search icon
என் மலர்tooltip icon

    சிறப்புக் கட்டுரைகள்

    அழகும் ஆன்மிகமும் சங்கமம்- மனதை மயக்கும் முர்தேஸ்வர்

    • 209 அடி உயரமுள்ள கோபுரம், உலகின் 2வது உயரமான சிவன் சிலை, அதைச்சுற்றி அழகிய பூங்கா என்று ஒரு சிறிய குன்றின் மேல் கோவில் உள்ளது.
    • ராவணன் கயிலையில் சிவனிடம் பெற்ற ஆத்மலிங்கத்தை, விநாயகர் தரையில் வைக்க, கோகர்ணத்தில் மகாபலேஸ்வராக நிலை பெற்றார்.

    பயணங்கள் எப்பொழுதும் இனிமையானவை. கற்றுக்கொடுப்பவை. ஒவ்வொரு இடமும், கல்லும், மண்ணும், மலையும், மரமும், ஆறும், கடலும் ஏதோ ஒரு கதை சொல்லும். மனதைத் துள்ளச் செய்யும். புத்துணர்வு ஊட்டும்.

    நாங்கள் சென்ற இடங்களோ நீண்ட அரபிக்கடலும், அதை முட்டும் மேற்குத்தொடர்ச்சி மலைகளும், கற்பாறைகளுடன் அழகிய கடற்கரைகளும், ஆங்காங்கே சலசலத்து ஓடும் தூய்மையான ஆறுகளும், மலைகளும், உயர்ந்த மரங்களுடன் காடுகளும் நிறைந்த இயற்கை எழில் கொஞ்சும் கர்நாடக மாநிலத்தின் மேற்குப் பகுதி.

    இவற்றுடன் மங்களூரு, உடுப்பி, கோகர்ணம், முருடேசுவர், கொல்லூர், சிருங்கேரி, ஹொரநாடு, சிர்சி, இடுகுஞ்சி, ஆனைகுடா, கெட்டில் என்று பல ஊர்களில், மனதிற்கு அமைதி, நிறைவு, ஆனந்தம் அளிக்கும் அருமையான கோவில்கள்.

    கேரளத்தை அடுத்து, அதே மாதிரி நில அமைப்புடன் - அரபிக்கடல், அடுத்தே மேற்குத் தொடர்ச்சி மலைகள், இடையிடையே தெள்ளிய நீருடன் ஆறுகள் - என்று அமைந்துள்ளது. தட்ப வெப்பம், அதிக மழை என்று பருவநிலையும் ஒரே மாதிரி உள்ளதால், ஓடு வேய்ந்த இரண்டு அடுக்கு வீடுகள், கோவில்கள், வாழ்க்கை முறைகள், கதகளியை ஒத்த யட்சகானம் போன்ற நாட்டுப்புறக் கலைகள் என்று கேரளாவைப் போன்றே உள்ளது.

    அமைவிடத்தை வைத்து தான் வாழ்க்கை முறைகள், வழிபாட்டு முறைகள் அமைகின்றன. மலைகள், காடுகளுடன், பருவமழையும் அதிகம் பொழியும் இடமானதால் பல கோவில்கள் கேரளத்தில் உள்ளது போன்று மரம், ஓடு வேய்ந்த கூரைகளுடள் உள்ளன. பல கோவில்கள் பழமையே தெரியாமல் புதுப்பிக்கப்பட்டும் உள்ளன. சில கோவில்களில் பிற்காலத்தில் நுழைவு வாயில்கள் போல் கோபுரங்கள் அமைக்கப்பட்டிருந்தாலும், நமது கோவில் அமைப்பில் இல்லாமல் மாறுபட்டு உள்ளன.

    கோவில்களும் சரி, மற்ற இடங்களும் சரி தூய்மையாக இருக்கின்றன. கோவில்களில் பணம் பிடுங்குவது இல்லை. பிடித்துத் தள்ளுவது இல்லை. அருகில் சென்று சாமியைப் பார்க்க முடிந்தது. அன்னதானம் சிறப்பாகப் பல கோவில்களில் நடைபெறுகிறது.

    இந்த பயணத்தில் என்னை மிகவும் கவர்ந்த முர்தேஸ்வர் பற்றி முதலில் பார்ப்போம்..

    கடலும் கடல் சார்ந்த இடமா!

    காடும் காடு சார்ந்த இடமா!?

    மலையும் மலை சார்ந்த இடமா!?

    எல்லாம் ஒன்றாக இயற்கை அமைத்த அழகோவியம் முர்தேஸ்வர். அழகான கடற்கரை, அடுத்து அடர்த்தியான மரங்கள், பின்னால் மலைகள் என்று தீட்டப்பட்ட ஓவியம் போன்று அழகாகக் காட்சியளிக்கின்றது.

