search icon
என் மலர்tooltip icon

    சிறப்புக் கட்டுரைகள்

    ஆன்மிக அமுதம்: புல்லாங்குழல்
    X

    ஆன்மிக அமுதம்: புல்லாங்குழல்

    • ராமன் லட்சுமணனோடு கானகத்தில் சீதாதேவியைத் தேடிச் செல்லும் வழியில் சபரியைச் சந்திக்கிறான்.
    • கண்ணன் கைப் புல்லாங்குழலின் இன்னிசைபோல் இனிமையாக நம் வாழ்க்கை அமையக் கண்ணன் அருளட்டும்.

    குழலினிது யாழினிது என்பதம் மக்கள் மழலைச் சொல் கேளாதவர் என்ற குறட்பாவில் அவரவரின் குழந்தைகளது மழலைச் சொல் குழலை விடவும் யாழை விடவும் இனிமையானது என்கிறார் வள்ளுவர்.

    இரண்டு இசைக் கருவிகளைச் சொன்ன வள்ளுவர் அவற்றில் குழலைத்தான் முதலில் சொல்கிறார். புல்லாங்குழலை இசைக்கும் கடவுள் ஸ்ரீகிருஷ்ணர் தான்.

    வேணு, முரளி ஆகிய சொற்கள் புல்லாங்குழலின் வேறு பெயர்கள். வேணுகோபாலன், முரளிதரன் என்றால் புல்லாங்குழலைக் கையில் வைத்திருக்கும் கண்ணன் என்று பொருள். குருவாயூர், உடுப்பி போன்ற திருத்தலக் கோயில்களில் புல்லாங்குழலோடு கூடிய கண்ணன் அலங்காரம் மிகப் பிரசித்தமானது.

    கண்ணன் கையிலுள்ள புல்லாங்குழலின் வரலாற்றை சுவாரஸ்யமாக விவரிக்கிறது ஓர் அபூர்வ ராமாயணக் கதை.

    ராமன் லட்சுமணனோடு கானகத்தில் சீதாதேவியைத் தேடிச் செல்லும் வழியில் சபரியைச் சந்திக்கிறான். ராம பக்தையான சபரி ராமனுக்கென்றே நெடுங்காலமாகத் தான் சேமித்து வைத்திருந்த கனிகளை ராமனிடமும் லட்சுமணனிடமும் பிரியத்தோடு அளிக்கிறாள். அந்தக் கனிகள், சுவையுடையதுதானா எனச் சபரி கடித்துப் பார்த்து சேமித்த எச்சில் கனிகள்.

    எச்சில் கனியைச் சாப்பிடுவதற்குத் தயங்குகிறான் லட்சுமணன். அவன் தயக்கத்தைப் பார்த்து நகைத்த ராமன், அந்தக் கனிகளைக் கண்ணில் ஒற்றிக் கொண்டு வாயில் போட்டுக் கொள்கிறான்.

    லட்சுமணன் வியப்போடு `ஏன் அண்ணா கனிகளைக் கண்ணில் ஒற்றிக் கொள்கிறீர்கள்?` என வினவுகிறான்.

    `பக்தியே வடிவான சபரியின் எச்சில் பட்ட கனிகள் இவை. அந்த எச்சில் மிகவும் புனிதமானது. அதனால்தான் எச்சில் பட்ட இந்தக் கனிகளைக் கண்ணில் ஒற்றிக் கொண்டேன்!` என்று ராமன் விளக்கம் தருகிறான்.

    மெய்சிலிர்த்த லட்சுமணன் தானும் அவ்வாறே கண்ணில் ஒற்றிக் கொண்டு பிறகு, அந்தக் கனிகளைச் சாப்பிடுகிறான்.

    இந்த உரையாடலைக் கேட்டுக் கொண்டிருந்த சபரியின் மனம் திடுக்கிட்டுத் துயரடைகிறது.

    `ராமா! என் தெய்வமே! தாழ்ந்த ஜாதியைச் சேர்ந்த நான் எச்சில் பண்டத்தைப் பிறருக்கு அளிக்கக் கூடாது என்பதுபோன்ற நடைமுறை ஆசாரங்களை அறியமாட்டேன். உனக்கு எச்சில் கனி கொடுத்து அபசாரம் நிகழ்த்தி விட்டேனே! என்ன செய்வேன்!'

