என் மலர்
சிறப்புக் கட்டுரைகள்
கரகாட்டத்துக்கு உயிர் கொடுக்கும் பரமேஸ்வரி- தமிழ் வளர்த்த மதுரையில் கலை வளர்க்கும் கலையரசி
- மதுரை திருமங்கலத்தை சேர்ந்தவர் பரமேஸ்வரி. பரம்பரையாக தாத்தா, பாட்டி, அம்மா என்று எல்லோரும் கரகாட்ட தொழிலில் ஈடுபட்டவர்கள்.
- கரகாட்டக்கலை எங்கள் பாரம்பரிய கலை. அதை கற்றுக்கொண்டு ஆடுவதில் எனக்கு மிகுந்த மகிழ்ச்சிதான்.
மச்சான் வண்டிய எடுறா பக்கத்து ஊர்ல நம்ம பரமேஸ்வரி கரகம்டா...
இப்படித்தான் ஏதாவது ஒரு ஊரில் பரமேஸ்வரி கரகம் ஆட வந்தால் சுற்று வட்டார பகுதிகளில் உள்ள இளசுகள் எல்லாம் தூக்கத்தை தொலைத்து அந்த கிராமத்தை நோக்கி படையெடுக்கிறார்கள்.
மதுரையை சுற்றி இருக்கும் பல பகுதிகளில் பரமேஸ்வரி என்றாலே கரகத்தை ரசிப்பவர்கள் கண்களில் ஒருவிதமான பிரகாசம் தெரிகிறது. அந்த அளவுக்கு எல்லோரையும் கட்டிப்போட்டு வைத்திருக்கிறார்.
யார் இந்த பரமேஸ்வரி. அவர் ஆடும் ஆட்டத்தையும் தான் பார்த்து வருவோம் என்று கிளம்பி சென்றால்... திரைப்பட நட்சத்திரங்களுக்கோ, அரசியல் பிரமுகர்களுக்கோ வைக்கப்படுவதை போல பிரமாண்டமான கட் அவுட்டுகளை ஊரின் எல்லையில் அமைத்து இருந்தார்கள். அதை தாண்டி ஊருக்குள் சென்றால் மைதானமே நிரம்பி வழிந்தது. சின்னஞ்சிறுசுகள் முதல் பொக்கை வாய் கிழடுகள் வரை கூடி இருந்தார்கள்.
ஒலிபெருக்கியின் வழியாக இன்னும் சற்று நேரத்தில் கரகாட்ட அரசி... நீங்கள் எதிர்பார்க்கும் பரமேஸ்வரி உங்கள் முன் வரபோகிறார் என்ற குரல் காற்றில் மிதந்து வந்தது. சில நிமிடங்களில் பரமேஸ்வரியும் வந்தார். இதோ வந்துவிட்டார்... என்று ஒலிபெருக்கி உஷார்படுத்தியதும் எல்லோரது கண்களும் அந்த திசையை நோக்கி திரும்பியது.
கரகாட்டத்திற்கே உரிய குட்டை பாவாடை... பல வண்ண மேல்சட்டையுடன் நளினமாக அவர் நடந்து வருவதை பார்த்ததும் வைத்த கண் வாங்காமல் எல்லோருடைய பார்வையும் அவர் மீதுதான் விழுந்தது.
மைதானத்தின் நடுவில் அவர் வந்து நின்றதும் விசில் சத்தம் பறந்தது. கைகளை காட்டியும், கையெடுத்து கும்பிட்டும் ரசிகர்களை உற்சாகப்படுத்திக்கொண்டு ஆட்டத்திற்கு தயாரானார் பரமேஸ்வரி.
சுற்றிலும் நையாண்டி மேளக்காரர்களும், நாதஸ்வர கலைஞர்களும் அடி அடி என்று அடித்து சும்மா கிழி கிழி என்று கிழித்து கொண்டிருந்தார்கள். அந்த இசையே ஆட்டம் போடுவதை போலத்தான் இருந்தது.
வணக்கமுங்க... என்ற வணக்க பாடலோடு கரகாட்டம் களை கட்ட தொடங்கியது. 2 மணி நேரத்துக்கும் மேலாக மைதானமே மயங்கி கிடக்கும் அளவுக்கு ஆட்டம் என்றால் அப்படி ஒரு ஆட்டம். பரமேஸ்வரியின் தலை மீது அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த குடமும், அதன் மேல் ஒரு கிளி பொம்மையும் ஆடியது.
மேளக்காரரின் இசைக்கு ஏற்ப ஆட்டம் அதிர வைத்தது. ஒரு கட்டத்தில் மேளக்காரர்கள் சுழன்று அடிக்க, பரமேஸ்வரியும் தலையில் வைத்த கரகத்தோடு சுழன்று ஆட மைதானமே கிறங்கி போனது. சுமார் ½ மணி நேரம் மேளக்காரர்களின் கையும் ஓயாமல் அடித்துக்கொண்டிருந்தது. பரமேஸ்வரியின் கால்களும் ஓயாமல் ஆடிக்கொண்டிருந்தது. அதைப்பார்த்து கரவொலிகள் அதிர்ந்தன.
