search icon
என் மலர்tooltip icon

    சிறப்புக் கட்டுரைகள்

    கோட்சார பிரம்மஹத்தி தோஷம்
    X

    கோட்சார பிரம்மஹத்தி தோஷம்

    • “எல்லாம் படைத்தவன் பார்த்துக் கொள்வான். கடமையை செய், மேடு பள்ளம் உள்ளதுதான் வாழ்க்கை” என்று அடுத்த வேலையில் கவனம் செலுத்துவார்கள்.
    • குரு பகவான் ஒரு ராசியை கடக்க தோராயமாக ஒருவருடமாகும்.

    காலை எழுந்தவுடன் டி.வி, பத்திரிக்கை என அனைத்து மீடியாக்களிலும் ராசி பலனுடன் கிரகப் பெயர்ச்சி பற்றிய தகவல்கள் வெளி வந்த வண்ணம் இருக்கிறது.கடவுள் நம்பிக்கை இல்லாதவர்கள் மற்றும் பகுத்தறிவாளர்கள் கிரகங்களின் நகர்வு இயற்கையின் அற்புதம். உழைத்தால் மட்டுமே உணவு, இதை கண்டு கொள்ளாமல் பிழைக்கும் வழியை பாருங்கள் என்று எளிதாக கூறிவிடுவார்கள்.

    ஜோதிடத்தில் நம்பிக்கை உள்ளவர்கள். எதையும் தாங்கும் மனப்பக்குவம் உள்ளவர்கள் கிரகப் பெயர்ச்சி பற்றிய பலனை படித்து விட்டு "எல்லாம் படைத்தவன் பார்த்துக் கொள்வான். கடமையை செய், மேடு பள்ளம் உள்ளதுதான் வாழ்க்கை" என்று அடுத்த வேலையில் கவனம் செலுத்துவார்கள். பலவீனமான மனம் உடையவர்கள் படித்தது, கண்ணில் பட்டது, காதில் கேட்டதுக்கெல்லாம் பயப்படுவதும் உண்டு.

    கிரகப் பெயர்ச்சிகள் மனித வாழ்வில் ஏற்ற இறக்கத்தை ஏற்படுத்துமா? என்பது பற்றிய சந்தேகம் பலருக்கும் இருந்து கொண்டு தான் இருக்கிறது. அதுவும் தற்போது கோட்சாரத்தில் சனி பார்வையில் குருவை நெருங்கும் ராகுவால் ஏற்படும் பிரம்மஹத்தி தோஷ பாதிப்பு உலகிற்கு தனி மனிதனுக்கு என்ன பலன் தரும் என்று ஆவலுடன் எதிர்பார்க்கிறார்கள்.

    நவகிரகங்களில் வருட கிரகங்களான குரு, சனி, ராகு, கேது இவற்றின் நகரும் தன்மை மெதுவாக இருப்பதால் அவற்றால் ஏற்படும் சுப மற்றும் அசுப பலன்கள் வருடக் கணக்கில் உலகிற்கு, தனிமனிதருக்கு மாற்றத்தை தரும். இது பற்றிய விளக்கத்தை இந்த கட்டுரையில் பார்க்கலாம்.

    வருட கிரகங்கள்

    குரு பகவான் ஒரு ராசியை கடக்க தோராயமாக ஒருவருடமாகும். தனி மனித மற்றும் உலகப் பொருளாதாரத்தை தன் கட்டுப்பாட்டில் வைத்து இருப்பவர் குருபகவான். மேலும் மனிதனின் விருப்பம், எண்ணம், ஆசை போன்றவற்றை நிறைவு செய்பவர்.

    விருப்பம், ஆசை இவை மனிதனுக்கு மனிதன் மாறுபடும். ஒருவருக்கு அன்றாட தேவைகள் நிறைவேறினால் போதும் என்ற எண்ணம் இருக்கும். இன்னொருவருக்கு வீடு, வாகனம் வாங்க வேண்டும் என்ற விருப்பம் இருக்கும். இன்னும் சிலருக்கு திருமணம் நடைபெறும் காலம், குழந்தை பாக்கியம் கிடைக்கும் காலம் பற்றிய சிந்தனை மிகுதியாக இருக்கும்.

    ராகுவும் கேதுவும் ஓவ்வொரு ராசியிலும் ஓன்றரை ஆண்டுகள் 18 மாதங்கள் தங்கி சுப அசுப பலன்களைத் தருவார்கள். நிழல் கிரகங்களான இவர்கள் மனித வாழ்வில் நடைபெறும் அனைத்து

    சம்பவங்களையும் ரெக்கார்டிங் செய்து சனி பகவானுக்கு அனுப்பி விடுவார்கள். ராகு, கேதுக்கள் சனி பகவானின் பிரதிநிதிகள்.