    வருந்துகிறாள் சபரி. அருள்பொங்க அவளைப் பார்த்த ராமன் கனியை உண்ட கனிவோடு சொல்கிறான்:

    `தாயே! பக்தையான உனக்கும் தெய்வமான எனக்கும் இடையே உள்ள இந்தப் புனிதமான எச்சில் சம்பந்தம் நம் இருவரின் அடுத்த பிறவியிலும் தொடரும் என்பதை அறிவாயாக!`

    `எப்படி?` என வியப்போடு கேட்கிறாள் சபரி. ராமன் புன்முறுவலுடன் விளக்குகிறான்:

    `தாயே! அடுத்த பிறவியில் துவாபர யுகத்தில், நான் கண்ணனாக அவதரிப்பேன். அப்போது நீ என் கையிலிருக்கும் புல்லாங்குழலாகப் பிறப்பாய்.`

    அதைக் கேட்டு சபரி மெய்சிலிர்த்தாள் என்கிறது அந்த ராமாயணம்.

    மரணப் படுக்கையில் இருந்தாள் கண்ணனின் காதலி ராதை. அவளின் கடைசி ஆசை என்னவென்று கேட்டான் கண்ணன். அவனது புல்லாங்குழல் இசையைக் கேட்க வேண்டும் என விருப்பம் தெரிவித்தாள் அவள்.

    கண்ணன் தன் மூச்சுக் காற்றால் இசைத்த குழலிசையைக் கேட்டுக்கொண்டே தன் மூச்சை விட்டாள் ராதை. தன் அன்புக் காதலி ராதையின் மரணத்திற்குப் பிறகு கண்ணன் புல்லாங்குழலைத் தூக்கி எறிந்துவிட்டான் என்றும் அதன் பிறகு அவன் புல்லாங்குழலே இசைக்கவில்லை என்றும் ஒரு கதை தெரிவிக்கிறது.

    பெரியாழ்வார் கண்ணனின் குழலிசையைப் போற்றுகிறார். கண்ணன் மனமொன்றிக் குழலிசைக்கும்போது பறவைக் கூட்டங்கள் தம் கூட்டைத் துறந்து அவன் இசையைக் கேட்க வந்து கூடினவாம்.

    ஆனிரைகள் கால்பரப்பி, செவிகளை அசைக்காது அவன் இசையில் சொக்கிக் கிடந்தனவாம். இப்படி எழுதி நம்மையும் தம் சுந்தரத் தமிழால் சொக்க வைக்கிறார் அவர்.

    சிறுவிரல்கள் தடவிப் பரிமாறச் செங்கண் கோடச்

    செய்யவாய் கொப்பளிப்ப

    குறுவியர்ப் புருவம் கூடலிப்ப கோவிந்தன்

    குழல்கொடு ஊதினபோது

    பறவையின் கணங்கள் கூடுதுறந்து வந்து

    சூழ்ந்து படுகாடு கிடப்பக்

    கறவையின் கணங்கள் கால்பரப்பிட்டுக்

    கவிழ்ந்திறங்கிச் செவியாட்ட கில்லாவே!

    தமிழில் அற்புதமான பக்திக் கீர்த்தனைகளை எழுதியவர் ஊத்துக்காடு வெங்கட சுப்பையர். கண்ணனின் புல்லாங்குழலிசை இனிமை பற்றிப் பல பாடல்களில் குறிப்பிடுகிறார் அவர். அவனது ஆனந்த மோகன வேணு கானமதில் மனம் மிக அலைபாயுதே என்றெல்லாம் பாடுகிறார்.

    கண்ணன் குழலிசை குறித்தே அவர் ஒரு தனிக் கீர்த்தனையும் எழுதியுள்ளார். `குழலூதி மனமெல்லாம் கொள்ளை கொண்ட பின்னும் குறையேதும் எனக்கேதடி.` எனத் தொடங்கும் அந்தக் கீர்த்தனை முழுவதும் கண்ணனின் புல்லாங்குழல் இசை பற்றியதுதான்.

