என் மலர்
சிறப்புக் கட்டுரைகள்
கல்வி ஞானம் வழங்கும் சிருங்கேரி சாரதாம்பிகை
- சாரதா என்றால் சரஸ்வதி அல்லது வாக்கிற்கு அதி தேவதை என்று பொருள்.
- லலிதாம்பிகையின் ஆயிரம் திருநாமங்களில் 123 வது திருநாமமாக அமைவது சாரதாராத்யா என்னும் திருநாமம்.
சங்கர மடம் அமைந்துள்ள தலம் சிருங்கேரி. மேற்குத்தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள சிருங்கேரி. மகத்தான புண்ணிய தலமாகும்.
துங்கா நதிக்கரையில் அமைந்திருக்கும் சிருங்கேரி நுண்ணறிவையும் ஆன்மீக ஞானத்தையும் தந்து இகவாழ்வை சிறப்புறச் செய்து முக்தியை நல்கும் சிறப்பைப் பெற்றதாகும்.
தொன்றுதொட்டு இருந்து வரும் இந்து தர்மத்திற்கு புத்துயிர் கொடுக்க அவதரித்த ஆதிசங்கரர் சிருங்கேரியின் பெருமையை நன்கு உணர்ந்ததோடு உலகிற்கும் உணர்த்தினார். அங்கு சங்கர மடத்தை நிறுவினார்.
சங்கர மடம் அமைந்த வரலாறு:
இதற்கான வரலாறு சுவையானது. பூர்வ மீமாம்சகர்களின் கொள்கையை வலியுறுத்திய குமாரில பட்டரின் சீடரான மண்டனமிஸ்ரரை, அவர் வாதத்திற்கு அழைத்தார். வாதப் போரைத் தொடங்கியபோது அந்த வாதப்போருக்கு நீதிபதியாக இருந்தவர் மண்டனமிஸ்ரரின் மனைவி உபயபாரதி. இருவர் கழுத்திலும் மாலையை அணிவித்துக் கொள்ளச் சொன்ன உபயபாரதி, வாதத்தில் யார் கழுத்தில் உள்ள மாலை வாடுகிறதோ அவரே தோற்றவர், என்று அறிவித்தார். பதினேழு நாட்கள் நடந்த வாதத்தில், மண்டனமிஸ்ரரின் கழுத்தில் இருந்த மாலை வாடியது. சங்கரர் வெற்றி பெற்றார். பின்னர் உபயபாரதியுடனும் வாதம் செய்து, அவரையும் வென்றார் சங்கரர்.
போட்டி விதியின்படி மண்டனமிஸ்ரர் துறவு மேற்கொண்டார். அவருக்கு சுரேஸ்வரர் என்ற சந்யாச நாமம் அளிக்கப்பட்டது. தனது சீடர்களுடன் தெற்கு நோக்கி வந்த சங்கரர் சிருங்க கிரியை வந்தடைந்தார்.
சிருங்க கிரி, மஹரிஷி ரிஷ்ய சிருங்கர் தவம் புரிந்த புண்ய தலமாகும். பவித்ரமான துங்கா நதிக்கரையில் அமைந்துள்ள சிருங்க கிரியின் அற்புதமான இயற்கை வனப்பில் மூழ்கினார் சங்கரர். அவர் அங்கு ஓரிடத்தில் ஒரு அரிய காட்சியைக் கண்டு பிரமித்தார்.
கர்ப்பமுற்ற தவளை ஒன்று வெயிலின் கொடுமை தாங்காமல் தவிக்க, நல்ல பாம்பு ஒன்று இரக்கம் கொண்டு அதன் மீது படம் எடுத்து நிழல் கொடுத்துக் கொண்டிருந்தது. இதுவே தவம் செய்ய சிறந்த இடம் என நிர்ணயித்த சங்கரர் அங்கே ஸ்ரீ சக்ரத்தை ஸ்தாபித்து சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடத்தை நிறுவினார்.
