search icon
என் மலர்tooltip icon

    சிறப்புக் கட்டுரைகள்

    சித்தர்கள் விளையாடும் பூமி!
    X

    சித்தர்கள் விளையாடும் பூமி!

    • `நினைத்தாலே முக்தி தரும் அற்புத சேத்ரம் அண்ணாமலை’ வணங்குவோம், வாழ்வில் நலம் பெறுவோம்.
    • எல்லா இடங்களிலும் மனிதர்களால் புரிந்துகொள்ள முடியாத அதிசய ஆற்றல் நிரம்பிவழிவதைக் காணலாம்.

    ஒரு குடும்பத்தலைவிக்கு திடீரென்று இருதயபிரச்சினை வந்ததையும், அவருக்கு அறுவைசிகிச்சை செய்யவேண்டும் என்று சொன்னதையும், குடும்பமே என்ன செய்வது என்று தெரியாமல் திகைத்ததையும் பார்த்தோம்.

    அந்த சமயத்தில்தான் அவருடைய தோழி வேல்மாறல் புத்தகத்தைக் கொடுத்துப் படிக்கச் சொன்னார். வேல்மாறல் பாடல்களிலேயே ஒரு குறிப்பிட்ட பாடலை மீண்டும், மீண்டும் இரவு முழுவதும் படித்துக் கொண்டிருந்தார். அவரையும் அறியாமல் தூங்கிவிட்டார்.

    மறுநாள் விடிந்தது. மருத்துவமனையின் வழக்கமான டெஸ்டுகள் துவங்கின. அன்றே ஆபரேஷன் என்பதால் அவருக்கு அனைத்துப் பரிசோதனைகளும் செய்யப்பட்டன.

    டாக்டர் வந்தார். சோதனை முடிவுகளைப் பார்த்தார். மீண்டும் ஸ்கேன் போன்ற பரிசோதனைகள். டாக்டர் குழம்பிப்போனார். இரவுக்குள் எப்படி இது? ஏனெனில் பரிசோதனையில் அந்தப் பெண்மணிக்கு எந்தவிதமான இதய அடைப்பும் இல்லை! ஓர் இளம்பெண்ணின் இதயம்போல சுறுசுறுப்பாக ரத்தஓட்டம் நடந்துகொண்டிருந்தது!

    இது எப்படி சாத்தியம்? அந்தப் பெண்மணியிடம் ``ராத்திரி ஏதேனும் மருந்து சாப்பிட்டீர்களா? யாரேனும் ஏதேனும் கொடுத்தார்களா?'' என்று விசாரித்துக்கொண்டிருந்தார்.

    மருத்துவர்களுக்கெல்லாம் மருத்துவனான முருகனின் வேல் அல்லவா அவரைக் காப்பாற்றி இருக்கிறது. ``சுக்கை மிஞ்சிய வைத்தியமில்லை,

    சுப்ரமண்யனை மிஞ்சிய தெய்வமுமில்லை''

    என்றல்லவா சொல்லுவார்கள்?

    இது ஏதோ கட்டுக்கதையில்லை. உண்மையில் நடந்த சம்பவம். அதற்குப்பின் தான் வேல்மாறல் பாராயணம் என்பது மிகவும் பிரசித்தமானது.

    இப்படிப்பட்ட கலியுக வரதனான முருகன் அருணகிரி நாதரை ஆட்கொண்ட தலம் அருணாசலம். கம்பத்தில் பிரத்யட்சமாக முருகன் காட்சி கொடுத்ததால் `கம்பத்திளையனார்' என்ற பெயருடனே அருணைக்கோயிலில் எழுந்தருளியுள்ளார். அண்ணாமலையே சிவலிங்கமாக இருப்பதால்தான் சித்தர்களும், முனிவர்களும் இந்த மலையின்பால் ஈர்க்கப்பட்டு இங்கு வருகிறார்கள். திருவண்ணாமலை கிரிவலம் என்பது பிரசித்தி பெற்றது. பவுர்ணமியன்று ஆயிரக்கணக்கான மக்கள் கிரிவலம் வருகிறார்கள். காரணம் அந்த சமயத்தில் முனிவர்களும், சித்தர்களும் அந்த மலையை சூக்ஷமமாக வலம் வருகிறார்கள். மூலிகைகளும், தெய்வங்களும் சூழ்ந்த அருணையின் காற்று அவர்களின் மேல் பட்டு நம்மீதும் வீசுவதால் அதன் மகத்துவம் சொல்லிமாளாது. தவிரவும் சித்தர்கள் ஆவிபோன்ற வடிவில் மிதந்து செல்வதை மிகப்பலரும் தரிசித்திருக்கிறார்கள்.

