search icon
என் மலர்tooltip icon

    சிறப்புக் கட்டுரைகள்

    தமிழன்னையின் தவப்புதல்வர் காமராஜர்: லால்பகதூர் சாஸ்திரியின் மறைவையொட்டி இந்திரா காந்தியை பிரதமராக்கிய காமராஜர்
    X

    தமிழன்னையின் தவப்புதல்வர் காமராஜர்: லால்பகதூர் சாஸ்திரியின் மறைவையொட்டி இந்திரா காந்தியை பிரதமராக்கிய காமராஜர்

    • மொழி பிரச்சினை தேசிய கண்ணோட்டத்தில் பரிசீலிக்கப்பட வேண்டும்.
    • அகில இந்திய தலைவராக இருந்த காமராஜர் மக்களிடம் யுத்த நிதி திரட்டி பெரும் தொகையை சாஸ்திரியிடம் வழங்கினார்.

    ஜவகர்லால் நேரு பிரதமராக இருந்தபோது 1962-ல் எப்படி இந்தியாவுக்கும் சீனாவுக்கும் போர் மூண்டதோ, அதேபோன்று லால் பகதூர் சாஸ்திரி பிரதமராக இருந்த போது இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் 1965-ம் ஆண்டு பிப்ரவரியில் போர் மூண்டது.

    ஏற்கனவே இயற்கைப் பேரிடர் வந்த பாதிப்பும் நாடு முழுக்க ஏற்பட்டிருந்த உணவு பிரச்சினையும் தென்னிந்தியாவில் குறிப்பாக தமிழகத்தில் ஏற்பட்ட இந்தி எதிர்ப்பு போராட்டமும் 1965-ம் ஆண்டு இந்தியாவுக்கு ஒரு சோதனையான காலமாக இருந்தது.

    கூடுதலாக இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் நீண்ட காலமாக இருந்து வந்த எல்லை பிரச்சினை வெடித்து இந்தியாவின் பொருளாதாரத்தை பாதிக்கும் அளவுக்கு விஸ்வரூபம் எடுத்து நின்றது.

    தமிழகத்தில் ஏற்பட்டிருந்த இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் மாணவர்கள் களத்திலே இறங்கி நின்றதால் 1965 ஜனவரி 25-ந்தேதி அன்று தமிழகமே கொந்தளித்தது. பொதுச் சொத்துகளுக்கு மிகப்பெரிய சேதம் ஏற்பட்டது. தந்தி தபால் நிலையங்கள் தாக்கப்பட்டன. நிலவரத்தை கட்டுப் படுத்த தடியடியில் போலீசார் இறங்கினர். தீக்குளிப்பு ஆங்காங்கே நடை பெற்று பலபேர் உயர்நீத்தனர். போலீசார் சுட்டதிலும் பல பேர் பலியாயினர்.

    இந்த அளவுக்கு இந்தி எதிர்ப்புப் போராட்டம் நிகழுமென்று எவருமே எண்ணியதில்லை. எதிர்க் கட்சியினரும் நினைக்கவில்லை. நிலைமையின் விபரீதத்தை கூர்ந்து கவனித்த காமராஜர், இந்தி பேசாத மக்கள் விரும்பும் வரை ஆங்கிலமே இணைப்பு மொழியாக நீடிக்கும். இந்தி மொழி புதுமொழியாக ஏற்றுக் கொள்ளப்பட்டிருப்பது உண்மை என்றாலும் இந்தி பேசாத மக்களின் இஷ்டபூர்வமான ஒத்துழைப்பிலேயே அதனை நிறைவேற்ற முடியும். முன்னாள் பாரத பிரதமர் நேரு வழங்கிய உறுதிமொழி நிச்சயமாக காப்பாற்றப்படும். அதில் யாருக்கும் எள்ளளவும் சந்தேகம் வேண்டாம் என்று அறிக்கை ஒன்றினை விடுத்து எல்லோரையும் அமைதியாக இருக்கும்படி கேட்டுக் கொண்டார்.

