search icon
என் மலர்tooltip icon

    சிறப்புக் கட்டுரைகள்

    திரைக் கடல் பயணம்: திரைப்படம் என்னும் காட்சி இன்பம்- 3
    X

    திரைக் கடல் பயணம்: திரைப்படம் என்னும் காட்சி இன்பம்- 3

    • வாய் பேசாமல் நம்மால் ஓரளவு இயல்பான வாழ்க்கையை வாழ்ந்துவிட முடியும்.
    • கண்களின் கொடைதான் இந்தப் பெருவாழ்வு என்று சொன்னால் மிகையாகாது.

    காதுகள் இரண்டையும் பொத்தி க்கொண்டு நம்மால் நாள்கணக்கில் இருக்க முடியும். வாயை மூடிக்கொண்டு இருக்க நினைத்தால் எப்போதும் இருக்கலாம். ஆனால், கண்களால் பார்க்காமல் நம்மால் எவ்வளவு நேரம் இருக்க முடியும் ?

    காதுகொண்டு கேட்காமல், வாய் பேசாமல் நம்மால் ஓரளவு இயல்பான வாழ்க்கையை வாழ்ந்துவிட முடியும். கண்மூடியபடி வாழ முடியுமா ? கண்களை மூடிக்கொண்டால் நம் வாழ்வே இருண்டுவிடுகிறது. எந்த ஒரு செயலுக்கும் இன்னொருவர் உதவி தேவைப்படும். கண்களின் கொடைதான் இந்தப் பெருவாழ்வு என்று சொன்னால் மிகையாகாது.

    புலன் நுகர்வில் பார்வைக்குத்தான் தலையாய இடம். மாற்றுத் திறனாளிகளில் கண்பார்வையற்றோரே பெரிதும் துன்புறுகின்றனர். அவ்வாறே கண்களால் கண்டு அடைகின்ற காட்சியின்பம் தான் நம் புலனின்பத்தில் முதலாமிடம் பெறுவது.

    மனத்தின் ஆழ் இயக்கம் காட்சிப் படிமங்களால் ஆனது என்கின்றனர் உளவியலாளர்கள். எல்லாவற்றையும் ருக்காட்சியாகவே நாம் கற்பனை செய்கிறோம். அதனால்தான் காட்சியாகக் காண்பது மனத்தை உருக்கிவிடுகிறது. ஒரு மலைத்தொடரானது எவ்வளவு அழகியது என்று விளக்கினாலும் அந்த அழகை உணர்வது முழுமையாக இராது. ஆனால், அந்த மலையைப் பற்றிய ஒரேயொரு புகைப்படம் அதனை விளக்கிவிடும். புகைப்படமேகூட நேர்காண்பதில் என்ன உள்ளதோ அதன் சுருக்கப்பட்ட தோற்றம்தான். நேரில் அந்த மலை நம்முன் பேருருவாய், பச்சை அடர்த்தியாய், முகட்டு மடிப்புகளாய்த் தோன்றும் தோற்றத்தை எதனாலும் பதிவீடு செய்ய முடியாது.

    காட்சிக்கு அடுத்த இடத்தில் செவிப்புலன் விளங்குகிறது. 'கற்றலின் கேட்டலே நன்று' என்று கூறுவார்கள். ஒன்றைக் கேட்டு அறிவது மிகவும் மதிப்புடையது. 'செல்வத்துள் செல்வம் செவிச்செல்வம்' என்கிறது குறள். ஒருவரைக் காணாதபோது அவரைப் பற்றிய செய்திகள்மீது ஆர்வம் செலுத்துகிறோம். "அவர் எப்படி இருக்கிறார் ? என்ன ஆனார் ?" என்று விருப்பத்தோடு வினவுகிறோம். காண முடியாதபோது கேட்பின்வழி ஒன்றைத் தெரிந்துகொள்கிறோம். இவ்விரண்டும் ஒளி, ஒலி என்னும் இருபெரும் இயற்கைத் தன்மைகளால் ஆனவை. இவ்விரண்டையும் நுகரவே கண்ணும் காதும் படைக்கப்பட்டிருக்கின்றன. கண்ணும் காதும் கூர்மையாக இருப்பவர்கள் நுண்ணுணர்வு மிக்கவர்கள்.

