என் மலர்
சிறப்புக் கட்டுரைகள்
ஆரோக்கியம் அளிக்கும் அஞ்சறைப்பெட்டி- புத்துணர்ச்சி தரும் 'புதினா '
- சீனர்கள் புதினாவை காய்ச்சல், சளி, மூக்கடைப்பு, தொண்டைப் பிரச்சினைகள் மற்றும் நரம்புக் கோளாறுகளுக்கு சிகிச்சையளிக்க பயன்படுத்தி வருகின்றனர்.
- புதினா நறுமண எண்ணையில் உள்ள 'மென்தால்' எனும் வேதிப்பொருள் அதன் மருத்துவக் குணத்திற்கு காரணமாக உள்ளது.
புதினா என்றதுமே நம் நினைவுக்கு வருவது புத்துணர்ச்சி தான். காலையில் தேநீர் முதல் இரவு சட்டினி வரை அதிகம் பயன்படுத்தும் பசுமையான அஞ்சறைப்பெட்டி கடைச்சரக்குகளுள் ஒன்று 'புதினா'. எலுமிச்சையும், புதினாவும் சேர்ந்த தேநீருக்கு நல்ல மணம் மட்டுமல்லாது, மருத்துவ குணமும் ஏராளம் என்பது நாம் அறிந்ததே.
அதே போல் புழுங்கல் அரிசி நொய் கஞ்சியுடன், புதினா துவையல் சேர்த்து கொடுத்தால் நோயால் நலிவுற்றவர்களுக்கு நிச்சயம் அமிர்தம் தான். இவ்வாறு தமிழர்களின் உணவுக் கலையில் ஆரவாரமின்றி அதிகம் பயன்படுத்தப்படும் மூலிகை கடைசரக்குகளுள் கொத்துமல்லி, கறிவேப்பிலைக்கு அடுத்து தனி இடம் புதினாவுக்கும் உண்டு.
நல்ல மணமும், பல்வேறு மருத்துவ குணங்களையும் கொண்ட புதினா இலையானது சீரண மண்டலம் சார்ந்த பல்வேறு வியாதிகளை நீக்கும் தன்மையை உடையது. வாந்தி, வாய்குமட்டல், அசீரணம், மந்தம் ஆகிய பல்வேறு நோய்நிலைகளுக்கு பாட்டி வைத்தியமாக பயன்படுத்தப்படும் அஞ்சறைப்பெட்டி கடைச்சரக்குகள் வரிசையில் சீரகம், ஓமம், சோம்பு சேர்ந்த பட்டியலில் புதினாவும் ஒன்று.
காய்ந்த புதினா இலைகள் பண்டைய எகிப்திய பிரமிடுகளில் காணப்படுவதாக வரலாற்று நூல்கள் குறிப்பிடுகின்றன. அதே போல், பண்டைய காலத்தில் வரி செலுத்துவதற்கு மாற்றுப்பொருளாக புதினா பயன்படுத்தப்பட்டதாகவும் குறிப்புகள் உள்ளன.
இவ்வாறாக பல்வேறு நாடுகளில் புதினா, பாரம்பரியமாக பயன்படுத்தப்பட்டு வந்துள்ளது. சீனர்கள் புதினாவை காய்ச்சல், சளி, மூக்கடைப்பு, தொண்டைப் பிரச்சினைகள் மற்றும் நரம்புக் கோளாறுகளுக்கு சிகிச்சையளிக்க பயன்படுத்தி வருகின்றனர். தலைவலி மற்றும் சளிக்கு மருந்தாகவும் சில நாடுகளில் புதினா பயன்படுத்தப்படுகிறது.
நியூசிலாந்து நாட்டில் சளி, காய்ச்சல், தலைவலி, வயிற்றுவலி, வாயுத்தொல்லை மற்றும் வாய்குமட்டலுக்கு சிகிச்சையளிக்க பாரம்பரியமாக புதினா பயன்படுத்தப்படுகிறது. அரேபிய நாட்டில் தோல் நோய்க்கு புதினாவை பயன்படுத்துவது குறிப்பிடத்தக்கது. புதினா வயிற்றுக்கு மட்டுமல்லாது, மனதுக்கும் நன்மை பயக்கும் மாமருந்து என்கின்றது பல்வேறு நாடுகளின் பாரம்பரிய மருத்துவ முறைகள். புதினா சிறந்த ஊட்டச்சத்தை அளிக்கும் உடல் தேற்றி (டானிக்) என்றும் குறிப்புகள் தெரிவிக்கின்றன.