    இதனைத் தொடர்ந்து அப்போது மாநில அமைச்சராக இருந்த ஆர்.வெங்கட்ராமன் மத்திய அரசிலிருந்து மாநிலத்திற்கு வரும் கடிதங்கள் ஆங்கிலத்தில் மட்டுமே இருக்க வேண்டும். இந்தியில் வந்தால் அதனை மாநில சர்க்கார் நிராகரிக்கும் என்று அறிக்கை விடுத்தார். சென்னை சத்தியமூர்த்தி பவனில் 13-2-1965 அன்று இந்திராவை அழைத்து வந்து நேருவின் உறுதி மொழியை சட்டமாக்க வேண்டும் என்று தீர்மானமே நிறைவேற்றப்பட்டது.

    பிரதமர் லால் பகதூர் சாஸ்திரியும் மக்களவையில் "பேசும்போது மொழி பிரச்சினை தேசிய கண்ணோட்டத்தில் பரிசீலிக்கப்பட வேண்டும். மொழி பிரச்சினை சம்பந்தமாக இந்தி பேசாத மக்களுக்கு நேருஜி அளித்த வாக்குறுதிகளை எவ்விதத் தயக்கமுமின்றி மத்திய அரசு நிறைவேற்றும்" என்று திட்டவட்டமாக அறிவித்தார். இதே கருத்தினை அகில இந்திய வானொலியிலும் பேசி பதிவு செய்தார்.


    இந்தி திணிப்பை எதிர்த்து மத்திய அமைச்சர்களாக இருந்த சி.சுப்பிரமணியமும் ஓவி அளகேசனும் தங்களது பதவியை ராஜினாமா செய்து விட்டு டெல்லியில் இருந்து சென்னை திரும்பினர். இப்படி அடுக்கடுக்காக நிகழ்வுகள் நடைபெற்றதால் போராட்டக்காரர்கள் மனநிலையில் மாற்றம் ஏற்பட்டு போர்க்களமாக இருந்த தமிழகத்தில் ஒருவாறாக அமைதி நிலவியது.

    குஜராத் மாநிலத்தில் 'கட்ச்' பகுதியில் தான் பாகிஸ்தான் தனது ஆக்கிரமிப்பு வேலையை தொடங்கியது. ஏற்கனவே நடைபெற்ற எல்லை பிரச்சினை பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்ததால் பாகிஸ்தானுக்கு இந்தியா மீது தீராத கோபம் இருந்தது. 1965 பிப்ரவரி 1- ந் தேதி நடந்த இந்த ஆக்கிரமிப்பு செயல், பிரதமர் சாஸ்திரியை மிகுந்த கோபத்திற்கு உள்ளாக்கியது. உடனே பாகிஸ்தானுக்கு சரியான பதிலடி கொடுக்குமாறு உத்தரவு பிறப்பித்தார்.

    ஏற்கனவே காஷ்மீர் பகுதியிலும் ஆக்கிரமிப்பு செய்திருந்த பாகிஸ்தானை விரட்டி அடித்து, பிணை பேசும் அளவுக்கு பாகிஸ்தானை நமது படைகள் புரட்டிப் போட்டனர். அந்த நாட்டினுடைய நிலப்பரப்பினை நம்மவர் கைப்பற்றி வெற்றி கொடியை நாட்டினர். சாஸ்திரியின் நடவடிக்கைக்கு நாடு முழுக்க பாராட்டுக்கள் குவிந்தன. கட்சி எல்லைகளைக் கடந்து அனைத்து எதிர்க்கட்சித் தலைவர்களும் ஒத்துழைப்பு நல்கினர். அகில இந்திய தலைவராக இருந்த காமராஜர் மக்களிடம் யுத்த நிதி திரட்டி பெரும் தொகையை சாஸ்திரியிடம் வழங்கினார். காமராஜருக்கு தான் நன்றி கடன் பட்டுள்ளதாக கூறி சாஸ்திரி அதனை பெற்றுக் கொண்டார்.

