என் மலர்
சிறப்புக் கட்டுரைகள்
குஷ்பு என்னும் நான்... எல்லோர் இதயத்திலும் என்றும் நிலைத்து நிற்பேன்
- நடிகை குஷ்பு கடந்த வந்த பாதையும் பயணமும் கடினமானது அதை மாலைமலர் வாசகர்களுடன் பகிர்ந்து கொள்கிறார்.
- பொதுவாக தேர்தல்களில் 50 அல்லது 60 சதவீதம் வாக்குகள் பதிவு ஆவதே பெருமையாக பேசப்படுகிறது.
பதினெட்டு நாள் தேர்தல் அனுபவம் என்பது பல ஆண்டுகள் முயற்சித்தாலும் கிடைக்காதது என்பேன். அவ்வளவு அனுபவங்களை அந்த ஒரே தேர்தலில் போட்டியிட்டதில் இருந்து கற்றுக் கொண்டேன்.
குஷ்பு என்ற பெயரை தெரியாதவர்கள் கிடையாது. எனக்கு ஆயிரம் விளக்கு தொகுதி மக்களை தெரியாமல் இருந்தாலும் அங்குள்ள மக்கள் அனைவருக்கும் என் பெயர் தெரியும்.
நிழலாக பார்த்தவர்கள் முன்பு நிஜமாக நடமாடினேன். பார்த்தவர்கள் வியந்தார்கள். பாராட்டினார்கள். பரவசப் படுத்தினார்கள்.
நான் செல்லும் இடங்களில் எல்லாம் கூட்டம்... கூட்டம்... அப்படி ஒரு கூட்டம். அவர்கள் ரசிகர்கள் கூட்டம் அல்ல. அதாவது எனக்கு தேர்தலில் வாக்களிக்கப் போகிறார்கள். அவர்கள் அளிக்கப் போகும் வாக்கில்தான் நான் எம்.எல்.ஏ. ஆக வேண்டும்...!
கூடிய கூட்டங்களை பார்த்ததும் 'வெற்றி நிச்சயம். இது வேத சத்தியம்!' என்று ஒரு நம்பிக்கை இருந்தது. ஆனால் இதையெல்லாம் தாண்டியதுதான் அரசியல் என்பதை கற்றுக் கொண்டேன்.
பொதுவாக தேர்தல்களில் 50 அல்லது 60 சதவீதம் வாக்குகள் பதிவு ஆவதே பெருமையாக பேசப்படுகிறது. மீதி பாதி பேர் வாக்களிக்கவில்லையே! என்ன காரணம்...?
அரசியல் மீது வெறுப்பும், அரசியல்வாதிகள் மீது நம்பிக்கையின்மையும்தான் காரணம் என்பதை அரசியலில் இருக்கும் ஒவ்வொரு வரும் ஒத்துக் கொள்ள வேண்டும்.
தேர்தல்களில் மட்டும் புதிது புதிதாக வருகிறார்கள். ஏதோ ஒரு கட்சி வெற்றி பெறுகிறது. ஆனால் எங்கள் பகுதியின் காட்சி மட்டும் மாறவில்லை என்ற மக்களின் ஆதங்கம் நியாயமானது தானே.
அரசியலில் எதிரும் புதிருமாக இருப்பவர்கள், விமர்சித்து கொள்பவர்கள் தேர்தல் களத்தில் ஒரே இடத்தில் நேருக்கு நேர் நின்று பிரசாரம் செய்யும் சூழ்நிலை வந்தால் ஒருவர் போகும் வரை இன்னொருவர் காத்து நின்று பிரசாரம் செய்வது ஆச்சரியமான அனுபவம்.
எனக்கென்று நிறைய கனவு இருந்தது. அரசின் திட்டங்கள் மக்களுக்கு முழுமையாக சென்றடை வதில்லை என்ற குற்றச்சாட்டும் உள்ளது. எனவே நான் எம்.எல்.ஏ. ஆனால் பேராசைகளுடன் தனியே மக்களுக்கு எந்த மாதிரியெல்லாம் உதவ வேண்டும் என்பதற்காக சில திட்டங்களை உருவாக்கி வைத்திருந்தேன். அதற்கான வாய்ப்பு இப்போது கிடைக்கா விட்டாலும் நிச்சயம் ஒருநாள் கிடைக்கும்.
