என் மலர்
சிறப்புக் கட்டுரைகள்
திருமணம் அமைவது எப்போது?
- திருமணம் காலதாமதமாக நடைபெற ஜோதிட ரீதியான காரணங்களைப் பார்க்கலாம்.
- மனிதர்களின் வாழ்வில் நடைபெறும் அனைத்து சம்பவங்களையும் தசா புத்தியே நிர்ணயம் செய்கின்றன.
பூமியில் மனிதனாய் பிறந்த அனைவருக்கும் திருமணம் மிக அவசியம்.சமுதாய மேன்மையை கடை பிடிக்கவும் சந்ததி விருத்திக்கும் வாழ்க்கை துணை மிக அவசியம்.வாலிப வயதை அடைந்த ஆண், பெண்ணிற்கு உலகில் உள்ள அனைத்து இன்பங்களையும் நுகரும் விருப்பம் வந்துவிடும்.உலக இன்பங்களை நுகர்ந்து ஆனந்தம் தரும் ஆரம்ப நிகழ்ச்சியாக அமைவது திருமணம்.பூர்வ ஜென்ம புண்ணியத்திற்கு ஏற்ப அமையும் திருமண வாழ்க்கை சிலருக்கு உரிய வயதில் வாழ்நாள் முழுவதும் வசந்தத்தை தரும் விதமாக அமைந்து விடும். சிலருக்கு காலம் தாழ்ந்து திருமணம் நடைபெற்றாலும் அன்பும் பண்பும் நிறைந்த வாழ்க்கை துணை கிடைக்கிறது. ஒரு பிரிவினருக்கு திருமணம் நடக்குமா? என சந்தேகிக்கும் படி வயது ஏறி விடும். பருவ வயதை அடைந்த பிள்ளைகளின் பெற்றோர்களுக்கு இருக்கும் முக்கிய கவலை திருமண காலத்தை அறிந்து கொள்வதாகவே உள்ளது.
சமுதாயத்தில் கடமை, கண்ணியம், கட்டுப்பாடு, அன்பு போன்றவற்றை ஏற்படுத்த முன்னோர்கள் உருவாக்கிய அற்புத நெறிமுறையே ஆணுக்கும், பெண்ணுக்குமான திருமணம்.
இரு மனங்கள் இணைந்து, இசைந்து வாழ்வதற்கு செய்து கொள்ளும் இனிய ஒப்பந்தம்.
"திருமணம் ஆயிரம் காலத்து பயிர்"
" திருமணம் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகிறது" என்றெல்லாம் முன்னோர்கள் திருமணத்தை பற்றி கூறியுள்ளார்கள்.
வாழ்க்கை துணையால் பெறும் இன்பம் எத்தகையது? அவர் நல்லவரா? பண்புள்ளவரா? படித்தவரா? எத்தகைய குணம் படைத்தவர்? ஜாதகருக்கு நடைபெறும் திருமணம் மகிழ்வான சூழ்நிலையில் நடைபெறுமா? பல்வேறு குழப்பங்களுடன் நிறைவேறுமா? துணையை தானே தேர்ந்தெடுப்பாரா? குடும்பத்தினர் தேர்ந்தெடுப்பாரா? தாம்பத்ய சுகம் எத்தகையது? போன்ற அனைத்தையும் சப்தம ஸ்தானம், களத்திர ஸ்தானம், இன்ப ஸ்தானம் என அழைக்கப்படும் லக்னத்திற்கு ஏழாமிடமே தீர்மானிக்கிறது. ஏழாமிடத்தின் மூலம் ஆண் ஜாதகமாயின் மனைவியைப் பற்றியும் பெண் ஜாதகமாயின் கணவனைப் பற்றியும், திருமண காலம், இல்லற வாழ்வின் ஏற்றத்தாழ்வு, சிற்றின்பம், வழக்கு விவகாரங்கள், சுற்றம், நட்பு, வெகுமதிகள், போக சக்தி, யாத்திரை, கூட்டுத் தொழில், நண்பர்கள், பொது ஜன ஆதரவு, அடி வயிறு, ஜாதகரின் மரணம் முதலியவற்றை அறியலாம் இரண்டாமிடமான குடும்ப ஸ்தானமும், ஏழாமிடமான களத்திர ஸ்தானமும் 90 சதவீதம் பேருக்கு பிறவி என்பது வரமா, சாபமா என்பதை நிர்ணயிக்கிறது. ஒரு குழந்தை ஜனனமாகி குறைந்தது 14 வயதிற்கு மேல் அதிகபட்சம் 18-க்கு மேல் அவர்களின் சுய ஜாதகம், சுயகர்மா பரிபூரணமாக இயங்குகிறது. அதாவது கோச்சார ராகு/ கேதுக்கள் ஜனன ஜாதகத்தை ஒரு சுற்று சுற்றி முடித்த பிறகும் ஜாதகரின் சுய ஜாதகம் வேலை செய்கிறது.