    அழகான மயிலாடவும் காற்றில்

    அசைந்தாடும் கொடி போலவும்

    அகமகிழ்ந்திலகும் நிலவொளி தனிலே

    தனைமறந்து புள்ளினம் கூவ

    அசைந்தாடி மிக இசைந்தோடி வரும்

    நலம்காண ஒரு மனம் நாட

    தகுமிகு எனஒரு பதம் பாட

    தகிட ததுமி என நடம் ஆட

    கன்று பசுவினமும் நின்று புடைசூழ

    என்றும் மலரும் முகம் இறைவன் கனிவோடு...

    மகர குண்டலமாடவும் அதற்கேற்ப

    மகுடம் ஒளிவீசவும்

    மிகவும் எழிலாகவும் காற்றில்

    மிளிரும் துகிலாடவும்...

    எனக் கண்ணன் குழலிசைத்த காட்சியை மனக்கண்ணில் கண்டு பரவசத்தோடு விவரிக்கிறார் வேங்கடகவி.

    கண்ணன் பாட்டு எழுதிய மகாகவி பாரதியார் கண்ணனின் புல்லாங்குழல் இசை பற்றிப் புகழ்ந்து பாடுகிறார். கோபியர்கள் அவன் குழலிசையில் மயங்கி கண்மூடி வாய்திறந்து கேட்டார்களாம். அப்போது கண்ணன் ஆறேழு கட்டெறும்பைப் பிடித்து அவர்கள் வாயில் போட்டுக் குறும்பு செய்தானாம்.

    இப்படியெல்லாம் வேடிக்கை செய்பவன் கண்ணன் எனப் பெண்கள் கூறுவதாக விரிகிறது பாரதியாரின் கற்பனை.

    `புல்லாங் குழல் கொண்டு வருவான் - அமுது

    பொங்கித் ததும்புநல் கீதம் படிப்பான்

    கள்ளால் மயங்கியது போலே - அதைக்

    கண்மூடி வாய்திறந்தே கேட்டிருப்போம்.

    அங்காந்திருக்கும் வாய் தனிலே - கண்ணன்

    ஆறேழு கட்டெறும்பைப் போட்டு விடுவான்!

    எங்காகிலும் கண்ட துண்டோ - கண்ணன்

    எங்களைச் செய்கின்ற வேடிக்கை ஒன்றோ?`

    கண்ணனைப் பற்றி ஆயிரக்கணக்கான பாடல்களை எழுதிய பார்வையற்ற இந்திக் கவிஞர் சூர்தாசரின் குரு வல்லபாச்சாரியார். கண்ணனையே சரணடைந்து வாழ்ந்த வல்லபாச்சாரியார் எழுதிய கவிதைகளில் மிகவும் புகழ்பெற்றது மதுராஷ்டகம். எட்டுச் செய்யுள்களில் கண்ணனைப் போற்றுகிறது அது.

    கண்ணன் தொடர்புடைய அனைத்துமே மதுரம்தான், இனிமைதான் எனப் பட்டியலிடுகிறார் கவிஞர். `அதரம் மதுரம் வதனம் மதுரம்` எனத் தொடங்கும் மதுராஷ்டகத்தில், `வேணுர் மதுரோ` என்று தொடங்கும் பகுதி உண்மையிலேயே மிக மதுரமானது.

    'கண்ணா! உன் புல்லாங்குழல் இசை மதுரமானது. பாத தூளி உயர்வானது. உன் கைகளும் கால்களும் அழகானவை. உன் நடனம் ஒய்யாரமானது. நீ பழகும் விதம் அழகு. மதுரா நாயகனே! எதிலும் நீ இருப்பதால் இந்த அகிலமே அழகு.` எனப் போற்றுகிறார் கவிஞர்.