பொதுவாகவே பொது வாழ்க்கைக்கு வந்து விட்டால் தோல்வியும், விமர்சனங்களும் சகஜம். ஒவ்வொரு தோல்வியும், நமது வெற்றிக்கான படிக்கட்டு. விமர்சனங்கள் நம்மை செதுக்குபவை என்பது எனது எண்ணம்.
அதே எண்ணத்தோடு தான் அரசியலில் நடந்து கொண்டிருக்கிறேன்.
இப்போதும் ஒரே நேரத்தில் நடிகை, தயாரிப்பாளர், கதாசிரியர், அரசியல் என பல துறைகளில் பயணிப்பது குறித்து பலரும் கேட்பதுண்டு எனக்கும், என் கணவர் சுந்தர்சிக்கும் "முடியாதது எதுவும் இல்லை" என்ற எண்ணம் அதிகம். அதே சமயம் இதை செய்ய வேண்டாம் என்று மனதில் லேசாக தோன்றினால் கூட அதை நாங்கள் செய்ய மாட்டோம். எனக்கு ஒரே நேரத்தில் பல வேலைகளை செய்யும் மல்டிடாஸ்கிங் மிகவும் பிடித்தமான ஒன்று.
சின்னத்திரையை பொறுத்த வரை பெண்களுக்கு அதிக முக்கியத்துவம் இருக்கிறது. ஏரளமான பெண் தயாரிப்பாளர்கள் இருக்கிறார்கள். அதேபோல முன்பெல்லாம் சின்னத்திரைக்கு ஒரு நடிகை வந்து விட்டால் சினிமாவில் மார்க்கெட் போய்விட்டதால் இங்கு வந்துவிட்டார்கள் என்று விமர்சிப்பார்கள். ஆனால் பெரிய பெரிய நடிகர்களே இன்று சினிமா மற்றும் சின்னத்திரையில் இருக்கிறார்கள். எனவே இரண்டு திரைக்கும் இனி வேறுபாடில்லை.
இன்றைய இளைஞர்கள் சாதிக்க வேண்டும் என்று நினைத்தாலும் வெற்றியை சீக்கிரமே எதிர்பார்க்கிறார்கள். கொஞ்சம் பொறுமை, பொறுப்பு, தைரியம் எல்லாமே இருந்தால் தான் சாதிக்க முடியும். பல இடங்களில் பெண்களுக்கு அங்கீகாரம் கிடைக்காமல் இருக்க ஈகோ பார்க்கும் ஆண்களே காரணமாக இருக்கிறார்கள். அதே போல வீட்டில் தங்களுக்கு நடக்கும் பிரச்சினைகளை சகித்து கொண்டு அது பற்றி வெளியில் பேசாமல் பல பெண்கள் இருக்கிறார்கள். ஆனால் பிரச்சினைகளை கண்டு தயக்கம் மற்றும் பயம் கொள்ளாமல் தைரியமாக குரலை உயர்த்தி பேசுவதால் மட்டுமே தீர்வு கிடைக்கும்.
பிரமிப்பாக தெரிகிறது. 1980-ல் குழந்தை நட்சத்திரமாக இந்தி திரை உலகில் கால் பதித்து 8 ஆண்டுகளுக்கு பிறகு தமிழ் திரை உலகில் கதாநாயகியாக அறிமுகமானேன்.
இந்த 42 ஆண்டுகளில் நடந்த ஒவ்வொரு நிகழ்வுகளும், சந்தித்த ஒவ்வொரு சம்பவங்களும் கனவு போல் என் கண் முன் வந்து செல்கிறது. நம்பமுடிய வில்லை.... ஆனால் எல்லாமே என் வாழ்க்கையில் நான் சந்தித்தது. அப்படி இருக்கும் போது எப்படி நம்பாமல் இருப்பது. அதனால்தான் பிரமிப்பாக தெரிகிறது என்று குறிப்பிட்டேன்.
தமிழ் ரசிகர்கள் மனங்களிலும், தமிழக மக்களின் மனங்களிலும் கோவில் கட்டி குடியேறும் அளவுக்கு இந்த சாதாரண குஷ்பு உயர்ந்திருக்கிறேன் என்றால் சாதாரண விசயம் அல்ல.
