என் மலர்
சிறப்புக் கட்டுரைகள்

தொழில், உத்தியோகத்தில் மாற்றம் எப்போது நடக்கும்

- காற்று, மழை, காலநிலை, தட்பவெப்பம், மனிதன், மனித மனம் என அனைத்துமே மாறிக் கொண்டேயிருக்கின்றன.
- கர்மாவில் ஏற்படும் மாற்றத்தை ஒருவரின் கர்ம ஸ்தானம், ஜீவன ஸ்தானம் எனும் பத்தாமிடமும், கால புருஷ பத்தாம் அதிபதியுமான சனி பகவானுமே நிர்ணயம் செய்கிறார்கள்.
மாற்றம். எது ஒன்று, அதன் நிலையிலிருந்து மாறி வேறொன்றாக மாறுகிறதோ. அதுவே மாற்றம். ஒவ்வொரு அணுவும் மாற்றத்தை அடைகின்றன. காற்று, மழை, காலநிலை, தட்பவெப்பம், மனிதன், மனித மனம் என அனைத்துமே மாறிக் கொண்டேயிருக்கின்றன. சில மாற்றங்கள் காலப்போக்கிலும் சில மாற்றங்கள் வெளிக்காரணிகளாலும் சில உள்காரணிகளாலும் நிகழ்கின்றன. ஆனால் எது நின்றாலும் மாற்றம் ஒன்று மட்டும் நிகழ்ந்து கொண்டேதான் இருக்கிறது. அதனால்தான் மாற்றம் ஒன்றே மாறாதது என்கிறார்கள். இரவு பகலாகிறது. பகல் இரவாகிறது. கோடை போய் குளிர் வருகிறது. வறட்சி நீங்கி வெள்ளம் வருகிறது. பூ காயாகிறது கனியாகிறது. கனி செடியாகிறது. குழந்தை பெண்ணாகிறாள். பெண் தாயாகிறாள். இளமை மாறி முதுமை ஆட்சி செய்கிறது இதைத்தான் மாற்றம் ஒன்றே மாறாதது என்கிறோம்.
மாற்றம் மட்டும்தான் நிரந்தரம். அனைத்து உயிரினங்களும் அவற்றுக்கே உரித்தான பண்புகளை மட்டும் உள்ளடக்கி இருக்கின்றன. அவை நிலையானது என்று நம்பப்படுகிறது. ஆனால் அனுபவத்தில் அவை மாறுவதைக் காண்கிறோம். அன்பு வெறுப்பாக மாறுகிறது. வெறுப்பு பாசமாகிறது. கோபம் சாந்தமாகிறது சாந்தத்தை கோபம் காலி செய்கிறது. வாழ்வியல் மாற்றத்திற்கு ஏற்ப மனிதர்களின் மனம், குணம், வாழ்க்கையில் ஏற்றம், இறக்கம் என மாற்றம் நிகழ்ந்து கொண்டே இருக்கிறது. மனிதர்கள் பிறக்கும் போது, பந்தம் பாசம் உறவுகள் பணம், சொத்து, பதவி போன்றவைகள் இல்லாமல் பிறக்கின்றனர். ஆனால் தொப்புள்கொடி அறுபடும் போது, அவர்கள் முற்பிறவி கர்மனைவினைகளை சுமக்க தொடங்கி விடுகின்றனர். இந்த கர்மவினை சுமைகள் வாழும் காலத்தில், அவர்கள் செய்யும் கர்மத்தின் அடிப்படையில் அதிகமாகவோ அல்லது குறைவாகவோ இருக்கும்.
இந்த நிலையில் தான் மனிதர்கள், பந்தம், பாசம், உறவு, சுகம், பணம் செல்வாக்கு, சொத்து, பதவி, போன்றவைகள் மீது ஆசை கொள்கிறான். இப்போதுதான் நாம் சுமந்து வந்த கர்மத்தின் அளவும், தற்போது செய்யும் கர்மவினையின் அளவும், தங்களுக்குள் போட்டி போட்டுக் கொண்டு, அதன் அளவீடுகளை அதிகமாக அல்லது குறைத்துக் கொண்டு, அவைகளின் அளவீடுகளை மாற்றி அமைத்து கொள்கின்றன. ஆனால் மனிதர்கள் இறக்கும் போது தான் கொண்டு வந்த கர்மத்தின் அளவுகளை, ஒரு மாற்றத்துடன், மீண்டும் ஏதோ ஒரு அளவீட்டில் கர்மத்தினை சுமந்தே செல்கின்றனர்.பிறக்கும் போது கர்மவினை சுமையுடன் பிறந்த மனிதர்கள் அதே சுமையில் வாழும் போது மாற்றத்தை கண்டு இறக்கும் போதும் கர்மவினை சுமைகளுடனே இறக்கின்றனர். இதுதான் இயற்கையின் நியதி.
