search icon
என் மலர்tooltip icon

    சிறப்புக் கட்டுரைகள்

    ஆன்மிக அமுதம்- சீர் மிகு சித்ரா பவுர்ணமி!
    X

    ஆன்மிக அமுதம்- சீர் மிகு சித்ரா பவுர்ணமி!

    • தைப் பொங்கலன்று சூரியனை வழிபடும் நாம் சித்ரா பவுர்ணமி அன்று சந்திரனை வழிபடுகிறோம்.
    • சித்திரகுப்தன் பிறந்த நன்னாளே சித்ரா பவுர்ணமி எனச் சிவ புராணம் தெரிவிக்கிறது.

    தைப் பொங்கலன்று சூரியனை வழிபடும் நாம் சித்ரா பவுர்ணமி அன்று சந்திரனை வழிபடுகிறோம்.

    எல்லா மாதத்தின் பவுர்ணமிகளும் சிறப்பானவைதான். என்றாலும் சித்திரை மாதப் பவுர்ணமி அதிகச் சிறப்பு வாய்ந்தது. சித்திரையின் முழுநிலவு மற்ற பவுர்ணமிகளில் தென்படும் முழுநிலவை விடக் கூடுதல் பிரகாசமுடையது.

    தமிழ்ப் புத்தாண்டில் முதன்முதலாக வரும் பவுர்ணமி என்பதாலும் இது அதிக மதிப்பைப் பெறுகிறது. வேப்பம் பூக்களும் மாம்பூக்களும் மலர்ந்து மணம்பரப்பும் நாள் இது. வசந்த காலத்தின் வருகைக்குக் கட்டியம் கூறும் நன்னாள்.

    சித்ரா பவுர்ணமி பழந்தமிழகத்தில் இந்திர விழாவாகக் கொண்டாடப்பட்டு வந்தது. சித்திரைத் திங்கள் முழுநிலவு நாளில் இந்திர விழா கொண்டாடப்பட்ட செய்தியைச் சிலப்பதிகாரமும் மணிமேகலையும் பேசுகின்றன.

    பார்வதி, கயிலாயத்தில் ஒருநாள் தங்கத் தட்டில் சித்திரம் தீட்டிக் கொண்டிருந்தாள். அன்று சித்ரா பவுர்ணமி.

    அருகே அமர்ந்து அவள் சித்திரம் தீட்டும் அழகை முக்கண்ணான சிவபெருமான் கண்குளிர ரசித்துக் கொண்டிருந்தார்.

    வானவில்லில் வர்ணம் குழைத்து, தன் மகன் முருகனின் வாகனமான மயிலின் பீலியையே தூரிகையாகக் கொண்டு, பார்வதி தீட்டிய அழகுச் சித்திரம் ஒரு குழந்தையின் ஓவியம்.

    தான் வரைந்த குழந்தையின் எழிலில் தன்னை மறந்த பார்வதியிடம், `உயிரோவியமாக உள்ள இக்குழந்தைக்கு உயிர் கொடுத்து விடுகிறேன்!' என்றார் சிவன்.

    அவர் அந்த ஓவியத்தை, `தங்கத் தட்டிலிருந்து எழுந்து வா!' என அழைத்ததும், என்ன ஆச்சரியம்!

    மூலப் பரம்பொருளான சிவனின் கட்டளைக்குக் கட்டுப்பட்டு, அந்த ஓவியக் குழந்தை உண்மைக் குழந்தையாக உருப்பெற்று தட்டிலிருந்து வெளியே வந்து நின்றது.

    மறுகணம் விறுவிறுவென வளர்ந்து ஒரு வாலிபனாக மாறியது.

    தன்னைச் சித்திரமாகத் தீட்டிய பார்வதியையும் தனக்கு உயிர்கொடுத்த சிவனையும் வணங்கினார் அந்த அழகிய வாலிபர்.

    `என் பெயர் என்ன? நான் எந்த நோக்கத்திற்காகப் படைக்கப் பட்டுள்ளேன்?` எனக் கேள்விகளை எழுப்பினார்.

    அவரைக் கனிவோடு பார்த்த சிவன் சொன்னார்:

    `இளைஞனே! நீ சித்திரை மாதப் பவுர்ணமியன்று தோன்றியதாலும் சித்திரத்தில் இருந்து உருவானதாலும் சித்திரகுப்தன் என அழைக்கப் படுவாய்!