அந்த பீடத்திற்கு சுரேஸ்வரரை முதல் ஆசாரியராகச் செய்து வேத பிரசாரம் செய்யுமாறு ஆணையிட்டார். அதிலிருந்து அந்த ஆசாரிய பரம்பரை, தொடர் சங்கிலியாக இருந்து வருகிறது. இப்போது 36வது பீடாதிபதியாக பல்மொழி வல்லுநரான ஸ்ரீ பாரதி தீர்த்தர் சிருங்கேரி மடாதிபதியாக அருளாட்சி புரிந்து வருகிறார்.
சிருங்கேரி பெயர்க் காரணம்:
சிருங்கேரி என்ற பெயர் எப்படி வந்தது என்பதற்கு ஒரு வரலாறு உண்டு. விபாண்டகர் என்று ஒரு முனிவர் இருந்தார். அவருக்கு ஊர்வசி என்ற அப்சரசின் மூலமாக அபூர்வமான ஒரு ஆண் குழந்தை பிறந்தது. அந்தக் குழந்தையின் தலையில் மான் கொம்பு ஒன்று பிறக்கும்போதே முளைத்திருந்தது. ஆகவே அந்தக் குழந்தைக்கு ரிஷ்ய சிருங்கர் என்று பெயர் சூட்டப்பட்டது. காட்டுக்குள்ளேயே வளர்ந்த குழந்தை வாலிபப் பருவத்தை அடைந்தது. என்றாலும் தந்தையைத் தவிர வேறு யாரையும் ரிஷ்யசிருங்கருக்குத் தெரியவில்லை. அத்தோடு ஆண்-பெண் வேறுபாடு கூட அவருக்குத் தெரியவில்லை.
அந்தச் சமயத்தில் அங்க தேசம் என்ற பிரதேசத்தில் மழையின்றி மக்கள் வாடத் தொடங்கினர். அதை ஆண்டு வந்த ராஜாவான ரோமபாதர் தனது மந்திரிகளை அழைத்து ஆலோசனை நடத்தினார்.
அப்போது ரிஷ்யசிருங்கரைப் பற்றிய விவரங்களைத் தெரிவித்த மந்திரிமார் அவரது காலடி இங்கு பட்டால் உடனே மழை பெய்யும் என்று கூறினர்.
அவரை அழைத்து வருவது எப்படி என்று யோசித்த பின்னர், காட்டிற்குள் உள்ள அவரைக் கண்டுபிடித்து அழைத்து வர பேரழகி ஒருத்தியை அனுப்பினார் ரோமபாதர்.
ரிஷ்யசிருங்கரின் தந்தை தம்மைப் பார்த்தால் கோபப்படுவார் என்பதை உணர்ந்த அழகி அவர் இல்லாத நேரத்தைத் தேர்ந்தெடுத்து ரிஷ்யசிருங்கரின் குடிலை அணுகினாள்.
ஆண்- பெண் வேறுபாடு தெரியாத குழந்தைத் தன்மையை உடைய ரிஷ்யசிருங்கர் அந்த அழகியைப் பார்த்தவுடன் விநோதமான ஒரு ஈர்ப்பு உணர்வை அடைந்தார். அந்தச் சமயத்தில் அவரது தந்தை குடிலுக்குத் திரும்பி வர அழகியும் அவசரம் அவசரமாக தான் பக்கத்தில் உள்ள ஒரு ஆசிரமத்தில் இருப்பதாகக் கூறி அங்கிருந்து அகன்றாள்.
அவள் சென்ற பின்னர் அவள் பால் உள்ள ஈர்ப்பு அதிகமாக அவளைத் தேடிப் புறப்பட்டார் ரிஷ்ய சிருங்கர். அவரது பாதங்கள் ரோமபாதரின் அங்க தேசத்தில் பட்டவுடன் மழை பொழியத் தொடங்கியது.
அவரை வரவேற்ற மகாராஜா மிக்க மகிழ்ச்சி அடைந்தார்; தனது பெண்ணான சாந்தையை அவருக்கே மணமுடித்தும் கொடுத்தார். சாந்தையுடன் அங்கு வாழ்ந்து தன் தவத்தைத் தொடர்ந்தார் அவர்.
