search icon
என் மலர்tooltip icon

    சிறப்புக் கட்டுரைகள்

    ஒரு வழிப்போக்கனின் பார்வை: குபேர வாழ்க்கை  என்பது என்ன?- கவிஞர் தியாரூ
    X

    ஒரு வழிப்போக்கனின் பார்வை: குபேர வாழ்க்கை என்பது என்ன?- கவிஞர் தியாரூ

    • சுற்றுச்சூழல், இயற்கை வளம், காற்று, கடல், நதிநீர் என வாழ்வாதாரங்கள் அனைத்திலுமே பலவித மாற்றங்கள்.
    • இன்றைய அவசர யுகத்தின் வாழ்க்கை முறைகளால் அளவுக்கு அதிகமாக வெப்பம் ஏற்படுகிறது.

    இது நாகரிக யுகம். கால மாற்றத்தை, மனித வாழ்க்கை முறையில் ஏற்பட்டிருக்கின்ற மாற்றங்களால் உணர முடிகிறது. சிந்தனையில் மாற்றம், செயல்பாடுகளில் மாற்றம், பண்புநலன், உணவு, உறக்கம் எல்லாவற்றிலும் மாற்றம்.

    சுற்றுச்சூழல், இயற்கை வளம், காற்று, கடல், நதிநீர் என வாழ்வாதாரங்கள் அனைத்திலுமே பலவித மாற்றங்கள். திடீர் திடீரென ஏதேதோ நிகழ்கின்றன. மாற்றங்கள் நன்மை பயப்பனவாக இருந்தால் மகிழ்ச்சிதான். ஆனால் இன்று நாம் காண்கின்ற மாற்றங்கள் அப்படி இல்லையே.

    இன்றைய அவசர யுகத்தின் வாழ்க்கை முறைகளால் அளவுக்கு அதிகமாக வெப்பம் ஏற்படுகிறது. அந்த வெப்பம் பூமியில் இருந்து வெளியேற வழியின்றித் திணறுகிறது. அதனை வெளியேற்றுவதற்கான யுக்தியை விரைவில் கண்டறியாவிட்டால், பூமியில் வாழ்கின்ற உயிர்களின் எதிர்காலம் கேள்விக்குறி என்று புவியியல் வல்லுநர்கள் கூறுகின்றனர்.

    தொழிற்சாலைகள் பெருகிவிட்டன. வேளாண் நிலங்கள், வேளாண் பண்ணைகளும் ஏராளம். எனவே, வேலை மற்றும் வருமான வாய்ப்புகள் அதிகம். நல்ல விஷயம்தான். ஆனால், அவற்றில் இருந்து வெளியேறும் கழிவுப் பொருட்கள் எங்கே போகின்றன? நதிகளும் நீர்நிலைகளும்தான் மாசுபடுகின்றன. நீர்வாழ் உயிரினங்கள் அழிகின்றன. நமது வாழ்வின் மூலாதாரமான நீர்வளங்கள் பாதிக்கப்படுகின்றன.

    நாம் அன்றாடம் வீசி எறிகின்ற குப்பைகளால் எத்தனை கேடுபாடுகள்! கடல் பறவைகள், மீன்களைப் போலவே, பிளாஸ்டிக்கை சாப்பிட்டுவிட்டுச் செரிமானக் கோளாறுகளால் கடல் ஆமைகள் பலியாகின்றனவாம். இறந்த பறவைகளின் வயிறு முழுவதும், பிளாஸ்டிக் நிறைந்திருக்கிறது என்னும் செய்தி நம்மை அதிர வைக்கிறது.

    நம் வீடுகளில் சேர்கின்ற குப்பைகளை, 'மக்கும் குப்பை' 'மக்காத குப்பை' என்று தரம் பிரித்துக் கொடுக்கின்ற பொறுப்புணர்வு நம்மில் எத்தனை பேரிடம் உள்ளது. வீதிகளிலும், கழிவுநீர்ப் பாதைகளிலும் கழிவுகளைக் கொட்டுகின்றவர்கள் பின்விளைவுகளைப் பற்றிச் சிந்திப்பதே இல்லை.

