என் மலர்
சிறப்புக் கட்டுரைகள்
மகத்துவம் மிக்க மாசிமகம்- கடலுக்குப் போகும் கடவுள்கள்
- மாசி மாதப்பவுர்ணமியுடன் கூடிவரும் மகம் நட்சத்திர நாளில் கொண்டாடப்படும் விழா மாசிமகம்.
- அம்பிகை தோன்றிய நாளும் இதுவாகும்.
மாசி மாதப்பவுர்ணமியுடன் கூடிவரும் மகம் நட்சத்திர நாளில் கொண்டாடப்படும் விழா மாசிமகம். இவ்விழா 'கடலாடும் விழா' என்ற பெயரில் அழைக்கப்படுகிறது.கடலில் தீர்த்தமாட இயலாதவர்கள் விரதமிருந்து கோயிலுக்குச் சென்று இந்நாளைக் கொண்டாடுவர்.
மாசிமகத்தன்று உமையவள் தட்சனின் மகளாக அவதாரம் செய்தாள். அன்றுதான் திருமால் வராக அவதாரம் எடுத்து பூமியைக் கடலில் இருந்து மீட்டார் என வைணவ இலக்கியங்கள் குறிப்பிடுகின்றன. முருகன் சிவபெருமானுக்கு பிரணவ மந்திரத்தை உபதேசித்தது இந்நாளில் தான் இந்த மாசிமகத் திருநாள் காமனை சிவபெருமான் எரித்த நாளும் ஆகும்.
நீராடல் என்பது தமிழரின் பண்பாடு சார்ந்த மரபு. நீராடும்போது நமது உடலில் உள்ள புற அழுக்குகள் நீங்குவதோடு உடலின் வெப்பநிலை குறைய வழி உண்டாகிறது. உடல் சமசீதோஷ்ண நிலையை அடையும். மாசி மாதம் முதல் வெப்ப நிலை உயர்வதற்கு ஏற்ப உடல் தன்னை தயார்படுத்திக் கொள்ள தொடங்கும்.
மாசித் திருநாளில் நீராடல் என்பது வருணனோடு தொடர்புடையது. வருண பகவானுக்கு பிரம்மஹத்தி தோஷம் ஏற்பட்டதால் கட்டப்பட்டு கடலில் வீசப்பட்டார். உலகம் வறட்சியால் பாதிக்கப்பட்டது. தேவர்கள் சிவபெருமானிடம் முறையிட இறைவன் வருணனை மாசி மகத்தன்று கட்டுத் தளைகளில் இருந்து விடுவித்தார். விடுதலை பெற்ற வருணன் தான் கடலில் இருந்த காலத்தில் வழிபட்டு சிவனின் அருள் பெற்றதால் அந்நாளில் தன்னைப் போன்று வழிபடும் அனைவரும் உயர்வு பெற வேண்டுமென வரம் பெற்றான். அதனால் மாசி மகத்தன்று நீராடல் தொடங்கியது.
இந்நாளிலேயே ரதியின் கண்களுக்கு மட்டும் தெரியும் வண்ணம் மன்மதனை உயிர்ப்பித்துக் கொடுத்தார்.
சிவன்உமையிடம் தீயவை அழிய யமுனை நதியில் வலம்புரிச் சங்குவடிவில் தவஞ்செய் எனக்கட்டளையிட்டார். யமுனை நதியில் ஓர் தாமரை மலரில் வலம்புரிச் சங்கு வடிவில் தவஞ்செய்து கொண்டிருந்தார். ஒரு மாசி மக நாளில் தட்சன் தனது மனைவியுடன் யமுனை நதியில் நீராட அங்கு தாமரை மலரில் இருந்த வலம்புரிச் சங்கினைக் கண்டெடுக்க அது பெண்ணுருவாயிற்று. அக்குழந்தையை அரண்மனைக்கு எடுத்துச் சென்றான். அம்பிகைக்கு தாட்சாயிணி எனப்பெயரிட்டு வளர்த்தான் என்று கந்தபுராணம் கூறுகின்றது. அம்பிகை தோன்றிய நாளும் இதுவாகும்.
திருஞான சம்பந்தர் மாசி மகத் திருநாளைத் தனது பதிகத்தில் கடலாடல் என்னும் சொல்லினையும் இணைத்து "மடலார்ந்த தெங்கின் மயிலையார் மாசிக் கடலாட்டுக் கண்டான் கபாலீச் சரமமர்ந்தான்" என்பதால், 7ம் நூற்றாண்டிலேயே மாசிமாதக் கடலாடல் இருந்துள்ளது என அறிகிறோம்.
வைணவ மரபில் மாசிமக வழிபாடும் கொண்டாடப்படுகிறது. திருமாலுக்குரிய மகம் நட்சத்திர நாளில் தீர்த்தவாரி என்னும் வழிபாட்டுமுறை பின்பற்றப்படுகிறது. பரந்தாமனை மலர்ந்த தாமரை மலரை வைத்து வழிபட வேண்டும் எனப் புண்டரீக முனிவர் விரும்பி திருமாலைக் காணும் ஆவலுடன் கடல்மல்லையில் கடல்நீரை இறைக்கத் தொடங்கினார்.