சில காலம் கழித்துத் தன் உடலை விட அவர் எண்ணினார். அப்போது அவருடைய உடலிலிருந்து ஒரு மின்னல் தெறித்தது. அது ஒரு லிங்கத்தின் மீது பட்டு மறைந்தது. அந்த லிங்கம் சிருங்கேரியிலிருந்து 10 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள ஜிக்கா என்னும் இடத்தில் உள்ளது. லிங்கத்தின் உச்சியில் கொம்பின் வடு இன்றும் இருக்கிறது. அதைக் காணலாம்.
ரிஷ்யசிருங்கரின் காலடி பட்டு செழிப்புற்ற பிரதேசமாக ஆனதோடு அவர் தவம் புரிந்த தலமாதலால் இந்தப் பகுதி ரிஷ்ய சிருங்க கிரி என்ற பெயரைப் பெற்றது. நாளடைவில் இந்தப் பெயர் மருவி சிருங்கேரி ஆயிற்று.
ராமாயணத்துடன் தொடர்பு கொண்ட தலம்
தசரத மகாராஜா புத்திரர்களை வேண்டி புத்திரகாமேஷ்டி யாகம் நடத்த விழைந்தபோது அந்த யாகத்திற்கு தலைமை ஏற்று அதை நடத்தி வைத்தவர் ரிஷ்ய சிருங்கரே. கவிச் சக்கரவர்த்தி கம்பன் ரிஷ்யசிருங்கரை, 'அருமறை வடிவு போன்று ஒளிர் விசிட்டன்' (மறையே உருவெடுத்தது போன்று விளங்கும் சிறந்தவன்) என்று வர்ணிக்கிறான்.
அப்படிப்பட்ட அரும் முனிவரே ராமரின் ஜனனத்திற்கும் காரணமாக அமைகிறார். ஆக சிருங்கேரி ராமாயண காலத்துடன் தொடர்பு கொண்ட ஒரு பழம்பெரும் அரிய தவ பூமியாக மிளிர்கிறது. இக்காலத்திலும் கூட தவம் புரிய விழைவோர் இந்த அழகிய மலைத் தொடரைத் தேர்ந்தெடுத்து தவம் புரிந்து வருகின்றனர்.
சாரதாம்பிகை
சிருங்கேரி பகுதியில் உள்ள வர்ஷா என்ற மலையிலிருந்து பாய்கின்ற நதியே துங்கா நதி. கிழக்குத் திக்கில் துங்காவோடு கலக்கும் நதியே பத்ரா. அமைதி மிக்க அழகிய வனாந்தரப் பிரதேசத்தில் இந்த இரு நதிகளின் சங்கமத்தில் அமைந்த இடமே சிருங்கேரி.
இங்கு சாரதா தேவியை பிரதிஷ்டை செய்தார் ஆதி சங்கரர். முக்கிய தெய்வங்கள் சாரதாம்பிகை - சந்திர மவுலீஸ்வரர்.
தீர்த்தம் - துங்கபத்ரா தீர்த்தம்.
சாரதா என்றால் சரஸ்வதி அல்லது வாக்கிற்கு அதி தேவதை என்று பொருள்.
சரத் காலத்தில் ஆராதிக்கப்பட்டவள் சாரதை. சரத்காலம் என்பது இலையுதிர் காலம். இது ஐப்பசி, கார்த்திகை மாதங்களைக் கொண்டது. இந்தக் காலத்தில் வரும் நவராத்திரி சாரதா நவராத்திரி எனப்படும். வசந்த காலத்தில் வரும் நவராத்திரி வசந்த நவராத்திரி எனப்படும். இந்த இரு நவராத்திரி காலங்களும் அம்பிக்கைக்கு மிகவும் உகந்த பூஜை காலமாகும். ஆகவே இந்தக் காலத்தில் சிறப்பு பூஜைகள் இங்கு நடத்தப்படுகின்றன. ஆயிரக்கணக்கில் பக்தர்கள் இங்கு திரண்டு விழாவில் கலந்து கொண்டு சாரதையை வழிபடுகின்றனர்.
