search icon
என் மலர்tooltip icon

    சிறப்புக் கட்டுரைகள்

    கோடைகாலத்திற்கு ஏற்ற பாரம்பரிய உணவுகள்
    X

    கோடைகாலத்திற்கு ஏற்ற பாரம்பரிய உணவுகள்

    • கோடை என்றவுடன் முதலில் நினைவிற்கு வருவது மண்பாண்ட நீர் ஆகும்.
    • மண்பாண்ட நீருடன் ஒரு சில மூலிகைகளைச் சேர்க்கும் பொழுது அவை சிறந்த பலனை தருகின்றன.

    கோடைகால வெயிலின் தாக்கம் தற்பொழுதே தொடங்கிவிட்டது என்று தான் கூற வேண்டும். அதிக வெப்பத்தின் காரணமாக உடலில் நீர் இழப்பு, உடல் சோர்வு போன்றவை கோடை காலத்தில் ஏற்படும் பொதுவான பாதிப்புகள் ஆகும். மேலும் அதிக வியர்வை, வேர்க்குரு, அம்மை, படர்தாமரை போன்ற தோல் நோய்கள், ஹீட் ஸ்ட்ரோக், தோல் வறட்சி போன்றவை கோடைக் காலத்தில் எளிதாக மக்களை பாதிக்கக் கூடியவை. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருமே கோடை வெயிலினால் பாதிப்புக்கு உள்ளாகின்றனர்.

    அதிக வெப்பத்தினால் உடல் நலம் பாதிக்கப்படுவதை தவிர்க்க கோடைக்கு ஏற்ற, ஆரோக்கியமான பாரம்பரிய உணவு முறைகளைப் பின்பற்றுவது நல்ல பயனைத் தரும். அத்தகைய உணவு வகைகளைப் பற்றி இக்கட்டுரையில் காணலாம். கோடை என்றவுடன் முதலில் நினைவிற்கு வருவது மண்பாண்ட நீர் ஆகும். வெயில் தாக்கத்தினால் ஏற்படும் நீர் இழப்பினை சரி செய்ய நமது உடல் இயற்கையாகவே குளிர்ச்சியான திரவ உணவுகளையே நாடும். அந்நேரத்தில் செயற்கையான குளிரூட்டப்பட்ட பானங்களைத் தவிர்த்து உடல் நலனுக்கேற்ற பானங்களை அருந்துவது சிறந்தது.

    பொதுவாக மண்பானைகள் களிமண்ணால் செய்யப்படுபவை. இதில் பல நுண்துளைகள் காணப்படும். மண்பானையில் நீரினை சேமிக்கும் பொழுது இத்துளைகள் நீரின் வெப்பத்தை கடத்தி உள்ளே உள்ள நீரினை இயற்கையாகவே குளிர்ச்சியாக வைக்கின்றன. இத்தகைய மண்பாண்ட நீர் தொண்டைக்கு எவ்வித பாதிப்பினையும் ஏற்படுத்துவது இல்லை. மண்பானையில் வைக்கப்படும் நீரானது இயற்கையாகவே சிறிது காரத்தன்மை உடையதாக மாறுகிறது. இது வயிற்றில் உள்ள அமிலத் தன்மையைக் கட்டுப்படுத்துகிறது. உடலைக் குளிர்ச்சியாக்குகின்றது.

    இந்த மண்பாண்ட நீருடன் ஒரு சில மூலிகைகளைச் சேர்க்கும் பொழுது அவை சிறந்த பலனை தருகின்றன. கோடைக்கு ஏற்ற ஒரு சிறந்த பானம் வெட்டிவேர் ஊறல் நீர். வெட்டி வேரினால் தாகம், உடல் சோர்வு, நாவறட்சி, வயிற்று நோய் போன்றவை நீங்கும் என சித்த மருத்துவ நூல்கள் குறிப்பிடுகின்றன. வெட்டி வேரினை சுத்தம் செய்து மண்பானை நீரில் ஊறவைத்து அந்த நீரினை அருந்துவதன் முலம் மேற்கூறிய நன்மைகளைப் பெறலாம்.

