என் மலர்
சிறப்புக் கட்டுரைகள்
ஆன்மிகத்தில் ஆணும் பெண்ணும் சமமே!
- ஆணானாலும் பெண்ணானாலும் ஆன்மிகத்தில் உயர்ந்தோங்கியவர்களை அனைவரும் ஏற்றுக்கொண்டு போற்றியுள்ளனர்.
- ஆன்மிகம் பால் பேதமற்றது. அது ஆண் பெண் இருவருக்கும் பொதுவானது.
மரகதம்மா சென்னையில் வாழ்ந்த பெண்மணி. பிரபல எழுத்தாளரான அமரர் த.நா. குமாரசுவாமியின் சகோதரி. காஞ்சிப் பரமாச்சாரியார் உள்பட பல உயர்நிலை ஆன்மிகவாதிகளால் பெரிதும் மதிக்கப்பட்டவர்.
முருக பக்தராக வாழ்ந்த அவர் எண்ணற்ற முருகன் துதிப்பாடல்களை சொக்க வைக்கும் சுந்தரத் தமிழில் எழுதியுள்ளார். ஒவ்வொரு பாடலும் பக்தி இலக்கியக் கடலில் விளைந்த முத்து.
ஒருநாள் சென்னை காளிகாம்பாள் கோவிலுக்குச் சென்றார் மரகதம்மா. அங்குள்ள முருகன் சன்னிதி முன் அமர்ந்து கண்மூடித் தியானத்தில் ஆழ்ந்தார்.
அவருக்குப் பரவச நிலை ஏற்பட்டது. அப்போது அவர் ஆழ்மனத்தில் ஒரு பக்திக் கவிதை உதித்தது. அதை அவர் பாடியபோது அங்கே அவர் அருகிருந்து கேட்டவர் உள்ளங்கள் உருகின. அவர்கள் அந்தப் பாடலை எழுதி வைத்துக் கொண்டார்கள்.
பின்னாளில் அந்தப் பாடலின் பக்திப் பெருக்கில் பெரிதும் ஈடுபட்டார் ஒரு புகழ்பெற்ற திரைப்பாடகர். தம் உள்ளத்தைக் கொள்ளை கொண்ட அந்தப் பாடலை அவர் மனமுருகிப் பாடினார். எந்தத் திரைப்படத்திலும் இடம்பெறாத அந்த பக்திப் பாடல் ஓர் இசைத்தட்டில் இடம் பெற்றது.
அந்த முருக பக்திப் பாடல், திரைப்பாடலை விடவும் கூடுதலாகப் புகழ்பெற்றதுதான் ஆச்சரியம். பாடலைப் பாடியவர் திருத்தமான உச்சரிப்பிற்குப் புகழ்பெற்ற பாடகரான டி.எம். சவுந்தரராஜன்.
பாடல் `உள்ளம் உருகுதய்யா முருகா உன்னடி காண்கையிலே, அள்ளி அணைத்திடவே என்னுள்ளே ஆசை பெருகுதப்பா..`
அந்த அற்புதமான பாடலை எழுதிய மரகதம்மாதான் பின்னாளில் `ஆண்டவன் பிச்சை` என்ற பெயரில் அழைக்கப்படலானார். புகழ்பெற்ற துறவினியாக வாழ்ந்தவர் அவர்.
அவரை மதித்தவர்கள், போற்றியவர்கள், அவர் பாடலில் ஈடுபட்டவர்கள், அவர் பாடலைப் பாடியவர்கள் எனப் பலர் ஆண்கள்தான். அவரை மனமார குருவாக ஏற்றுப் போற்றுவதற்கு அவர் பெண் என்ற விஷயத்தை எந்த ஆணும் ஒரு தடையாகக் கருதியதில்லை.
ஒரு பெண் துறவி ஆகாயத்தில் பறந்ததைப் பார்த்து வியந்து திரு.வி.க. அவரைப் பற்றித் தன் `உள்ளொளி` என்ற புத்தகத்தில் குறிப்பிட்டிருக்கிறார். சென்னை ராயப்பேட்டை வெஸ்லி கட்டிடத்தின் மாடியில் தான் நின்று கொண்டிருந்ததாகவும் அப்போது ஒரு பெண் துறவி வானத்தில் பறந்ததைத் தான் பார்த்ததாகவும் அவர் எழுதியுள்ளார்.