திருமால், ஒரு முதியவரின் வடிவில் அங்கு வந்து முனிவரை ஊரினுள் சென்று உணவு வாங்கிவர அனுப்பி விட்டு, கடல் நீரை இறைக்கலானார். முனிவர் வந்தவுடன் கடல் உள்வாங்கி இருப்பதும் தான் வைத்தமலர் திருமாலின் பாதங்களில் இருப்பதையும் கண்டு மகிழ்ந்தார். இவ்வாறு திருமாலே தன் திருக்கரத்தால் இறைத்த "அர்த்த சேது" என்னும் கடலில் நீராடல் மிகவும் சிறந்ததாக விளங்குகிறது.
108 வைணவ திவ்ய தேசமான சிவகங்கை மாவட்டம் திருக்கோட்டியூரில் திருவிளக் கெடுத்தல் என்னும் வழிபாடு நடைபெறுகிறது. பெருமாளிடம் வேண்டுதல் நிறைவேறியோர் திருக்குளத்தில் விளக்கேற்றி, ஏற்றிய விளக்கினை வீட்டுக்கு எடுத்துச் செல்வர். அதனைத் தன் வீட்டின் பூஜை அறையில் வைத்து வழிபாடு செய்வர்.
மாசி மாதம் சூரியன் கும்பராசியில் சஞ்சாரம் செய்வார், மகம் நட்சத்திரம் சிம்ம ராசிக்குரியது. அன்று சந்திரன் மகம் நட்சத்திரத்தில் சிம்ம ராசியில் சஞ்சரிப்பார். இந்நாளே மாசிமகம் எனப்படும். இத்தினத்தில் தீர்த்தோற்சவம் நடைபெறுவது வழக்கம்,வட இந்தியாவில் கும்பமேளா என்ற பெயரில் சிறப்பாகக் கொண்டாடுகின்றார்கள்.
கும்பகோணத்தில்: ஒவ்வொரு முறை பிரம்மதேவன் தூங்கும் பொழுதும் பிரளயம் ஏற்படும் என நம்பப்படுகிறது. ஒரு முறை அவ்வாறு நடக்கும் போது பிரளயத்திற்கு பின்பு கலியுகத்திற்கு முன்பு உயிர்களை உருவாக்கும் விதைகளையும் அமிர்தமும் கொண்டமண் பானை ஒன்று இங்கே இந்த குளத்தில் இருப்பதற்காக இங்கு வந்து சேர்ந்தது. சிவபெருமான் ஒரு வேடன் வேடமிட்டு அம்பெய்து இந்த பானையை உடைத்து உயிர்கள் உருவாவதற்கு வழி உண்டாக்கினார். 'கும்பம்' என்றால் பானை 'கோணம்' என்றால் உருக்குலைதல் என்பதால் கும்பம் உருக்குலைந்த ஊர் கும்பகோணம் என்று பெயர் பெற்றது.
ஒருவர் செய்த பாவங்கள் புண்ணியத் தலங்களிலுள்ள தீர்த்தங்களில் நீராடினால் அகலும். அப்புண்ணியத் தலங்களில் வாழ்வோர் செய்த பாவங்கள் காசியிலுள்ள கங்கையில் நீராடினால் அகலும். காசியிலுள்ளோர் செய்த பாவங்கள் கும்பகோண தீர்த்தத்தில் நீராடினால் விலகும். கும்பகோணத்தில் இருப்பவர்கள் செய்த பாவங்கள் கும்பகோணத்தில் உள்ள தீர்த்தத்தில் நீராடினால் மட்டுமே அகலும் என வடமொழி நூலில் உள்ள ஸ்லோகம் கூறுகிறதாக குறிப்புக் கிடைக்கிறது.
கும்பகோணத்தில் உள்ள தீர்த்தம் மகாமக தீர்த்தம். அமுதத்தின் ஒரு பகுதி இங்கு தீர்த்தமானதால் அமுத தீர்த்தம் எனவும், பிரம்மன் இத்தீர்த்தத்தினால் சிவபெருமானுக்கு அபிஷேகம் செய்து ஆராதித்ததால் பிரம்ம தீர்த்தம் எனவும் பெயர் பெற்றது. மகாமகப் பெருவிழா வடபுலத்தில் நிகழும் கும்பமேளாவைப் போன்று பன்னிரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை வருகிறது. மகாமகக் குளத்தில் மாசி மகத்தன்று கங்கை, யமுனை, சரஸ்வதி, காவிரி, கோதாவரி, பொருநை போன்ற புண்ணிய நதிகள் எல்லாம் நீராடி தங்கள் பாவத்தினைப் போக்கிக் கொள்கின்றன எனப்படுகிறது.