    இந்தியாவை எதிர்த்து நின்று போராடி வெற்றி பெற பாகிஸ்தானால் இயலவில்லை. எனவே ஐநா சபையின் வேண்டுகோளின்படி செப்டம்பர் 24 அன்று போர் நிறுத்த உடன்பாட்டுக்கு பாகிஸ்தான் இறங்கி வந்தது. இந்தியாவும் அதற்கு சம்மதித்தது .1965 -ம் ஆண்டு ஆகஸ்ட் 5-ம் தேதி இருந்த நிலைக்கு இரு நாடுகளும் திரும்ப வேண்டும் என்று ஐ.நா சபை அறிவித்தது. அதன்படி 21 நாட்கள் நடைபெற்ற போர் முடிவுக்கு வந்தது.

    சோவியத் ரஷ்யாவுக்கும் இந்தியாவுக்கும் மிகப்பெரிய நட்பினை நேரு ஏற்படுத்தியிருந்ததால் உலகப் பிரச்சினைகள் என்று வரும்போது ரஷ்யாவும் இந்தியாவும் கைகோர்த்துக்கொண்டு செயல்பட்டன. பாகிஸ்தானும் ரஷ்யாவின் நட்பு நாடுகளின் பட்டியலில் இருந்தது. எனவே ரஷ்ய அதிபர் கோசிஜின் இரு நாடுகளையும் சந்தித்து பேசி சுமூகமான சமாதான தீர்வினை ஏற்படுத்தும் முயற்சியில் இறங்கி செயல்பட்டார். இந்திய பிரதமர் சாஸ்திரியையும் பாகிஸ்தான் அதிபர் அயூப்கானையும் தாஷ்கண்டிற்கு வரவழைத்து பேச்சு வார்த்தை நடத்திட ஏற்பாடு செய்தார். அதன்படி 1966-ம் ஆண்டு ஜனவரி 3-ம் நாள் பாரதப் பிரதமர் சாஸ்திரியும் அவருக்கு துணையாக நான்கு அதிகாரிகளும் ஒரு டாக்டரும் உடன் வர ரஷ்ய தலைநகர் தாஷ் கண்டிற்கு சென்று சேர்ந்தனர். அதேபோன்று பாகிஸ்தான் அதிபர் அயூப்கானும் அவரது அதிகாரிகளும் தாஷ்கண்ட் வந்து சேர்ந்தனர்.

    ரஷ்ய அதிபர் கோசிஜின் இரண்டு தினங்களுக்கு முன்பாகவே வருகை தந்து ஏற்பாடுகளை கவனித்து இருநாட்டு தலைவர்களையும் முகம் மலர, அகம் மலர வரவேற்று உபசரித்தார். எப்படியாவது இரு நாடுகளுக்கு இடையே ஒரு சமரச உடன்பாடு ஏற்பட வேண்டும் என தீவிர முயற்சி மேற்கொண்டார். ஜனவரி 5-ம் தேதியிலிருந்து 9-ம் தேதி வரை பேச்சுவார்த்தை தொடர்ந்து தொய்வில்லாமல் நடந்தது. இரண்டு தலைவர்களிடமும் மாறி மாறி பேசி விடாமுயற்சியுடன் பணியாற்றினார். பல சுற்றுகள் நடந்த பேச்சுவார்த்தை முடிவுக்கு வந்தது.

    இறுதியில் 1966-ம் ஆண்டு ஜனவரி 10-ம் தேதி மாலை 4 மணி அளவில் உடன்பாடு ஏற்பட்டது. இந்திய பிரதமர் சாஸ்திரியும் பாகிஸ்தான் அதிபர் அயூப்கானும் தாஷ்கண்ட் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர். அதன்படி பாகிஸ்தானிடம் இருந்து கைப்பற்றிய சில இடங்களை இந்தியா விட்டுக் கொடுக்க நேர்ந்தது. இருப்பினும் உலகத் தலைவர்கள் பார்வையில் இந்தியாவுக்கு கிடைத்த வெற்றியாகவே இந்த ஒப்பந்தம் கருதப்பட்டது. ஏற்கனவே நடந்த போரிலும் இந்தியா வெற்றி பெற்றதாகவே கருதப்பட்டது. இது சாஸ்திரியின் வரலாற்றில் ஒரு புதிய சாதனையாகவே திகழ்ந்தது.

    இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்து இடுவதற்கு முன்பு அகில இந்திய தலைவராக விளங்கிய தனது நெருங்கிய சகாவாக விளங்கிய காமராஜரிடம் தொடர்பு கொண்டு சாஸ்திரி பேசியதோடு ஒப்பந்த விவரங்களை தெரிவித்து கருத்து பரிமாற்றம் செய்து கொண்டது குறிப்பிடத்தக்கது.

    ஏற்கனவே லால்பகதூர் சாஸ்திரிக்கு உடல் நலக்குறைவு இருந்து வந்தது... அதையெல்லாம் பொருட்படுத்தாமல் தான் நாட்டிற்கு நன்மை நிகழ வேண்டும் என்பதற்காக தாஷ்கண்டிற்கு புறப்பட்டு வந்தார் சாஸ்திரி... பல சுற்றுக்கள் பேச்சுவார்த்தைகள் ஐந்து நாட்களாக தொடர்ந்து நடந்ததால் மிகுந்த களைப்போடு காணப்பட்டார் சாஸ்திரி... அவருடைய உடல் நிலை அவ்வளவு திருப்திகரமாக இல்லை.

    உடன்பாடு வெற்றிகரமாக நடைபெற்று முடிந்ததைத் தொடர்ந்து ரஷிய அதிபர் கோசிஜின் கொடுத்த விருந்தில் சாஸ்திரியும் கலந்து கொண்டு சிறப்பித்தார். அந்த விருந்தில் இந்திய அதிகாரிகளும் பாகிஸ்தான் அதி காரிகளும் ரஷ்ய நாட்டு அதிகாரிகளும் மிகுந்த உற்சாகத்தோடு கலந்து கொண்டனர். ஆனால் சாஸ்திரி விருந்தில் ஏதும் உணவருந்த வில்லை. இரவு 10.15 மணிக்கு தான் தங்கியிருந்த ஓட்டலுக்கு திரும்பி வந்து சிறிதளவு உணவருந்தினார். பின்னர் தூங்குவதற்கு சென்றுவிட்டார்.

    ஆனால் நள்ளிரவில் தனது படுக்கை யை விட்டு வெளியே வந்து தனக்கு ஒரு மாதிரியாக இருப்பதாக கூறி வரவேற்பறையில் இருந்தவரிடம் டாக்டரை வரவழைக்குமாறு கேட்டுக் கொண்டார். உதவியாளர்கள் கபூர், சர்மா ஆகியோர் உடன் வர டாக்டர் "சூக்" வந்து சாஸ்திரியின் உடல்நிலை யை பரிசோதித்தார். அப்போது சாஸ்திரிக்கு விக்கலும் இருமலும் ஏற்பட்டது. தொடர்ந்து மூச்சு திணறலும் ஏற்பட்டது. நாடித்துடிப்பு அதிகமாக இருந்தது. ரத்த அழுத்தமும் கூடுதலாக இருந்தது. டாக்டர் ஊசியின் மூலம் மருந்து செலுத்தினார். ஆனால் பலன் ஏதும் இன்றி நினைவிழந்த நிலையில் சாஸ்திரியின் உயிர் பிரிந்தது. செயற்கை சுவாச சிகிச்சை அளித்தும் ஏதும் பயனில்லை.. சாஸ்திரியின் இதயத்துடிப்பு முற்றாக நின்றேவிட்டது.

    காந்தியமும் கண்ணியமும் நாணயமும் தியாகமும் எளிமையும் நேர்மையும் நிறைந்த பாரத பிரதமர் சாஸ்திரி ஆம்... அமரராகிவிட்டார்... சாஸ்திரியின் மரணச் செய்தி அறிந்து சோவியத் அதிபர் கோசிஜின் அதிர்ச்சியில் உறைந்துவிட்டார் .அதிகாரிகள் ஸ்தம்பித்து நின்றனர். உடனே சோவியத் அரசு இந்தியாவுக்கு இந்த துக்கமான துயரச் செய்தியினை அதிகாரப்பூர்வமாக தெரிவித்தது. மறுநாள் காலை ஜனவரி 11-ம் நாள் உலகத்திற்கே துக்க நாளாக விடிந்தது.