    கொசுக்களை நாம்தானே உற்பத்தி செய்கின்றோம். உலகில் உள்ள மற்ற உயிரினங்களைவிட கொசுக்களே நமக்குப் பெருமளவில் உடல்நலக் கோளாறுகளை ஏற்படுத்துகின்றன. ஒவ்வொரு ஆண்டும் உலகெங்கும் ஒரு மில்லியனுக்கும் அதிகமான மக்கள் கொசுக்களால் பரவும் நோய்களால் இறக்கிறார்களாம்.

    தவறான வாழ்க்கைமுறை, சத்தற்ற ஆடம்பர உணவு வகைகள் மனித இனத்தை பலவீனப்படுத்திக் கொண்டிருக்கின்றன என்பதே உண்மை. உடலும் உயிரும் வேறு வேறு. எனினும், இவை இரண்டும் ஒன்று சேர்ந்து இருந்தால்தான் அறம், பொருள், இன்பம், வீடு என்னும் நான்கு அரும்பொருள்களையும் அடைய முடியும் என்றார் திருமூலர்.

    உடல்நலனில் அக்கறை எடுத்துக் கொள்கின்ற சிந்தை இருந்தால் மட்டுமே, சுற்றுச்சூழல் பாதுகாப்பில் நமக்கு அக்கறை ஏற்படும். பசுமைச் சிந்தனையும் சமூகப் பொறுப்புணர்வும் நமக்கு ஏற்பட்டால்தான், மனித குலமும் பிற உயிரினங்களும் வாழ்வதற்குரிய இடமாக இந்த உலகம் நீடித்திருக்க முடியும்.

    இன்றைய காலகட்டத்தில் புதிய புதிய நோய்கள் தலைதூக்குகின்றன. வேகமாகப் பரவுகின்றன. உயிர்களைச் சூறையாடுகின்றன. இப்படியே போனால் எதில் போய் முடியும்!

    ஒருபுறம் நோய்கள் பயமுறுத்துகின்றன. மறுபுறம், அவற்றால் ஏற்படக்கூடிய மருத்துவச் செலவுகள் பயங்கரமாகவே அச்சுறுத்துகின்றன. சாமானிய மக்களுக்கு அன்றாட வாழ்க்கைப்பாடே பெரும் சவாலாக இருக்கின்றது. இந்நிலையில், மருத்துவமனையில் சிகிச்சைக்காகும் செலவு பற்றிய எண்ணமேகூட அவர்களுக்கு மரணத்தைவிடவும் கொடியதாகத் தோன்றுகிறது.

    நீரிழிவு, உயர் ரத்த அழுத்தம், புற்றுநோய், சிறுநீரகப் பிரச்சினை ஆகியவை அண்மைக் காலமாக பலமடங்கு பெருகிவிட்டன. சிறுவயதினரும் பாதிக்கப்படுவதுதான் மிகப்பெரிய வருத்தம்.

    மருத்துவமனைகள் நிரம்பி வழிகின்றன. நோயாளிகளின் எண்ணிக்கை பெருகிக் கொண்டேதான் இருக்கிறது. மருத்துவம் என்பது இன்று வியாபாரம்தான். உயிர்காக்கும் சிகிச்சைகளும் உயர்தர மருந்துகளும் எல்லோருக்கும் கிடைத்துவிடுவதில்லை. பணம் செலுத்த வழியின்றிப் பரிதவிக்கின்ற பலரை மருத்துவமனைகளில் பார்க்க முடியும்.

    பணக்காரன் ஏழை, யாராக இருந்தாலும் உயிர் ஒன்றுதான். அவரவர் உயிர் அவரவர்க்கு அருமையானது. எனவே, அதைக் காத்துக் கொள்வது அவரவர் பொறுப்பு. அதற்கு என்ன செய்ய வேண்டும். உடல்நலனில் தனிக்கவனம் செலுத்த வேண்டும். நோய்நொடி ஏற்படாமல் இருப்பதற்கான உபாயங்களைக் கையாள வேண்டும். குடும்பம் ஆரோக்கியமாக இருந்தால் அதுதான் சொர்க்கம்.