    இசைக் கருவிகள் தோல் கருவி, துளைக் கருவி, நரம்புக் கருவி, கஞ்சக் கருவி என நான்கு வகை. தோல் கருவி என்பது மத்தளம், மிருதங்கம், தவில் முதலியன. துளைக் கருவி புல்லாங்குழல், நாதஸ்வரம் போன்றவை. நரம்புக் கருவி வீணை, வயலின் ஆகியவை. கஞ்சக் கருவி ஜால்ரா, கிண்ணாரம் போன்றவை.

    துளைக் கருவி தவிர மற்றவற்றில் விரல்கள் மட்டுமே பயன்படுத்தப் படுகின்றன. புல்லாங்குழல் உள்ளிட்ட துளைக் கருவிகளில் இசையை வெளிப்படுத்த விரல்களோடு மூச்சுக் காற்றும் பயன்படுத்தப் படுகிறது.

    புல்லாங்குழல் என்ற சொல் புல் ஆம் குழல் என விரியும். புல் என்பது மூங்கிலைக் குறித்தது. மூங்கிலால் ஆன குழல் என்பதால் அது புல்லாங்குழல் எனப் பெயர் பெற்றது.

    `பிருந்தாவனமும் நந்தகுமாரனும் யாவருக்கும் பொது செல்வமன்றோ, ஏனோ ராதா இந்தப் பொறாமை யார்தான் அழகால் மயங்காதவரோ?` என்று தொடங்கும் புகழ்பெற்ற திரைப்பாடல் தஞ்சை ராமையாதாஸ் எழுதியது.

    `புல்லாங்குழலிசை இனிமையினாலே

    உள்ளமே ஜில்லெனத் துள்ளாதா..

    ராகத்திலே அனுராகம் மேவினால்

    ஜகமே ஊஞ்சலில் ஆடாதா?'

    என அதில் வரும் வரிகள் கண்ணனின் குழலிசையால் உள்ளம் துள்ளும் எனத் தெரிவிக்கின்றன.

    `புல்லாங்குழல் கொடுத்த மூங்கில்களே, எங்கள் புருஷோத்தமன் புகழ் பாடுங்களேன்` என்று கண்ணதாசன் எழுதிய பக்திப் பாடல், டி.எம். சவுந்தரராஜன் குரலில் ஒலித்து, திரைப்பாடல்களை விடவும் அதிகப் புகழ் பெற்றுவிட்டது.

    நமக்கு ஏதேனும் ஒன்று கிடைத்தால் அதை எல்லோருக்கும் கொடுத்து மகிழ வேண்டும். அப்போதுதான் நாம் நேசிக்கப் படுவோம்.

    நமக்குக் கிடைத்ததை நாம் மட்டுமே வைத்துக் கொண்டிருப்பது சரியல்ல. அப்படிச் செய்தால் நாம் மற்றவர்களால் அவமதிக்கப் படுவோம்.

    புல்லாங்குழல் தனக்குக் கிடைத்த காற்றை இசையாய் எல்லோருக்கும் வினியோகம் செய்கிறது. அதனால் அது முத்தமிடப் படுகிறது.

    கால்பந்து தனக்குக் கிடைத்த காற்றை வெளியே விடாமல் தனக்கென்றே மூடி வைத்துக் கொள்கிறது. அதனால் அது எல்லோராலும் உதை படுகிறது என்பார்கள்.

    `பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல்` என்கிறார் திருவள்ளுவர். நமக்குக் கிடைப்பது எதுவானாலும் அதை மற்றவர்க்கும் அளிப்பதென்பது உயர்ந்த கோட்பாடு. ஆன்மிகத்திலும் அதுவே சிறந்தது.

    அதனால்தான் கூட்டுப் பிரார்த்தனை உயர்ந்தது என்று கருதப்படுகிறது. நாம் நமக்காகப் பிரார்த்திப்போம். மற்றவர்களோடு சேர்ந்து பிரார்த்திப்போம். மற்றவர்களுக்காகவும் பிரார்த்திப்போம்.

    கண்ணன் கைப் புல்லாங்குழலின் இன்னிசைபோல் இனிமையாக நம் வாழ்க்கை அமையக் கண்ணன் அருளட்டும்.

    தொடர்புக்கு-thiruppurkrishnan@gmail.com

    Next Story
    ×