புதினா ஆரோக்கியத்திற்கு அடிப்படையான ஆறு சுவைகளில் கார்ப்பு சுவையும், துவர்ப்பு சுவையும் கொண்ட மூலிகை என்று சித்த மருத்துவம் கூறுகின்றது. புதினாவின் சிறப்பு என்னவெனில் குளிர்ச்சித் தன்மை, வெப்பத் தன்மை ஆகிய இரண்டையும் கொண்ட அஞ்சறைப்பெட்டி சரக்காக உள்ளது. எனவே, மணமுள்ள புதினா இலையானது சித்த மருத்துவ நோய்க்கூறுகளான வாதம், பித்தம், கபம் ஆகிய மூன்றையும் சீர்செய்யும் சிறப்புத்தன்மையை பெற்றுள்ளது. இருப்பினும் முதன்மையாக பித்தத்தைக் குறைப்பதாக உள்ளது.
புதினா இலைகள் குர்செடின், தைமால் மற்றும் யூஜெனால் போன்ற ஆயிரக்கணக்கான மருத்துவ குணங்களை அள்ளித்தரும் இயற்கை நிறமிச்சத்துக்களின் கலவையாக உள்ளது. இலைகள் 40முதல் 50 சதவீதம் அளவுக்கு 'மென்தால்' எனும் நறுமண வேதிப்பொருளைக் கொண்டுள்ளது.
புதினா இலையில் மருத்துவ குணமளிக்கும் வேதிப்பொருட்கள் மட்டுமல்லாது, உடல் தேற்றும் சத்துக்களான வைட்டமின் ஏ, வைட்டமின் சி, வைட்டமின் பி-காம்ப்ளக்ஸ், இரும்புச் சத்து, கால்சியம், பாஸ்பரஸ், பொட்டாசியம் ஆகிய தாது உப்புக்களும் நிறைந்துள்ளன. ஆகையால் இது ஆரோக்கியமான சருமத்தை மேம்படுத்தி, உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதாகவும் உள்ளது.
புதினா இலைகளில் இருந்து பிரித்தெடுக்கப்படும் 'பெப்பர்மின்ட் தைலம்' எனும் 'புதினா எண்ணெய்' உலக அளவில் பல்வேறு ஆராய்ச்சிகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளது. இது வயிற்றுவலி, அசீரணம் போன்ற குடல் சார்ந்த நோய்நிலைகளில் நல்ல பலனைத் தரக்கூடியது.
புதினா நறுமண எண்ணையில் உள்ள 'மென்தால்' எனும் வேதிப்பொருள் அதன் மருத்துவக் குணத்திற்கு காரணமாக உள்ளது. பெரும்பாலான தலைவலி தைலங்களில் மென்தால் சேருவது குறிப்பிடத்தக்கது. இதனை முகர்ந்தாலே மன அழுத்தத்தையும், மன பதட்டத்தையும் போக்குவதாக உள்ளதை கொரியா நாட்டில் செவிலியர் கல்லூரி மாணவர்களைக் கொண்டு நடைபெற்ற ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன. அதே போல அறுவை சிகிச்சைகளுக்குப் பின்னர் உண்டாகும் வாய்குமட்டலைப் போக்குவதிலும் 'பெப்பர்மின்ட் தைலம்' எனும் 'புதினா எண்ணெய்' சிறப்பாக செயல்படுவதாக ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.
புதினாவை தேநீராக்கி பருகுவது பல்வேறு நோய்நிலைகளில் பலனளிப்பதாக உள்ளதை ஆய்வுகள் சுட்டிக்காட்டுகின்றன. புதினா இலைகளை தேயிலை தூளுடன் சேர்த்தோ அல்லது தனியாகவோ பயன்படுத்துவது நல்லது. இது பெரும்பாலும் வயிற்றுக் கோளாறுகளை சரிசெய்யவும், செரிமானத்தை தூண்டவும் பயன்படுத்தப்படுகிறது.