    இதில் உள்ள செக்வெஸ் டொபீன்கள் மற்றும் பீனாலிக் பொருட்கள் பாக்டீரியாக்களை எதிர்த்து செயல்படக் கூடியவை. மேலும் மன அழுத்தத்தினை குறைப்பதாக ஆய்வுத் தரவுகள் உள்ளன.

    இதைப்போலவே நெல்லிக்காய், நெல்லி வற்றல் போன்றவற்றையும் மண்பாண்ட நீரில் ஊறவைத்து அருந்தலாம். இதுவும் கோடைக்கு ஏற்ற ஒரு பானமாகும். இது உடலுக்கு குளிர்ச்சியைத் தருவதோடு, இதில் உள்ள வைட்டமின்-சி மற்றும் ஆன்டி ஆக்சிடென்டுகள் சருமத்திற்கு பொலிவையும், உடலை சுறுசுறுப்பாக வைக்கவும் உதவுகின்றன.

    அடுத்ததாக சந்தன ஊறல் நீர், நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும் சந்தனக் கட்டையை தூள் செய்து மண்பாண்ட நீரில் ஊற வைத்து வடிகட்டி அந்த நீரினை மட்டும் அருந்தலாம். இதனால் உடலில் அதிகச் சூடு குறைந்து நடுநிலைப்படும். இதனை தேவையான பொழுது தயாரித்து செய்து ஒரு வேளைக்கு 30மிலி வரை அருந்துவதே போதுமானதாக அமையும்.

    இதனுடன் எலுமிச்சை சாறு, புதினா, பனங்கற்கண்டு சேர்த்து சர்பத் போன்ற பானமாகவும் அருந்தலாம். பண்டைய காலத்தில் தண்ணீரினை தெளிய வைக்க பயன்பட்ட பொருள் தேற்றான்கொட்டை. தேற்றான் கொட்டையிட்டு ஊற வைத்த நீரினை கோடையில் பயன்படுத்துவதால் உடல் சூடு குறைவதோடு, நீர்கடுப்பு, பெண்களுக்கு ஏற்படும் வெள்ளைப்படுதல் போன்றவை கட்டுப்படுத்தப்படுவதாக சித்த மருத்துவ நூல்கள் கூறுகின்றன.

    கோடைக்கு ஏற்ற சிறந்த உணவு நீராகாரம் ஆகும். இது பழங்கஞ்சி, பழைய சாதம் எனவும் அழைக்கப்படுகிறது. மதிய உணவில் எஞ்சிய சாதத்தில் நீர் ஊற்றி இரவு முழுவதும் ஊறவிட்டு காலையில் அதனுடன் மோர், சின்ன வெங்காயம், கொத்தமல்லி இலை போன்றவற்றை சேர்த்து நன்றாக மசித்து அருந்தலாம். சிலர் இதனுடன் சிறிதளவு வெந்தயம் சேர்த்து ஊறவைத்து தயார் செய்வர். இதனால் உடல் எரிச்சலும், பித்தமும் தணிந்து உடலுக்கு குளிர்ச்சி உண்டாகுமென சித்த மருத்துவ நூல்கள் கூறுகின்றன. இதனை மண்பானையில் செய்வது சிறந்தது.

    மோர் சேர்த்து செய்யக்கூடிய இத்தகைய நீராகாரத்தில் உடலுக்கு நன்மை செய்யும் பாக்டீரியாக்கள் உள்ளன. மேலும் உடல்சோர்வு, உடலின் நீரிழப்பு ஏற்படுவதை தடுக்கின்றன. இதில் கால்சியம், மெக்னீசியம், பொட்டாசியம், சோடியம், இரும்புச்சத்து போன்றவை உள்ளன. இவை உடலுக்கு அத்தியாவசியமான ஊட்டச்சத்துக்கள் ஆகும். கோடையில் உடலை குளிர்ச்சியாக்குவதுடன் மலச்சிக்கல் போன்றவை ஏற்படாமல் பாதுகாக்கும் உணவாக நீராகாரம் உள்ளது.