    மிகச்சிறந்த கலை வடிவங்கள் அனைத்துமே காண்பதையும் கேட்பதையும் முன்னிட்டு இயங்குகின்றன. வரைந்த படங்கள் இருக்கின்றன, அவை காட்சிக்குரியன. கோவிலில் அழகிய கற்றளிகள் இருக்கின்றன. அவையும் பார்ப்பதற்கு உரியன. ஒரு சிற்பத்தைத் தொட்டுப் பார்த்து மெய்யுருவத்தை உணர முடியாதா ? முடியும்தான். ஆனால், அதற்கு அந்தச் செதுக்கம் மெய்ப்பொருளின் உண்மை வடிவத்தில் இருக்க வேண்டும். ஓர் யானையைக் காட்டும் சிற்பம் யானையின் உண்மையான வடிவத்தில் இருந்தால்தானே தொட்டுணர்ந்து மகிழ முடியும்? யானையை விடவும் சிறிதாகவோ பெரிதாகவோ இருப்பின் என்ன பயன் ? அதற்கு ஒரு மரக்கட்டையால் செய்த யானையைக் காட்டி இதனைவிடவும் நூறு மடங்கு பெரிதாக இருக்கும் என்று கூறிவிடலாமே.

    கலைச் செயல்களில் பெரும்பாலானவை கண்ணுக்குச் செய்து காட்டப்பட்டவை அன்றேல் காதுக்குப் படைக்கப்பட்டவை. முகர்வதற்கு ஏற்ற ஒரு கலைச்செயல் உண்டா ? அதனை இயற்கை படைத்துக் காட்டுகிறது. மலர்கள் இனிய நறுமணத்தால் மனத்தை மயக்குகின்றன. சுவைக்கும் செயலைக் கோரும் கலை எதுவுமுண்டா ? சமையல் கலையைச் சொல்லலாம். அவற்றின் இடுபொருள்கள் யாவும் இயற்கை விளைச்சலே. தீண்டல் என்பது உயிர்களின் அன்பு, அணைப்பு, ஆறுதல் என்று போவது. இறுதியில் கலைவளம் மிக்க இரண்டு செயல்கள் என்று காண்பதையும் கேட்பதையுமே தேர்வு செய்கிறோம்.

    சித்திரமும், சிற்பமும், ஆட்டமும் கண்ணுக்கினியவை. இசையும் பாட்டும் காதுக்கினியவை. தனித்த நிலையிலேயே இக்கலைகள் உயர்ந்து விளங்குபவை. இத்தகைய உயர்தனிச் செம்மையான கலைகள் ஓரிடத்தில் ஒருங்கே குவிந்து தோன்றினால் அது எப்படியிருக்கும் ? மனங்களைக் கொள்ளைகொண்டு மயக்கும். கலைகளில் அதுவே தலைமையிடத்தைக் கைப்பற்றும்.

    பல கலைகளின் ஒன்றுகூடல்தான் நாடகமும் கூத்தும். முத்தமிழில் இயற்று வதையும் இசைப்பதையும் முதலிரண்டாக வகுத்தவர்கள் நாடகத்தை மூன்றாவதாக வைத்தார்கள். ஒன்றை இயற்றி, ஒன்றை இசைத்து, ஒன்றை நடித்துக் காட்டினால் அது முத்தமிழ்க்கலை. பிற கலைகள் அசையாத நிலைத்த வடிவத்தில் இருக்கையில் பாட்டும் கூத்துமே நிகழ்த்தும் வடிவத்தில் இருக்கின்றன. நிகழ்த்திக் காட்டுவதன் உயிர்ப்பிற்கு முன்னால் வேறெதனையும் ஈடாகச் சொல்ல முடியுமா ?

