search icon
என் மலர்tooltip icon

    சிறப்புக் கட்டுரைகள்

    அரன் ஆடும் ஆருத்ரா நடனம்
    X

    அரன் ஆடும் ஆருத்ரா நடனம்

    • திருவாதிரை வானிலேயே மிகப்பிரகாசமான 20 நட்சத்திரங்களில் 10வதாகும்.
    • பூமியிலிருந்து திருவாதிரை நட்சத்திரம் 310 ஒளியாண்டுகள் தூரத்தில் உள்ளது.

    27 நட்சத்திரங்களில் ஒன்றான திருவாதிரை,6-வதாக அமைந்துள்ளதாகும். இதற்கு மூதிரை, செங்கை, யாழ், ஈசர் தினம், அரணாள், யாதிரை ஆகிய தமிழ்ப்பெயர்களை திவாகர, பிங்கல நிகண்டுகள் குறிப்பிடுகின்றன. திருவாதிரை வானிலேயே மிகப்பிரகாசமான 20 நட்சத்திரங்களில் 10வதாகும். பூமியிலிருந்து திருவாதிரை நட்சத்திரம் 310 ஒளியாண்டுகள் தூரத்தில் உள்ளது. சோதிட சாஸ்திரம், இந்துப் பஞ்சாங்கப்படி ஒவ்வொரு நாளும் சந்திரன் 27 நட்சத்திரங்களுள் எதற்கு அருகில் இருக்கிறதோ அந்தநாள் அந்தமாதத்தில் அந்த நட்சத்திரத்தின் நாளாகக் கொள்ளப்படுகிறது. மார்கழி மாதம் திருவாதிரை நட்சத்திர நாள் சிவபக்தர்களாலும் சிவன்கோவில்களிலும் ஒரு முக்கியமான விழாவாகக் கொண்டாடப்படுகிறது.

    "நடேசன்" "நடராஜன்" எனப்படும் நடனத்தில் வல்ல சிவன் பல சந்தர்ப்பங்களில் பல திருத்தலங்களில் பலவித நடனங்கள் ஆடி அருள்புரிந்திருக்கிறார். சிவபெருமான் தனித்து 48. தேவியோடு 36. திருமாலுடன் 9. முருகப் பெருமானுடன் 3. தேவர்களுக்காக ஆடியது 12 என 108 நடனங்கள் கணக்கிடப்பட்டுள்ளது.

    சிவதாண்டவங்களில் சிதம்பரம் மற்றும் பேரூரில் ஆடிய ஆனந்த தாண்டவம், திருவாரூரில் அஜபாதாண்டவம், மதுரையில் சுந்தரத் தாண்டவம், அவிநாசியில் ஊர்த்துவ தாண்டவம், திருமுருகன்பூண்டியில் பிரம்ம தாண்டவம், மற்றும் சந்தியா தாண்டவம், கவுரி தாண்டவம், திரிபுர தாண்டவம், காளிகா தாண்டவம், சம்ஹாரத் தாண்டவம் என பல தாண்டவங்கள் ஆடி நிலை நிற்பவர் .

    நடனம்:திருவாரூரில் நடராஜப் பெருமான் திருமாலின் மூச்சுக்காற்றுக்கு இணையாக அசைந்தாடுவதை அஜபா நடனம் என்பர். திருக்குவளையில், தேனீக்கள் முன் பின் மேல் கீழ் எனச் சென்று பறந்து காட்சி தருவதுபோல் ஆடும் நடனத்தை பிரம்மத் தாண்டவம் என்கின்றனர். திருநள்ளாறில் உன்மத்தம் பிடித்தவன் போல ஆடியதால், அதை உன்மத்த நடனம் என்பர். நாகையில் கடல் அலைபோல மேலெழுந்து, பிறகு அடங்கி ஆடும் பாராவார தரங்க நடனம், வேதாரண்யத்தில் அன்னப்பறவைபோல் அசைந்தாடும் ஹம்ச நடனம், திருவாய்மூரில் தடாகத்தில் மலர்ந்திருக்கும் தாமரை மலர்கள் காற்றலைகளால் அசைவது போன்ற கமலநடனம், திருக்காரவாயிலில் கோழி தன் சிறகை அடித்துக் கொண்டு தன் குஞ்சுகளைச் சுற்றி வருவது போல் இறைவனாடிய குக்குட நடனம், திருவாலங்காட்டில் காளிக்காக ஆடிய காளி தாண்டவம் ஆகியவை குறிப்பிடும்படியான சில நடனங்களாகும்.