மாற்றம் ஒன்றே மாறாதது. மனிதர்கள் வாழ்க்கையில் பிறப்பிற்கும் இறப்பிற்கும் நடுவில் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விதமான மாற்றம் நிகழ்கிறது. கர்மாவில் ஏற்படும் மாற்றத்தை ஒருவரின் கர்ம ஸ்தானம், ஜீவன ஸ்தானம் எனும் பத்தாமிடமும், கால புருஷ பத்தாம் அதிபதியுமான சனி பகவானுமே நிர்ணயம் செய்கிறார்கள்.
நிலையான நிரந்தரமான தொழில் அல்லது உத்தியோகம் இல்லாத ஒருவரை சமுதாயமும், அவரது உறவுகளும் மிக ஏளனமாகவே பார்க்கின்றன. ஒருவருக்கு சரியான வயதில் நல்ல ஜீவனம் அமைவது அவரது சுய ஜாதகத்தில் உள்ள ஜீவன ஸ்தானமான 10-ம் பாவக வலிமையை பொறுத்தே அமைகிறது. உத்தியோகம் 'புருஷ லட்சனம் என்று பழமொழிக்கு ஏற்ப ஆண்கள் ஏதாவது ஒரு வகையில் ஜீவனத்தை தேடி குடும்பத்தை காப்பாற்றும் கடமை அதிகம் உண்டு, தற்காலத்தில் 'உத்தியோகம்' பெண்களுக்கும் அவசியமாகி விட்டது என்ற கருத்தையும் மறுக்க முடியாது.
ஆக ஆண், பெண் இருவருக்கும் ஜீவனம் எனும் 10-ம் பாவகம் மிகவும் வலிமையுடன் இருப்பது அவசியமாகிறது. பத்தாமிடம் சிறப்பாக இருந்தால் ஒரு தொழில் வாய்ப்பையோ, வேலை வாய்ப்பையோ பெரும் யோகத்தை தங்குதடையின்றி கொடுத்து விடுகிறது, ஜாதகர் குறிப்பிட்ட பாவக அமைப்பில் இருந்து கவுரவம் அந்தஸ்து மற்றும் வருமான வாய்ப்பை பெறுவதில் தடையேதும் இருப்பதில்லை. இதில் எதிர்பாராத மாற்றம் நிகழும் காலங்களில் மனிதர்களின் வாழ்க்கைப் பாதை மாறுகிறது. மனிதர்களின் தொழில், உத்தியோகத்தில் ஏற்படும் மாற்றத்தை விரும்பத்தகுந்த மாற்றம், விரும்பத்தகாத மாற்றம் என இரண்டாக வகைப்படுத்தலாம். விரும்பத்தகுந்த மாற்றங்களை ஏற்கும் மனம், விரும்பத்தகாத மாற்றத்தை ஏற்பதில்லை. ஜோதிட ரீதியாக தொழில், உத்தியோகத்தில் ஏற்படும் மாற்றத்தை மூன்று விதமான காரணிகள் நிர்ணயம் செய்கின்றன.
லக்ன ரீதியான காரணிகள்: ஒருவரது சுய ஜாதகத்தில் ஜீவன ஸ்தானம் எனும் பத்தாமிடம் கேந்திரம், திரிகோணம், பணபர ஸ்தானத்துடன் சம்பந்தம் பெறும் போது நூறு சதவிகித யோகத்தை வாரி வழங்கும்.ஜாதகருக்கு சிறந்த ஜீவன அமைப்பை தொழில் அல்லது வேலைவாய்ப்பில் சரியான வயதில் வழங்கிவிடுகிறது. இதனால் ஜாதகருக்கு எதிர்பாராத வெற்றி, அபரிமிதமான யோகம், வருமானம் கிடைக்கும். பத்தாமிடம் மறைவு ஸ்தானமான 6,8,12-ம் பாவகத்துடனும், பாதக ஸ்தானத்துடன் சம்பந்தம் பெறும் போது நித்திய கண்டம் பூரண ஆயுள் என நிலையற்ற, நிரந்தரமற்ற தொழில், உத்தியோகத்தால் ஏற்ற இறக்கமான பலன்கள் உண்டாகும். தொழில் ஸ்தானம் மற்றும் தொழில் ஸ்தான அதிபதி, சனி மிகக் கடுமையாக பாதிக்கப்பட்டிருந்தால் குறைந்த முதலீட்டில் அல்லது முதலீடு இல்லாத சுய தொழில் செய்ய வேண்டும் அல்லது உத்தியோகத்திற்கு செல்வது சிறப்பு. இவர்கள் எந்த ஒரு காரியத்திலும் அவசர கதியில் செய்யாமல் பொறுமையை கடைபிடிப்பது சிறந்தது.