    சித்திரம் தீட்டுபவர்களுக்கு உடலியல் கணக்குகள் ஆழ்மனத்தில் பதிந்திருக்க வேண்டும். அப்போதுதான் இரட்டை இரட்டையான விழிகள், கைகள், கால்கள் போன்ற உறுப்புகளையெல்லாம் ஒரே அளவில் மிகச் சரியாக வரைய முடியும்.

    அப்படிப்பட்ட அபாரமான கணித அறிவோடு பார்வதி உன்னைத் தீட்டியதால் உன்னிடமும் கணித அறிவு முழுமையாக இருக்கும்.

    எமதர்மன் கணக்கு வழக்குகளை கவனித்துக் கொள்ளக் கணித அறிவுடைய ஓர் உதவியாளன் வேண்டுமென நெடுநாளாக என்னிடம் விண்ணப்பித்துக் கொண்டிருக்கிறான். நீ அவனது உதவியாளனாகப் பணிசெய்வாயாக!

    மண்ணுலகில் பிறந்த ஜீவன்களின் பாவ புண்ணியக் கணக்குகளைப் பிழையேதுமில்லாமல் நீ குறிப்பேட்டில் பதிவு செய்வாயாக!'

    இவ்விதம் சிவபெருமானிடம் பணி நியமனம் பெற்ற சித்திரகுப்தன், சிவனிடமும் பார்வதியிடமும் ஆசிபெற்று எமதர்மராஜனிடம் உதவியாளனாகப் பணியில் சேர்ந்தார்.

    அந்தச் சித்திரகுப்தன் பிறந்த நன்னாளே சித்ரா பவுர்ணமி எனச் சிவ புராணம் தெரிவிக்கிறது.

    இன்னொரு கதையும் உண்டு. எமதர்மராஜன் ஓர் உதவியாளர் வேண்டுமென விண்ணப்பித்துக் கொண்டதும் சிவன் படைப்புக் கடவுளான பிரம்மனை அழைத்தார். எமனுக்குத் தகுந்த உதவியாளனைப் படைத்துக் கொடுக்குமாறு பணித்தார்.

    பிரம்மன் தனது நான்கு தலைகளாலும் யோசித்தார். காலை மாலை என உதய அஸ்தமன நேரங்களைக் கணக்கிட்டுத் தோன்றுபவர் சூரிய பகவான்தான். அவரே கணித அறிவுடைய குழந்தையைப் பெறத் தகுதி வாய்ந்தவர் என ஆராய்ந்து முடிவு செய்தார்.

    வானவில்லை நீளாதேவி என்ற பெயருடைய அழகிய பெண்ணாக மாற்றினார் பிரம்மன்.

    சூரியதேவன் நீளாதேவியை மணந்தார். சூரியனுக்கும் நீளாதேவிக்கும் சித்திரை மாதம் பவுர்ணமி தினத்தன்று மகனாக அவதரித்த குழந்தையே சித்திரகுப்தன். அவர் பிறந்த நன்னாளே சித்ரா பவுர்ணமி என்கிறது அந்தக் கதை. மூன்றாவதாக ஒரு கதையும் உண்டு. இந்திரனுக்கும் இந்திராணிக்கும் தங்களுக்கு ஒரு குழந்தையில்லையே என்ற குறை இருந்தது. சிவனைப் பிரார்த்தித்தார்கள் அவர்கள்.

    இந்திரன் அகலிகையிடம் பிறன்மனை நயந்த குற்றத்தைப் புரிந்ததால் அவனுக்கு நேரடியாகக் குழந்தையைக் கொடுக்க சிவனின் மனம் ஒப்பவில்லை. இந்திரன் அரண்மனையில் உள்ள பசுமாட்டின் கருப்பையில் சித்திரகுப்தனை உருவாக்கி அந்தப் பசுவின் குழந்தையாக அவனைப் பிறக்கச் செய்து அவனையே தன் குழந்தையாகக் கருதிக் கொள்ளுமாறு இந்திரனுக்கு உத்தரவிட்டார்.