சுமார் ½ மணி நேரத்திற்கு பிறகு சுழன்று ஆடுவது நின்றதும் முத்து முத்தாக முகத்திலும், முதுகிலும், இடையிலும் துளிர்த்து நின்ற வியர்வையை ஒற்றி எடுத்துக்கொண்டு மீண்டும் அடுத்த ஆட்டத்திற்கு தயாரானார். அதை பார்த்துக்கொண்டிருந்த ரசிகர்கள் சொன்னார்கள். பரமேஸ்வரி ஆட்டம் என்றால் சும்மாவா... ஒருவர் ஆட்ட ராணி என்றும், இன்னொருவர் சும்மா கலக்குராய்யா... அடுத்த வருஷமும் இவரைத்தான் கரகாட்டத்துக்கு கூப்பிடனும் என்றும் ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாக பேசியபடி நிகழ்ச்சி முடிந்து ஆட்டத்தை பார்த்த கிறக்கத்தோடேயே வீடுகளுக்கு திரும்பி கொண்டிருந்தார்கள்.
யார் இந்த பரமேஸ்வரி?
கரகாட்ட கலை என்பது பழங்காலத்தில் இருந்தே தமிழர்களின் பாரம்பரிய கலையாக தொடர்வது. சமீப காலமாக கரகாட்டம் என்பது அழிந்து போகுமோ என்று பேசப்பட்டது. ஆனால் இன்றும் இந்த பரமேஸ்வரி போன்ற கலைஞர்கள் இந்த கலையை காலத்திற்கு ஏற்றவாறு கட்டிக்காத்து வருகிறார்கள்.
மதுரை திருமங்கலத்தை சேர்ந்தவர் பரமேஸ்வரி. பரம்பரையாக தாத்தா, பாட்டி, அம்மா என்று எல்லோரும் கரகாட்ட தொழிலில் ஈடுபட்டவர்கள். காலில் சலங்கை கட்டிக்கொண்டு, தலையில் கரகத்தை வைத்து அம்மா ஆடுவதையும், அவருக்கு கிடைத்த கை தட்டல்களையும் சிறுமியாக இருக்கும்போதே பார்த்துக்கொண்டிருந்ததாகவும், அப்போதே தன்னை அறியாமல் கால்கள் ஆடத்தொடங்கும் என்றும் சொல்கிறார் பரமேஸ்வரி.
ஆனால் தந்தை இந்த கலையில் ஈடுபடாதவர். எம்.ஏ. பட்டதாரியான அவர் அரசின் கடைநிலை ஊழியராக பணியாற்றினார். அவருக்கு ஆசை. தன் மகள் ஊர் ஊராக சென்று ஆடிப்பிழைக்க கூடாது. ஏதாவது ஒரு வேலையில் அமர்ந்து சம்பாதிக்க வேண்டும் என்பதுதான் அவரது ஆசை. எனவே மகளை கரகாட்ட கலையை கற்றுக்கொள்ள கூடாது என்று கண்டிப்புடன் கூறி வந்தார்.
ஆனால் தந்தை வீட்டை விட்டு வெளியே சென்றதும் தாய் தனது மகளுக்கு தன்னிடம் இருந்த கலைகளை கற்றுக்கொடுக்க தவறவில்லை. பரமேஸ்வரி இளம்பெண்ணாக மாறியதும் ஆடத்தொடங்கி இருக்கிறார். அவர் வெளியே சென்று ஆடுவது தெரிந்தால் தந்தை பரமேஸ்வரியை வெளுத்துவிடுவாராம். இதனால் தந்தைக்கு பயந்தே ஆடி வந்ததாக கூறுகிறார்.
ஆசிரியர் பயிற்சி படித்து முடித்த பரமேஸ்வரிக்கு திருமணம் செய்து வைத்திருக்கிறார்கள். அவரது இல்லற வாழ்வில் 2 குழந்தைகளுக்கு தாயாகினார். அப்போதுதான் விதி வேறு விதமாக விளையாடியது. நோய் வாய்பட்டு பரமேஸ்வரியின் கணவர் இறந்து போனார். அதன் பிறகு மொத்த குடும்ப பாரத்தையும் பரமேஸ்வரி சுமக்க வேண்டியதாயிற்று.