    இவ்வாறு புளிக்க வைத்து உண்ணும் பொழுது காலை உணவாக எடுத்துக் கொள்வதே சிறந்தது. நேரம் அதிகரிக்கும் பொழுது அதன் புளிப்புத் தன்மை அதிகரிக்கும். நம் முன்னோர்கள் பாரம்பரியமாக பின்பற்றிய இவ்வுணவு இன்று பல நாடுகளின் அறிவியல் அறிஞர்களால் சிறந்த ஊட்டச்சத்துள்ள உணவாக ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது. இதனை எளிமையாக வீட்டிலேயே தயாரித்து கோடையின் தாக்கத்தில் இருந்து விடுபடலாம்.

    அடுத்ததாக, கோடைக்கு ஏற்ற பானம் நீர் மோர் ஆகும். தயிரினை நன்றாகக் கடைந்து, அதிலிருந்து வெண்ணெயை நீக்கி, மோர் தயாரிக்கப்படுகிறது. மோரினால் உடல் வெப்பம், நீர் வேட்கை கட்டுப்படும். மேலும் மோரில் கால்சியம், பொட்டாசியம், பாஸ்பரஸ்,ரிபோப்ளேவின், வைட்டமின்-பி12 போன்றவை உள்ளன. இதில் கொழுப்புச் சத்தின் அளவு குறைவு. லாக்டோஸ் இன்டாலரன்சினால் பாதிக்கப்பட்டவர்கள் கூட மோரினை அருந்தலாம். இதில் உள்ள எலக்ட்ரோலைட்டுகளால் உடலின் நீர் இழப்பை சமநிலை செய்கிறது. மேலும் உணவுச் செரிமானம், குடலுக்கு நன்மை செய்கிறது. எலும்புகளுக்கு வலிமை அளிக்கிறது.

    மோருடன் சிறிதளவு இஞ்சி, கறிவேப்பிலை, கொத்துமல்லி இலை போன்றவற்றுடன் தேவையான அளவு உப்பு சேர்த்து அருந்தலாம். மேலும், கோடைக்காலத்தில் சிலருக்கு மலச்சிக்கல், மூலம் போன்றவை அதிகமாக காணப்படும். இதற்கு மோருடன் உப்பு கலந்து அருந்தி வரலாம். கோடைக்கு ஏற்றவாறு மோருடன் சில பொருட்களைச் சேர்த்து கோடை பானம் தயாரிக்கலாம். உதாரணமாக, வாழைத்தண்டு நீர்மோர், வெள்ளரி நீர்மோர், வெந்தயம் நீர்மோர், வில்வ இலை, நீர் மோர் போன்றவை செய்யலாம்.

    வாழைத்தண்டினை அரைத்து சாறு எடுத்து வடிகட்டி, அதனுடன் மோர் மற்றும் சீரகம் கலந்து அருந்தலாம். இது உடலுக்கு குளிர்ச்சியை தருவதோடு, குடலுக்கு நன்மையைத் தரும். மேலே குறிப்பிட்ட முறையில் வாழைத்தண்டிற்கு பதிலாக வெள்ளரிக்காய் மற்றும் ஊற வைத்த வெந்தயத்தினையும் அரைத்து சேர்த்துப் பயன்படுத்தலாம். இவை கோடைக்கு ஏற்றபானமாக இருப்பதோடு பெண்களுக்கு மாதவிடாய் காலத்தில் ஏற்படும் வயிற்று வலியையும் குறைக்கும்.