    சாஸ்திரியின் மரணச் செய்தி இந்திய மக்களுக்குப் பேரிடியாக இருந்தது. காமராஜருக்கு தகவல் கிடைத்ததும் உடனடியாக டெல்லிக்கு விரைந்து வந்தார் . காமராஜரை பொறுத்தவரையில் மிகப்பெரிய இழப்பு... தாங்கொணாத் துயரம் மற்றவர்களைப் போல் கண்ணீர் சிந்தி விட்டு துடைத்து விட்டுப்போகிற காரியம் அல்ல. சென்ற முறை நேருவின் மறைவின் போது ஏற்பட்ட பிரச்சினைகளுக்கு சுமுகமான தீர்வு கண்டது போல் இப்போதும் தீர்வு கண்டாக வேண்டும். மற்ற எல்லா தலைவர்களையும் விட அகில இந்திய காங்கிரஸ் தலைவர் பதவி வகிக்கும் காமராஜருடைய பொறுப்பு மிக மிக அதிகம். இவற்றையெல்லாம் மனதிலே சுமந்து கொண்டு டெல்லி வந்து சேர்ந்து ஆக வேண்டிய காரியங்களில் கவனம் செலுத்தினார் காமராஜர்.

    சாஸ்திரிக்கு அஞ்சலி செலுத்த உலகத் தலைவர்கள் எல்லாம் டெல்லியிலே வந்து குவிந்தனர். சென்ற முறை பிரதமரை ஏக மனதாக தேர்வு செய்தது போல இந்த முறையும் அப்படி செய்து விட முடியுமா ? அதற்கான சூழல் இருக்கிறதா அரசியல் நோக்கர்கள் பல்வேறு கோணங்களில் சிந்தித்தார்கள். அடுத்த கட்ட நடவடிக்கைகள் எப்படி வரப்போகிறது? காமராஜர் எப்படி பிரச்சினைகளை எதிர்கொண்டு தீர்வு காண போகிறார் என உலகமே அவரை உற்று நோக்கியது.

    எல்லோரையும் சமாதானப்படுத்தி விடலாம். ஆனால் மொரார்ஜி தேசாயை சமாதானப்படுத்துவது அத்தனை எளிதான காரியமல்ல. போன முறை உங்கள் சொல்லுக்கு கட்டுப்பட்டு கட்சியின் ஒற்றுமை கருதி விட்டுக் கொடுத்தேன். இந்த முறை பிரதமர் பதவிக்கு போட்டியிடுவது நிச்சயம் என்று காமராஜரிடம் நேரடியாகவே சொல்லிவிட்டார் மொரார்ஜி தேசாய்.பிரதமர் பதவிக்கு போட்டியிட எஸ்.கே பட்டில்,சஞ்சீவரெட்டி, ஜி.எல்.நந்தா எல்லோருமே தயாராக இருந்தனர். ஆனால் காமராஜர் சொல்லை மீறாதவர்கள் இவர்கள்.

    பொது வேட்பாளராக காமராஜரை நிறுத்தினால் பிரச்சினைகளுக்கு தீர்வு கண்டு விடலாம் என்று மூத்த தலைவரான அதுல்யா கோஷ் காமராசரிடம் எவ்வளவோ எடுத்துச் சொல்லிப் பார்த்தார். ஆனால் காமராஜர் கொஞ்சமும் அசைந்து கொடுக்கவில்லை. எனக்கு நாடாளுமன்றத்தில் பேசுகிற அளவுக்கு இந்தியும் தெரியாது ஆங்கிலத்தில் மிகப் பெரிய புலமையும் கிடையாது.. பிரதமர் பதவிக்கு என் பெயரை தேர்வு செய்கிற எண்ணத்தை விட்டு விடுங்கள் என்று எல்லோரிடமும் தயவாக கேட்டுக் கொண்டு அந்த பிரச்சினைக்கு முற்றுப் புள்ளி வைத்தார் காமராஜர்.. பதவி ஆசை துளி கூட இல்லாத தலைவர் அவர்.

