search icon
என் மலர்tooltip icon

    சிறப்புக் கட்டுரைகள்

    மக்கள் குறைகளை போக்கும் கோரக்கர்
    X

    மக்கள் குறைகளை போக்கும் கோரக்கர்

    • சித்தர்கள் மிகுந்த பூமி நம் தமிழ்நாடு. எண்ணற்ற சித்தர்களில் கோரக்கர் தனி சிறப்பு வாய்ந்தவர்.
    • கொல்லிமலையில் தவம் புரிந்து வந்த சித்தர் மச்சேந்திரர் ஒருநாள் அங்கிருந்து புறப்பட்டு பொதிகை மலை செல்லும் விருப்பத்துடன் தென் திசை நோக்கிப் பயணித்தார்.

    சித்தர்கள் மிகுந்த பூமி நம் தமிழ்நாடு. எண்ணற்ற சித்தர்களில் கோரக்கர் தனி சிறப்பு வாய்ந்தவர். அவரது ஜீவசமாதி நாகை மாவட்டம் வடக்கு பொய்கை நல்லூரில் உள்ளது. இங்கு வரும் பக்தர்களுக்கு நல்லருள் புரிந்து வருகிறார். இவ்விடம் தேடி அவர் வந்த வரலாற்றை காண்போம்.

    கொல்லிமலையில் தவம் புரிந்து வந்த சித்தர் மச்சேந்திரர் ஒருநாள் அங்கிருந்து புறப்பட்டு பொதிகை மலை செல்லும் விருப்பத்துடன் தென் திசை நோக்கிப் பயணித்தார்.

    வழியில் சம்பல்பட்டி என்ற ஓர் சிற்றூரில் அவருக்கு தாகம் எடுத்தது. அங்கிருந்த ஓர் இல்லத்தில் சென்று குரல் கொடுத்து நின்றார். அந்த இல்லத் தலைவன் சிவராமன் தீட்சிதர் அப்போது வீட்டில் இல்லை. அவரது மனைவி மட்டுமே இருந்தார். வந்திருப்பவர் எவர் என அறிய முடியவில்லை. எனினும் அவர் ஒரு சிவனடியார் என்பது தெரிந்தது.

    நீர் மட்டுமே கேட்ட அவரை வீட்டுக்குள் அழைத்து அன்பொழுக இலை போட்டு பசியும், தாகமும் தீர்த்து பணிந்து வணங்கினார்.

    உபசரிப்பில் மனம் குளிர்ந்தவராக, அம்மையாரை வாழ்த்திய மச்சமுனி சித்தர், அம்மையாரின் முகத்தில்இழையோடிய சோகத்தைக் குறிப்பால் உணர்ந்தார்.

    "உன் வாழ்வில் ஏதோ ஒரு பெரும் குறை இருப்பது போல் தெரிகிறதே, அது என்ன தாயே?" என்று வினவினார்.

    தயங்கியபடி அவரும் தன் வாழ்வில் எல்லாம் இருந்தும் குழந்தை பாக்கியம் இல்லை என வருத்தத்துடன் கூறினார்.

    மச்சேந்திரர் தன் இடையில் வைத்திருந்த திருநீற்றை எடுத்து, அதை ஒரு பச்சிலையில் வைத்து வழங்கி, "அம்மையே! உன் கணவனுடன் நீராடி சிவதியானம் செய்து இந்தக் கவசத்திருநீற்றினை இருவரும் அணிந்து வணங்குங்கள். எஞ்சியதை தூயநீரில் இட்டுப் பருகுங்கள். உங்கள் நெடுநாள் குறை விரைவில் நீங்கும். பரமஞானி ஒருவன் உங்களுக்கு மகனாக வந்துதிப்பான்!" என ஆசீர்வதித்து விட்டு பொதிகை மலை நோக்கி தன் பயணத்தை தொடர்ந்தார்.