கல்வெட்டுகளில் மாசிப்பெருவிழா : திருச்செந்தூரில் இரண்டாம் வரகுணபாண்டியரின் (கி.பி.862) மூன்று அதிகாரிகள் 1400 காசினை மூலதனமாகக் கொண்டு பல விழாக்கள் நடத்தியதையும், அதில் ஒரு விழாவாக மாசிமகம் குறிக்கப்பட்டுள்ளதையும் காணலாம். இது கல்வெட்டுகளில் காணப்படும் தொன்மையான மாசிமக விழா பற்றிய குறிப்பாக உள்ளது. இதே போல் முதலாம் ராஜராஜ சோழன் காலத்தில்
(கி.பி.1009) திருச்சி மாவட்டம் திருப்பராய்த்துறை மகாதேவா்க்கு மாசிமகத்தன்று பெருந்திருவமது படைக்க நிலம் தந்தது ராசேந்திர சோழன். 4-ம் ஆட்சியாண்டில்
(கி.பி.1016) நாகப்பட்டின ஊரார்கள் மாசிமக விழாவின் ஆறாம் நாள் செலவுகளுக்காக நிலமளித்த செய்தி, முதலாம் குலோத்துங்க சோழன் (கி.பி.1070-1126) தளபதி நரலோக வீரன் சிதம்பரம் கோயிலில் மாசிக் கடலாடலைப் பற்றியும் திருமறைக்காட்டில் ஏழு நாள் கொண்டாடப்பட்ட மாசித் திருநாள் பற்றியும் திருவரங்கத்தில் கி.பி.1531-ம் ஆண்டு விஜயநகா் காலக் கல்வெட்டில் உறையூரில் நடைபெற்ற மாசிமக விழா, குடுமியான் மலையில் உள்ள மாசி மகவிழாவின்போது தெய்வங்கள் நீராடுவதும் பிறகு மண்டபம், தோப்பு ஆகியவற்றில் காட்சி தருவதும் அத்தெய்வங்களுக்கு "பெருந்திருவமுது" படையல் படைக்கப்படும் மரபை கல்வெட்டுச் செய்திகள் விளக்குகின்றன.
சென்னையில்: மெரினா கடற்கரையில் சுமார் 20-க்கும் மேல் கபாலி உட்பட்ட 7 சிவாலயங்கள் பார்த்தசாரதி, மாதவப்பெருமாள் எழும்பூர் சீனிவாசப்பெருமாள், திருவேற்காடு கருமாரியம்மன் கோவில் உட்பட பல கோவில்களின் சுவாமிகள் வந்து கடல் நீராட்டலும் தீர்த்தவாரியும் செய்து நாள் முழுவதும் கடலில் இருந்து கடல் வாழ் உயிரினங்களுக்கு அனுக்கிரகம் செய்து செல்வார்கள் இதேபோல் எலியட்ஸ் கடற்கரையிலும் நடைபெறும்.
மாமல்லபுரத்தில்: கருட வாகனத்தில் தலசயனப் பெருமாள் ஆதிவராகர் ஆகியோர் எழுந்தருளவர். சுமார் 200 கிலோமீட்டர் தொலைவில் இருந்து திருவண்ணாமலை மாவட்டம் படைவீடு யோகராமர் மற்றும் அருகில் உள்ள திருக்கோவில்களின் உற்சவர்களும் வந்து தீர்த்தவாரி நடைபெறும். பாண்டிச்சேரியிலும் கடலாடல் நடைபெறும் .
கடலூர்: தேவனாம்பட்டினம் கடற்கரையில் திருவஹீந்தபுரம், கடலூர் பாடலீசுவரர் முதல் சுமார் 24 திருக்கோவில்கள் உற்சவர்கள் கடற்கரை சென்று தீர்த்தவாரி கண்டு கடலாடி திரும்புவர்.
திருக்கண்ணபுரம்: சவுரிராஜப்பெருமாள் மாசிமகம் அன்று சுமார் 25 கிலோமீட்டர் தொலைவில் உள்ள திருமலைராஜபட்டினம் கடற்கரை சென்று தீர்த்தவாரிசெய்து திரும்புவார். அங்கு இருக்கும் மீனவ மக்கள் இவரை "மாப்பிள்ளைசாமி" என அழைத்து வணங்கி மரியாதை செய்து மகிழ்வர்.
நாகப்பட்டினத்தில் : சவுந்திரராஜர், நீலாக்கோவில் ஆவராணி அனந்தநாராயணர், சட்டையப்பர், நாகூர் நாகநாதர் ஆகியோர் கடற்கரைக்கு எழுந்தருளி கடலாடலும் தீர்த்தவாரியும் நடைபெறும்.
திருச்செந்தூரில் அன்று தெப்பத்திருவிழா கொண்டாடப்படும்.
இலக்கிய கல்வெட்டு வரலாற்றுச் சான்றுகள் மூலம் மாசிக்கடலாடுதல் தமிழகத்தின் பக்தர்கள் பலன்பெற மேற்கொள்ளும் பழந்திருவிழாவாகும். அந்நாளில் இறைவனோடு கடலாடியோ திருக்கோவில் சென்று வழிபடுவதோ பலன் தரும்.இவ்வாண்டு மாசி மகம் மார்ச் மாதம் 6-ந் தேதி முழுவதும் உள்ளது.