search icon
என் மலர்tooltip icon

    சிறப்புக் கட்டுரைகள்

    பாட்டில் இருக்கும் சங்கதி- கவியரசரை கிறங்க வைத்த வாலி பாடல்
    X

    பாட்டில் இருக்கும் சங்கதி- கவியரசரை கிறங்க வைத்த வாலி பாடல்

    • ஒவ்வொரு பாடலுக்கும் பின்னால் இருக்கும் கதைகளை இதுவரை பார்த்து வந்தோம்.
    • ஒரு நாள் கவியரசு கண்ணதாசன், எம்.எஸ்.வி.யோடு காரில் ஸ்டூடியோவுக்கு சென்று கொண்டிருந்தார்.

    ஒவ்வொரு பாடலுக்கும் பின்னால் இருக்கும் கதைகளை இதுவரை பார்த்து வந்தோம். இந்த வாரம் ஒரு பாடல், இன்னொரு பாடலுக்கு எப்படி தூண்டுதலாக இருந்தது என்பதைப் பற்றி பார்ப்போம்.

    இயக்குனர் ஸ்ரீதர் சாரோட "காதலிக்க நேரமில்லை" ரொம்பவே பாப்புலரான படம். இது உங்களுக்குத் தெரியும்.

    அந்த படத்தின் ஓப்பனிங் காட்சியே "என்ன பார்வை உந்தன் பார்வை" என்ற பாடலோடு தொடங்கும். நம்ம சென்னை பீச் ரோட்டுல முத்துராமன் சார்காரை ஓட்டிக் கொண்டே அந்த பாடலைப் பாடுவார். அது மேற்கூரை இல்லாத ஓப்பன் கார். ஜோடியாக நடித்த காஞ்சனா காரின் முன்னும் பின்னுமாக மிடுக்குடன் நடந்து வருவார். அந்த படத்தில் இந்த பாட்டும் பிரபலம், அக்காட்சியும் பிரபலம்.

    ரொம்ப நாளைக்கு பிறகு ஸ்ரீதர் சார் "தென்றலே என்னைத் தொடு" என்ற ரொமான்டிக் காமடிப் படத்தை எடுக்கிறார். நடிகர் மோகன் கதாநாயகன். நடிகை ஜெயஸ்ரீ அறிமுகம்.

    இந்த படத்திலும் காதலிக்க நேரமில்லை படத்தைப் போன்று ஓபனிங் காட்சியை வைக்க ஆசைப்படுகிறார். அந்த படத்தில் காட்டப்பட்டது போல் மேற்கூரை இல்லாத காரில் பாடி வருவது போல் படமாக்க நினைக்கிறார் 1985களில் அந்த மாதிரியான கார் கிடையாது. அதற்காக தேடியலைகிறார். மயிலாப்பூரில் ஒருவரிடம் " பீடில்" என்ற வண்டு போல இருக்கும் ஒரு பழைய காரை வாங்கி வருகிறார்.

    காரை ஓட்டுவது பணக்கார கதாபாத்திரத்தில் நடிக்கும் ஜெயஸ்ரீ, காதலிக்க நேரமில்லை படத்தில் காஞ்சனா என்ன பண்ணினாரோ அதே ரோலை இங்கே மோகனை பண்ண வைக்கிறார்.

    இப்படி தன்னுடைய முந்தைய படத்தின் பாடலே தூண்டுகோலாக இருந்து இந்த படத்துக்காக உருவான பாடல் தான் "கவிதை பாடு குயிலே குயிலே இனி வசந்தமே" என்ற பாடல்.

    நடிகர் திலகம் சிவாஜி நடித்த 'அம்பிகாபதி', சரித்திர சாதனை புரிந்த படம். இதற்கு இசையமைத்தவர் இசைமேதை ஜி.ராமநாதன். இதில் "சிந்தனை செய்மனமே..." என்றொரு பாடல் உண்டு. டி.எம்.எஸ். பாடியுள்ளார். கல்யாணி ராகத்தில் அமைந்த அந்தப் பாடல் பிரபலமானது.