அதுமட்டுமல்ல. பறந்துவந்த அந்தப் பெண் துறவி அந்தக் கட்டிடத்தின் மாடியில் சற்றுநேரம் இறங்கித் தன்னை ஆசுவாசப்படுத்திக் கொண்டதாகவும் பின் மறுபடி ஆகாயத்தில் பறந்து சென்று விட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்தச் சம்பவத்திற்குப் பிறகு அந்தப் பெண்மணி யார் எனத் தான் விசாரித்து அறிந்ததையும் திரு.வி.க. எழுதியுள்ளார்.
அந்தப் பெண்மணியின் பெயர் சக்கரையம்மா. அந்தச் சக்கரையம்மாவின் குருவும் ஒரு பெண்தான். அந்தப் பெண்மணியின் பெயர் நட்சத்திர குணாம்பா.
ஸ்ரீசக்ர உபாசனை செய்ததால் சக்ர அம்மா எனப் பெயர் பெற்ற அவர், காலப்போக்கில் பொதுமக்களால் சக்கரையம்மா என அன்புடன் அழைக்கப்பட்டார். சென்னையில் சிந்தாதிரிப்பேட்டை அருகே கோமளீஸ்வரன் பேட்டை என்ற இடத்தில் வாழ்ந்தவர் அவர். இளம் வயதிலேயே கணவனை இழந்தவர். எண்ணற்ற இன்னல்களை அனுபவித்து ஆன்மிகத் தெளிவு பெற்றவர்.
மகாகவி பாரதியாரைச் சென்னையில் இருந்து பத்திரமாகப் புதுச்சேரிக்கு தலைமறைவு வாழ்க்கைக்கு அனுப்பிவைத்த மருத்துவர் நஞ்சுண்டராவ், சக்கரையம்மாவையே தன் குருவாகக் கண்டு போற்றினார்.
ஸ்ரீரமணரை தரிசிக்க வேண்டும் எனச் சக்கரையம்மா சொன்னதால் நஞ்சுண்டராவ் அவரைத் திருவண்ணாமலைக்கு அழைத்துச் சென்றார். அங்கே சக்கரையம்மா மகரிஷி ரமணரை தரிசித்து மகிழ்ந்திருக்கிறார்.
சக்கரையம்மாவைச் சற்றுநேரம் உற்றுப் பார்த்த ரமணர், ஆன்மிகரீதியாக அடையவேண்டிய உயரங்கள் அனைத்தையும் சக்கரையம்மா அடைந்துவிட்டார் எனக்கூறி அவரைப் பாராட்டியிருக்கிறார்.
தன் குரு சக்கரையம்மா சித்தி அடைந்தபோது சீடர் நஞ்சுண்டராவ், குரு சொன்ன இடத்திலேயே அவருக்கு ஒரு கோயில் எழுப்பினார். சமாதிக் கோயில் அது. சென்னை திருவான்மியூரில் பாம்பன் சுவாமிகள் சமாதி இருக்கும் இடத்திற்குச் சற்றுத் தொலைவில் அமைந்துள்ளது.
அந்தக் கோவிலில் சக்கரையம்மாவுக்கு ஒரு கருங்கல் சிலை அமைக்கப்பட்டு அது ஆராதிக்கப்பட்டு வருகிறது. தவிர சக்கரையம்மாவின் மெழுகுச் சிலை ஒன்றும் அங்குள்ளது. அந்த மெழுகுச் சிலை சக்கரையம்மாவையே நேரில் பார்த்ததுபோன்ற அனுபவத்தைத் தரும் வகையில் உயிரோட்டத்துடன் அமைந்துள்ளது.
சீடர் நஞ்சுண்டராவ் காலமானபோது, அவர் விருப்பப்படி அவரது சமாதியும் அந்தக் கோயில் வளாகத்திலேயே அமைக்கப்பட்டது.
சக்கரையம்மா ஆலயத்தைத் தற்போது பராமரிப்பவர்கள் டாக்டர் நஞ்சுண்டராவின் வழித்தோன்றல்களான டாக்டர் சுமனா குடும்பத்தினர்.
