search icon
என் மலர்tooltip icon

    சிறப்புக் கட்டுரைகள்

    நாளை 151-வது பிறந்தநாள்-  கப்பலோட்டிய தமிழன்  வ.உ.சிதம்பரம் பிள்ளை
    X

    நாளை 151-வது பிறந்தநாள்- கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரம் பிள்ளை

    • நெல்லை மாவட்டத்திலும் தனது பள்ளிப் படிப்பை நிறைவு செய்தார்.
    • அரசியல் மீது கொண்ட ஆர்வத்தால் 1905-ஆம் ஆண்டு தன்னை இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியில் இணைத்துக் கொண்டார்.

    இந்திய விடுதலையில் தமிழகத்தின் பங்கு மிகப்பெரியது. சுதந்திரத்திற்காக முதலில் வீறுகொண்டு எழுந்தவர்கள் தமிழர்கள்.

    அந்த வகையில் வணிகம் செய்ய வந்தவர்கள் நம்மை அடிமைப்படுத்திய போது அவர்களது பாணியில் சுதேசி கப்பல் வாங்கி வணிகம் மூலம் போராட்டத்தை முன்னெடுத்தவர் வ.உ.சிதம்பரனார். தூத்துக்குடி என்றாலே பலருக்கும் நினைவில் வருவது முத்துக்கள் தான். அந்த முத்துக்களில் ஒன்றாக பிறந்தவர் தான் வ.உ. சிதம்பரனார்.

    தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள ஓட்டப்பிடாரத்தில் 1872-ம் ஆண்டு செப்டம்பர் 5-ம் நாள் உலகநாதர் -பரமாயி அம்மாள் என்ற தம்பதிக்கு மகனாக பிறந்தார் வ.உ.சி.

    ஓட்டப்பிடாரத்திலும், நெல்லை மாவட்டத்திலும் தனது பள்ளிப் படிப்பை நிறைவு செய்தார். பள்ளிப் படிப்பு முடிந்ததும் ஓட்டப்பிடாரத்தில் உள்ள மாவட்ட நிர்வாக அலுவலகத்தில் வேலைக்கு சேர்ந்தார். ஒரு சில ஆண்டுகள் வேலை செய்த பிறகு சட்டக் கல்லூரியில் சேர்ந்து சட்டப்படிப்பை படித்து முடித்தார்.

    தந்தை போலவே தானும் மிகச்சிறந்த வழக்கறிஞராக வர வேண்டும் என்பதில் உறுதியாக இருந்த வ.உ.சி.க்கும், அவரது தந்தையின் செயல்பாடுகளுக்கும் நிறைய வேறுபாடுகள் இருந்தன.

    அவரது தந்தை பணக்காரர்கள் பிரச்சினைகளுக்கு மட்டுமே வாதாடுவார். ஆனால் வ.உ.சி. ஏழை மக்களின் மீது கொண்ட அனுதாபத்தின் காரணமாக, பல நேரங்களில் தனது தந்தையின் விருப்பத்திற்கு எதிராக வாதாடி இருக்கிறார்.

    தனது சிறப்பான வாதத் திறமையினாலும் பல வழக்குகளில் சிறப்பாக வாதாடி வெற்றி கண்டதால் பலராலும் ஈர்க்கப்பட்டு மிகச்சிறந்த வழக்கறிஞர் என்ற பெயர் பெற்றார் வ.உ.சிதம்பரனார்.

    அரசியல் மீது கொண்ட ஆர்வத்தால் 1905-ஆம் ஆண்டு தன்னை இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியில் இணைத்துக் கொண்டார்.

    இந்தியாவில் சுதேசி இயக்கம் தலைதூக்கிய அந்த நேரத்தில் தலைவர்களான லாலா லஜபதி ராய், பால கங்காதர திலகர் போன்ற பலரும் ஆங்கிலேய வர்த்தக வற்புறுத்தலுக்கு முற்றுப்புள்ளி வைக்க முயற்சி செய்து வந்தனர்.