    இந்தப் பாடலைக் கேட்ட திரையிசைத்திலகம் கே.வி.மகாதேவன் அசந்து போனார்.

    "வாழ்க்கையில் இப்படி ஒரு கல்யாணியை கேட்டதே இல்லை. இனி யாராலும் இதுபோன்று அதை தொட முடியாது" என்று ஜி.ராமநாதன் சாரை பாராட்டினாராம்.

    கொஞ்ச நாள் கழித்து கே.வி.மகாதேவனின் உதவியாளர் புகழேந்தி சார் "சிந்தனை செய்மனமே" பாடலை இன்ஸ் பிரேஷனாக வைத்து நாம் ஒரு பாடலை கல்யாணி ராகத்தில் படைப்போம் என்று வலியுறுத்தினார்.

    அப்போது கே.வி.மகாதேவன் சார் ஆர்மோனியத்தில் இருந்து பிறந்தது தான் திருவருட்செல்வர் படத்தில் இடம்பெற்ற "மன்னவன் வந்தானடி..." பாடல். சிந்தனை செய் மனமே.... பாடலைவிட 100 மடங்கு ஹிட்டானது இந்த பாடல். இன்றைக்குக் கூட மேடைகளில் பாடப்பட்டு வருகிறது.

    இந்த பாடலின் பின்னால் ஒரு சுவாரசியமான சம்பவம் உள்ளது. இதனை பாடியவர் பி.சுசிலா. பொதுவாக அவர் எந்தவொரு பாடலையும் ஒரே டேக்கில் பாடிவிடுவார்.

    இந்த பாடலுக்கான ரிகர்சல் முடிந்து ரிக்கார்டிங் நடந்து கொண்டு இருக்கிறது. இரண்டு மூன்று டேக் எடுத்தும் பாடல் முழுமைப் பெறவில்லை. அதற்கு காரணம் என்ன தெரியுமா?

    அந்த பாடல் பதிவின் போது அங்கே சிவாஜி சார் வந்திருந்தார். தான் இருப்பதால் தான் சுசிலாவால் யதார்த்தமாக பாட முடியவில்லை என்று உணர்ந்து கொண்ட சிவாஜி சார், நான் இங்கு இருக்கும் வரை அவரால் கச்சிதமாக பாட முடியாது. அதனால் கிளம்புகிறேன் என்று கூறிச் சென்றார். அதன் பின்னரே சுசிலா அந்த பாடலை பதட்டம் இல்லாமல் பாடி முடித்தார்.

    கே.வி.மகாதேவனின் இந்த கல்யாணி ராகம் அதற்கு அப்புறம் யாரை இன்ஸ்பிரேஷன் செய்தது தெரியுமா? மெல்லிசை மன்னரை தான்.

    கல்யாணி ராகத்தை இதற்குமேல் யாராலும் கையாள முடியாது. அவ்வளவு பிரமாதமாக கே.வி.மகாதேவன் பண்ணியிருக்கிறார் என்று அவரை புகழ்கிறார்.

    அதற்கு கே.வி.மகாதேவன் சார், "அப்படியெல்லாம் கிடையாது. எனக்கே இந்த பாடலுக்கான இசையை அமைக்க தூண்டு கோலாக இருந்தவர் ஜி.ராமநாதன் சார் தான். நீங்க இதனை இன்ஸிபிரேஷனாக கொண்டு இன்னொரு பாடலை பண்ணலாமே" என்று கூறினார்.

    ஆனால் எம்.எஸ்.வி. என்ன செஞ்சாருனா... அது பெரியவங்க பண்ணின வேலை. அது அப்படியே இருக்கட்டும் என்று கூறிவிட்டு கரகரப்பிரியா ராகத்தை கையில் எடுத்தார். "மாதவி பொன் மயிலாள் தோகை விரித்தாள்..." என்ற பாடலை அந்த ராகத்தில் அமைத்தார்.