தசாபுத்தி ரீதியான காரணிகள்: மேலும் நடைபெறும் தசை மற்றும் புத்திகள் சாதகமாக இருப்பின் ஜாதகரின் தொழில் மற்றும் வேலை வாய்ப்புகள் ஜாதகரை தேடிவருவதும், ஜாதகர் ஜீவன வழியில் இருந்து சுபயோக வாழ்க்கையை பெறுவதும் இயற்கையாக நடந்துவிடுகிறது. இதற்கு மாறாக ஜீவன ஸ்தானம் பாதிக்கப்படும் பொழுதே ஜாதகர் ஜீவனம் சார்ந்த இன்னல்களையும் துன்பங்களையும் எதிர்கொள்ள நேருகிறது. மேலும் ஜீவன ஸ்தானம் கவுரவம் மற்றும் அந்தஸ்தை குறிப்பதால் தொழில் வேலை வாய்ப்பின்மையும் ஜாதகரை கடுமையாக பாதிக்கிறது, சுய கவுரவமும் அந்தஸ்தும் இழந்து மற்றவரை எதிர்பார்த்து வாழ்க்கையை நகர்த்தும் சூழ்நிலைக்கு ஜாதகர் தள்ளப்படுகிறார்.
கோட்சார ரீதியான காரணிகள் வருட கிரகங்களான குரு, சனி, ராகு கேது பெயர்ச்சிகளின் தாக்கம் பலருக்கு மீளமுடியாத தாக்கத்தை ஏற்படுவதை நாம் அனுபவத்தில் கண்டு இருக்கிறோம். குப்பை மேட்டில் வாழ்ந்தவர் கோபுர உச்சிக்கு செல்வதையும், மாட, மாளிகையில் வாழ்ந்தவர்கள் தெருக்கோடியில் சிங்கில் டீக்காக நிற்பதையும் பார்த்திருக்கிறோம். மனிதர்களின் வாழ்க்கையை தடம் புரட்டி போடுவதில் கோட்சார கிரகங்களின் பங்கு அளப்பரியது.
எப்போது இன்பங்கள் அதிகமாக வரும். கேந்திரம், திரிகோணம், பணபர ஸ்தானம் வலிமையாக இயங்கும் போது சுபமான மாற்றங்கள் ஏற்பட்டு இன்பங்கள் அதிகரிக்கும். அசையும், அசையாச் சொத்துக்களின் சேர்க்கை உண்டாகும். தொட்டது துலங்கி தொழில் உத்தியோகத்தில் அனுகூலமான மாற்றங்கள் உண்டாகும்.
எப்போது துன்பங்கள் அதிகமாக வரும். தசாநாதன் எட்டாம் அதிபதி சாரம் பெற்று தசா நடக்கும் பொழுது வாழ்க்கையே வேண்டாம் என்று நினைக்கும் வகையில் தொழில், வேலையால் வம்பு, வழக்கு, தீராத கடன் உண்டாகும். தசாநாதன் பனிரெண்டாம் அதிபதி சாரம் பெற்று தசா நடக்கும் போது கொடுக்கல் வாங்கலில் பிரச்சினை, அதிகப்படியான செலவுகள், விரயங்கள், இழப்புகள், ஆரோக்கிய குறைபாடு காரணமாக துன்பம் வரும். தசாநாதன் ஆறாம் அதிபதி சாரம் பெற்று தசா நடக்கும்பொழுது ருண, ரோகத்தால் நொந்து வாழ வேண்டிய சூழல் ஏற்படும்.
தொழில், உத்தியோக மாற்றம் எப்பொழுது செய்யலாம்? செய்யக்கூடாது?
கோட்சார ரீதியாக ஜென்ம மற்றும் அட்டமச் சனி நடைபெறக்கூடியக் காலகட்டங்களிலும் 6,8,12ம் இடங்களின் தசா புத்திகள் பாதிப்பைத் தரக் கூடிய நிலையில் இருந்து தசாபுத்தி நடக்கும் பட்சத்திலும் தொழில் மற்றும் வேலை மாற்றம் செய்வது நல்லதல்ல. அடுத்து வரக்கூடிய தசாபுத்திகள் யோகத்தை தரக்கூடிய பட்சத்தில் இருக்கும்போது தாராளமாக தொழில், உத்தியோகம் மாற்றம் செய்யலாம்.