புதினா இலைகள் வாயில் உள்ள உமிழ்நீர் சுரப்பிகளை தூண்டி செரிமானத்தை அதிகரிக்க செய்வதாக உள்ளன. இயற்கையாக பசியைத் தூண்டும் தன்மையும் இதற்குண்டு. இது செரிமான நொதிகளின் சுரப்பைத் தூண்டுவதன் மூலம் செரிமானத்தை ஊக்குவிக்கிறது. வாய் துர்நாற்றத்தை போக்குவதிலும் புதினா சிறந்தது. அதற்கு காரணமாகும் கிருமிகளை கொல்வதும் புதினா இலையின் சிறப்பு.
நவீன வாழ்வியலில் சிக்குண்டு தூக்க மின்மை நோய்க்கு ஆளானவர்களுக்கு புதினா மிகப்பெரிய வரப்பிரசாதம். புதினா தேநீர் மன அழுத்தத்தைப் போக்கவும், இயல்பான தூக்கத்திற்கு உதவவும் பயன்படுவதாக ஆய்வுகள் கூறுகின்றன. குறிப்பாக ஒற்றைத் தலைவலி, தலைவலி மற்றும் வயிற்று உபாதைகள் போன்ற அறிகுறிகளைப் போக்கப் பயன்படுவதாக உள்ளது. மாதவிடாய் வலி மற்றும் தசைப்பிடிப்பு உள்ளிட்ட பல நிலைகளில் புதினா தேநீர் நன்மைகளை தரும்.
இன்றைய நவீன வாழ்வியலில் துரித உணவுகளை நாடும் பலருக்கும் பித்தப்பை சார்ந்த பிரச்சினைகள் பொதுவானதாகிவிட்டது. முக்கியமாக பித்தப்பையில் கொழுப்பு சேர்வதன் மூலம் கற்கள் உருவாவது அதிகமாகிவிட்டது. பாரம்பரிய உணவு முறைகளை மறந்து, துரித உணவுகள் மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுகளை நாடுவதன் விளைவு தான் இது போன்ற நோய்நிலைக்கு காரணம். புதினா இலை எண்ணை பித்தப்பைக் கற்களை குறைப்பதாக உள்ளதை ஆய்வுகள் கூறுகின்றன.
தினசரி புதினாவை உணவில் சேர்த்துக் கொள்வது கல்லீரலுக்கும், பித்தப்பைக்கும் நன்மை பயக்கும். உடலில் பித்த அமிலம் மற்றும் பித்தப்பையில் லெசித்தின் அளவை அதிகரிப்பதன் மூலம் கொழுப்பின் அளவைக் குறைத்து கற்களை கரைக்க வல்லது என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
ஐபிஎஸ் எனும் குடல் அரிப்பு நோய்க்கும் புதினா எண்ணை பலன் தருவதை ஆய்வுகள் ஒப்புக்கொள்கின்றன. குடல் அரிப்பு நோய் இன்றைய வாழ்வியலில் மிகச்சவாலான ஒரு நோய்நிலையாக உள்ளது. நெதர்லாந்து நாட்டில் நடைபெற்ற ஆய்வு ஒன்றில், குடல் அரிப்பு நோயின் குறிகுணங்களான வயிற்று வலி போன்ற வயிறு சார்ந்த குறிகுணங்களும், நோயின் தீவிர தன்மையும் எட்டு வாரங்களில் குறைவதாக உள்ளது. புதினாவின் மருத்துவ பலன்களை அடைய தினசரி ஒன்று முதல் இரண்டு தேக்கரண்டி அளவு இலைகளை எடுத்துக்கொள்வது நன்மை பயக்கும்.
சுர நோயிலும், சுரத்திற்கு பின்னரும் உண்டாகும் வாந்தி, சுவையின்மை, பசி மந்தம் ஆகியவற்றை நீக்கும் தன்மை புதினாவுக்கு உண்டு. புதினா குடல் புழுக்களைக் கொல்லும் தன்மை வாய்ந்ததாகவும் உள்ளது. புதினாவிற்கு வலியை போக்கும் தன்மை உண்டு. புதினா எண்ணை வெறும் 30 நொடிகளில் குடல் இசிவைக் குறைப்பதாக ஆய்வுகள் கூறுகின்றன.