    அதே காரணத்திற்காகவும், இந்திய பாரம்பரிய கைத்தொழில்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையிலும் அரவிந்தோ கோஷ், சுப்பிரமணிய சிவா, சுப்பிரமணிய பாரதி ஆகியோர் சென்னை மாகாணத்தில் இருந்து போராடினர்.

    இதுதான் வ.உ.சியை இந்திய காங்கிரஸ் கட்சியில் சேரவும், சென்னை மாகாண உறுப்பினர்கள் உடன் இணைந்து போராடவும் தூண்டியது. அதன்பிறகு இந்திய தேசிய காங்கிரஸ் அமர்வின் சேலம் மாவட்ட அமர்வை தலைமை தாங்கினார்.

    வ.உ.சியின் சுதந்திர போராட்ட முறை மற்ற சுதந்திர போராட்ட வீரர்களின் பாணியில் இருந்து மாறி காணப்பட்டது. தமிழகம்- இலங்கை இடையிலான ஆங்கிலேய கப்பல் போக்குவரத்து கொள்ளைக்கு முற்றுப்புள்ளி வைக்க விரும்பினார். இதையறிந்த ஆங்கிலேயே நிறுவனத்தினர் பல்வேறு இடையூறுகளை ஏற்படுத்தினர். ஆனாலும் அதற்கு அஞ்சாத வ.உ.சி. கொழும்பு சென்று ஒரு கப்பலை வாங்கி வந்தார்.

    வ.உ.சி கப்பல் போக்குவரத்தை ஒரு வணிகமாக மட்டும் பார்க்காமல் எதில் கைவைத்தால் ஆங்கிலேயனுக்கு வலிக்கும் என்பதை தெரிந்து வைத்திருந்தார். அவர்கள் வணிகம் செய்யத்தான் வந்தவர்கள் என்பதால் அவர்களின் வணிகத்தில் கைவைத்து அதில் இருந்து மக்கள் மத்தியில் சுதந்திர போராட்ட எண்ணத்தை ஊக்குவித்தார்.

    வ.உ.சி.யின் "சுதேசி கப்பல்" வந்ததும் அது மக்களிடம் அதிக செல்வாக்கை பெற்று வளர்ந்தது. வ.உ.சி. ஆங்கியேலர்களை எதிர்த்து கப்பல் விட்ட தகவல் நாடு முழுவதும் காட்டுத் தீ போல பரவியது. இதனால் ஆங்கிலேயர்களுக்கு பெரும் வருமான இழப்பு ஏற்பட்டது.

    அப்போது இருந்த திருநெல்வேலி கலெக்டர் மேலிடத்திற்கு ஒரு கடிதம் எழுதினார். அதில் இந்த பகுதியில் குறிப்பாக வ.உ.சி. கப்பல் போக்குவரத்தை தொடங்கிய பின்பு, மக்களிடையே சுதந்திர போராட்ட உணர்வு அதிகரித்து உள்ளது என்று தெரிவித்தார். அது ஆங்கிலேயர்கள் மத்தியில் ஒரு அச்சத்தை ஏற்படுத்தியது.

    ஆங்கிலேய அரசாங்கம் மற்றும் ஆங்கிலேய வியாபாரிகளின் கோபத்தை தாண்டியும் வ.உ.சி கப்பல் தூத்துக்குடி- கொழும்பு இடையில் வழக்கமான சேவையை தொடங்கியது. சுதேசி நிறுவனம், ஆங்கிலேயே கப்பல் நிறுவனத்துக்கு கடும் போட்டியாக உருவெடுத்தது.

    ஆங்கிலேயர்கள் இந்த போட்டியை சமாளிக்க முடியாமல் கட்டணத்தை குறைக்க முடிவு செய்து சுதேசி கப்பல் கட்டணத்தை விட குறைவாக அறிவித்தனர். அதற்கு பதிலடி கொடுக்க வ.உ.சியும் தனது கட்டணத்தை மேலும் குறைத்தார்.

    கடைசியில் ஆங்கிலேய கப்பல் கம்பனி பயணிகளை இலவசமாக அழைத்து செல்வதாக கூறி கூடுதலாக பயணிகளுக்கு குடைகளை பரிசாக வழங்கியது. வ.உ.சியால் இலவசமாக வழங்க முடியாததால் சுதேசி கப்பல் நிறுவனம் திவால் ஆகும் நிலைக்கு சென்றுவிட்டது.