    தில்லையில்.. பலவகை நடனங்களைப் போலல்லாமல் ஒரு நேரம் ஆதிசேஷன் சிவன் மகிழ்வு மேலிட்டு ஆடும் ஆனந்தத் தாண்டவத்தைக் காணவேண்டுமென கயிலை சென்று தன் ஆசையை வெளிப்படுத்தினார். சிவன் பூலோகத்தில், தில்லைவனத்தில் அத்திரி மகரிஷியின் மகனாக வளருமாறு பணித்தார். அத்திரி மகரிஷி ஆற்றில் நித்திய கடன்களைச் செய்யும்போது ஐந்து முகத்துடன் குழந்தையாக அவர் கைகளில்தட்டுப்பட அக்குழந்தைக்கு பதஞ்சலி என பெயரிட்டு வளர்த்தார் .

    சிவபக்தன் மழன் சிவபூசை செய்வதில் விருப்பமுடையவன். சிவனுக்கு கீழே விழுந்து மாசுபடாத, வண்டு போன்ற உயிரினங்கள் நுகராத, தூய மலர்களால் அர்ச்சனை செய்ய விரும்பியவன், அதிகாலையிலேயே மரத்தில் ஏறி அர்ச்சனைப் பூக்களை சேகரிக்க விரும்பினார். அதற்கு வசதியாக சிவபெருமானை நோக்கி தவமிருந்து இரவில் தெரியும் பார்வையும், புலிக்கால் மற்றும் புலி நகங்களையும் பெற்றார். புலிக்காலும் புலி நகங்களும் பெற்றதால் புலியெனப் பெயருடைய வியாக்கிரபாதர் எனப்பெயர் உண்டாயிற்று.

    தில்லையில் பதஞ்சலியும் வியாக்கிரபாதரும், அத்திரிமகரிஷியின் வழிகாட்டுதலில், சிவனின் ஆனந்தத் தாண்டவத்தைக் காண விரும்பி தவமிருக்க,அதற்கு இரங்கிய ஈசன் பிரபஞ்ச நடனமாடி பதஞ்சலி, வியாக்கிரபாதர் என்ற இரு முனிவருக்கும் மற்றும் தேவர்களுக்கும் தரிசனம் கொடுத்தார் என்பது தொல்வரலாறாகும்.

    மார்கழி மாதம் தட்சிணாயன புண்ணிய காலத்தின் இறுதி மாதமாகும்.தேவர்களுக்கு மார்கழி மாதம் அதிகாலைப் பொழுதாகும். இம்மாதத்தில் சிதம்பரத்தில் கோவில் கொண்டுள்ள நடராஜப் பெருமானைத் தரிசிக்க தேவர்கள் ஒன்றுகூடுவதாக ஐதீகம். அதனால், இக்காலத்தில் அதிகாலைப் பொழுதில் தெய்வ தரிசனம் செய்வது சிறந்ததாகக் கருதப்படுகிறது.

    அதற்காக தில்லையில் திருவாதிரை விழாவை 10-நாள் விழாவாகவே கொண்டாடுகிறார்கள். இவ்விழாவுக்கு ஆருத்ரா தரிசனவிழா எனப்பெயர். ஆருத்ரா என்பது "ஆர்த்ரா" என்னும் சொல்லின் வடமொழி மருவுதல் பெற்ற வடிவமாகும். ஆருத்ராவின் மூலச்சொல் ஆதிரை என்ற தமிழ்ச்சொல் சிவன் நட்சத்திரம் ஆகும்.

