என் மலர்
சிறப்புக் கட்டுரைகள்

நலமான வாழ்வு தரும் சாகம்பரி தேவி

- உலகத்தை நிலைக்கச் செய்பவளாகவும் செயல் வடிவமாகவும் இருப்பவளுக்கு நமஸ்காரம்.
- உலகத்தின் தவிப்பை, குழந்தைகளின் துயரத்தைத் தீர்ப்பதற்கான அம்பிகையின் அருள் வடிவமே சாகம்பரி வடிவமாகும்.
அம்பிகை என்னவாக விளங்குகிறாள் என்றொரு கேள்வியைக் கேட்டுப் பார்த்தால் விடை என்ன?
உயிர்களிடத்தில் அம்பிகை என்னென்னவாகத் திகழ்கிறாள் என்று பெரியதொரு பட்டியலையே தேவி மஹாத்மியம் தருகிறது.
ஜகத் பிரதிஷ்டாயை தேவ்யை கிருத்யை நமோ நம:
உலகத்தை நிலைக்கச் செய்பவளாகவும் செயல் வடிவமாகவும் இருப்பவளுக்கு நமஸ்காரம்.
யா தேவீ சர்வ பூதேஷு சேதனேத் அபிதீயதே நமஸ் தஸ்யை
எவள், அனைத்து உயிர்களிடத்தும் உயிர்நாடி யாகத் திகழ்கிறாளோ அவளுக்கு நமஸ்காரம்.
யா தேவீ சர்வ பூதேஷு சக்தி ரூபேணசம்ஸ்திதா நமஸ்தஸ்யை
எவள், அனைத்து உயிர்களிடத்தும் ஆற்றல் வடிவமாகத் திகழ்கிறாளோ அவளுக்கு நமஸ்காரம்.
யா தேவீ சர்வ பூதேஷு புத்தி ரூபேண சம்ஸ்திதா நமஸ்தஸ்யை
எவள், அனைத்து உயிர்களிடத்தும் அறிவு வடிவமாகத் திகழ்கிறாளோ அவளுக்கு நமஸ்காரம். – இவ்வாறாகப் பட்டியல் நீண்டு கொண்டே போகிறது.
உயிர்களுக்கான அனைத்துமாக அம்பிகை இருக்கிறாள். உயிர்ச்சத்தாகவும் ஊட்டமாகவும் திகழ்கிறாள்.
இவ்வாறாக, ஊட்டமாகவும் உயிராகவும் இருக்கிற வடிவத்தில், அம்பிகைக்கு 'சாகம்பரீ' என்பது திருநாமம். சதாக்ஷீ, மா சாகம்பரீ, சாகம்பரி தேவி என்றெல்லாமும் பெயர்கள் கொண்ட இவளின் திரு அவதாரம் ஏன் நிகழ்ந்தது?
துர்கமன் என்னும் அரக்கன். மிகக் கடுமையான தவங்களை மேற்கொண்டான். தவத்தை மெச்சி பலவகையான வரங்களை அவனுக்கு பிரம்மா அளித்தார். வரங்களோடு கூடுதலாக, நான்கு வேதங்களும் தனக்கு வேண்டும் என்றும் கேட்டுப் பெற்றுக் கொண்டான். யாகமோ யக்ஞமோ எங்கு நடந்தாலும், அவற்றின் பலன்கள் தனக்கு மட்டுமே கிட்டவேண்டும் என்றும் வாங்கிக் கொண்டான்.
விளைவு…?
துர்கமன் பலசாலி ஆனான். வேத பலமும் யாக பலமும் குன்றிப் போய், தேவர்களும் முனிவர்களும் மனிதர்களும் சிதிலமடைந்தனர். ஆணவத்தின் வசப்பட்ட அரக்கன், அனைவரையும் துன்புறுத்தினான். யாகப் பலன்கள், தாறுமாறாகப் போனதால், தர்மமும் நியாயமும் குன்றிப் போயின. உலகமெல்லாம் பஞ்சம் வலுத்தது. நூறாண்டுகளுக்கும் மேலாக மழை பொழியாமல் இருந்து வறட்சி மேலோங்கியது.