புதினா கிருமிகளைக் கொல்லும் தன்மை உடையது என்பதால் பல்லீறு சார்ந்த நோய்நிலைகளிலும், வாய் கொப்பளிக்கும் திரவங்களிலும் பயன்படுத்தப்படுகிறது. மேலும், இது பற்கள் கறை படிவதை தடுக்கும் படியாகவும் உள்ளது.
சமீபத்தில் புதினாவில் உள்ள பீனாலிக் வேதிப்பொருட்களான கபீயிக் அமிலம், யூஜெனால், ரோஸ்மரினிக் அமிலம், ஆல்பா டோகோபெரால் ஆகியவை புற்றுநோயில் ஏற்படும் மரபணு (டிஎன்ஏ) பாதிப்பை சரிசெய்வதாக ஆராயப்பட்டுள்ளது. ஆக, உணவில் அடிக்கடி சேர்க்கும் புதினா தொற்றா நோய்களில் மிகச்சவாலாக உள்ள புற்றுநோய் வரவொட்டாமல் தடுக்கும் என்பது இதில் வெளிப்படை.
அடிக்கடி உண்டாகும் சளி, இருமலைக் குறைக்க புதினா இலைகளுடன் திரிகடுகம் எனும் சுக்கு, மிளகு, திப்பிலி சேர்த்து கசாயமிட்டு குடிக்க சளியைக் கரைத்து வெளிப்படுத்தி இருமலைக் குறைக்கும். நிம்மதியான சுவாசத்திற்கு வழிவகுக்கும்.
புதினா இலைகளை கசாயமிட்டுக் கொடுக்க பெண்களுக்கு மாதவிடாயின் முன்னர் ஏற்படும் அடிவயிற்று வலியை போக்கி, மாதவிடாயை தூண்டிவிடும். அதற்கு, புதினா இலைகளுடன் சீரகம், சோம்பு சேர்த்து நீரில் கொதிக்க வைத்து எடுத்துக்கொள்ள நற்பலன் தரும். புதினா இலைகள், பெண்களின் ஈஸ்ட்ரோஜென் ஹார்மோன் சுரப்பு குறைவினால் உண்டாகும் 'ஆஸ்டியோபோரோசிஸ்' எனும் எலும்பு தேய்மான நிலையை வரவிடாமல் தடுப்பதாக உள்ளதை எலிகளில் நடத்திய சோதனை முடிவுகள் கூறுகின்றன.
சைனுசைட்டிஸ் நோய் நிலையில் உண்டாகும் மூக்கடைப்புக்கு புதினா எண்ணை நல்ல பலன் தருவதாக உள்ளது. மூக்கடைப்பு நீங்குவதோடு தலைவலி, மூக்கு மணமறியாமை ஆகிய குறிகுணங்கள் நீங்குவதாகவும் முதல் நிலை ஆய்வுகள் கூறுகின்றன. மேலும் புதினாவில் உள்ள வேதிப்பொருட்கள் உடலில் ஒவ்வாமையை உண்டாக்கும் நொதிகளை தடுப்பதன் மூலம் ஒவ்வாமையை நீக்குவதாக ஜப்பான் நாட்டு ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர்.
புதினா இலையுடன் அசீரணத்தை தீர்க்கும் பிற கடைசரக்குகளான கொத்துமல்லி, கறிவேப்பிலை, உளுத்தம்பருப்பு, புளி, இஞ்சி, மிளகு, உப்பு சேர்த்து துவையலாக்கி உணவில் சேர்த்துக்கொள்வது பசியின்மையை விலக்கி, செரிமானத்தைத் தூண்டும்.
சந்தைகளில் விற்பனையில் உள்ள வாய்க்கு புத்துணர்ச்சி தரும் பல்வேறு சவைக்கும் (மெல்லும்) பிசின்களில் புதினா சேர்க்கப்படுகிறது. உண்மையில் வாய்க்கு மட்டுமல்லாது, ஒட்டுமொத்த உடலின் ஆரோக்கியத்திற்கே புதினா புத்துணர்ச்சி தரக்கூடியது. இதனை உணர்ந்து சித்த மருத்துவ அஞ்சறைப்பெட்டிச்சரக்கான புதினாவை நாம் உணவில் அதிகம் பயன்படுத்த துவங்கினால், நலம் நிச்சயம் நம் கைகூடும்.
தொடர்புக்கு:drthillai.mdsiddha@gmail.com