    மிகவும் மகிழ்ந்த இந்திரனும் இந்திராணியும் சித்திரகுப்தனைப் பாசத்தோடு வளர்த்தனர். பின்னர் சித்திரகுப்தர் எமதர்மனின் உதவியாளரானார்.

    இந்த மூன்று கதைகளும் சொல்கிறபடி, சித்திரகுப்தன் என்ற பெயரில் உள்ள சித்திர என்ற சொல் சித்திரையில் பிறந்ததாலும் சித்திரத்திலிருந்து பிறந்ததாலும் ஏற்பட்டது என்பது சரி. ஆனால் `குப்த` என்ற சொல் எதைக் குறிக்கிறது?

    குப்தம் என்றால் மறைந்திருப்பது எனப் பொருள். அதாவது ரகசியமாக பிறர் அறியாமல் காப்பாற்றப்படுவது.

    சித்ரகுப்தன் ஒருவரின் பாவ புண்ணியக் கணக்கை மற்றவர் அறியாமல் ரகசியம் காக்கிறார். அதனால் அவர் பெயர் சித்ரகுப்தன் ஆயிற்று. சித்திரகுப்தன் வளர்ந்து வாலிபனாகி எமதர்ம ராஜனிடம் உதவியாளனாக வேலையில் சேர்ந்து தன் தந்தையான சூரிய பகவானிடம் அதன்பொருட்டு ஆசிபெற வந்தார்.

    சூரியதேவன் தன் மகன் பணியில் சிறப்படையுமாறு வாழ்த்தி, தன் ஆசியின் அடையாளமாக அவர் பணிக்கு உதவும் வகையில் கணக்குப் பேரேட்டுப் புத்தகம் ஒன்றை அளித்தார். அந்த விந்தையான புத்தகம் எவ்வளவு எழுதினாலும் தீராத பக்கங்களை உடையது!

    சித்ரகுப்தனுக்கு ஏராளமான ஒற்றர்கள் உண்டு. அவர்கள் சாமானியமானவர்கள் அல்லர். மனிதர்களின் உள்ளத்தில் ஓடும் எண்ணங்களைக் கூடக் கண்டறிய வல்லவர்கள். அவர்களின் உதவியோடு தொடர்ந்து பேரேட்டில் மனிதர்களின் பாவ புண்ணியக் கணக்கைப் பதிவு செய்து வருகிறார் சித்ரகுப்தன்.

    அந்தப் பாவ புண்ணியக் கணக்குகளே கர்ம வினையாக மாறி மனித வாழ்வின் இன்ப துன்பங்களை நிர்ணயிக்கின்றன. விதி என்கிறோமே, அந்த விதியைத் தீர்மானிப்பது சித்ரகுப்தனின் பேரேடுதான்.

    சித்திரகுப்தன் வலது காலை ஊன்றி இடது காலை மடித்து சுகாசன நிலையில் அமர்ந்திருப்பவர். அவர் இடது கையில் சுவடியும் வலது கையில் எழுத்தாணியும் இருக்கும்.

    அந்தச் சுவடிதான் கணக்குப் பேரேடு. என்றும் எழுதித் தீராத பக்கங்களை உடைய அந்தக் கணக்குப் பேரேட்டின் பெயர் `அக்கிர சந்தானி.'

    மயன் மகள் பிரபாவதியின் புதல்வியான நீலாவதி, விஸ்வகர்மாவின் புதல்வியான கர்ணகி என இரு மனைவியர் சித்ரகுப்தருக்கு உண்டு.

    சித்ரா பவுணர்மியன்று சித்திரகுப்தனை நோன்பிருந்து வழிபடும் வழக்கம் பண்டைத் தமிழகத்தில் இருந்தது. `சித்திரகுப்த நயினார் நோன்பு' என அது அழைக்கப்பட்டது.

    சித்திரகுப்தன் படத்தை வைத்து, அதன் முன்னிலையில் ஒரு நோட்டுப் புத்தகத்தையும் பேனாவையும் வைத்து சித்திரகுப்த புராணத்தை வாசிப்பதே இந்த நோன்பின் முக்கிய அம்சம்.

    இவ்விதம் சித்ராபவுர்ணமியன்று சித்திரகுப்தன் கதையைப் படித்தால் தெரிந்தோ தெரியாமலோ செய்த பாவங்களின் பலன் குறையும் என்றும் உடல் நலம் சிறப்படையும் என்றும் நம்பப்படுகிறது.