துன்பம் தாள முடியாமல் தவித்த தேவர்களும் முனிவர்களும் துர்கமனிடம் தப்பி, இமயக் குகைகளில் ஒளிந்து கொண்டு, அம்பிகையை தியானம் செய்தனர். 'பசியிலும் பஞ்சத்திலும் வாடுகிற உலகைக் காப்பாற்று தாயே' என்று பரிதவித்து வேண்டினர்.
அன்னையாயிற்றே! குழந்தைகளின் வேண்டு கோளுக்குச் செவி சாய்க்காமல் இருப்பாளா? அழகு ரூபம் எடுத்தாள். அனைத்து திசைகளையும் காணக்கூடியவளாக, பல்லாயிரக்கணக்கான கண்களோடு காட்சி அளித்தாள். எனவே, 'சதாக்ஷீ' (சதம் = நூறு; அக்ஷம் = கண்) ஆனாள்.
ஆயிரம் ஆயிரம் கண்களால் அம்பிகை அருள் பார்வை பார்க்கப் பார்க்க, இன்னுமொரு அற்புதமும் நிகழ்ந்தது. அம்பிகையின் திருமேனியெங்கும், பலவகையான தானியங்களும், காய்களும், கனிகளும், கீரைகளும், பருப்புகளும், மூலிகைகளும் நிரம்பின. உணவுப் பொருட்களால் நிறைக்கப் பட்டவளாக, உணவை அள்ளி அள்ளி வழங்குபவளாகக் காட்சி தந்தாள். எனவே, 'சாகம்பரி' (சாக = காய் கனி தொடர்பான; அம்பரம் = ஆடை; சாகம்பரி = காய் கனிகளையே ஆடையாக அணிந்தவள்) ஆனாள்.
அம்பிகையின் அருட்கோலத்தைக் கண்டு தேவர்களும் முனிவர்களும் மனிதர்களும் உருகி நின்றனர். கைகூப்பி வணங்கியவர்களை அம்பிகை கண்டாள். துயருற்று நிற்கும் பிள்ளையைக் காண்கிற அன்னை, கண்ணீர் வடிப் பாளில்லையா? அப்படியே, இத்தனை காலம் துன்பப்பட்ட தன்னுடைய பிள்ளைகளின் பரிதவிப்பையும், இப்போது துன்பம் தீர்ந்ததால் அவர்கள் விடுகிற நிம்மதிப் பெருமூச்சையும் கண்ட சாகம்பரித் தாயும் தாரை தாரையாகக் கண்ணீர் வடித்தாள். ஆறாகப் பெருகிய கண்ணீர், பூமியில் பாய்ந்து பல்கிப் பெருகியது. அதென்ன வெற்று உப்புக் கண்ணீரா? அம்பிகையின் அருள் கண்ணீரல்லவா! அந்த ஆறே, பூமியை வளப்படுத்தியது.
உலகத்தின் தவிப்பை, குழந்தைகளின் துயரத்தைத் தீர்ப்பதற்கான அம்பிகையின் அருள் வடிவமே சாகம்பரி வடிவமாகும்.
சாகம்பரி தேவியானவள், உயிர் காப்பவள். நீண்ட கால நோய்கள், நெடிய வறுமை, வாட்டும் துயரம் ஆகியவற்றிலிருந்து காப்பவள் இவளே! பயிர்களுக்கு இவளே அதிபதி.
இதெல்லாம் சரி, துர்கமனுக்கு என்னாயிற்று என்கிறீர்களா?
சாகம்பரியாகத் தோற்றம் தந்தவள், வேதங்களை மீட்டாள். யாக யக்ஞங்களை வழிப்படுத்தினாள். கடமை களைச் செய்வதற்கான முறைகளைப் பயிற்றுவித்தாள்.