    மோருடன் வில்வ இலையை அரைத்து சேர்த்துப் பயன்படுத்தும் போது அவை குடலுக்கு மிகுந்த நன்மையை தருகின்றன. அசீரணத்தை சரி செய்கின்றது. மேலும் மோரினை மதிய உணவுடன் சேர்த்து மோர்சாதமாகவும் உண்ணலாம். இது குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை ஏற்ற உணவாகும். அடுத்ததாக கோடைக்கு ஏற்ற அற்புதமான நம் பாரம்பரிய பானம் பானகம் ஆகும். இதனை பானகரம், பானக்கரம் எனவும் கூறுவர். இனிப்பும் புளிப்புச் சுவையும் சேர்ந்த இப்பானகம் உடல் சூட்டினை குறைப்பதோடு உடலுக்கு ஆற்றலைத் தரும் அற்புதமான பானம் ஆகும்.

    புளியை நன்றாகத் தண்ணீரில் ஊற வைத்து கரைத்து, அதனுடன் தூள் செய்த வெல்லத்தினை கரைத்து வடிகட்டி, சுக்கு, ஏலக்காய், மிளகு இவற்றினை கலந்து மண்பானையில் வைத்து அருந்துவதே பானகம் ஆகும். இதில் சிலர் எலுமிச்சை சாற்றினையும் சேர்த்துக் கொள்வர். இந்த பானகத்தில் சோடியம், பொட்டாசியம், வைட்டமின் சி, இரும்புச் சத்து ஆகியவை உள்ளன. இவை உடலில் நீரிழப்பு ஏற்படாமல் தடுப்பதோடு பல கோடைகால நோய்களில் இருந்து நமது உடலைப் பாதுகாக்கின்றது.

    கோடை என்றவுடன் நினைவிற்கு வரும் அற்புதமான பாரம்பரிய உணவு கேழ்வரகு கூழ் ஆகும். இது உடலுக்குக் குளிர்ச்சியைத் தரக்கூடியது. கேழ்வரகில் இரும்புச்சத்து, கால்சியம், பொட்டாசியம், புரதம், நார்ச்சத்து, கார்போஹைட்ரேட்டுகள், சிறிதளவு கொழுப்புச்சத்து என உடலுக்குத் தேவையான அனைத்து ஊட்டச் சத்துக்களும் உள்ளன. எனவே கேழ்வரகு கூழானது கோடையின் வெப்பத்தை தணிப்பதோடு எலும்புகளுக்கு வலிமை, புத்துணர்ச்சி, ரத்த சோகையை நீக்கும் அற்புதமான உணவு ஆகும்.

    கேழ்வரகு மாவினை முதல் நாள் இரவே தேவையான அளவு தண்ணீரில் கரைத்து வைத்து, மறுநாள் காலை கூழினை வேக வைத்து ஆறியவுடன் அதில் தேவையான அளவு உப்பு, மோர், சின்ன வெங்காயம் சேர்த்து கரைத்து அருந்தலாம். சிலர் இதனுடன் அரிசி நொய் அல்லது பச்சரிசியும் சேர்த்தும் அருந்துவர். சுவைக்கு ஏற்ப சீரகத்தூள், கறிவேப்பிலை, கொத்தமல்லி இலை போன்றவை சேர்த்தும் அருந்தலாம். நாம் மேலே குறிப்பிட்டுள்ள பாரம்பரிய உணவு முறைகள் அனைத்தும் மிகக் குறைந்த செலவில் எளிமையாக நம் வீட்டிலேயே தயாரிக்கக்கூடியவை ஆகும். இவை ஆரோக்கியத்தையும் மேம்படுத்தும் உணவு வகைகள்.

    இவற்றை அன்றாடம் பயன்படுத்துவதன் மூலம் கோடைக்காலத்தில் ஏற்படும் பல்வேறு உடல்நல பாதிப்புகள் வராமல் தடுக்க இயலும். நாம் இங்கு குறிப்பிட்டுள்ளவை தவிர மேலும் பல கோடை கால உணவுகளை நம் முன்னோர்கள் பயன்படுத்தி வந்துள்ளனர். இதன் தொடர்ச்சியை அடுத்த வாரம் காணலாம்.

    Next Story
    ×