    கிரிவலத்தில் நம்மைக் கடந்து செல்பவர்கள் மனிதர்களா, சித்தர்களா என நமக்குத் தெரியாது. எனவே இறை சிந்தனையுடன் மனதிற்குள் `ஓம் நமசிவாய' என ஜெபித்துக்கொண்டே சென்றால் எந்த தவமும் செய்யாமலே அளப்பரிய பலன்களை அடையலாம்.

    எத்தனையோ மகான்கள் அருணாசலத்தினால் ஈர்க்கப்பட்டு திருவண்ணாமலையை அடைந்து, அங்கேயே வாழ்ந்து மறைந்திருக்கிறார்கள். அவர்களைப் பற்றிய அமானுஷ்யமான தகவல்கள் நிறைய உண்டு. பெயர் தெரிந்தவர்கள் மிகச் சிலரே...

    அவர்களில் தலையாயவர் ரமணமகரிஷி...மதுரையில் பிறந்தவர், சிறுவயதிலேயே அருணையினால் ஈர்க்கப்பட்டார். திருவண்ணாமலை எங்கே இருக்கிறது என்றுகூடத் தெரியாமல் மதுரையைவிட்டுக் கிளம்பிவிடுகிறார். சிறுவனான அவர் உடைகளைத் துறந்து, கோவணத்துடன் அருணாசலேஸ்வரர் கோயிலில் பாதாளலிங்க சன்னிதியில் பல்லாண்டுகள் தவத்தில் மூழ்கிவிடுகிறார். பூச்சிகளும், வண்டுகளும் அவரைக் கடித்துக் குதறுவதைக்கூட அவர் உணரவில்லை. சிறுவர்கள் அவர்மேல் கல்லெடுத்து எறிகிறார்கள். அதனால் அவர் உடல் முழுவதும் காயங்கள். எதுவும் அவருக்குத் தெரியவில்லை.

    அவருடைய தெய்வீகநிலையை உணர்ந்த சேஷாத்ரி சுவாமிகள் அவரை வெளியே எடுத்து அவருக்கு சுய உணர்வு வரச்செய்கிறார்.

    பிறகு ரமணபகவான் அருணாசலத்தில் மலையில் பல இடங்களில் தங்குகிறார்.விருபாக்ஷி குகை, பவளப்பாறை என இருந்துவிட்டு, இறுதியில் இப்போது இருக்கும் ரமணாஸ்ரமத்தில் நிலைகொள்கிறார். இவரின் பெருமைகளை உணர ஒரு வெளிநாட்டுக்காரர் வரவேண்டியதானது. பால்பிரண்டன் என்பவர் உண்மையான ஆன்மிக குருவைத் தேடி இந்தியா எங்கும் சுற்றுகிறார். காஞ்சிபுரம் வந்து மகாபெரியவரை வணங்கியபோது அவரால் திருவண்ணாமலைக்கு நெறிப்படுத்தப் படுகிறார். கடைசியில் அவருடைய தேடல் முடிந்து ரமணபகவானிடம் சரணடைகிறார். அவருடனான அனுபவங்களை பால்பிரண்டன் புத்தகமாக எழுத, உலகமெல்லாம் பகவானின் புகழ் பரவியது. ஒரு கோவணமே ஆடையாக மிகப்பெரும் பண்டிதர்கள் முதல், எளிய பாமரப்பெண்கள் வரை அனைவருக்கும் வழிகாட்டியாக அமைந்தார் பகவான். அவர் செய்த அற்புதங்கள் பல. ஆனால் அதற்கும் தனக்கும் எந்த சம்பந்தமும் இல்லாததுபோல அமர்ந்திருப்பார்.

    மிகப்பெரும் பண்டிதரான கணபதிமுனி அவரை முருகனின் அவதாரம் என்றே கூறுவார்.