    "பிறவாயாக்கை பெரியோன்" எனப்படும் சிவபெருமானுக்கு ஏது நட்சத்திரம்? தாருகா வனத்து முனிவர்கள் சிவபெருமானை நிந்தித்து ஒரு பெருவேள்வி நடத்தினர். சிவனார் பிச்சாடனர் வேடம் கொண்டு பிச்சை எடுக்க முனிவர்களின் இல்லங்களுக்குச் சென்றார். முனிபத்தினிகள் பதியின் (சிவன்) பால் கட்டுண்ட பசு (ஆன்மாக்களாக தம்மை மறந்து பிச்சாடனராகிய சிவபெருமான் பின்னே செல்லலாயினர். இதனால் வெகுண்ட முனிவர்கள் வேள்வித்தீயில் மதயானை, முயலகன், உடுக்கை, மான், தீப்பிழம்பு என்பவற்றைத் தோற்றுவித்து சிவன்மீது ஏவினர். சிவனார் மதயானையைக் கொன்று, அதன் தோலை அணிந்தார். மற்றவைகளைத் தானே தரித்துக் கொண்டு முயலகன் மீது வலது காலை ஊன்றி இடது காலைத் தூக்கி நடனமாடி, முனிவர்களுக்கு பதி பசு பாச உண்மையை உணர்த்தினார். இதுவே ஆருத்ரா தரிசனம் என்னும் தத்துவார்த்த பொருளாகுமாம்.

    சேந்தனார்: சிதம்பரம் அருகில் சேந்தனார் என்ற சிவபக்தர் விறகுவெட்டி வாழ்ந்து வந்தார். தினமும் ஒரு சிவனடியாருக்கு உணவளித்த பி்ன்தான் உணவருந்துவார்.

    ஒரு நாள் அதிகமழையால் விறகுகள் ஈரமாயின, விறகு விற்கப்படவில்லை. அரிசி வாங்க அவரிடம் வேறு பண்டமாற்றுப் பொருளில்லை. அன்று கேழ்வரகில் களி செய்து சிவனடியார்க்காக காத்திருந்தார். சேந்தனாரின் பக்தியை உலகிற்குக் காட்ட நடராஜப் பெருமான் சிவனடியாராக வந்தார். சேந்தனார் களியை சிவனடியாருக்கு படைக்க, உண்டதுமல்லாமல் எஞ்சியிருந்த களியையும் அடுத்த வேளைக்காக வாங்கிச் சென்றார்.

    மறுநாள் காலை தில்லைவாழ் அந்தணர் தில்லைக்கருவறையைத் திறக்க, நடராஜப் பெருமானைச்சுற்றி களிச்சிதறல் கண்டுஅரசருக்கு அறிவித்தார்கள். இரவில் அரசர் கனவில் நடராஜப் பெருமான் தான் களியுண்ணச் சென்றதைத் தெரிவித்து இருந்தார். அரசன் சேந்தனாரைக் கண்டு பிடிக்கச் சொல்ல,அவர் அன்று சிதம்பரப் பெருமானின் தேர்த்திருவிழா காண வந்திருந்தார்.

    கருவறை நடராஜர் தேரில் அமர்ந்திட அனைவரும் வடம் பிடித்தும் தேர் அசையவில்லை. அப்போது அசரீரியாக "சேந்தா நீ பல்லாண்டு பாடு" என்று கேட்டது. சேந்தானார் ஒன்றும் அறியாத நான் எப்படிப் பாடுவேன் என்று பெருமானைத் துதித்தார்.

    இறையருளால் "மன்னு கதில்லை வளர்க நம்பக்தர்கள் வஞ்சகர் போயகல" என்று தொடங்கி "பல்லாண்டு கூறுதுமே" என்று முடித்துப் பதின்மூன்று பாடல்கள் இறைவனை வாழ்த்திப்பாட தேர் நகர்ந்தது. சேந்தனாரைத்தேடி அரசர் கண்ட கனவைத் தெரிவிக்க வீட்டிற்குக் களியுண்ண நடராஜப் பெருமானே வந்தார் எனவறிந்து மனமுருகினார். அன்று திருவாதிரையாதலால் அன்று முதல், ஆதிரை நாளில் நடராஜப் பெருமானுக்குக் களிபடைக்கப்படுகிறது. சிவபெருமான் சேந்தனார் படைத்த களியுண்ட நாள் திருவாதிரையாதலால் அது சிவனின் திருநட்சத்திரமாகக் கொண்டாடப்படுகிறது.

