என் மலர்
சிறப்புக் கட்டுரைகள்
கருணையின் வடிவம் நீலாயதாட்சி அம்மன்
- ஆதி தேவியின் அன்பு வடிவங்களில் நீலாயதாட்சி என்னும் திருவடிவமும் ஒன்று.
- திருக்கண்களின் தன்மைகளைக் கொண்டு அம்பிகையின் அழகு நாமங்களை நிர்ணயிப்பது வழக்கம்.
ஆதி தேவியின் அன்பு வடிவங்களில் நீலாயதாட்சி என்னும் திருவடிவமும் ஒன்று. நீலோத்பல மலர் போன்று குளிர்ச்சி பொருந்திய கண்களைக் கொண்டவள் என்பதே இத்திருநாமத்தின் பொருள். 'கருந்தடங்கண்ணி' என்றே இவளை அழைக்கலாம்.
தமிழ்நாட்டில், சிவராஜதானி என்றும் காரோணம் என்றும் வழங்கப்பெறுகிற நாகப்பட்டினத் திருத்தலத்தில், அருள்மிகு நீலாயதாட்சி அருளாட்சி நடத்துகிறாள்.
திருக்கண்களின் தன்மைகளைக் கொண்டு அம்பிகையின் அழகு நாமங்களை நிர்ணயிப்பது வழக்கம். விருப்பங்களைத் தீர்த்து வைக்கும் விழிகள் கொண்டவள் காமாட்சி; சகலவித பேறுகளையும் தருபவள் மீனாட்சி; விசாலமான பார்வையை வழிங்குபவள் விசாலாட்சி; இவ்வகையில் குளிர்ச்சி பொருந்திய கண்களோடு கருணை காட்டுபவள் நீலாயதாட்சி.
வேத உபநிஷதங்களின்படி, அம்பிகையின் அருள்வடிவிற்கு இந்திராட்சி என்பதே திருநாமம். இந்திர நீல மலர்க் கண்களைக் கொண்டவள். ஒரு கரத்தில் வஜ்ராயுதம் தாங்கியிருப்பாள்; மற்றொன்றில் அபயம் காட்டுவாள். தீமைகளைக் களைவதற்கு வஜ்ராயுதம்; அன்பர்களைக் காப்பதற்கு அபயம். இந்திராட்சியின் அம்சம்தான், நாகப்பட்டினத்தில் குடிகொண்டிருக்கும் நீலாயதாட்சி என்பதாக ஐதீகம்.
நின்ற திருக்கோல நாயகியான நீலாயதாட்சி, நின்றிருக்கும் விதமே சற்று வித்தியாசமானது. லேசாகச் சாய்ந்திருப்பாள். குழந்தைகள் கூப்பிட்டவுடன் ஓடோடி வருகிற தாயினுடைய தோரணை தென்படும்.
அம்பிகையே உயிர்களுக்கெல்லாம் தீட்சை வழங்கி, நன்மைகளை உபதேசித்து நல்வழி காட்டுகிறாள். இந்த நிலையில், ஸ்மரண தீட்சை தருபவள் காசி விசாலாட்சி. அதாவது, தன்னை நினைப்பவர்களுக்கு நினைப்பின் வழியாகவே அருள் கொடுப்பவள். நயன தீட்சை தருபவள் மதுரை மீனாட்சி. அதாவது, கண்களால் கண்டு அருள் கொடுப்பவள். ஸ்பரிச தீட்சை தருபவள் காஞ்சி காமாட்சி. அதாவது, அன்பர்களைத் தன்னுடைய திருக்கரங்களால் அரவணைத்து அருள் கொடுப்பாள். நீலாயதாட்சி எப்படித் தெரியுமா? மூன்று வகைகளிலும், அதாவது, நினைப்பான ஸ்மரணம், கண்வழியான நயனம், தொடுகையான ஸ்பரிசம் ஆகிய மூன்றின் வழியும் அருள் தருவாள்.
