இது நம் இனத்துக்குள் ஒரு புது இனம் நடமாடுகிறதே... பார்க்கவும் வினோதமாக தெரிகிறதே என்று அந்த மீன்கள் நினைத்ததோ என்னவோ பயந்து ஒதுங்கி சென்றது.
சிறிய மீன்களை தொட்டுப்பார்க்க ஆசை. ஆனால் அவை அருகே சென்றதும் லாவகமாக நழுவி நீந்தியது. வித்தியாசமான தாவரங்கள்.. அவைகளை தொட்டு ஸ்பரிசித்தது புதுமையான அனுபவமாக இருந்தது. கடலின் தரையை தொட்டு பார்த்ததும் சூப்பர்.
கடலுக்குள் நாங்கள் நீந்தி கொண்டிருந்தபோது 2 வீரர்களும் எங்களை கண்காணித்தபடி எங்களுடன் கடலுக்கடியில் நீந்தி கொண்டிருந்தார்கள்.
சுமார் ஒரு மணி நேரம் சாகச பயணத்தை முடித்துக் கொண்டு கடலின் மேற்பரப்புக்கு வந்து மீண்டும் குட்டிக்கப்பலில் ஏறிக் கொண்டோம். அந்த பயணம் என்றுமே மறக்க முடியாத சாகச பயணம். இந்த மாதிரி சாகச பயணம் செல்வது.. சாகசங்கள் செய்வது எனக்கு ரொம்பவே பிடிக்கும். அப்படித்தான் ஒரு முறை நியூசிலாந்துக்கு சென்றிருந்தேன்.
அங்கு 'பம்கி ஜம்பிங்' ரொம்ப திரில்லிங்காக இருக்கும். அதாவது மலை முகட்டில் இருந்து கால்களில் கயிறு கட்டி கொண்டு சுமார் 600 அடி ஆழத்தில் தலைகீழாக குதிக்க வேண்டும்.
கீழே ஆழத்தில் தண்ணீர் ஓடி கொண்டிருக்கும். மேலிருந்து குதித்து தண்ணீரை சென்றடைய 25 செகன்டுகள் வரை ஆகும்.
தண்ணீரை தொட்டு விட்டு அதே கயிற்றில் ஆடியவாறு மீண்டும் மலை முகட்டை அடைய வேண்டும். அவ்வளவு தான்.
எப்படி இருக்கும் என்பதை கற்பனை செய்து கொள்ளுங்கள். ஆனால் குதிப்பதற்கு முன்பு ஒரு படிவத்தில் எழுதி வாங்குவார்கள். அதாவது முக்கியமான அறுவை சிகிச்சைகளின்போது பாதிக்கப்பட்ட நோயாளியை ஆபரேசன் தியேட்டருக்கு அழைத்து செல்லும்போது உயிருக்கு ஏதேனும் ஆபத்து நேர்ந்தால் டாக்டரோ நிர்வாகமோ பொறுப்பல்ல என்று எழுதி வாங்கி கொள்வார்கள். அதேபோல் அங்கும் எழுதி வாங்கினார்கள்.
அதை படித்து பார்த்ததும் அம்மாவுக்கும் பயம் வந்து விட்டது. இப்படி ஒரு சாகசமெல்லாம் நீ பண்ண வேண்டாம் என்று கூறி விட்டார்.
நானும் எவ்வளவோ கெஞ்சி பார்த்தேன். ஆனால் அம்மா சம்மதிக்கவில்லை.
கரணம் தப்பினால் மரணம் என்ற கதை தான். உயிருக்கு உத்தரவாதம் இல்லை எனும் போது எந்த தாய் தான் சம்மதிப்பார்?
வேறு வழியில்லை... அந்த வீர சாகச விளையாட்டை கைவிட்டு விட்டேன்.
ஆனால் ஆக்லாந்து நகரத்தின் மையப்பகுதியில் 635 அடி உயர கோபுரம் ஒன்று உள்ளது. அதிலும் இதே போன்ற பம்கி ஜம்பிங் நடப்பதை கேள்விப்பட்டு அங்கு சென்றேன்.
அண்ணாந்து பார்த்தால் தலை சுற்றும் உயரம். அந்த கோபுரத்தின் உச்சியில் இருந்து தான் குதிக்கப்போகிறோம் என்றதும் ரொம்ப திரில்லிங்காக இருந்தது.
கோபுரத்தின் உச்சிக்கு சென்றதும் அங்குள்ள ஏற்பாட்டாளர்கள் வழிகாட்டுதல்படி கோபுரத்தின் உச்சியில் இருந்து குதித்தேன்.
அந்தரத்தில் இருந்து கீழ் நோக்கி பறவை போல் வந்தபோது வாவ்...
கீழே வந்து விழும்போது அடிபடாமல் இருப்பதற்காக மிகப்பெரிய போம் மெத்தை போல் ஒன்றை தரையில் அமைத்து இருந்தார்கள். அதில் வந்து விழுந்ததும் வாவ்... சூப்பர் என்றபடி எழுந்து வந்தேன்.
அடுத்த வாரம் இன்னொரு புதிய தகவலுடன் வருகிறேன்..
(தொடரும்...)