மகாகவி பாரதியாரும் மருத்துவர் நஞ்சுண்டராவ் மூலம் சக்கரையம்மா பற்றி அறிந்து ஆச்சரியப்பட்டிருக்கிறார். நஞ்சுண்டராவுக்கும் மகாகவி பாரதியாருக்கும் சக்கரையம்மாவை ஆராதிப்பதற்கு அவர் ஒரு பெண் என்பது தடையாகத் தோன்றியதே இல்லை என்பதுதான் இங்கே நாம் அறிய வேண்டிய செய்தி.
ஆணானாலும் பெண்ணானாலும் ஆன்மிகத்தில் உயர்ந்தோங்கியவர்களை அனைவரும் ஏற்றுக்கொண்டு போற்றியுள்ளனர்.
விவேகானந்தர் என்ற ஆணை நிவேதிதா என்ற வெளிதேசப் பெண் தன்னுடைய ஞான குருவாக ஏற்றுக்கொண்டார். அந்த நிவேதிதா என்ற பெண்ணை மகாகவி பாரதியார் என்ற ஆண் தன் குருவாக ஏற்றுக் கொண்டார். இதையெல்லாம் கடந்த கால வரலாறு நமக்குச் சொல்கிறது.
ஆன்மிகத்தில் ஆண் பெண் என்பதால் விளையும் பேதங்கள் ஒரு பொருட்டாக என்றும் இருந்ததில்லை. ஆன்மிகம் பால் பேதமற்றது. அது ஆண் பெண் இருவருக்கும் பொதுவானது. நம் இந்திய ஆன்மிகச் சிந்தனை மரபு இந்த உண்மையையே வலியுறுத்துகிறது.
வட இந்தியாவில் நிர்மலாதேவி என்ற ஒரு பெண்மணி வாழ்ந்தார். அவரது கணவர் பெயர் போலோநாத். திருமணமானதிலிருந்தே தன் மனைவியின் செயல்பாடுகளைக் கண்டு வியந்தார் கணவர்.
பல்வேறு யோக நிலைகளில் தன் மனைவி திகழ்வதையும் நெடுநேரம் அவர் தியானத்தில் ஆழ்வதையும் கண்டு ஆச்சரியப்பட்டார்.
மனைவியின் ஆன்மிக நாட்டத்தைப் பெரிதும் மதித்த அவர், தன் மனைவியின் ஆன்மிக வாழ்க்கைக்கு எந்தவித இடையூறும் செய்யாமல் வாழலானார்.
பின்னாளில் இந்த நிர்மலாதேவி ஆன்மிகத்தின் பேரெல்லைகளைத் தொட்டார். `ஆனந்தமயி` என்ற பெயரால் அழைக்கப்பட்டார்.
முன்னாள் பிரதமர் இந்திரா காந்திக்கு இவர்மேல் பெரும் மதிப்பிருந்தது. இவரிடம் ஒரு ருத்ராட்ச மாலையைக் கேட்டுப் பெற்று அதைக் கழுத்தில் அணிந்துகொண்டார் இந்திரா காந்தி.
`ஒரு யோகியின் சுயசரிதம்` என்ற புகழ்பெற்ற நூலை எழுதியவர் பரமஹம்ச யோகானந்தர். அவர் ஆனந்தமயி தேவி பற்றி அறிந்து அவரைச் சந்திக்கச் சென்றார். ஆனந்தமயி தேவியின் தவப்பொலிவு நிறைந்த தோற்றத்தைக் கண்டு மகிழ்ந்தார். `ஆனந்தமயி பூர்வாசிரமத்தில் திருமணமானவர் ஆயிற்றே, அவரது கணவர் எங்கே?` எனப் பிரியத்தோடு விசாரித்தார் பரமஹம்ச யோகானந்தர்.
`அதோ என் அடியவர் கூட்டத்திடையே முன்வரிசையில் வீற்றிருக்கிறாரே போலோநாத், அவர்தான் நீங்கள் விசாரிக்கும் நபர். இப்போது அவர் என் முதன்மைச் சீடர்!` என ஆனந்தமாக நகைத்தவாறே சொன்னார் அன்னை ஆனந்தமயி.