    ஆரம்ப நாட்களில் ரமணாஸ்ரமத்தில் அன்றைய உணவுக்கே என்ன செய்வது எனப் பலநாட்கள் அன்பர்கள் தவித்திருக்கிறார்கள். பகவான் அமைதியாக அமர்ந்திருப்பார். மிகச்சரியாக சமைப்பதற்கான பொருட்களும், காய்கறிகளும் மூட்டையாக வண்டியில் வந்து இறங்கும். பகவானே சமையலறைக்குச் சென்று எப்படிச் சமைக்கவேண்டும் எனச் சொல்லிக்கொடுப்பார். எளிமையிலும் எளிமையாக வாழ்ந்தார்.

    ரமணபகவான் தன் தேகத்தை உதிர்த்தபோது ஓரொளி தோன்றி அண்ணாமலையில் சென்று கலந்ததை மிகப்பலரும் பார்த்தார்கள்.

    அண்ணாமலையின் உள்சுற்றிலும், மலையிலும் பல தேவ ரகசியங்கள் உண்டு. அவற்றை ஆராயக்கூடாது என பகவானே சொல்லி இருக்கிறார். பல இடங்களில் நந்தி, மலையைப் பார்த்திருப்பதுபோல முனிவர்களால் பிரதிஷ்டை செய்யப்பட்டிருக்கும்.

    பாமரர்களாகிய நமக்கு இவையெல்லாம் புரியாத புதிர்கள்தான். புரியவேண்டியதும் இல்லை. வெறுமனே `ஓம்நமசிவாய' என்று சொல்லிக்கொண்டே கிரிவலம் வந்தாலே போதும். இறையருள் தானே செயல்படும்.

    இங்கு வாழ்ந்த மகான்களில் மற்றொருவரும் அனைவராலும் அறியப்பட்டார். கருணையினால் தன்னை வெளிப்படுத்திக் கொண்டார் என்றுதான் சொல்லவேண்டும். அவர்தான் சேஷாத்ரி சுவாமிகள். `தங்கக்கை' என்று இவரைச் சொல்வார்கள். ஏனென்றால் திருவண்ணாமலையில் இவர் எந்தக் கடைக்குள் சென்று பொருட்களைத் தொட்டாலும் அல்லது வாரி இறைத்தாலும் அன்று அந்தக்கடையில் விற்பனை அமோகமாக நடக்கும். எனவே இவர் தன் கடைக்கு வரமாட்டாரா என ஒவ்வொருவரும் எதிர்பார்த்துக்கொண்டு இருப்பார்கள்.

    சுவாமிகள் எங்கே இருப்பார், என்ன செய்வார் என யாராலும் சொல்லமுடியாது. ரமணபகவான் சிறுவனாக பாதாளலிங்க சந்நிதியில் தியானத்தில் இருந்தபோது அவரை வெளியே கொண்டு வந்தது இவர்தான்.

    அதேபோல பகவான் மலையில் இருந்தபோது தன்னுடன் இருந்த வள்ளிமலை சுவாமிகளை கீழே போகச் சொல்லிவிட்டார். வள்ளிமலை சுவாமிகளுக்கு வருத்தம், தான் ஏதேனும் தவறு செய்துவிட்டோமோ என்று. மலையில் இருந்து கீழே இறங்கிய அவர் கண்களில் முதலில் பட்டவர் எருமையைக் கட்டிப்பிடித்துக்கொண்டு சேற்றில் உழன்றுகொண்டிருந்த சேஷாத்ரிசுவாமிகள்தான். இவரைப் பார்த்தவுடன் சுவாமிகள், ``வாவா...உனக்கு இங்கு வேலையில்லை. திருப்புகழுக்காகவே பிறந்தவன் நீ. அதைப் போய் செய்.'' என்றார். தன்னை ரமணபகவான் ஏன் வெளியேற்றினார் என்பதைப் புரிந்துகொண்ட வள்ளிமலை சுவாமிகள் அதற்குப் பிறகு திருப்புகழைப் பரப்புவதையே தன் வாழ்நாளின் குறிக்கோளாகக் கொண்டார். சேஷாத்ரி சுவாமிகளும், ரமணபகவானும் ஒருவருக்கொருவர் மனத்தால் பேசிக்கொண்டு வள்ளிமலை சுவாமிகளை தன் வாழ்வின் குறிக்கோளை உணரும்படி நெறிப்படுத்தினர் என்பது தெய்வீகச்செயலே...