இந்தச் செய்திகளெல்லாம் துர்கமனுக்கு எட்டின. யாக யக்ஞங்களின் பலன்கள் அவனுக்குக் கிடைக்காமல் போனதில், அவனும் வலு விழந்தான். வேதங்களையும் காணவில்லை. தன்னுடைய பலவீனங்கள் வெளிப்பட ஆரம்பிக்க, அவனுக்கு கோபம் கொப்பளித்தது. அம்பிகை இருக்குமிடம் நாடி வந்தான். வம்புக்கு இழுத்துப் போர் தொடுத்தான். உக்கிரமான போர்.
அம்பிகையின் திரிசூலம், துர்கமனின் மீது பாய்ந்தது. அரக்கனின் ஆற்றல்கள் யாவும் அழிக்கப்பட்டன.
இத்தனை நாட்களாக, வேதங்களின் ஆற்றலையும் யாகயக்ஞங்களின் ஆற்றலையும் சேகரித்து தனக்குள்ளே வைத்திருந்தான் அந்தப் பொல்லா அரக்கன். திரிசூலத்தை அவன்மீது பாய்ச்சி, அந்தச் சேகரிப்பையெல்லாம் இழுத்தாள். அப்படியே அவை யாவும் அம்பிகையிடம் ஐக்கியப்பட்டு கோடி சூரியப் பிரகாசத்தை வெளிப்படுத்தின.
வேதங்களை எடுத்து தேவர்களிடம் கொடுத்தாள். கடைசியில், சொல்லிக் கொள்ள ஏதுமில்லாமல் எஞ்சியிருந்தான் துர்கமன். ஆனாலும், ஆணவமும் அகங்காரமும் மட்டும் அடங்கவில்லை. திரிசூலம் கொண்டு அம்பிகை அவனை வதம் செய்தாள்.
துர்கமன் என்னும் அரக்கனைக் கொன்றதால், துர்கை என்னும் திருநாமம் ஏற்பட்டது. 'சாக' என்னும் சொல், கிளைகளைக் குறிக்கும். தாவரங்களின் கிளைகளாகக் காயும் கனியும் வளர்வதால், காய்கனிகளுக்கும் இப்பெயரே அமைந்தது. இதனாலேயே, வனசங்கரி (அல்லது கன்னட உச்சரிப்போடு பனசங்கரி) என்றும் இவளை அழைப்பதுண்டு.
நீலநிற அல்லது செந்நிறத் திருமேனி படைத்தவள்; ஒரு திருமுகமும் நான்கு அல்லது எட்டு அல்லது பதினாறு திருக்கரங்களும் கொண்டவள். தாமரை மலரொத்த கண்களும் பெருத்த தனங்களும் சுழித்த நாபியும் தாங்கியவள். செவ்வாடை அணிந்துகொண்டு, சூலம், பாசம், அங்குசம், கபாலம், வில், அம்பு, வஜ்ராயுதம், கேடயம், சங்கு, சக்கரம், கதை, கட்வாங்கம், கத்தி, தண்டம் போன்ற ஆயுதங்களில் சிலவோ பலவோ ஏந்தி, அபய முத்திரை காட்டுபவளாக, இவற்றுக்கிடையில், கரம் ஒன்றில் தாமரை மலரையும் தாங்கியிருப்பாள். தாமரை மலரை வண்டுகள் சூழ்ந்திருக்கும். ஆயுதங்களுக்கிடையில், காய்களும், கனிகளும், வேர்களும், கிழங்குகளும், இவளுடைய கரங்களில் பொருந்தியிருக்கும்.
மகேசுவர பத்தினியான இவளை வழிபட்டால், துன்பங்கள் மட்டுமில்லை, அச்சங்களும் அநாவசியக் குழப்பங்களும் அகலும்.
தொடர்புக்கு - sesh2525@gmail.com