    சனி பகவான் ஒரு ராசியில் 2½ ஆண்டுகள் இருப்பார். சனி பகவான் என்ற பெயரை கேட்டாலே தாயின் கருவில் இருக்கும் குழந்தை கூட பயப்படும்.

    ஒருவரின் கர்ம வினையை முழுமையாக அனுபவிக்க உதவுபவர். முன் ஜென்மத்தில் ஒருவர் செய்த கர்மா என்ன என்பதை கேது சுட்டிக் காட்டும். முன் ஜென்மத்தில் செய்த கர்மாவிற்கு என்ன பலன் என்பதை ராகு சுட்டிக்காட்டும். ராகு/கேதுக்களின் உதவியுடன் ஒருவரின் கர்ம வினைக்கு ஏற்ற பலனை வழங்குபவர் சனிபகவான்.

    பிரம்மஹத்தி தோஷம்

    மனிதர்கள் ஒவ்வொருவருக்கும் ஒரு விதமான வாழ்க்கை அமைகிறது. ஒரு சிலருக்கு வெற்றி வாய்ப்பு வீடு தேடிவந்து அழைக்கிறது. ஒரு சிலருக்கு வாய்ப்பை தேடிப் போனாலும் கிடைப்பது இல்லை. என்ன உழைத்தாலும், அதற்கு உரிய பலன்கள் கிடைக்காமல் போகின்றன. இதற்கு பலவகையான தோஷங்கள் காரணமாக இருந்தாலும், குறிப்பாக பிரம்மஹத்தி தோஷம்தான் முக்கிய காரணம் என்கிறார்கள்.

    'பிரம்மஹத்தி தோஷம்' என்பது, நெஞ்சை பதை பதைக்க வைக்கும் கொடுமையான பஞ்ச மகா பாதங்களைச் செய்வதால் ஏற்படுவதாக சாஸ்திரங்கள் சொல்கின்றன.பூமியில் ஒரு உயிர் ஜனனமாக காரணமாக இருக்கும் பிரபஞ்ச சக்திக்கே அந்த உயிரை எடுத்துக் கொள்ள உரிமை இருக்கிறது. சக மனிதர்கள் ஒரு உயிருக்கு தீங்கு விளைவித்தால், பாதிப்பை ஏற்படுத்தினால், உருவாகும் தோசமே பிரம்மஹத்தி தோசமாகும். ஏதோ ஒரு காரணத்தால் ஒருவரை கொலை செய்வது அல்லது அதற்கு சமமான பாவங்கள் செய்தவருக்கே இந்த தோஷம் ஏற்படுகிறது. இந்த தோஷம் யாருக்கெல்லாம் வரும் என்றும் அதனால் ஏற்படும் விளைவுகளையும் பார்ப்போம்.

    1. கருச்சிதைவு செய்தவருக்கும் அதற்கு உதவிய மருத்துவருக்கும் வரும். அவர்களுக்கு குழந்தையின்மை ஏற்படும். அப்படி குழந்தை பிறந்தாலும் வாழ்நாள் முழுவதும் அந்த குழந்தையால் காலம் முழுவதும் நிம்மதியின்மை ஏற்படும்.

    2.பெண்ணைத் திருமணம் செய்து கொள்கிறேன் என வாக்கு கொடுத்து, ஏமாற்றி திருமணம் செய்யாமல் இருப்பவருக்கு திருமணமே நடக்காத நிலை, அப்படி நடந்தாலும் அந்த திருமண வாழ்க்கை நரக வேதனை தருவதாக இருக்கும்

    3.பலரின் உழைப்பை உறிஞ்சி, அதற்குரிய ஊதியம் தராமல் இருப்பது. உழைத்த வேர்வை காயும் முன்பு கூலி கொடுக்காதவர்களுக்கு வரும். இந்த தோஷத்தால் தொழில் சரிவர அமையாமை, தொழில் நட்டம், வேலை இல்லா நிலை ஏற்படும்.

    4.குருவுக்கு தட்சிணை தராமல் இருப்பது குருவின் கொள்கை பிடிக்காமல் தானே குருவாக மாறுபவர்களுக்கு, எந்த முகாந்திரமும் இல்லாமல் பிராமணர்களை துன்புறுத்தினால், வருத்தம் ஏற்படுத்தினால், அவர்களுக்கு அல்லது அவர்களது குழந்தைகளுக்கு கற்ற கல்வியை பயன்படுத்த முடியாத நிலை ஏற்படும். குல தெய்வ சாபத்தை விட குரு சாபம், பிராமண சாபம் மிக கொடியது. பிராமண குலத்தில் பிறந்த ராவணனனை ராமர் கொன்றதால் பிரம்மஹத்தி தோஷம் ஏற்பட்டது.