    மேற்கு கர்நாடகாவில், உத்தர கன்னடா மாவட்டத்தில், மங்களூருவுக்கு வடக்கே சுமார் 160 கிமீ தூரத்தில் உள்ள கடற்கரை நகரம் முர்தேஸ்வர். கன்னியாகுமரி - மும்பை தேசிய நெடுஞ்சாலை இந்நகருக்கு அருகில் 1 கி.மீ தொலைவில் செல்கிறது. பெங்களூரு மற்றும் முக்கிய நகரங்களில் இருந்து பேருந்து வசதியும் உண்டு. தொடர் வண்டியாலும் இணைக்கப்பட்டுள்ளது. அருகில் உள்ள விமான நிலையம் மங்களூரு.

    சிவபெருமான் எழுந்தருளிஅருள்பாலிக்கும் இக்கோவில் முழுமையாகப்புதுப்பிக்கப்பட்டுள்ளது.

    209 அடி உயரமுள்ள கோபுரம், உலகின் 2வது உயரமான சிவன் சிலை, அதைச்சுற்றி அழகிய பூங்கா என்று ஒரு சிறிய குன்றின் மேல் கோவில் உள்ளது.

    மூன்று புறமும் அரபிக்கடல் சூழ்ந்திருக்க, காலைக் கதிரவன் எழுவதைப் பார்ப்பதே ஓர் ஆனந்த அனுபவம்.

    ராவணன் கயிலையில் சிவனிடம் பெற்ற ஆத்மலிங்கத்தை, விநாயகர் தரையில் வைக்க, கோகர்ணத்தில் மகாபலேஸ்வராக நிலை பெற்றார். கதையை கோகர்ணம் கோவில் பற்றிய பதிவில் விரிவாகப் பார்க்கலாம்.

    தன் பலத்தையெல்லாம் காட்டி, ராவணன் எடுக்க முயன்றபோது, ஆத்மலிங்கத்தின் கவசம், போர்த்தியிருந்த திருவஸ்திரம், மற்றும் சில பகுதிகள் விழுந்த 4 இடங்களும் - தாரேஸ்வர், குணவந்தேஸ்வர், முர்தேஸ்வர், ஷீஜேஸ்வர் - கோகரணமும் சேர்ந்து, சிவன் அருள் புரியும் ஐந்து தலங்கள் ஆயின.

    சிவனது ஆடை கந்தகிரி என்ற சிறு குன்றின் மேல் விழுந்ததாம். அதனால் ஊரும் மிர்தேஸ்வர் ஆகி முர்தேஸ்வர் ஆனது. இங்கும் தரைத் தளத்திற்குக் கீழே, வட்டமான பள்ளத்தில், சிறிய பாறைத் துண்டாக - மிர்தேச லிங்கமாக இருக்கிறார். அருகில் சென்று காண அனுமதியில்லை. அபிஷேகம், ருத்ராபிஷேகம், ரதோற்சவம் போன்ற சிறப்பு பூசைகள் செய்பவர்கள் தான் கருவறை அருகில் சென்று காண முடியுமாம். பின்னால் கவசத்துடன் லிங்க வடிவம் வேறு இருப்பதால் மக்களுக்கு இவர் இருப்பதே தெரியவில்லை.

    பழைய கோவில் எப்படி இருந்ததோ தெரியாது. இப்பொழுது தங்க வண்ணத்திலும், இரவில் மின்விளக்கு அலங்காரங்களுடன் தகதகத்துக் கொண்டிருக்கிறது.

    பெரிய வெளி முன்புறம் இருக்க, பெரிய யானைச் சிலைகள் கம்பீரமாக நிற்க, அடுத்து 20 நிலையுடன் 209 அடி உயரக் கோபுரம். கருவறை முன் இல்லாமல், மதிற்சுவர் இல்லாமல் கோபுரம் தனித்து நிற்கிறது. நம்மூர்க் கோபுரங்கள் போல் அடிப்பாகம் அகன்று, மேலே குறுகலாக இல்லாமல், மாறுபட்டு இருக்கும் மாடர்ன் கான்கிரீட் கோபுரம். மின்தூக்கி மூலம் கோபுரத்திற்குள் மேலே சென்று, பெரிய சிவன் சிலை, அரபிக்கடல், கிழக்கே மலைகள் எல்லாம் பார்க்கலாம்.

    கோபுர வாயிலின் வழியாக நுழைந்து, இடப்புறம் சென்றால் கொடிமரம் கடந்து உள்ளே செல்கிறோம். முன்னால் அழகிய நந்திதேவர் அமர்ந்திருக்கிறார். பெங்களூரு அல்சூர் கோவில் வெண்கல நந்தி போல், சங்கிலிகள், மணிகள், பவித்திர முடிச்சு எல்லாம் அமையப் பெற்ற கல்நந்தி.