'சாரத' என்ற சொல்லுக்குப் பண்டிதர்கள் என்ற பொருளும் உண்டு. இவர்களால் பூஜிக்கப்படுபவள் சாரதை.
நுண்ணறிவை அதிகம் கொண்டு மேதையாக ஆக சாரதா வழிபாடு மிகவும் அவசியம்.
லலிதாம்பிகையின் ஆயிரம் திருநாமங்களில் 123 வது திருநாமமாக அமைவது சாரதாராத்யா என்னும் திருநாமம். மேற்கண்ட அர்த்தங்களுடன் சாரதா ஆராத்யா என்று இந்தச் சொல்லைப் பிரித்து விஷ்ணு, பிரம்மா ஆகியோரால் ஆராதிக்கப்பட்டவள். சாரதை என்ற பொருளையும் அறிஞர்கள் கூறுகின்றனர். ஆகவே சாரதாம்பிகையை வழிபட்டோருக்கு அனைத்து தெய்வங்களின் அருளும் கிட்டுகிறது என்பது ஐதீகம்.
சாரதாம்பிகை ஆலயம்:
சிருங்கேரி மடத்தின் உள்ளே இருக்கும் ஸ்ரீ சாரதை, சங்கர பகவத்பாதர், வித்யா சங்கரர், ஜனார்த்தனர், சக்தி கணபதி, வாகீஸ்வரி, ராமர் உள்ளிட்ட ஏராளமான சன்னதிகளை தரிசித்து அன்பர்கள் பக்திப் பரவசம் அடைகின்றனர்.
ஆதியில் பாறையில் செதுக்கப்பட்ட ஸ்ரீ சக்ரத்தின் மீது சந்தனத்தில் செதுக்கப்பட்ட சாரதா தேவியின் மூல விக்கிரகம் அமைக்கப்பட்டது. அந்நியரின் படையெடுப்பால் சிதிலமடைந்திருந்த ஆலயத்தை சிருங்கேரி மடத்தின் 12-வது மடாதிபதியாகத் திகழ்ந்த வித்யாரண்யர் புதுப்பித்தார். இப்போது காணப்படும் சாரதா தேவியின் சுவர்ண விக்கிரகத்தை அவரே சந்தன விக்கிரகத்தின் மீது அமைத்தார்.
தினமும் இங்கு சாரதாம்பிகை- சந்திரமவுளீஸ்வர் பூஜை சங்கராசாரியரால் நடைபெறுகிறது. ஆதி சங்கரர் ஸ்தாபித்த படிக லிங்கத்திற்கு அபிஷேகம் செய்யப்படுகிறது. இந்த தீர்த்தம், சாரதா தேவியின் குங்கும பிரசாதம், ஆசாரியர் அருளித்தரும் மந்திர அட்சதை ஆகியவற்றைப் பெற்று பக்தர்கள் பெருமகிழ்ச்சி அடைகின்றனர்.
சிருங்கேரி சாரதாம்பிகையை தரிசிப்பதன் மூலம் பிரம்மா, விஷ்ணு, சிவன், சரஸ்வதி, லட்சுமி, பார்வதி ஆகிய அனைத்து தெய்வங்களின் அருளையும் பெறலாம் என்பது ஐதீகம்.
சாரதாம்பிகையே சரஸ்வதி என்பதால் கல்வியை ஆரம்பிக்கும் இளம் சிறார்கள் இங்கு வந்து அதைத் தொடங்குகின்றனர்.
இருக்கும் இடம்: சிருங்கேரி, கர்நாடகத்தில் சிக்மகளூர் மாவட்டத்தில் உள்ளது. சென்னையில் இருந்து சாலை வழியாகச் சென்றால் சுமார் 648 கிலோமீட்டர் தூரத்தில் இத்திருத்தலம் அமைந்துள்ளது. சாரதாம்பிகை தோத்திரம் சாரதையை வணங்குவோர் 'பரம வித்யாவை' அடைகின்றனர் என்று கூறி அருளுகிறது.
தொடர்புக்கு:-
snagarajans@yahoo.com