    முத்தமிழே முன்னோர் வகுத்த வழி என்பதால் நாடகத்திற்கும் கூத்திற்கும் நெஞ்சத்தைப் பறிகொடுத்தனர் நம் மக்கள். திருவிழாக்களில் பழங்கதைகள் கூத்துகளாக நிகழ்த்தப்பட்டன. ஒரு கதையாகச் சொன்னால் காதுகொடுத்துக் கேட்டார்கள். தாம் பார்த்ததையும் கேட்ட தையும் பிறிதொருவர்க்குச் சொன்னார்கள். பொதுவாகப் பார்க்கும்பொழுது இது வெட்டி வேலையாகக்கூடத் தெரியலாம். ஆனால், இவ்வழியேதான் மக்களின் உரையாடல் வளர்ந்தது. பேச்சுமொழி வாழ்ந்தது. உறவுகள் வலுப்பெற்றன.

    கடந்த நூற்றாண்டில் அறிவியல் கருவிகள் கண்டுபிடிக்கப்பட்டன. புகைப்படக்கலை தோன்றியது. புகழ்பெற்ற புகைப்படங்கள் பல உலகைப் புரட்டிப் போட்டன. நிலைத்த படத்தை அசையச் செய்ய முடியுமா என்று ஆராய்ந்தார்கள். என்னுடைய நண்பர் கலை இயக்குநர் ஜேகே ஒரு செய்தியைச் சொன்னார். தாமஸ் ஆல்வா எடிசன் தம் சிறுவயதில் இருப்பூர்தி நிலையங்களில் செய்தித்தாள் விற்பவராக அலைந்து திரிந்தவர். இருப்பூர்தி வண்டி நகர்கையில் பெட்டியின் காலதர் (சன்னல்) சட்டங்கள் வழியே எதிர் நடைமேடையைப் பார்க்கலாம். குறுக்குக் கம்பிகளற்ற அந்தக் கட்டங்கள் வண்டி நகர்கையில் திறந்த வெளிக் காட்சிபோல் தெரிந்திருக்கும். அதாவது குறுக்குக் கோடுகள் மறைந்திருக்கும். அப்போது தோன்றிய எண்ணம்தான் எடிசன் மனத்தில் திரைப்படத்தைக் கண்டுபிடிக்க விதை போட்டிருக்கலாம்.

    அசைய வைத்து அடுத்தடுத்து எடுக்கப்பட்ட பல புகைப்படங்களைச் சீரான விரைவில் இடம்வலமாக நகர்த்தி ஓடச்செய்தால் அந்தப் படத்திற்கு அசைவுத்தன்மை கிடைக்கும். அதுவே திரைப்படமாக வளர்ச்சியுற்றது. திரைப்படம் கண்டுபிடிக்கப்பட்டபோது திரைப்படச் சுருளை மேல்கீழாக ஓட்டும் பழக்கம் இல்லை. படுகிடையாக வைத்துத்தான் ஓட்டினார்கள். இருப்பூர்திப் பெட்டிகள் வழியே எடிசன் கண்ட அந்தக் காட்சிதான் திரைப்படம் கண்டுபிடிக்கப்பட வழிகோலியது. காட்சியின்பக் கலையைக் கண்டு பிடிப்பதற்கேகூட காட்சியாய் மனத்தில் பதிந்த ஒரு படிமம் காரணமாகியிருக்கிறது.

    "திரைப்படம் என்பது வேறொன்று மில்லை, ஒளியும் ஒலியும்" என்பார்கள். இவ்விரண்டையும் கலந்து ஒரு கதைப்படமாகத் தரும்போது கற்பனைகளை நேரில் கண்ட இன்பத்தில் திளைக்கிறோம். இன்றைக்கு நாம் கண்விழிப்பதே கைப்பேசியின் காட்சித் திரையில்தான். இன்றைய தலைமுறையினர்க்கு முற்காலத்தில் ஒரு திரைப்படம் எத்தகைய மலைப்பைத் தந்தது என்பதை விளக்கவே வழியில்லாமல் திகைக்கிறேன். போக்குவரத்து அருகிப் போயிருந்த ஒரு காலத்தில் கேள்விப்பட்டிருந்த ஒரு காட்சியைப் பெரிய திரையில் காணும்போது தோன்றும் பேருவகையை எப்படிச் சொல்வது?