    முக்திபுரி என்ற கிராமத்தில் வாழ்ந்துவந்த கலாவதி, தோழியரோடு ஒருநாள் கானகத்தின் எழிலைக் காணச் சென்றாள். வனத்தின் நடுவில் ஓர் அழகிய கோயில் இருந்தது. அங்குள்ள தெய்வத்தை வழிபடலாம் என அங்கு சென்றாள். அவள் முற்பிறவியில் செய்த புண்ணியத்தின் பலனாக, அங்கே சில தேவ கன்னியர் பூஜை செய்துகொண்டிருக்கும் அரிய காட்சியை தரிசிக்கும் பேறுபெற்றாள். அவர்களில் ஒருத்தி சித்ரகுப்த புராணத்தை வாசிக்க மற்ற தேவ கன்னியர் பக்தியோடு கேட்டுக் கொண்டிருந்தனர்.

    பூஜை முடியும்வரை காத்திருந்த கலாவதி, தேவ கன்னியரை வணங்கி என்ன பூஜை இது எனப் பணிவுடன் விசாரித்தாள்.

    `பெண்ணே! சித்ராபவுர்ணமி அன்று விரதமிருந்து சித்திரகுப்தன் கதையைப் படித்து அவரை வழிபட்டால் பெண்களுக்கு எல்லா மங்கலங்களும் கிட்டும். ஆண்களுக்கு எடுத்த காரியம் அனைத்திலும் வெற்றி கிட்டும்!` எனச் சொன்ன தேவ கன்னியர் சித்ரகுப்த விரதமிருக்கும் முறையைக் கலாவதிக்கு விவரித்துப் பின் மறைந்தனர்.

    அன்றுதொட்டுக் கலாவதி ஆண்டுதோறும் சித்ரகுப்த நயினார் விரதத்தைக் கடைப்பிடிக்கத் தொடங்கினாள். அதன் பலனாக ஆகமபுரியின் மன்னனான வீரசேனனை மணக்கும் பாக்கியம் பெற்றாள். செல்வ வளத்தோடு கூடிய புகழ்மிக்க வாழ்வைப் பெற்றாள்.

    தான் பெற்ற மங்கலங்களை அனைவரும் பெற வேண்டும் என விரும்பிய அவள் சித்ரகுப்த விரதத்தை மக்களிடம் பிரசாரம் செய்தாள் என்கிறது ஒரு கதை.

    சித்திர குப்தருக்கு மிகச் சில இடங்களில் ஆலயங்கள் உண்டு. காஞ்சிபுரம் நெல்லுக்காரர் தெருவில் சித்திரகுப்த ஆலயம் ஒன்று அமைந்துள்ளது. திருப்பூர் சின்னாண்டி பாளையம் சாலையிலும் சித்திரகுப்தர் கோயில் காணப்படுகிறது. சித்திர குப்தர் கோயில்களில் சித்ராபவுர்ணமி விசேஷமாய்க் கொண்டாடப்படுகிறது.

    பொதுவாக பவுர்ணமியன்று திருவண்ணாமலையில் கிரிவலம் செய்வது சிறப்பு. அந்தப் பவுர்ணமி சித்ரா பவுர்ணமியாக அமைந்தால் அது இன்னும் சிறப்பு. சித்திரகுப்தன் தோன்றக் காரணமாக இருந்தவர் சிவபெருமான் அல்லவா? எனவேதான் திருவண்ணாமலையில் கிரிவலம் செய்து சிவன் வழிபடப் படுகிறார்.

    சித்ரகுப்தரைத் தோற்றுவித்தவள் பார்வதி. எனவே சித்ரா பவுர்ணமியன்று அம்பாளை வழிபடுவதும் மிகுந்த நன்மைகளைத் தரும்.

    சித்ரா பவுர்ணமியன்று சித்திரகுப்தரை வழிபட்டு நீண்ட ஆயுள், ஆரோக்கியம், மங்கலங்கள் அனைத்தையும் பெறுவோம்.

    தொடர்புக்கு-thiruppurkrishnan@gmail.com

    Next Story
    ×