அதனால் தான் ஜனநாயகம் சார்ந்த எல்லா உரிமைகளும் 18 வயதிற்கு பிறகு வழங்கப்படுகிறது. இரண்டு, ஏழாம் பாவகங்களான மாரகஸ்தானங்களே உலகியலை ஒவ்வொருவருக்கும் புரிய வைக்கிறது. இதனால் தான் ஒரு சிலர் பேச்சு வழக்கில் வாழ்க்கை என்றால் என்ன? என்று எனக்கு திருமணத்திற்கு பிறகே புரிந்தது என்று கூறுவார்கள். திருமணம் நடந்து இனிமையான இல்லறம் நடத்துபவர்கள் திருமணத்தை வாழ்வின் முக்கிய நிகழ்வாகவும், திருமணத்தின் மூலம் மன வேதனை அனுபவிப்பவர்கள் திருமணத்தை கெட்ட சம்பவமாகவும், திருமணத்தை எதிர் நோக்கி இருப்பவர்கள் திருமணத்தை ஒரு எட்டாக் கனியாகவும், எப்பொழுது திருமணம் நடக்கும் என்றும் எதிர்பார்த்து காத்தும் இருக்கிறார்கள். திருமணம் காலதாமதமாக நடைபெற ஜோதிட ரீதியான காரணங்களைப் பார்க்கலாம்.
லக்னத்திற்கு 1,2,7,8 பாவகங்களும் அதன் அதிபதிகளும் வலிமை குறைவு பெறுவதும், 7ம் பாவக அதிபதி 3,6,8,12ல் அமர்வதும் காலதாமத திருமணத்திற்கு முக்கிய முதன்மையான காரணமாக அமைகிறது.
இரண்டாவதாக திருமணம் தொடர்பான பாவங்களான 1, 2, 7, 8 திதி சூன்ய பாதிப்பு அடைந்தால் உரிய வயதில் திருமணம் நடைபெறாது.
லக்னத்திற்கு 2,7ம் பாவக அதிபதிகள் வக்ரம், பகை, நீச, அஸ்தமனம் பெறுதல் மற்றும் கிரக யுத்தத்தில் தோற்பது போன்ற காரணங்களும் திருமணத்தை தாமதப்படுத்தும்.
லக்னத்திற்கு 7-ம் பாவக அதிபதியும் 7-ம் பாவக அதிபதி நட்சத்திரத்தில் இருக்கும் கிரகமும் வலிமையற்று திரிகோணாதிகள் தொடர்பு இல்லாமல் இருந்தாலும் திருமணம் கால தாமதமாகும்.
சனி, ராகு, கேது, மாந்தி போன்ற கிரகங்கள் 1 ,2, 7, 8, ஆகிய பாவகங்களை பாதித்தால் 27 வயதிற்கு மேல் திருமணம் நடைபெறும்.
பெண் ஜாதகத்தில் 8ம் பாவகம் அல்லது 8-ம் பாவக அதிபதி பாதிக்கப்படுவதும் காலதாமத திருமணத்தை தரும்.
திருமணமே நடக்காமல் போவதற்கு ஜோதிட ரீதியான காரணங்கள் கிரகணத்திற்கு ஒரு வாரம் முன்பும் ஒரு வாரம் பின்பும் பூமிக்கு தோஷ காலம். இந்த 15 நாட்களில் பிறக்கும் குழந்தைகளுக்கு அதாவது ஒளி கிரகங்களான சூரியன், சந்திரனுக்கு ராகு, கேது செவ்வாய், சனி தொடர்பு பெறுபவர்களுக்கு திருமணம் நடப்பது மிகவும் கடினம்- லக்னத்திற்கு ஒன்பதாமிடமான பாக்கிய ஸ்தானமே மனிதன் இந்தப் பிறவியில் அனுபவிக்க வேண்டிய அனைத்து இன்பங்களைப் பற்றியும் கூறுமிடம்.