    அதன் பிறகு நாட்டில் சுதேசி இயக்கத்தை விரிவாக்கவும் ஆங்கிலேயர்களின் தவறான வியாபார கொள்கையை மக்களுக்கு எடுத்து சொல்லவும், ஆங்கில அரசுக்கு எதிராக மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக தொழிலார்களை ஒன்று திரட்டினார்.

    ஆங்கிலேய அதிகாரிகள் ஏற்கனவே அவர் மீது கொண்டிருந்த வெறுப்பினால், அரசுக்கு எதிராக செயல்படுவதாக குற்றம் சாட்டி, 1908 மார்ச் 12-ந்தேதி அவரை கைது செய்தனர். பின்னர் கோயம்புத்தூரில் உள்ள மத்திய சிறைக்கு 1908-ம் ஆண்டு ஜூலை 9-ந்தேதி மாற்றப்பட்டார்.

    சிறைச்சாலையில் மாட்டிற்கு பதிலாக வ.உ.சியை செக்கு இழுக்க செய்து ஆங்கிலேயர்கள் சித்ரவதை கொடுத்தனர். அதனால் அவருக்கு "செக்கிழுத்த செம்மல்" என்ற பெயரும் உண்டு.

    இப்படி பல தொல்லைகளை சிறையில் அனுபவித்த போதும் அவர் சும்மா இருக்கவில்லை. தனது சட்ட மனுக்கள் மூலம் அவரது சுதேசி நடவடிக்கைகளை தொடர்ந்து வந்தார். மேலும் தனது சுயசரிதையையும் எழுத ஆரம்பித்தார்.

    சிறையில் இருக்கும் போதே தத்துவ எழுத்தாளரான ஜேம்ஸ் ஆலன் புத்தகங்களை தமிழில் மொழி பெயர்த்தார். அதுமட்டு–மில்லாமல் திருக்குறள், தொல்காப்பியம் போன்ற தமிழின் மிக முக்கியமான காவியங்களுக்கு விளக்க உரை எழுதி உள்ளார்.

    சிறையில் கடின உழைப்பை வெளிப்படுத்தியதால் அவருடைய உடல்நிலையில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது. அதனால் ஆங்கிலேயர்கள் வ.உ.சியை விடுதலை செய்ய வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டனர். அதன்படி டிசம்பர் 1912-ம்ஆண்டு 12-ந்தேதி அவரை விடுதலை செய்தனர்.

    வழக்கறிஞர் உரிமம் அவரிடம் இருந்து பறிக்கப்பட்டதால் அவரால் தொடர்ந்து வாதிட முடியவில்லை. சுதேசி கப்பல் நிறுவனமும் ஒழிக்கப்பட்டதால் மிக ஏழ்மை நிலைக்கு தள்ளப்பட்டு, மனைவி மற்றும் இரண்டு குழந்தைகளுடன் சென்னையில் குடியேறினார். அங்கு மண்எண்ணை வியாபாரத்தை தொடங்கினார். ஆனால் அதில் அவரால் வெற்றி பெற முடியவில்லை.

    செல்வந்தரான குடும்பத்தில் பிறந்தும் வசதியான வாழ்க்கை வாழாமல், சிறை, போராட்டம் என தன் வாழ்நாள் முழுவதும் இந்திய மக்களின் விடுதலைக்காகவே உழைத்த அந்த மாமனிதர் 1936, நவம்பர் 18-ம் நாள் காலமானார்.

    நாளை (5-ந்தேதி) வ.உ.சி.யின் 151-வது பிறந்தநாள் விழா கொண்டாடப்படுகிறது. தற்போது சுதந்திர தின அமுதப் பெருவிழாவையொட்டி சுதந்திரத்திற்காக பாடுபட்ட ஒவ்வொரு வீரர்களையும் பெருமைபடுத்தி வருகிறோம். அந்தவகையில் வ.உ.சி.யை என்றென்றும் நினைப்போம். நினைவில் கொள்வோம்.

    Next Story
    ×