    எடுத்துக்காட்டாக, நாம் மாநிலத்தின் உட்புற மாவட்டத்தில் வாழ்கின்றோம் எனக்கொள்வோம். நாம் முன்னே பின்னே கடலைப் பார்த்ததில்லை. நம்முடைய வாழ்க்கை அருகிலுள்ள சிறு நகரத்திற்குச் செல்லும் அளவில் முடிகிறது. கடற்கரையோர ஊருக்குச் செல்லும் வாய்ப்பு நம் வாழ்க்கையில் வரவே போவதில்லை என வைத்துக்கொள்வோம். கடலைப் பார்த்துவிட்டு வந்தவர்கள் அதனை விளக்கிச் சொல்கிறார்கள். கடலைப் பற்றிய சித்திரங்கள், ஏன் புகைப்படங்களைக்கூட நாம் பார்த்திருக்கலாம். நம்மூர்க் கண்மாய்போல நிறையவே தண்ணீர் இருக்கிறது என்று நினைத்துக்கொள்வதோடு நம் கற்பனை முடிகிறது. ஆனால், மிகப்பெரிய திரையில் ஆர்ப்பரித்து எழுந்து விழும் அலைகளோடு கரையை முட்டி மோதித் தீர்க்கும் நுரைகளோடு ததும்பிக்கொண்டிருக்கும் கடல் ஒரு திரைப்படத்தில் காட்டப்படும்போது நேரில் கண்டதைப்போல் உணர்கிறோமா, இல்லையா ? அதுதான் திரைப்படம் தந்த மலைப்பு.

    திரைப்படங்கள் வந்த பிறகு பட்டணங்கள் எப்படி இருக்கும் என்று தெரிந்துகொண்டோம். அரச வாழ்க்கை, வேளாண்மை, பூங்காங்கள், மாட மாளிகைகள், இயற்கை வெளிகள், படைகள், போர்கள் என யாவும் காட்சிப்படுத்தப்பட்டன. பழமையான கதைகளில் தோன்றிய கதாபாத்திரங்கள் எவ்வாறு வாழ்ந்தார்கள் வீழ்ந்தார்கள் என்று கண்ணாரக் கண்டோம். 'தாஜ்மகால் எப்படி இருக்கும் என்று ஆயிரம் பக்கங்களில் எழுதிக் காட்டினாலும் தோற்றுவிக்க முடியாத உணர்வினைத் தாஜ்மகாலின் ஒரு காட்சித் துண்டு தோற்றுவித்துவிடும்' என்று இயக்குநர் பாலுமகேந்திரா கூறுவார்.

    திரைப்படத்தால் மக்கள் வாழ்வு சீரழிந்தது என்று சிலர் கூறுவார்கள். திரைப்படம் மக்கள் மனத்தைக் கெடுக்கிறது என்பார்கள். எவ்வொன்றின் மிகை வளர்ச்சிக்கும் அதற்கே உரிய நன்மை தீமைகள் இருக்கும். கொள்ளுவன கொண்டு தள்ளுவன தள்ளத் தவறியது நம் குற்றம்.

    திரைப்படங்கள் கலைக் கலவையின் சிறப்பான வடிவமாக உருவெடுத்தன. முற்காலத்தில் மக்களுக்கு இசையும் பாட்டும் ஆட்டமும் நடிப்பும் அரிதாகத்தான் கிடைக்கும் என்பதுதான் உண்மை நிலை. அந்த வெற்றிடத்தை நிரப்புமாறு நாள்தோறும் கிட்டும் வாய்ப்பாக நுழைந்தவை திரைப்படங்கள். ஆண்டுக்கொரு முறை திருவிழாவில் கூத்துப் பார்த்தால் போதுமா ? அங்கொன்றும் இங்கொன்றுமாக நடக்கின்ற இசைக்கச்சேரிக்குப் போனால் போதுமா? அம்மன் கோவில் திருவிழா எப்போது நடப்பது, ஆடலும் பாடலும் எப்போது பார்ப்பது? அந்நேரத்தில் மிகச்சிறந்த கலைஞர்களைத் தேர்ந்தெடுத்து ஆடவைத்தும் பாடவைத்தும் நடிக்கச் செய்தும் திரைப்படங்கள் ஆக்கினர். அவை தவிர்க்க முடியாதவையாக மக்கள் வாழ்க்கையில் இடம்பிடித்தன.

    தொடர்புக்கு:-

    kavimagudeswaran@gmail.com

    செல்: 8608127679

    Next Story
    ×