    அடுத்து முன்மண்டபத்துடன் கருவறை, விமானம் எல்லாம் நம்மூர்க் கோவில் போல் திராவிடக் கலை வடிவில் உள்ளது. சிவனாரை வணங்கி வெளியே திருச்சுற்றில் பிள்ளையார், அம்மன் சன்னதிகள். இடையே அனுமார், நாகதேவதைக்கு சிறு சன்னதிகள். எல்லாக் கர்நாடகக் கோவில்களிலும் அநேகமாக நாக தேவதை, அனுமார் சன்னதி உள்ளது. மலையும், காடும் மிகுதியாக உள்ள இடமாதலால். நாக வழிபாடு அதிகம் உள்ளதோ? தங்கத்தேர் கண்ணாடித் தடுப்பிட்டு பார்க்கும்படி வைத்திருக்கிறார்கள்.

    கோவிலை அடுத்து சற்றே உயரமான பகுதியில் உலகின் 2வது பெரிய சிவன் சிலையைக் காணலாம். இதை விடப் பெரியது நேபாளத்தில் உள்ளது போல. 123 அடி உயரமுள்ள இப்பெரிய சிலையைச் செய்வித்தவர் ஆர்.என். ஷெட்டி என்ற செல்வந்தர். 5 கோடி ரூபாய் செலவில் இரண்டு ஆண்டுகளில் கட்டப்பட்டதாம்.

    சுற்றிலும் பச்சைப் பசேல் என்று பெரிய பூங்கா. சிவன் முன் பெரிய நந்தி, ராவணன் மாடு மேய்க்கும் சிறுவனாக நின்ற கணபதியிடம் லிங்கத்தைக் கொடுக்கும் காட்சி, கங்கையைப் பகீரதன் சிவனிடம் வேண்டுவது, கீதா உபதேசக் காட்சி, சூரியத்தேர் என்று பெரிய பெரிய சிலைகள் உள்ளன. சிவன் சிலைக்கடியில் கோவில் தலவரலாறு ஒளி, ஒலியுடன் நாமே பூசை செய்யும் வகையில் லிங்கம் அமைக்கப்பட்டுள்ளது.

    சுற்றிக் கடற்கரை அழகோ அழகு. கடல் மூன்று புறமும். சூழ்ந்திருக்க, மேற்கு அரபிக் கடல் முன் சூரியோதயத்தையும் பார்த்தோம். அலைச்சத்தமே இல்லை.

    பல கடல் விளையாடல்கள் உள்ளன. இதயவடிவுள்ள நேத்ரானி தீவிற்குப் படகில் சென்று ஸ்கூபா டைவிங், ஸ்நார்க்கலிங் செல்லலாம்.

    கோவிலும் சரி, சுற்றுப்புறங்களும் சரி மிகச் சுத்தமாக உள்ளன. அந்தப் பகுதியில் நாங்கள் சென்ற கோவில்கள் அனைத்திலும், அருகே தூய்மையான கழிவறை வசதிகள் இருந்தன.

    நாங்கள் இரவில் முர்தேஸ்வர் போய்ச் சேர்ந்தோம். கோபுரம், கருவறை, சன்னதி விமானங்கள், சிவன் சிலை, கடற்கரை எல்லாம் மின்னொளியில் ஒளிர்ந்து கொண்டிருந்தன. அவை மனதை அள்ளும் காட்சி!

    சுற்றுலா செல்வதற்கு மிக அருமையான இடம் முர்தேஸ்வர். கோர்ணம், கொல்லூர், சிர்சி போன்ற பல ஆன்மீகத் தலங்களும் அருகில் உள்ளன. 10ம் நூற்றாண்டைச் சேர்ந்த சோழீசுவரர் கோவிலும் இவ்வூரில் இருப்பதாகப் பின்னால் இணையத்தில் பார்த்தேன். ஊரின் சிறப்புகளையெல்லாம் சிறு கையேடாக விடுதியில், கோவிலில் வைத்திருந்தால் உதவியாக இருக்கும்.

    அமைதியாக விடுமுறையைக் கொண்டாடவும் ஏற்ற இடம் முர்தேஸ்வர். கோவிலுக்குப் பின்னால் குன்றின் மேலேயே ரெசிடென்சி விடுதி உள்ளது. அருகில் உள்ள கடற்கரைகள் சென்று வரலாம்.

    விடியற்காலையில் அது ஒரு அழகு.கோவில், கடல், மலை, மரங்கள் எல்லாம் கலந்த அருமையான சுற்றுலாத் தலம் முர்தேஸ்வர்.

    தொடர்புக்கு,

    - anarchelvi@gmail.com

    Next Story
    ×