அரக்கர்கள் மூவர் இருந்தனர்; கமலாட்சன், தாரகாட்சன், வித்யுன்மாலி என்னும் மூவர். தங்கம், வெள்ளி, இரும்பு ஆகிய உலோகங்களால் கோட்டைகளைக் கட்டிக் கொண்டு, அவற்றுக்குள்ளே தங்கிக் கொண்டு, கோட்டைகளை ஆகாய வீதியில் பறக்கச் செய்து, மூன்று உலகங்களையும் பாடாய்ப் படுத்தினர். அனைவரையும் அச்சுறுத்தித் துன்பப்படுத்திக் கொடுமையும் புரிந்த இவர்கள் மூவரையும் அழிப்பதற்காகச் சிவனார் புறப்பட்டார். அப்போது, அரக்கர்களின் வலிமைக்கு நிகராகத் தாமும் ஆயுதம் தாங்கிச் செல்லவேண்டும் என்ற நிலையில், மேரு மலையை வில்லாக வளைத்துக் கையில் பிடித்துக் கொண்டு புறப்பட்டாராம்.
மேரு மலையை வில்லாக வளைப்பது! அதனை ஒரு கையில் பிடிப்பது!! வியப்பாக இருக்கிறது இல்லையா? ஆயின், இன்னும் வியப்பைக் கூட்டுகிறார் திருநாவுக்கரசு சுவாமிகள். இவ்வாறு வில் பிடித்த கரமே, அம்பிகை நீலாயதாட்சியின் கரம்தான் என்கிறார்.
கற்றார் பயில் கடல் நாகைக் காரோணத்து எம் கண்ணுதலே
வில் தாங்கிய கரம் வேல் நெடுங்கண்ணி வியன் கரமே
அம்பிகையின் கரம்தான் வில் தாங்கியது என்பது மட்டுமில்லை; ஐயனுக்கு ஆற்றலையும் இந்தக் கரம்தான் கொடுக்கிறதாம்.
சொல்லப்போனால், நீலாயதாட்சிக்குள்ளேயே, முப்பெரும் தேவியரான அலைமகளும் மலைமகளும் கலைமகளும் அடங்குவர். இவள் அம்பரி – அலைகடலையும் அண்ட பகிரண்டத்தையும் தன்னுடைய செல்வங்களாகக் கொண்டவள். பக்தர்களுக்கும் வழங்குபவள். அப்படியானால், அலைமகளான மகாலட்சுமியின் அம்சம். இவள் காதம்பரி – கல்வியையும் ஞானத்தையும் தன்னுடைய செல்வங்களாகக் கொண்டவள். பக்தர்களுக்கும் வழங்குபவள். அப்படியானால், கலைமகளான சரஸ்வதியின் அம்சம். இவளே நீலாம்பரி – நீல நிறத்தவளாக, நீல ஆடை அணிந்தவளாக, நீல வானுக்கும் நீலக் கடலுக்கும் இடையிலான யாவுமாக, யாவற்றையும் அருள்பவளாக, கருணை வானும் கருணைக் கடலாகவும் இருப்பவள். அப்படியானால், மலைமகளான பார்வதியின் அம்சம்.
முப்பெருந்தேவியரின் கூட்டாகத் திகழும் நீலாயதாட்சி, நீலமலர் விழிகள் கொண்டதே இவளின் தனிக் கருணைதான். எப்படி?
சாதாரணமாக, தெய்வத் திருமேனிகளின் கண்கள் யாவும் தாமரைக் கண்களாகவே துலங்கும். சிவனாரின் திருக்கண்களும், திருமாலின் திருக்கண்களும், திருமகளின் திருக்கண்களும், முருகப்பெருமானின் திருக்கண்களும்…யாவுமே தாமரை நயனங்கள்தாம்.
தாமரைக் கண்ணான், நளின நாட்டத்தான், கமல நயனத்தான், கமலாட்சி … இப்படித்தானே திருநாமங்கள் காட்டுகின்றன. தாமரை என்பது அழகான மலர். பிரகாசப் பேரொளி கொண்டது. ஆனாலும், அந்த ஒளி, சில நேரங்களில், கண்களைக் கூசச் செய்யும் ஒளியாக, கூர்மையானதாக, உறுத்துவதாகக் கூட அமைந்துவிடலாம். சற்றே கூடுதலான ஒளி இருந்தால், குழந்தைகள் கண்களைச் சிணுங்கிக் கொள்ளும்.