சனி ராகு/கேதுக்கள் சுய ஜாதகத்தில் சனி, ராகு சேர்க்கை இருந்தால் அவர்களுக்கு தொழில் சார்ந்த விஷயங்களில் கற்பனைகள் ஆசைகள் மோகங்கள் மிக அதிகமாக இருக்கும்.ஒரு தொழிலை இவர்களால் உருப்படியாக வாழ்க்கையில் செய்யவே முடியாது.எல்லாத் தொழிலும் செய்ய வேண்டும் என்ற எண்ணங்கள் இவர்களுக்கு மிக மிக அதிகமாக இருக்கும்.தொழில் மூலம் ஏமாற்றங்கள் பிரச்சினைகள் பண இழப்புகள் நஷ்டங்கள் இவர்களுக்கு கண்டிப்பாக ஏற்படும்.தொழிலில் அதிகமான பணத்தை முதலீடு செய்து நஷ்டங்கள் ஏமாற்றங்கள் அடைபவர்கள் இவர்கள்தான்.
அதேபோன்று சனி, ராகு சம்பந்தம் உள்ள உத்தியோகஸ்தர்கள் கடமை, கண்ணியம், கட்டுப்பாடு இந்த எண்ணத்துடன் வாழ்பவர்கள் இவர்களுக்கு ஒரு வேலை கொடுக்கப் பட்டால் அந்த வேலை செய்து முடிக்கும் வரை இவர்களுக்கு தூக்கம் வராது. ஆயிரம் பேருக்கு மத்தியில் இவர்கள் பெயர், புகழ் பேசப்படும். சுய ஜாதகத்தில் சனி, கேது சம்பந்தம் இருப்பவர்களுக்கு தொழிலாளர்களால், தொழிலால் வம்பு, வழக்கு உருவாகும். பல எதிர்ப்புகளை சமாளிக்க வேண்டிய சூழ்நிலை இருக்கும். இவர்கள் மிகுதியான தொழில் கடனை சுமப்பவர்கள். இவர்களுக்கு தொழில் செய்யவே விருப்பம் இருக்காது. ஏதோ செய்தாக வேண்டுமே வேறு வழி இல்லையே என்றுதான் இவர்கள் தொழில் செய்வார்கள். அடுத்தவர்களுக்கு இவர்கள் தொழில் சார்ந்த உதவி எவ்வளவு செய்தாலும் இவர்களுக்கு தொழில் சார்ந்து உதவி செய்ய யாரும் முன் வரமாட்டார்கள். இவர்கள் பூர்வீகத்தை விட்டு வெளியூர், வெளிநாட்டில் வாழ்ந்தால் வாழ்க்கை வசந்தமாகும். பல தொழில் அனுபவங்கள் இவர்களிடம் இருக்கும். இவர்களுடைய தொழில் ஞானம் பிறருக்கு பயன்படும் ஆனால் இவர்களுக்கு பயன்படாது.
சனி, கேது சம்பந்தம் உள்ள உத்தியோகஸ்தர்கள் பலர் கவுரவ அடிமையாக அல்லாடுகிறார்கள். வெகு சிலர் கன்சல்டன்சி போன்ற ஆலோசனை வழங்கி சுகமாக வாழ்கிறார்கள். இந்த இணைவு உள்ள வேலையாட்களை வைத்திருக்கும் முதலாளிகளுக்கு இலவச ஆலோசனையால் நல்ல முன்னேற்றமும் லாபமும் உண்டாகும்.
இது போன்று சனி ராகு+ கேது சம்பந்தம் கோட்சாரத்தில் ஏற்படும் காலங்களில் தொழில், உத்தியோகத்தில் எதிர்பாராத பெரிய மாற்றங்கள் ஏற்படும்.
பரிகாரம்
தொழில், உத்தியோகத்தில் மாற்றம் ஏற்படும் ஒருவரின் வாழ்வாதாரத்தை மாற்றும் வல்லமை படைத்தது. தொழில், உத்தியோகத்தில் விரும்பத்தகாத மாற்றம் ஏற்படும் காலத்தில்
சனிக்கிழமைகளில் வரக்கூடிய பிரதோஷ வழிபாட்டையும் சனிக்கிழமை தோறும் ராகு காலத்தில் கால பைரவர் வழிபாட்டையும் வழக்கப்படுத்திக் கொள்வது நல்லதாகும்.