என்னை தாங்கி வளர்த்தது தமிழ் திரை உலகம். மருமகளாக ஏற்று மனம் மகிழ வைத்தது தமிழ் மண். இத்தனை பெருமைகளுக்கும் இந்த இரண்டும்தான் அடித்தளம்.
வெள்ளித்திரை நடிகை, சின்னத்திரை நடிகை, தயாரிப்பாளர், அரசியல்வாதி என்று பல முகங்கள். இந்த முகங்கள் ஒவ்வொன்றுக்கும் அடையாளம் தந்து அங்கீகரித்தது தமிழக மக்கள். எனவேதான் தமிழக மக்களுக்கு என்னால் முடிந்த நன்றிக்கடனை செலுத்த வேண்டும் என்பதற்காக அரசியல் தளத்தை தேர்வு செய்து பயணித்துக்கொண்டிருக்கிறேன்.
அரசியலை பொறுத்தவரை விமர்சனங்கள் தவிர்க்க முடியாதது. அதை நான் பெரிதாக எடுத்துக்கொள்வதும் இல்லை. அரசியலில் உழைக்க வேண்டும். அதற்கேற்ற அங்கீகாரம் இருக்க வேண்டும். அதன்மூலம் சந்தோஷம் கிடைக்க வேண்டும் என்ற எண்ணத்திற்கு பா.ஜனதாவில் வாய்ப்பு கிடைத்துள்ளது.
எனது இந்த வாழ்க்கையும், முன்னேற்றமும் நான் எதிர்பாராதது. இறைவனின் அருளால் கிடைத்தது என்ற நம்பிக்கை மட்டும் வலுவாக உள்ளது. அதே நம்பிக்கையோடு தான் எனது வாழ்க்கை பயணம் சென்று கொண்டிருக்கிறது.
அரசியலில் மக்களுக்கு உண்மையாகவும், நேர்மையாகவும் சேவை செய்ய வேண்டும் என்பது எனது நீண்ட நாள் ஆசை. அதற்கான வாய்ப்பு நிச்சயம் கிடைக்கும். மக்களுக்கு சேவை செய்ய முடியும் என்ற நம்பிக்கை என்னிடம் இருக்கிறது. நம்பிக்கைதானே வாழ்க்கை.
வாழ்க்கையில் துணிந்து சில முடிவுகளை நாம் எடுக்கும் போது அதை உற்சாகப்படுத்தவும், ஊக்கப்படுத்தவும் நம்மை சுற்றி சிலர் இருந்தால் போதும். எவ்வளவு பெரிய உச்சத்தையும் நாம் தொட முடியும். சின்ன வயதில் நான் எடுக்கும் முடிவுகள் சரியா? தவறா? என்று என்னால் சிந்திக்க கூட முடியவில்லை. ஆனால் என்னை உற்சாகப்படுத்தி, ஊக்கம் கொடுத்தது என் அம்மா. அதன் பிறகு எனது வாழ்க்கையில் எனக்கு கிடைத்த நண்பர்கள்.
நடன இயக்குனர்கள் கலா, பிருந்தா, அனுபார்த்த சாரதி, சுப்பு பஞ்சு, சுஜாதா விஜய குமார், சுபாஷினி என்று என் உடன்பிறவா சகோதரிகள் இன்று வரை என்னோடு பயணிக்கிறார்கள். நான் எடுக்கும் ஒவ்வொரு முடிவுக்கும் அவர்களுடைய ஊக்கம் இருந்ததுண்டு. குடும்பத்தலைவி என்ற அந்த அந்தஸ்தை பெற்ற பிறகு எனது கணவர் சுந்தர்.சியும் எனது முடிவுகளுக்கு முட்டுக்கட்டை போடாமல் உற்சாகம் அளித்து உறுதுணையாக இருந்து வருகிறார். அதுதான் எனக்கு கூடுதல் பலம்.
50 ஆண்டுகால எனது வாழ்க்கை அனுபவங்களை 50 வாரங்களாக மாலைமலர் வாசகர்களுடன் பகிர்ந்து இருக்கிறேன். சினிமாவில் இடைவேளை விடுவதை போல் தற்போது உங்களுக்கும் இடைவேளை விட்டிருக்கிறேன். மீண்டும் உங்களை சந்திக்க உங்கள் இதயங்களோடு உறவாட காத்தி ருப்பேன்.
ttk200@gmail.com