    காமராஜரின் மனதில் பிரதமர் பதவிக்கு இப்போதுள்ள சூழ்நிலையில் இந்திரா காந்தியே சரியான தேர்வாக இருக்கும் என்ற எண்ணம் இருந்தது. 1967 தேர்தலுக்கு இந்திராவை முன்னிலைப்படுத்தி வெற்றி பெறுவதற்கு வாய்ப்பாக இருக்கும் என்று திட்டமிட்டு காய்களை நகர்த்தினார் காமராஜர். மேலும் மொரார்ஜி தேசாயை பொருத்தவரையில் பிடிவாதக்காரர்... கொஞ்சமும் வளைந்து கொடுத்து அனுச ரித்து போக மாட்டார் என்ற எண்ணமே எல்லோரிடமும் மேலோங்கி இருந்தது.

    இருப்பினும் 1967 ஜனவரி 18ஆம் நாள் மொரார்ஜியை நேரிலே சந்தித்து சூழ்நிலை உங்களுக்கு சாதகமாக இல்லை ...பிரதமரை ஏக மனதாக தேர்ந்தெடுக்க தயவு செய்து ஒத்துழைப்பு தாருங்கள் என காமராஜர் கேட்டுக்கொண்டார்... ஆனால் மொரார்ஜி தேசாயோ "யாருக்கு பெரும்பான்மை என்பது நாளை வாக்குப்பெட்டி வெளிப்படுத்தும்" என்று ஒரே வரியில் சொல்லிவிட்டு கோபமாக வெளியேறிவிட்டார் .

    எனவே அடுத்த நாள் ஜனவரி 19-ம் தேதி காமராஜர் தலைமையில் நாடாளுமன்ற கூட்டம் நடந்தது .போட்டியா ளர்களாக இந்திராவையும் மொரார்ஜி தேசாயையும் அறிவித்தார் காமராஜர். கூடியிருந்த 526 உறுப்பினர்களில் இந்திரா காந்திக்கு 335 வாக்குகளும் மொரார்ஜி தேசாய்க்கு 169 வாக்குகளும் கிடைத்தன. இந்திரா காந்தி பிரதமராக தேர்வு செய்யப்படுவதாக முறைப்படி காமராஜர் அறிவித்தார்..காமராஜரின் வேண்டுகோளை ஏற்று மொரார்ஜி தேசாய் இந்திராவுக்கு முழு ஒத்துழைப்பு அளிப்பதாக தெரிவித்தார்.

    நாடு பெரும் பிரச்சினைகளை எதிர்நோக்கியுள்ள இந்த சூழ்நிலையில் பிரதமராக தேர்வாகியுள்ள இந்திரா காந்திக்கு நீங்கள் அனைவருமே ஒத்துழைப்பு தர வேண்டும் என்று கேட்டுக்கொண்டார் காமராஜர்.

    இந்திரா காந்தி தன்னை தேர்வு செய்தமைக்கு நன்றி தெரிவித்து பேசும்போது.. "நான் என்ன செய்ய வேண்டும் என்று காமராஜர் விரும்புகிறாரோ.. அதன்படி நான் செயல்படுவேன்" என்று குறிப்பிட்டபோது மத்திய மண்டபத்தில் எழுந்த கரகோஷம் நாடாளுமன்ற வளாகத்திலும் எதிரொலித்தது...

    ஆக இந்த முறையும் பெரிய பிரச்சினைகள் எதற்கும் இடம் கொடுக்காத வகையில் பிரதமரை தேர்ந்தெடுத்து தான் ஒரு கிங் மேக்கர் என்பதை உலகிற்கு மீண்டும் நிரூபித்தார் காமராஜர்.

    அடுத்த வாரம் சந்திப்போம்.

    Next Story
    ×