    5.வெள்ளிக்கிழமைகளில் நல்ல பாம்பை அடிப்பவர்களுக்கு பண இழப்பு ஏற்படும். வேற்று மதத்தினர் அல்லது அந்நிய பாஷை பேசுபவர்களால் தொல்லை ஏற்படும். இவர்களுடைய குழந்தைகள் கலப்பு திருமணம் செய்து கொண்டு வாழ்வை தொலைத்து விடுகிறார்கள்.

    6. ஆலயத்தை தகர்த்தல், சாமி சிலையை திருடுதல், குல தெய்வ சொத்தை கொள்ளை அடித்தவர்களுக்கு, பங்காளி தகராறில் குல தெய்வ கோவிலை மூடியவர்களுக்கு கடவுள் அனுக்கிரகம் இருக்காது.

    7. கட்டிய மனைவிக்கு தேவையான அடிப்படை வசதி செய்து தரத் தவறியவரால் தன் அடிப்படை தேவையை கூட நிறைவு செய்ய முடியாத நிலை ஏற்படும்.

    மேலும் பெற்றோருக்கு உணவளிக்காமல் விரட்டி அடிப்பவருக்கு, கறவை நின்ற பசுவைக் கசாப்புக்கு அனுப்புபவருக்கு, உண்ட வீட்டுக்கு இரண்டகம் செய்பவருக்கும், நன்றி மறந்தவர்களுக்கும் இந்த தோஷம் ஏற்படுகிறது. அதனால் வருடக் கணக்கில் மனக்குழப்பம், தவறே செய்யாமல் தண்டணை அனுபவிப்பது, மருத்துவத்திற்குக் கட்டுப்படாத நோய், வறுமை, அங்கீகாரம் இன்மை, குடும்பத்தில் மரியாதை இன்மை, நடத்தி வரும் தொழிலுக்கு வேலையாட்கள் கிடைக்காத நிலை போன்றவை பல ஆண்டுகள் நீடிக்கும். சமூகத்தில் திறமை இருந்தும் நல்ல நிலையை அடைய முடியாமல் தடுமாறிக் கொண்டு இருப்பார்கள்.

    ஒருவரின் உயிரை எடுத்தால் மனம் என்ன பாடுபடுமோ அதேபோல் இந்த தோசம் இருப்பவர்களின் மனமும் இருக்கும். இப்படிப்பட்ட தோஷம் உள்ளவர்கள் ஆணாக இருந்தாலும் சரி, பெண்ணாக இருந்தாலும் சரி, அவர்கள் குடும்பத்தில் ஒற்றுமை இருக்காது.

    கோட்சாரமும், பிரம்மஹத்தி தோஷமும்

    இந்த ஒராண்டில் சற்றேறக்குறைய ஒன்பதரை மாத காலங்கள் ஜனவரி 17, 2023 முதல் கும்ப ராசியில் நிற்கும் சனிபகவானின் 3-ம் பார்வை மேஷ ராசியில் உள்ள ராகு மேல் பதிகிறது. சனியின் 3-ம் பார்வை படும் மேஷ ராசியில் அக்டோபர் 30, 2023 வரை ராகு நிற்கிறார். ஏப்ரல் 22, 2023 முதல் ஒரு வருட காலத்திற்கு குருவும் சனி பார்வை பெறுகிறார். அசுப கிரகங்களான சனி மற்றும் ராகுவிற்கு இடையே குரு சஞ்சாரம் செய்கிறார் என்பதால் இது தர்மகர்மாதிபதி யோக பலனை அக்டோபர் 30, 2023 வரை வழங்காது. இதனால் பொருளாதாரத்தில் ஏற்றத்தாழ்வு நிலவும்.

    இந்த காலகட்டத்தில் மக்கள் தொழில், வேலைக்காக வெளியூர், வெளிநாட்டிற்கு அதிகம் இடம் பெயருவார்கள். நோய் தாக்கம், நோய் பயம் அதிகரிக்கும். ஆயுள் காரகன் சனி கால புருஷ எட்டாமிடமான விருச்சிகத்தைப் பார்ப்பதால் ஆயுள் பற்றிய பயம் தேவையில்லை. மதமாற்றம் அதிகரிக்கும். சாஸ்த்திர நம்பிக்கை குறையும். பணவீக்கம் அதிகரிக்கும். மாற்று மருத்துவத்தின் மேல் மக்களுக்கு ஆர்வம் அதிகரிக்கும். போலிச் சாமியார்கள் அதிகரிப்பார்கள்.