    பிறகு சிவராம தீட்சிதரின் துணைவியார் நீராடச் சென்றார். உடன் வந்த பெண்களிடம், சிவனடியார் கொடுத்த கவசத் திருநீறு பற்றிய விஷயத்தைக் கூறினார்.

    அதைக்கேட்ட அந்தப் பெண்கள், கண்டவன் தரும் திருநீற்றை அணியாதே. அவன் பெண்களை வசியம் செய்யும் மந்திரக் கயவனாக இருக்கலாம் என எச்சரிக்க, பயந்துபோன அம்மையார் அடுப்பு நெருப்பில் மச்சேந்திரர் கொடுத்த திருநீற்றைப் போட்டு விட்டார்.

    பொதிகைமலை சென்று யாகம் புரிந்து பல சித்திகள் பெற்ற மச்சேந்திரர் 10 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் சம்பல்பட்டி வழியாகவே கொல்லிமலை நோக்கிப் பயணம் செய்கிறார். அப்போது சிவராம தீட்சிதரின் வீட்டில் உணவு உண்டது நினைவுக்கு வர அவரின் இல்லம் செல்கிறார்.

    வாயிலில் நின்றிருந்த தீட்சிதரின் மனைவிக்கு அவரை அடையாளம் தெரியவில்லை. மச்சேந்திரர் "அம்மா! என் அருளால் உனக்கு வாய்ந்த மகன் நலமாக இருக்கிறானா?" எனக்கேட்கிறார்.

    கூனிக்குறுகிய அவர், அச்சம் காரணமாக திருநீற்றை அடுப்பு நெருப்பில் எரிந்ததைக் கூறி மன்னிப்பு வேண்டுகிறார்.

    அவரின் அறியாமை கலந்த அச்சத்தை உணர்ந்த மச்சேந்திரர், அடுப்பு சாம்பலை கொட்டும் இடத்துக்கு தன்னை அழைத்து செல்லும்படி கட்டளை இடுகிறார். அம்மையார் கொல்லைப் பக்கம் உள்ள குப்பை மேட்டுக்கு மச்சேந்திரரை அழைத்துச் செல்கிறாள். அதற்குள் அங்கு தெரு ஜனங்கள் கூடி விடுகின்றனர்.

    மச்சேந்திரர் குப்பை மேட்டை நோக்கி கண்மூடி தியானித்தார். பின்னர் "கோரக்கா...! வெளியில் வா... " என்கிறார்.

    "இதோ வருகிறேன் குருநாதரே!" என்ற குரலுடன் 10 வயது தோற்றத்தில் பாலகன் ஒருவன் முகப்பொலிவுடன் விபூதி மணக்க வெளியே வருகிறான். அம்மையார் ஆனந்தக் கண்ணீர் வடிக்கிறார். கூடியிருந்தோர் வியந்து மச்சேந்திரரின் காலில் விழுந்து வணங்குகின்றனர்.

    "உன் தாயை வணங்கு கோரக்கா! சிவனருளால் என்னிடம் சித்துகள் பயின்று உன் பெற்றோர் வியக்கும் சித்தனாக நீ நீண்டகாலம் சிவத்தொண்டு புரிவாய்!" என ஆசீர்வதிக்கிறார். குருவை வணங்கியபின் தாயை வணங்கி எழுகிறான் சிறுவன் கோரக்கர்.

    தவ வாழ்வில் ஈடுபட்ட கோரக்கர் பழனியில் போகருடன் சில காலம் தங்கியிருந்தார். அப்போது போகர் நவபாசான முருகன் சிலை செய்வதற்கு கோரக்கர் உதவியாக இருந்தார்.