ராமகிருஷ்ண பரமஹம்சரின் குரு, பைரவி பிராம்மணி என்ற பெண்மணிதான். அந்தப் பெண்மணியிடம் தான் பல்வேறு தாந்திரிக சாதனைகளைக் கற்றுத்தேர்ந்தார் குருதேவர்.
பரமஹம்சர் தன் மனைவி சாரதையை தெய்வமாகக் கருதி பூஜை செய்து வழிபட்டிருக்கிறார் என்பதை அவரது புனித வரலாறு தெரிவிக்கிறது. குருதேவரால் வழிபடப்பட்ட தூய அன்னை சாரதாதேவிக்கு இன்று எண்ணற்ற ஆண் அடியவர்கள் இருக்கிறார்கள்.
ராமகிருஷ்ண மடங்களில் பரமஹம்சர், சாரதாதேவி, விவேகானந்தர் ஆகிய மூவர் திருவுருவங்களும் ஒன்றாக வைத்து வழிபடப்படுகின்றன. பெண் என்பதால் அன்னை சாரதாதேவியின் மதிப்பு எள்ளளவும் குறைக்கப்படுவதில்லை.
சிறிதுகாலம் முன் சித்தி அடைந்த பூஜ்யஸ்ரீ மதிஒளி என்ற துறவினி, பெண்களை மட்டுமல்ல, எண்ணற்ற ஆண்களையும் அடியவர்களாகக் கொண்டவர். அவர் ஆன்மிகத் துறவினியாக மட்டுமல்லாமல் சிறந்த தமிழ் எழுத்தாளராகவும் இயங்கியவர்.
பூஜ்யஸ்ரீ மதிஒளி அவர்களின் அருள் தங்கள் வாழ்வில் பல மாற்றங்களைக் கொண்டு வந்துள்ளதாக அவரது ஆண் அடியவர்கள் பலர் தெரிவித்துள்ளனர்.
இன்றும் மாதா அமிர்தானந்தமயி என்ற கேரளத்தைச் சார்ந்த பெண் துறவியின் திருப்பாதங்களில் ஏராளமான ஆண் அடியவர்கள் விழுந்து வணங்கி அவரது அருளுரையால் ஆன்மிக மலர்ச்சி பெறுவதைப் பார்க்கிறோம். மிகச் சிறந்த பாடகியான மாதா அமிர்தானந்தமயி தன் பக்தி கலந்த இனிய குரலால் பற்பல ஆண் அடியவர்களின் மனத்தைத் தூய்மைப்படுத்தி வருவதையும் காண்கிறோம்.
இந்தியாவில் ஆன்மிக உயர்நிலையை அடைந்து குருவாக இயங்கும் பெண் துறவிகள் இன்னும் பற்பலர் உண்டு. தமிழகத்தில் பழங்காலத்தில் அவ்வையார், காரைக்காலம்மையார், ஆண்டாள் போன்ற பெண்கள் மிக உயர்ந்த ஆன்மிக நிலையை அடைந்திருந்ததைப் பழைய தமிழ் இலக்கியங்கள் குறிப்பிடுகின்றன.
ஆன்மிகத்தில் ஆண் பெண் பேதமில்லை. ஏனெனில் ஆன்மிகம் என்பது அழியும் உடல் சார்ந்ததல்ல. அது என்றென்றும் நிலையாக இருக்கக்கூடிய ஆன்மாவைச் சார்ந்தது.
ஆன்மா அழிவற்றது மட்டுமல்ல. பால்பேதமற்றதும் கூட. இந்தப் பேருண்மையை இந்திய ஆன்மிகம் அன்றுதொட்டு இன்றுவரை உணர்த்தி வருகிறது. வடக்கிலும் தெற்கிலும் பற்பல பெண்கள் ஆணுக்கு நிகராக மட்டுமல்ல, ஆணுக்கே குருவாக இருக்குமளவு ஆன்மிகப் பேரெல்லைகளைத் தொட்டிருக்கிறார்கள் என்பதை வரலாறு பதிவு செய்துள்ளது.
தொடர்புக்கு:
thiruppurkrishnan@gmail.com