    குழந்தைகள் ஆசைப்படலாம். அதற்காக பீட்சா, பர்கர், பாக்கெட்டுகளில் அடைக்கப்பட்ட செயற்கை வண்ணம் மற்றும் பிளேவர்ஸ் கொண்ட தின்பண்டங்களை வாங்கிக் கொடுக்காதீர்கள். அவை குழந்தைகளின் ஆரோக்கியத்தை வெகுவாகப் பாதிக்கும்.

    சிறுதானியங்களில் சுவைமிகு பலகாரங்களைச் செய்து கொடுங்கள். அவர்கள் உடல்நலத்துடனும் மனவளத்துடனும் திகழ்வார்கள். ஆரோக்கியமான சந்ததியை உருவாக்கும் பொறுப்பு நம் கையில்தான் இருக்கிறது.

    வாழ்க்கை முறையை நல்லவிதமாக வடிவமைத்துக் கொள்வது அவசியம். சத்தான உணவு வகைகள், பசுமையான காய்கனிகள், நேரந் தவறாத தூக்கம் ஆகியவை நல்ல பலனைக் கொடுக்கும்.

    சிலர் வேலை வேலை என்று தங்கள் தூக்கத்தையே தொலைத்துவிடுகின்றனர். சுகமான வாழ்க்கைக்கு அமைதியான தூக்கம் மிக முக்கியம். தூக்கமின்மை அல்லது அரைகுறை தூக்கத்தினால் உடல்நலம் நிச்சயம் பாதிக்கும்.

    சிலருக்கு ஒரு பழக்கம் உண்டு. படுத்தபின் அவ்வப்போது கடிகாரத்தைப் பார்த்துக் கொண்டிருப்பார்கள். 'இன்னும் தூக்கம் வரவில்லையே, எப்போது வருமோ' என்ற டென்ஷனில் புரண்டு புரண்டு படுப்பார்கள். ஆக, தூக்கம் தடைபடுவதுதான் கண்ட பலன். மூளையில் ஏற்படும் அனைத்து நோய்களுக்கும் தூக்கப் பிரச்சினைதான் காரணம் என்பதை கவனத்தில் கொள்ளுங்கள்.

    படுக்கை அறையில் டிவியை வைக்காதீர்கள். அது உங்களின் தூங்கும் நேரத்தைக் கபளீகரம் செய்துவிடும். செல்போனை பெரும்பாலும் எல்லோரும் தலைமாட்டில்தான் வைத்துக் கொள்கிறோம். அது மிகப்பெரிய இடையூறு. அதைத் தொலைவிலேயே வையுங்கள். ஏனெனில், சலனமற்ற உறக்கம்தான் ஆரோக்கியத்தின் அடையாளம்.

    நம்முடைய நாக்கு வெறும் ருசிக்கு அடிமையாகிவிடக் கூடாது. சிலர் எப்போதும் எதையாவது வாயில் போட்டு அரைத்துக் கொண்டிருப்பார்கள். உணவு விஷயத்தில் கட்டுப்பாடே இல்லாமல் சாப்பிடுவார்கள். பின்னர் அவதிப்படுவார்கள்.

    மலைப்பாம்புகள் முள்ளம்பன்றியை உண்ணாது என்கிறார்கள். சில சமயம் பசி வேகத்தில் சில மலைப்பாம்புகள் முள்ளம்பன்றியை விழுங்கிவிடும். ஆனால், மலைப்பாம்புகளால் முள்ளம்பன்றியின் முட்களை ஜீரணிக்க முடியாது. அவை பாம்பின் வயிற்றைப் பதம்பார்க்கும். இறுதியில் முள்ளம்பன்றி மட்டுமல்ல, அதை விழுங்கிய மலைப்பாம்பும் இறந்துவிடும். வயிற்றுக்கு ஒவ்வாததை அறவே தவிர்ப்பதுதானே புத்திசாலித்தனம்.