அப்போதுதான் தான் கற்ற கலைதான் இனி நமக்கு சோறு போடும் என்று நினைத்த பரமேஸ்வரி காலில் சலங்கையை கட்ட தொடங்கி இருக்கிறார். அதுவரை மகளை கண்டித்து வந்த தந்தையும் மகளின் எதிர்காலத்தை நினைத்து இனி எப்படியாவது நீ பிழைத்துக்கொள் என்று சொல்லி இருக்கிறார். அதுமட்டுமல்ல மகள் ஆடுவதை சற்று தூரத்தில் நின்று பார்க்கவும் செய்திருக்கிறார். அதை வீட்டுக்கு வந்து பாராட்டவும் செய்வாராம்.
இப்படியே தொடர்ந்து வந்த கரகாட்டத்தின் மூலம் ஓரளவு சம்பாதிக்க தொடங்கி இருக்கிறார். இந்த தருணத்தில்தான் பலரது வாழ்க்கையை புரட்டி போட்ட கொரோனா இவரது வாழ்க்கையையும் புரட்டி போட்டு விட்டது. அதாவது 3 ஆண்டுகள் வரை எந்த நிகழ்ச்சியும் இல்லாததால் முடங்கி போனார்.
அதன்பிறகு இப்போது தான் மீண்டும் கரகாட்டம் களை கட்ட தொடங்கி இருக்கிறது. இப்போது ஓய்வின்றி ஆடிக்கொண்டிருக்கிறார். வாரத்தில் ஒருநாள் அல்லது இரண்டு நாள் ஓய்வு கிடைப்பதே அரிது என்கிறார். இந்தக் கலையையும், இதன் மூலம் அவர் சந்தித்த அனுபவங்களையும் பற்றி கேட்டபோது அவர் கூறியதாவது:-
கரகாட்டக்கலை எங்கள் பாரம்பரிய கலை. அதை கற்றுக்கொண்டு ஆடுவதில் எனக்கு மிகுந்த மகிழ்ச்சிதான். ஆனால் ஒரு காலத்தில் கரகாட்டக்காரிதானே என்று ஏளனமாகத்தான் பார்த்தார்கள். கிராமங்களுக்கு ஆடச்சென்றால் இரவில் வீட்டில் தங்குவதற்கு கூட இடம் தர மாட்டார்கள்.
கரகாட்டத்தை பார்க்க பெண்களும் வருவதில்லை. அதற்கு கலைஞர்களும் ஒரு காரணமாகி விட்டார்கள். பேசும் வசனங்கள் இரட்டை அர்த்தம் கொண்டதாக இருக்கும். எனவே ஆபாசமாக இருக்கும் ஆட்டத்தை குடும்பத்தோடு எப்படி பார்ப்பது என்றுதான் பலரும் தயங்கி ஒதுங்கி இருக்கிறார்கள். கலைஞர்களும் அவ்வாறு ஆடியதற்கு சில காரணங்களும் இருந்திருக்கிறது.
கவர்ச்சியாக ஆடினால்தான் ரசிகர்கள் விரும்பி இருக்கிறார்கள். அதுமட்டுமல்ல கணவனும், மனைவியும் கரகாட்டம் ஆடும்போது அவர்களுக்குள் எந்த சங்கோஜமும் இல்லாமல் தொட்டு விளையாடியும், கட்டிப்பிடித்தும் சர்வ சாதாரணமாக ஆடி இருக்கிறார்கள். அவர்களை பொறுத்தவரை கணவன், மனைவியாக இருக்கலாம். பார்த்துக்கொண்டிருப்பவர்களுக்கு அது விரசமாகத்தான் தெரியும். எனவேதான் யாரும் பார்க்க வருவதில்லை. பலர் வெறுக்கவும் தொடங்கி விட்டார்கள்.
ஆனால் இப்போது கரகாட்ட கலை மக்கள் மத்தியில் மங்கி விட்டது என்றால் என்னால் ஏற்றுக்கொள்ள முடியாது. ஏனெனில் பலர் விழாக்களுக்கு எங்களை அழைக்கிறார்கள். அதிலும் குறிப்பாக அந்த ஊர் பெண்கள் பரமேஸ்வரி குழுவினர்தான் வரவேண்டும் என்று வற்புறுத்தியும் வருகிறார்கள். சில ஊர்களில் இருந்து பெண்களே தொடர்பு கொண்டு எங்களிடம் முன்பதிவு செய்கிறார்கள். இவற்றை பார்க்கும்போது கரகாட்டத்தை ஏராளமான பெண்களும் திரண்டு வந்து ரசிக்கிறார்கள்.
முறைப்படி ஆடினால் இந்த கலையை ரசிப்பதற்கும் மக்கள் ஆர்வப்படுவார்கள் என்றார்.
சும்மாவா மாங்குயிலே...
பூங்குயிலே...
என்று தலையில் கரகத்தோடு நடிகர் ராமராஜன் ஆடிய 'கரகாட்டக்காரன்' இன்றும் ரசிக்கப்படுகிறது.