    அண்ணாமலையார் கோயிலின் வடக்குகோபுரம் பதின்மூன்று நிலைகளுடன் பிரமாண்டமாகக் காட்சிதரும். அதைக் கட்டியது ஒருபெண்மணி என்பது ஆச்சர்யமான விஷயம்தானே. திருவண்ணாமலை சென்னசமுத்திரத்தில் பிறந்த அருள்மொழி எனும் பெண் எப்போது பார்த்தாலும் பூஜை, தியானம் என இருக்கிறாளே, இவளுக்குக் கல்யாணம் செய்துவைத்தால் சரியாகிவிடுவாள் எனப் பெற்றோர்கள் முடிவு செய்கிறார்கள். அதையறிந்த அருள்மொழி திருவண்ணாமலைக்கு வந்து ஒருகுளத்தில் விழுந்துவிடுகிறாள். மூன்று நாட்கள் கழித்து தெய்வீகப்பிறவியாக எழுந்திருக்கிறாள். அருணாச்சலேஸ்வரர் கோயிலின் வடக்குகோபுரம் மட்டும் கட்டிமுடிக்கப்படாமல் இருந்தது. இறைவனின் கட்டளையால் அப்பணியை இவர் ஏற்கிறார். ராஜகோபுரத்தைக் கட்டுவது சாதாரணமானதா? அம்மணிஅம்மாள் என அழைக்கப்பட்ட அந்த எளிய பெண்மணி அதைச் சாதித்தார்!

    அவருடைய தெய்வீக ஆற்றலை உணர்ந்த பலரும் பொருளுதவி செய்கின்றனர். ஆனாலும் கோபுரம் கட்ட ஏராளமான பணம் தேவைப்படுமே...ஒருகட்டத்தில் இருந்த பொருளெல்லாம் தீர்ந்துபோக மைசூர்மகாராஜாவின் அரண்மனைக்குச் சென்றார்.

    இவரின் சாதாரணத் தோற்றத்தைக் கண்ட காவலாளி உள்ளே விடவில்லை. தன் யோகசக்தியால் உள்ளே சென்றார் அம்மணிஅம்மாள். இப்படி ஒருபெண் தன் எதிரே நிற்க காவலாளி என்ன செய்கிறான் என அவனை அழைக்கிறார் மகாராஜா. உள்ளே வந்த காவலாளி இவர் எப்படி உள்ளே வந்தார் எனக் குழம்பிப்போய் வெளியில் சென்று பார்க்கிறான். வெளியிலும் ஒரு அம்மணிஅம்மாள்! அவரின் சக்தியை உணர்ந்த மகாராஜா அவருக்கு சகலமரியாதைகளையும் செய்து கோபுரம் கட்ட பொருள்கொடுத்து அனுப்பினார்.

    கடைசி நிலைகளைக் கட்ட மேலும் பொருள் தேவைப்பட்டபோது அவர் கொடுத்த விபூதி அவரவருக்குத் தரவேண்டிய கூலியாக மாறியது. இப்படிப் பதிமூன்று நிலைகளை அமானுஷ்யமான முறையில் கட்டி குடமுழுக்கும் செய்துவைத்தார் அம்மணிஅம்மாள்.அவருடைய சமாதி கிரிவலப்பாதையில் ஈசான்ய லிங்கத்திற்கு அருகில் உள்ளது. இப்போதும் அங்கு கொடுக்கப்படும் விபூதி பல நோய்களைத் தீர்ப்பதாக இருக்கிறது. மற்றொரு மகான் யோகிராம்சூரத்குமார். அவரும் திருவண்ணாமலையில் நிலைகொண்ட மகாமுனி. இப்படித் திருவண்ணாமலையில் எங்கெங்கு நோக்கினும் சித்தர்களின் தெய்வீகத் திருவிளையாடல்கள்தான். எல்லா இடங்களிலும் மனிதர்களால் புரிந்துகொள்ள முடியாத அதிசய ஆற்றல் நிரம்பிவழிவதைக் காணலாம்.

    அதை ஆராயும் அளவு நமக்கு ஞானம் இல்லையென்றாலும் இப்பூவுலகின் தெய்வீகப்பாசறை என உணர்ந்து அண்ணா மலையை வழிபட்டாலே போதும்.

    `நினைத்தாலே முக்தி தரும் அற்புத சேத்ரம் அண்ணாமலை' வணங்குவோம், வாழ்வில் நலம் பெறுவோம்...

    [தொடர்ந்து பார்ப்போம்]

    Next Story
    ×