    மதகுருமார்கள் சட்ட சிக்கலை சந்திப்பார்கள். விருப்ப திருமணங்கள் அதிகரிக்கும். மக்களுக்கு வெளிநாட்டு மோகம், அந்நிய கலாச்சாரம் மீது ஆர்வம் அதிகரிக்கும். பெற்றோர்கள் பிள்ளைகளை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்வது நல்லது. குரு என்றால் பணம், பொருளாதாரம், தங்கம், குழந்தை, யானை. சுப மங்கள நிகழ்வு.

    இத்தகைய குரு, ராகுவால் கிரகணப்படுத்தப் படுவதால் அனைவரும் விழிப்புடன் இருப்பது நல்லது.

    சுய ஜாதகமும் பிரம்மஹத்தி தோஷமும்

    ஜோதிட ரீதியாக ஒருவரது ஜாதகத்தில் குருவும், சனியும் இணைந்தாலோ, இந்த இரு கிரகங்களுக்கும், சாரப்பரிவர்த்தனை பெற்றாலோ, சமசப்தம பார்வை பெற்றாலோ பிரம்மஹத்தி தோஷம் உள்ளது என்று கூறலாம். 75சதவீதம் ஜாதகத்தில் குரு, சனி ஏதாவது ஒரு விதத்தில் சம்பந்தம் பெற்று இருக்கும். இந்த கிரக இணைவு ஜாதகருக்கு யோகமா, சாபமா என்பதை சுய ஜாதகத்தில் 1,5,9 பாவகங்கள் பெற்ற வலிமை, குரு, சனிக்கு அஷ்டம, பாதக ஸ்தானங்களுடன் உள்ள சம்பந்தம், ராகு, கேதுவுடன் உள்ள சம்பந்தத்தை வைத்தே முடிவு செய்ய வேண்டும்.

    மேலும் இந்த தோஷம் தசா புத்தி அந்தர நாதர்களுடனும், கோட்சாரத்துடனும் சம்பந்தம் பெறும் போதே வினைப்பயனை முழுவதும் அனுபவிக்கச் செய்கிறது. ஜோதிட உலகமே தோஷம் என்று கூறும் இந்த குரு, சனி சம்பந்தம் ஒரு சிலருக்கு பெரிய திருப்பு முனையை தந்திருக்கிறது என்பதும் மறுக்க முடியாத உண்மை. இந்த கிரக சம்பந்தம் கூரை வீட்டில் வாழ்ந்தவரை கூட குபேரனாக மாற்றியுள்ளது என்பதும் மறுக்க முடியாத உண்மை.

    பிரம்மஹத்தி தோஷத்தை சரி செய்ய பல்வேறு பரிகார தலங்களுக்கு சென்றும் பிரச்சனை தீரவில்லை என்று கூறுபவர்கள் தோஷத்தின் வலிமையை முடிவு செய்த பிறகு எந்த முறையில் தோஷத்தை சரி செய்வது என்பதை தீர்மானிக்க வேண்டும். முதலில் பிரம்மஹத்தி தோஷத்தால் பாதிக்கப்படுபவர்கள் கோட்சாரத்தில் பாக்கியஸ்தானம் வலுப்பெறும் காலத்தில் வழிபாடு, பரிகாரம் செய்தால் உடனே பலன் கிடைக்கும்.

    குரு, சனிக்கு செவ்வாய் சம்பந்தம் இருப்பவர்கள் நீண்ட நாள் வழிபாடும் பெரிய அளவில் செலவில்லாத முறையான அமாவாசை, சிவ வழிபாடு, வயதான ஏழை தம்பதிகளுக்கு உணவு , உடை கொடுத்து ஆசி பெறுதல் போன்ற எளிய பரிகாரங்களைச் செய்தாலே போதும். நல்ல பலன்கள் கிடைத்து மேன்மை அடைவார்கள்.

    குரு, சனிக்கு ராகு, கேது சம்பந்தம் அல்லது அஷ்டமாதிபதி, பாதகாதிபதி சம்பந்தம் இருப்பவர்கள் ராமர் வணங்கிய தேவிபட்டிணம், ராமேஸ்வரம், திருவிடைமருதூர், கொடுமுடி, ஸ்ரீ வாஞ்சியம், திருபுல்லாணி போன்ற பரிகார வழிபாட்டு தலங்களுக்கு சென்று தோஷ நிவர்த்தி செய்து பயன் பெறாலம்.

    Next Story
    ×