    போகர் அதனை பழனியில் நிறுவிய பின் ஆசிரமத்தையும், கோவிலையும் பராமரிக்கும் வேலையை புலிப்பாணி சித்தரிடம் ஒப்படைத்துவிட்டு கோரக்கரை அழைத்து தான் பழனியில் சமாதி ஆன பின் நீ பொய்கைநல்லூர் சென்று தவம் செய். நான் சமாதியில் இருந்து வெளிப்பட்டு அங்கு வந்து உன்னை சமாதியில் அடக்கம் செய்கிறேன் என்று கூறினார்.

    அதன்படி கோரக்கர், போகரை சமாதியில் அடக்கம் செய்துவிட்டு, தான் ஐப்பசி மாதம் பரணி நட்சத்திர தினத்தன்று சமாதி அடைந்து விடுவேன் என்று கூறி வடக்கு பொய்கைநல்லூர் வந்து சேர்ந்தார்.

    அவர் குறிப்பிட்ட நாளில் கோரக்கர் சமாதி நிலை அடைவதை காண எல்லா சித்தர்களும், முனிவர்களும், ஞானிகளும், அடியார்களும் மற்றும் பக்தர்களும், அவ்வூர் மக்களும் கூடியிருந்தனர்.

    கோரக்கரை சமாதி அடையும் இடத்திற்கு போகர் அழைத்து வந்தார். அப்போது போகர், கோரக்கரை பார்த்து "கலியுகம் முடியும் வரை நீ இங்கு இருந்து உன்னை நாடி வரும் பக்தர்களுக்கு அருள் வழங்க வேண்டும்" என்று கூறினார்.

    அதன்பின் கோரக்கர் சமாதியில் இறங்கினார். அப்போது வானவர்களும், சித்தர்களும், முனிவர்களும், ரிஷிகளும் கோரக்கருக்கு வாழ்த்துக்கள் கூறி பூமாரி பொழிந்தார்கள். அம்மையும், அப்பனும் கோரக்கருக்கு காட்சி அளித்தனர். போகர் அவரை சமாதியில் அடக்கம் செய்தார்.

    கோரக்கர் சமாதியான இடத்தில் அம்மையப்பர் திருவடிக்கு அனைத்து பூஜைகளும் நடைபெறுகின்றன. இன்றும் சிவசக்தியின் திருவருளும், கோரக்கர் சித்தரின் குருவருளும் நிரம்பி வழிகின்றன. கோரக்கர் நீண்ட நாள் அங்கு தங்கி இருந்தமையால் இங்கு அபரிமிதமான சக்தி உண்டு. குருவாரம், பவுர்ணமி, அமாவாசை போன்ற நாட்களில் மகான் அருள் வேண்டி இரவில் பக்தர்கள் அங்கு தங்கி செல்கிறார்கள்.

    கோரக்கர் சித்தர் சமாதியில் நாள்தோறும் இரவில் அடியவர்களுக்கு அன்னம் பாலிக்கும் ஒரு சம்பிரதாயம் பல ஆண்டுகளாக பின்பற்றப்பட்டு வருகிறது. இரவில் ஆசிரமத்தின் பூசாரி தன் தோளில் அன்னக்காவடியை சுமந்தபடி வடக்கு பொய்கைநல்லூரில் வடக்கு மற்றும் தெற்கு வீதிகளில் வலம் வருவார். அன்னக்காவடி தர்மம் என ஒவ்வொரு வீட்டுவாசலில் நின்றபடி குரல் கொடுப்பார். எல்லா குடும்பத்தினரும் அன்னக்காவடிக்கு பக்தி சிரத்தையுடன் அன்னம் பாலிக்கின்றனர்.

    'சுத்தானம்' எனப்படும் சுடு சோற்றை ஆசிரமம் சென்றபின் கோரக்கர் சித்தருக்கு இரவு பூஜை நடைபெறுகிறது. பிறகு பூஜை செய்த சுத்த அன்னம் அடியவர்களுக்கு வழங்கப்படுகிறது.

    இந்த உணவை உண்ணும் வாய்ப்பு பெற்றவர்கள் பாக்கியசாலிகள் என்கின்றனர். இதை பல நோய்களை தீர்க்கும் மருந்தாகவும் நம்பி வருகின்றனர் பக்தர்கள்.