தன்னுடைய குழந்தைகள் முகம் சிணுங்குவதையோ கண் சுருக்குவதையோ லோக மாதா பொறுப்பாளா? தன்னுடைய ஒளி, தன் குழந்தைகளின் கண்களைக் குத்திவிடக்கூடாது. தாமரைக் குடும்பத்தைச் சேர்ந்திருந்தாலும், கருமை நிறமும் குளிர்ச்சியும் மென்மையான ஒளியும் கண்ணை உறுத்தாத தன்மையும் கொண்டது நீலோத்பலம். இதனால்தான், தாமரையை விட்டுவிட்டு, நீலோத்பலம் என்னும் கருங்குவளையைத் தன் கண்களில் வைத்து அலங்கரித்துக் கொண்டுவிட்டாள். கருந்தடங்கண்ணியும் ஆகிவிட்டாள். அம்மாவின் கருணைதான் என்னே!
நாகப்பட்டினத்து நீலாயதாட்சியின் திருவருளைப் பற்றி சுவாரசியமான கதை ஒன்று உண்டு.
அகிலாண்டேச்வரியின் திருவருளால் கவிஞர் ஆனவர் காளமேகப் புலவர். அவர் ஒருமுறை நாகப்பட்டினத்திற்கு வந்தார். வழிக் களைப்பு; சோர்வு. பசியெடுத்தது. அம்பிகையைக் கேட்டிருந்தால், எப்படியோ கொடுத்திருப்பாள். என்ன தோன்றியதோ, சுற்று முற்றும் பார்த்தார். தெருவில் பிள்ளைகள் விளையாடிக் கொண்டிருந்தனர். அவர்களிடம் கேட்கலாம் என்றெண்ணி, 'சோறு எங்கே விக்கும்?' என்றார் (இந்த ஊரில், எந்த இடத்தில் சோற்றுக் கடை உள்ளது, சோறு எங்கே விற்கும் என்பதுதான் அவருடைய வினா). 'விற்கும்' என்ற சொல்லை, பேச்சு வழக்கில் 'விக்கும்' என்றே அவர் வினவ… பிள்ளைகள் விடுவார்களா? அதுவும் நீலாயதாட்சியின் குளிர் மலர்ப்பார்வை பெற்றவர்களாயிற்றே – கிண்டலாகப் பார்த்தார்கள். அடுத்த வார்த்தையை அவர் பேசுவதற்கு முன்பாகவே, 'தொண்டையில் விக்கும்' என்றார்கள் (சோறு சிக்கினால், தொண்டையில்தானே விக்கலெடுக்கும்). பால்மணம் மாறாத சிறுவர்கள், இருப்பினும், அம்பிகையின் அருளால் காளமேகப் புலவரையே வாதத்தில் வீழ்த்தும் அளவுக்கு கவித்துவம் கண்ட சிறுவர்கள்.
இந்தக் கதை இதோடு முடிந்துவிடவில்லை.
புலவருக்குக் கோபம் வந்தது. சிறுவர்கள்மீது வசை பாடும் நோக்கத்துடன், ஆனாலும் நேரடியாக அவர்களிடம் பேசக் கூடாது என்னும் வீம்புடன், பக்கத்திலிருந்த சுவரில் எழுதத் தொடங்கினார்.
பாக்குத் தரித்து விளையாடும் பாலகர்க்கு...
அடுத்த வரி எழுதுவதற்குள், வேறொரு எண்ணம் வந்தது. பசியாற்றிக் கொண்ட பின்னர்தாம் எழுதுவோமே. மீதத்தை உண்டபின்னர் எழுதுவோம் என்னும் கருத்துடன், சோற்றுக் கடை தேடிப் போனார். உண்டார். களைப்பாறினார். சற்றே குறைந்த சினத்துடன், சுவரிருந்த பழைய இடத்திற்குத் திரும்பினார்.
பார்த்தால்…. சுவரில் அழகான எழுத்துகள்…..
நாக்குத் தமிழுரைக்கும் நன்னாகை…..
விக்கித்து நின்றார்; வியந்து போனார்.
அடடா, அடடா, என்ன புலமை, என்ன புலமை…..
சிறுவர்கள் பாடலை நிறைவு செய்திருந்தனர்.
பாக்குத் தரித்து விளையாடும் பாலகர்க்கு
நாக்குத் தமிழுரைக்கும் நன்னாகை.
நீலாயதாட்சியின் அருள், சின்னஞ்சிறுவரும் சீரான கவி தருவர். மானின் கரிசனத்தை மங்கலக் கண்களில் ஏந்தியவள் நீலாயதாட்சி. அன்பர்க்கு அன்பாய், அன்பின் அன்பாய் அருள் வழங்குபவள்.
தொடர்புக்கு:- sesh2525@gmail.com