    'நூறாண்டு வாழ்க' என்று வாழ்த்துகின்றோம். நூறாண்டு பெரிதல்ல; நோய்நொடி இன்றி வாழ வேண்டும். இயற்கை உணவின் மேன்மையைப் பற்றியும், நோய்வராமல் தடுக்கும் எளிய வழிமுறைகளையும் நம் முன்னோர்கள் சொல்லி இருக்கிறார்கள். சதகங்களும் சில வழிகாட்டு நெறிமுறைகளைத் தருகின்றன. அம்பலவாணக் கவிராயர் பாடிய குமரேச சதகத்தில் ஒரு பாடல் இப்படி:

    'மாதத் திரண்டுவிசை மாதரைப் புல்குவது,

    மறுவறு விரோசனந்தான்

    வருடத் திரண்டுவிசை தைலம் தலைக்கிடுதல்

    வாரத் திரண்டுவிசையாம்

    மூதறிவி னொடுதனது வயதுக் கிளையவொரு

    மொய்குழ லுடன்சையோகம்

    முற்றுதயிர் காய்ச்சு பால் நீர்மோர் உருக்குநெய்

    முதிரா வழுக்கையிள நீர்

    சாதத்தில் எவளாவா னாலும் புசித்தபின்

    தாகந் தனக்குவாங்கல்

    தயையாக உண்டபின் உலாவல்லிவை மேலவர்

    சரீரசுகம் ஆமென்பர் காண்!'

    மாதத்திற்கு இரண்டுமுறை வாழ்க்கைத் துணையுடன் தாம்பத்ய உறவு; வருடத்திற்கு இரண்டுமுறை பேதி மருந்து உட்கொள்ளுதல்; வாரத்திற்கு இரண்டுமுறை தலையில் எண்ணெய் தேய்த்துக் குளித்தல்; முதிர்ந்த தயிர், காய்ச்சிய பால், நீர்மோர், உருக்கிய நெய், முற்றாத வழுக்கை கொண்ட இளநீர், உணவு உண்ட பின்னரே நீர் அருந்துதல்; பிறகு உலாவுதல் - இவற்றை வாழ்வில் கைக்கொண்டால் தேக ஆரோக்கியத்துடன் நீண்ட காலம் வாழலாம் என்றார் அம்பலவாணக் கவிராயர்.

    தாம்பத்திய உறவைப் பொறுத்தவரையில் மாதத்திற்கு இரண்டுமுறை என்பதல்ல; கணவன் - மனைவியின் மகிழ்ச்சியான மனநிலை, நல்ல உடல்நிலை ஆகியவற்றைப் பொறுத்து எத்தனை முறை வேண்டுமானாலும் வைத்துக் கொள்ளலாம். அது மிக ஆரோக்கியமான விஷயம் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர். இருமனம் ஒன்றிய உடலுறவினால், மன அழுத்தம் நீங்கும்; அதனால் மாரடைப்பு ஏற்படுவதற்கான வாய்ப்பு குறையும் என்பது வாழ்வியல் உண்மை.

    வாழ்வைக் கண்டு களி; ரசனையோடு வாழ்ந்திரு. நல்ல உணவினை உண். நடைப்பயிற்சி செய். இறைபக்தி கொண்டு, குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுடன் கலந்துறவாடி மனநிறைவோடு வாழ்ந்திரு என்றார் வள்ளலார்.

    வாழ்வைக் கொண்டாடுவதற்கு ஆரோக்கியம் தேவை. ஆரோக்கியத்திற்கு அடிப்படை சத்துமிகு உணவு. சாதாரணமாக நாம் நினைக்கின்ற உணவுப் பொருட்களில் அசாதாரணமான ஆற்றல் இருக்கின்றது.

    சுண்டைக்காயை லேசாக எண்ணிவிடாதீர்கள். அதில் உள்ள கசப்புத் தன்மை நம் ரத்தத்தைச் சுத்தம் செய்வதோடு, உடலில் நோய் எதிர்ப்புச் சக்தியையும் அதிகப்படுத்துகிறது. கல்லீரல், மண்ணீரல் நோய்களையும் நீக்க உதவுகிறது. சர்க்கரை நோயாளிகளுக்கு ரத்தத்தில் சர்க்கரை அளவை குறைக்கச் செய்யுமாம்.