    இலக்கியங்களில்: திருஞானசம்பந்தர் தேவாரத்தில் ஆதிரைநாளை சிறப்பித்துள்ளார். திருநாவுக்கரசரும் திருவாரூரில் நிகழ்ந்த திருவாதிரை விழாவின் சிறப்பினையும் அழகையும் பாடியுள்ளார். முத்தொள்ளாயிரத்திலும் ஆதிரையான் என சிவன் பற்றிய குறிப்பு வருகிறது. ஆதிரைத்திருவிழா சங்கத்தமிழர்களால் சிவனுடைய நட்சத்திரமாகக் கொண்டாடப்பட்டதை பரிபாடல் பாடுகிறது.

    நோன்பு நோற்கப்படும் முறை: மார்கழி மாத திருவாதிரை நோன்பு திருவாதிரையை இறுதி நாளாகக் கொண்டு, பத்து நாட்கள் திருவெம்பாவை நோன்பாக நோற்கப்படுகின்றது. சில சிவாலயங்களில் பகல் திருவிழாவும், ஒன்பதாம் நாள் தேர்த்திருவிழாவும் அன்று பின் இரவு அதிகாலை வேளையில் நடராஜப் பெருமானுக்கு விசேஷ அபிஷேக ஆராதனைகள் நடைபெற்று பத்தாம் நாள் சூரிய உதயத்தில் தரிசனம் நடைபெறும். விரதத்தைக் கடைப்பிடிப்போர் திருவாதிரை தினம் உபவாசம் இருந்து மறுநாள் பாரணஞ் செய்வர்.

    திருவாதிரைக் களி: திருவாதிரை நாளில் சிவபெருமானுக்கு உளுந்து மாவினால் செய்த களி நைவேத்தியமாகப் படைக்கப்பட்டு, வழங்கப்படுகிறது. 'திருவாதிரைக்கு ஒரு வாய்க்களி ' என இதனைக் குறிப்பர்.

    சிதம்பரம் மற்றும் திருவாரூரில் மார்கழி மாதம் திருவாதிரை நாளன்று நடராசருக்கு நடைபெறும் சிறப்புகள் குறிப்பிடத்தக்கன. ஆரூரில் திருவாதிரையன்று தியாகராஜ சுவாமி வடபாத தரிசனம் காட்டப்படும். திருவாதிரை முன்தினத்தில் மூலவர் செப்புத்திருமேனி நடராஜர் தேரில் வீதிவலம் வரும் காட்சி சிறப்பானதாகும்.

    உத்திரகோசமங்கை: தென்னாடுடைய சிவனே போற்றி எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி என்ற வாக்கியம் உருவான இடம், சிவபெருமானின் சொந்த ஊர் என்று அழைக்கப்படுவது உத்தரகோசமங்கை. ராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணியில் இருந்து 10 கி.மீ. தொலைவில் உள்ளது.இங்குள்ள மரகத நடராஜர் ஆண்டு முழுவதும் சந்தனம் பூசப்பட்ட நிலையில் அருளுவார். ஆண்டுக்கு ஒருமுறை அதாவது ஆருத்ரா தரிசனத்தன்று, சந்தனம் முழுவதும் களையப்பட்டு, 32 வகை மூலிகை சிறப்பு அபிஷேகம் நடைபெறும். பின்னர் பச்சை மரகத மேனியாய் அலங்கார கோலத்தில் அருள் பாலிப்பார். அதிகாலை ஆருத்ரா தரிசனம் நடைபெறும். பின்னர் காலை கூத்தர் பெருமான் வீதி உலா நடைபெறும். மாலை 4 மணிக்கு பஞ்சமூர்த்திகளுடன் அபிஷேகமும், இரவு மாணிக்கவாசகருக்கு காட்சி தந்த பின்னர், பஞ்சமூர்த்திகளுடன் மங்களநாத சுவாமி வெள்ளி ரிஷப வாகனத்தில் எழுந்தருள்வார்.

    இன்னும் மதுரை ஆவுடையார்கோவில், தஞ்சாவூர், திருச்சி, திருவானைக்கோவில்,நெல்லையப்பர் போன்ற அனைத்து திருத்தலங்களில் நடராஜருக்கு சிறப்பு அபிஷேகம் அலங்காரம் புறப்பாடு போன்றவை சிறப்பாக நடைபெறும் . கொங்குநாட்டில் திருவாதிரைச்சீர் செய்யும் பழக்கம் உண்டு.

    இவ்வாண்டு மார்கழி திருவாதிரை 6.1.2023 அன்று வருகிறது.

    Next Story
    ×