9-ம் பாவகம் வலிமை இழப்பது நிற்பதும் அதற்கு சனி, செவ்வாய், ராகு, கேது போன்ற பாவிகள் தொடர்பு இருந்தாலும் திருமணம் எளிதில் நடைபெறாது.
லக்னத்திற்கு 2, 7-ம் அதிபதிகள் பாவ கிரகத்துடன் தொடர்பு அஸ்தமனம், நீசம் பெற்றால் திருமணம் தடைபடும். சுப கிரக சம்பந்தம் இருந்தால் காலதாமதமாக குடும்பம் அமையும்.
2, 7-ம் அதிபதிகள் நவாம்சத்தில் நீசம், வக்ரம் பெறுவது. லக்னத்திற்கு 2-ம் அதிபதி 3,6,8 12-ல் மறைதல் 1, 7-ம் அதிபதிகள் இணைந்து 6,8,12-ல் பலவீனமடைதல், 6,8-ம் அதிபதிகள் 7-ம் அதிபதியுடன் சேர்க்கை பெறுதல் போன்ற காரணங்களால் திருமணம் நடக்காது அல்லது திருமணத்திற்கு பிறகு விவாகரத்து நடைபெறும்.
7-ம் அதிபதியும் சுக்கிரனும் வறட்டு ராசிகளான மேஷம், மிதுனம், சிம்மம், கன்னி, மகரமாக இருந்து திருமணம் நடைபெற்றால் வாழ்க்கை பாலைவனமாகவே இருக்கிறது.
சுக்கிரன், செவ்வாய்க்கு 1,5,9-ல் வலுவற்ற கிரகங்கள் அமர்வது. சுக்கிரன், 7-ம் அதிபதி, 7-ம் பாவகம் லக்னாதிபதி நவாம்சத்தில் வலுவற்ற நிலையில் இருப்பது, சந்திரன் நீசம் அடைந்து சனியால் பார்க்கப்படுவதும் ஏழாமிடத்திற்கு சனி, கேது தொடர்பு பெறுவதும்,
சனி லக்னத்தை, லக்னாதிபதியை, சந்திரனை பார்த்து சுப கிரகங்கள் பார்வை, குரு தொடர்பு இல்லாத நிலை போன்ற காரணங்களால் திருமணம் நடைபெறுவதில்லை அல்லது வெகு சிலருக்கு மிக மிக கால தாமதமாக துணை என்று ஒன்று அமையும்.
இளமையில் திருமணம் நடைபெறும் யோக அமைப்பு பற்றி பார்க்கலாம். ஜாதகரின் லக்னத்தில் இருந்து 1,5,9-ம் பாவகம் வலிமை பெற்று 2,7-ம் பாவகத்துடன் தொடர்பு பெறுதல் 4, 7-ம் பாவகம் ஒன்றுக்கொன்று கேந்திர திரிகோணம் பெறுவது, லக்னம், சந்திரன், களத்திரகாரகன் சுக்கிரனுக்கு குருவின் 5, 9-ம் பார்வை பலம் கிடைக்கப் பெறுபவர்களுக்கும் 7-ம் பாவகம், 7-ம் அதிபதிக்கு குரு பார்வை இருந்தாலும் உரிய வயதில் திருமணம் நடைபெறும். களத்திரக்காரகன் சுக்கிரன், பெண்கள் ஜாதகத்தில் செவ்வாய் பலமாக இருந்தால் மிக இள வயதில் திருமணம் நடைபெறும். 7-ம் பாவக அதிபதி சுக்கிரனுடன் இணைந்து திரிகோணத்துடன் தொடர்பு பெறுவது. லக்னத்திற்கு 1,2-ல் சுக்ரன் அமர்ந்து செவ்வாயுடன் தொடர்பு பெறுவது. 2,7-ம் பாவக அதிபதிகள் பலம் பெற்று திரிகோணாதிகளுடன் தொடர்பு பெறுவது. 7-ம் பாவக அதிபதி இயற்கை சுபராகி ஜாதகத்தில் வலிமை பெறுவது.7-ம் பாவகாதிபதி மற்றும் சுக்ரன் லக்னத்திலோ, லக்னாதிபதியுடனோ அல்லது லக்னாதிபதி பார்வை பெற்றால் பருவ வயதில் திருமணம் நடைபெறும்7ம் பாவ காதிபதி நட்சத்திரத்தில் இருக்கும் கிரகம் வலிமையோடு இருந்தால் உரிய வயதில் திருமணம் கைகூடும்.