    எப்படி ஒவ்வொரு ராகத்துக்கும் ஒரு சில பாடல்கள் உதாரணமாக விளங்குகிறதோ, அதாவது கல்யாணி ராகத்துக்கு "சிந்தனை செய் மனமே", "மன்னவன் வந்தானடி தோழி..." பாடல்கள் போன்று, கரகரப்பிரியா ராகத்துக்கு "மாதவி பொன் மயிலாள் தோகை விரித்தாள்..." பாடல் அமைந்தது. இரு மலர்கள் என்ற படத்தில் இடம் பெற்ற இந்தப் பாடலை டி.எம்.எஸ். பாடியிருப்பார்.

    இந்த பாடலில் இன்னொரு பெரிய விசயம் உள்ளது. அது என்ன தெரியுமா--?

    "மாதவி பொன் மயிலாள்..." பாடலை எழுதியவர் கவிஞர் வாலி. இதில் அவர் அற்புதமான வரிகளை போட்டிருப்பார்.

    "மாதவி பொன் மயிலாள்

    தோகை விரித்தாள்

    வண்ண மையிட்ட

    கண்மலர்ந்து தூது விடுத்தாள்

    காதல் மழை பொழியும் கார்முகிலாய்

    இவள் காதலன் நான் இருக்க

    பேரெழிலாய்

    வானில் விழும் வில் போல்

    புருவம் கொண்டாள்

    இளம் வயதுடையாள்

    இனிய பருவம் கண்டாள்

    கூனல் பிறை நெற்றியில் குழலாட

    கொஞ்சும் குளிர் முகத்தில்

    நிலவின் நிழலாட

    கலை மானின் இனம் கொடுத்த விழியாட

    அந்த விழி வழி ஆசைகள்

    வழிந்தோட...."

    என்று பிரமாதமாக பாடலை எழுதியிருப்பார். அந்த பாடல் மிக பெரிய ஹிட் ஆனது. எல்லா இடங்களிலும் ஒலித்தது.

    அந்த சமயத்தில் ஒரு நாள் கவியரசு கண்ணதாசன், எம்.எஸ்.வி.யோடு காரில் ஸ்டூடியோவுக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த காரில் இருந்த ரேடியோவில் "மாதவி பொன் மயிலாள்" பாடல் ஒலித்தது.

    அதை ரசித்துக் கேட்ட கவியரசர் தலையாட்டிக் கொண்டே எம்.எஸ்.வி.யிடம் "ஆஹா என்ன அற்புதமாமன பாடல்... இதை நான் எப்போயா எழுதினேன்?" என்று கேட்டாராம்.

    அதற்கு எம்.எஸ்.வி. "கவிஞரே, இது நீங்க எழுதுன பாட்டு இல்ல, வாலி எழுதினது" என்றார்.

    அப்படியா என வியந்த கவியரசர் டிரைவரிடம் வண்டியை நேரா வாலிசார் வீட்டுக்கு ஓட்டுமாறு கூறினார். அங்கு சென்றதும் கண்ணதாசன், வாலியை கட்டி அணைத்து "மாதவி பொன்மயிலாள்" பாடலை என்ன மாதிரி எழுதியிருக்கீங்க...." என்று பாராட்டினார்.

    கவியரசர் வீடு தேடி வந்து கட்டியணைத்து பாராட்டியதில் வாலி சார் நெகிழ்ந்து கண்ணீர் விட்டாராம். இந்த நிகழ்வை அவர் அடிக்கடி சொல்லி நெகிழ்வதுண்டு.

    இது போன்று தாக்கத்தில் பிறந்த பாடல்கள் பல உள்ளன. தமிழில் வேற்று மொழி பாடல்கள் ஏற்படுத்திய தாக்கம் குறித்து அடுத்த பகுதியில் பார்ப்போம்.

    தொடர்புக்கு:- info@maximuminc.org

    Next Story
    ×