    கோரக்கர் பொய்கைநல்லூர் நந்தி நாதேஸ்வரர் ஆலயத்தின் வலதுபுறத்தில் உள்ள வன்னிமரத்தடியில் சமாதி பூண்டு அருளாட்சி செய்து வருகிறார்.

    நாகை அருகே உள்ள வடக்கு பொய்கை நல்லூரில் அமைந்துள்ள கோரக்கச் சித்தர் ஜீவ சமாதி பீடத்தில் தூய்மை, அமைதி, பக்தி, நிம்மதி என்ற உணர்வுகளால் நாம் ஆட்கொள்ளப்படுவது இயல்பானது.

    வாழ்க்கைப் போராட்டத்தில் மனம் பேதலித்து வருபவர்களுக்கு இந்த ஆசிரமம் ஒரு சஞ்சீவிக் கூடமாக இருந்து வருகிறது என்றால் மிகையில்லை.

    ஆசிரமத்தின் நடுவில் கோரக்கச் சித்தர் பீடம் உள்ளது. அழகான கருவறை, அதன் உள்ளே சித்தரின் நிலவறை. அந்நிலவறையில்தான் கோரக்கச் சித்தர் ஜீவசமாதி நிலையில் தன்னை நாடி வரும் பக்தர்களின் துயரங்களை போக்கி வருகிறார். நீண்ட நாள் பிணி, தோஷம் இவற்றை நீக்கி, வாழ்க்கை வளங்களை அளித்து 'பூரண நலம் தரும் கோரக்கச் சித்தர்' என்ற பெருமையுடன் அருள்பாலித்து வருகிறார்.

    கோரக்கச் சித்தரின் ஜீவ சமாதியின் மேல் இறைவன் எம்பெருமான் மற்றும் இறைவி வாலாம்பிகையின் திருவடிகள் காணப் படுகின்றன. ஒரே நேரத்தில் இறைவன், இறைவி, சித்தர் ஆகிய மூவரையும் தரிசிக்கும் பேறு கிட்டுகிறது. இச்சந்நதியின் ஈர்ப்புக்கு வசமாகாதவர்களே இல்லை என்றுதான் சொல்ல வேண்டும்.

    பவுர்ணமியின்போது பக்தர்கள் பெருமளவில் வந்து குழுமி விடுகின்றனர். சித்தர்கள், ஞானிகள், தேவர்கள் கோரக்கச் சித்தர் கோயிலை நோக்கி வருவதனால் அன்று தெய்வ பலம் மிகுந்துவிடுகிறது. இதுபோன்ற நாட்களில் வெளியூர் பக்தர்கள் இரவு முழுவதும் இந்த ஆஸ்ரமத்தில் தங்கிவிட்டு, விடிந்த பிறகே வீடு திரும்புகிறார்கள்.

    பக்தர்கள் நினைத்த காரியங்கள் நிறைவேறுகின்றன. கேட்ட வரங்கள் பலிக்கின்றன. திருமணம் கைகூடாமல் இருக்கும் ஆண், பெண் என்று பலரும் வந்து சித்தரின் அருளாசியைப் பெற்று வெகு சீக்கிரத்திலேயே திருமணம் கை கூடப் பெறுகின்றனர்.

    கருவறையின் பின்புறத்தில் உள்ள தியான மண்டபத்தில் அமர்ந்து மனதை ஒருநிலைப்படுத்த முயற்சித்தால் நம் உள்ளத்தை பேரமைதி சூழ்வதை உணர முடிகிறது.

    கோரக்கர் சமாதி அடைந்த தினத்தையொட்டி வடக்கு பொய்கை நல்லூரில் உள்ள அவரது பீடத்தில் இன்று பரணி விழா நடத்தப்படுகிறது.

    Next Story
    ×