திருமணத்தை எதிர்நோக்கி இருக்கும் கன்னியருக்கும், காளையருக்கும் திருமணம் நடைபெறும் காலம் எப்பொழுது என்பதை பார்க்கலாம்.
சுய ஜாதகத்தில் லக்னத்திற்கு 2,7-ம் மிடம் சுப வலுப் பெற்று தசா புத்திகள் ஒரளவேனும் சாதகமாக இருந்தால் கோட்ச்சார குரு 2, 7, 11-ம் பாவகம் அல்லது அதன் அதிபதிகளுடன் தொடர்பு பெறும் காலத்திலும், ஆணின் ஜனன ஜாதக சுக்கிரனுக்கு கோச்சார குரு சம்பந்தம் பெறும் காலங்களிலும்.
பெண்னின் ஜனன செவ்வாய்க்கு கோட்சார குரு சம்பந்தம் பெறும் காலத்திலும் திருமணம் நடைபெறும். இதை சிலர் "குரு பலம்" என்றும்
"வியாழ நோக்கு" என்றும் " கங்கண பொருத்தம் " என்றும் கூறுவார்கள்.
2,7,11-ம் பாவக அதிபதிகளின் தசா புத்தி காலங்களிலும் அதன் அதிபதிகளின் நட்சத்திர தசா, புத்தி, அந்தர காலங்களில் கோட்சார குரு பலம் இல்லாவிட்டாலும் திருமணம் நடைபெறும்.
பொதுவாக சுக்கிர தசா,புத்தி அந்தரகாலங்களிலும் 2,7,8,12-ம் பாவகங்கள் சுப வலிமையுடன் இயங்கும் காலங்களிலும் திருமணம் நடைபெறும்.
பரிகாரம்
மகிழ்ச்சியான திருமண வாழ்க்கை அமைவது மிகப் பெரிய வரப்பிரசாதம். பூர்வ புண்ணிய பலம் பெற்றால் ஒருவனுக்கு ஒருத்தியாய், ஒருத்திக்கு ஒருவனாய் நல் இன்பத்துடன் சுற்றமும் நட்பும் நிரம்ப பெற்று மகிழ்வான திருமண வாழ்வு அமையப் பெறுவார்கள்.ஒரு சில காரணங்களால் திருமணம் கால தாமதமாகும் போதோ , நடக்காமல் இருக்கும் போதோ நமது பிராரப்த கர்மா என்பதை ஏற்று பிரபஞ்சத்திடம் கோரிக்கை வைத்து விட்டு காலம் கனியும் வரை பொறுமை காக்க வேண்டும். அதை விடுத்து ஜாதகத்தை தனக்கு சாதகமாக மாற்றி எழுதி வினைப் பதிவை அதிகரிக்க கூடாது.
மனிதர்களின் வாழ்வில் நடைபெறும் அனைத்து சம்பவங்களையும் தசா புத்தியே நிர்ணயம் செய்கின்றன. தசை நடத்தும் கிரகம் சுப வலுப் பெறும் காலங்களில் இயல்பாகவே சிறப்பான பலன்கள் நடந்துவிடும்.
கெடு பலன்கள் ஏற்படும் தசாபுத்தி காலங்களில் செய்யப்படும் வழிபாடுகள் தசா புத்தி அமைப்பையும் மீறி சுப பலன்களை வழங்கும். எனவே தசா புத்தி சாதகமாக இல்லாத காலங்களில் குல, இஷ்ட தெய்வங்களை ஆத்மார்த்தமாக சரணாகதியடைந்து வழிபட வேண்டும். தசை நடத்தும் கிரகத்திற்குரிய அதிதேவதைகளை உரிய முறையில் வணங்க வேண்டும்.
சரபேஸ்வரர், பைரவர், நரசிம்மர், ஆஞ்சநேயர் வழிபாட்டிற்கு அனைத்து விதமான கிரக தோஷங்களின் பாதிப்பையும் குறைக்கும் வல்லமை உண்டு.