    சுண்டைக்காய் சின்னஞ் சிறியதுதான். ஆனால் அதில் மருத்துவ குணம் அதிகம். ஆஸ்துமா, வறட்டு இருமல், மார்புச் சளி, காசநோய் கொண்டவர்களுக்கு இது ஓர் அற்புத மருந்து. தினமும் இருபது சுண்டைவற்றலை சிறிது நல்லெண்ணெயில் வறுத்துச் சாப்பிட்டால் நோய் கட்டுப்படும்.

    மூலநோய் உள்ளவர்கள் ஒரு கைப்பிடி அளவு சுண்டைக்காயை நெய்யில் வதக்கிச் சாப்பிட்டால், மூலத்தில் உள்ள கடுப்பு நீங்கும். ரத்தக் கசிவும் நின்றுவிடும்.

    சுண்டைக்காய் என்ன யானை விலையா? வாங்குவது சுலபம்தானே. அப்புறம் என்ன!

    சிறுநீரகக் கோளாறு, புற்றுநோய், இதயநோய் ஆகியவை இன்று பலரைத் தாக்குகின்றன. சிகிச்சைக்கு பல லட்சங்கள். எல்லோராலும் முடியாது. பலர் உயிரிழக்கின்றனர். எனவே, இயன்ற வரையில் முன்னெச்சரிக்கையுடன் வாழப் பழகிக் கொள்ள வேண்டும்.

    சிறுநீரகங்களை ஆரோக்கியமாக வைத்துக் கொள்வதற்கு சில வழிகள் உண்டு. உடலைச் சரியான எடையில் சுறுசுறுப்பாக வைத்திருக்க வேண்டும். பச்சைப் பசேலென்ற காய்களும் பழங்களும் தினமும் உட்கொள்ள வேண்டும். சர்க்கரை, கொழுப்பு மற்றும் மாமிச உணவைக் குறைத்துக் கொள்வது நல்லது. உப்பைக் குறைத்தே ஆக வேண்டும். இது ரத்த அழுத்தம் மிகாமலும், சிறுநீரகங்களில் கற்கள் உருவாகாமலும் இருக்க உதவும்.

    புகை பிடித்தல், புகையிலை மற்றும் வலி நிவாரண மாத்திரைகளை அறவே தவிர்த்துவிட வேண்டும். ஒரு நாளைக்கு 3 லிட்டர் நீர் பருக வேண்டும். இது சிறுநீரை மேலும் நீர்க்க வைக்கும். இதன்மூலம் உடலில் உள்ள கழிவுப் பொருட்களை நீக்கி, சிறுநீரக நோய்கள் வராமல் தடுக்க முடியும்.

    சீரான உணவுப் பழக்கத்தால் புற்றுநோய் வராமல் நம்மைப் பாதுகாத்துக்கொள்ள முடியும் என்பதை ஏற்பதோ மறுப்பதோ உங்கள் விருப்பம். ஆனால் உண்மை உண்மைதான். பூண்டு, முட்டை கோஸ், காலிபிளவர், முருங்கைக்கீரை, திராட்சை, இஞ்சி, மஞ்சள் தூள் ஆகியவற்றிற்குப் புற்றுநோயைத் தடுக்கின்ற ஆற்றல் உண்டு. நீரை நன்கு காய்ச்சிக் குடிப்பதைப் பழக்கமாக்கிக் கொண்டாலே பல பிரச்சினைகள் நீங்கிவிடும்.

    குபேர வாழ்க்கை என்பது என்ன? கோடிகளில் புரள்வது அல்ல; ஆரோக்கியத்துடனும் மனமகிழ்ச்சியுடனும் வாழ்வதுதான் குபேர வாழ்க்கை. அதுதான் வாழ்வின் பெருமை. நல்லவற்றை உட்கொள்வோம்.

    நல்லவற்றை எண்ணுவோம். நல்லவற்றைச் செய்வோம். நலமுடன் வாழ்வோம்.

    Next Story
    ×