search icon
என் மலர்tooltip icon

    சிறப்புக் கட்டுரைகள்

    சர்வமும் சக்தி மயம்- குழந்தையாக வந்து அருள்புரிந்த அன்னை
    X

    சர்வமும் சக்தி மயம்- குழந்தையாக வந்து அருள்புரிந்த அன்னை

    • சகோதர உறவின் சிறப்பைப் புலப்படுத்தும் வகையில், திருமாலின் திருத்தங்கச்சியும் ஆகிறாள்.
    • அம்பிகையோ, செல்வ மகனுடைய கைவிரலைப் பற்றிக் கொண்டிருக்கிறாள்.

    ஒரு தாயானவள், தன்னுடைய குழந்தை நடை பழகித் தத்தி வரும்போது, அக்குழந்தைக்கு விளையாட்டுத் தோழியாகிறாள்; கண்ணாமூச்சி செய்து களிப்பூட்டுகிறாள். குழந்தைக்குக் கல்வி தரும் ஆசானாகிறாள். குழந்தைக்கும் தந்தைக்கும் இடையே பாலமாகிறாள். சமுதாய அரங்கில், குழந்தையை நிற்கவைக்கும் பீடமாகிறாள்.

    ஜகன்மாதாவான அம்பிகையும் ஜீவன்களுக்காகப் பற்பல நிலைகளை மேற்கொள்கிறாள். வெவ்வேறு உறவுகளில் காட்சி தருகிறாள். பர்வதராஜனான ஹிமவானுக்குப் பார்வதியாகவும் பிரஜாபதியான தட்சனுக்கு தாட்சாயணியாகவும் திருவவதாரம் செய்தபோது, இவள் சின்னஞ்சிறு குழவி வடிவம் கொண்டாள். காத்யாய மகரிஷிக்கும், சாட்சாத் அம்பிகையை மகவாகப் பெறவேண்டும் என்கிற ஆசை இருந்தது. அதனைப் பூர்த்தி செய்வதற்காகப் பச்சிளங்குழவியாகத் தோன்றி வளர்ந்தாள். தட்சப் பிரஜாபதியின் விருப்பமோ சற்று வித்தியாசமாக இருந்தது. அம்பாள் தனக்கு மகளாகவேண்டும் என்கிற நேரடி விருப்பத்தைவிடவும், சிவபெருமான் தனக்கு மாப்பிளையாகவேண்டும் என்பதுதான் அவனுடைய ஆசை. அதற்காக அம்பாள் இணங்கினாள்.

    இப்படிக் குழந்தை வடிவம் கொண்டவள், குமரி வடிவம் தாங்கி, கன்னியாகுமரி திருத்தலத்தில், இறைவனை நோக்கித் தவம் செய்கிறாள். மதுரையில் மீனாட்சியாகி, சுந்தரேச்வரப் பெருமானுடைய மனைவியாகப் பெருமிதம் கொள்கிறாள். சகோதர உறவின் சிறப்பைப் புலப்படுத்தும் வகையில், திருமாலின் திருத்தங்கச்சியும் ஆகிறாள்.

    விருத்தாசலம் என்னும் தலத்தில், அம்பாளின் அருள்காட்சி அழகானது; அங்கு, இவள் பாலாம்பிகையாகவும் (வயது குறைந்தவள்) ஒளிர்கிறாள்; விருத்தாம்பி கையாகவும் (வயது முதிர்ந்தவள்) மிளிர்கிறாள்.

    எந்த வடிவம் எடுத்தாலும், அம்பிகையின் உள்ளமெல்லாம் குழந்தைகள் பக்கம் தான் என்பதை விளக்குவதாகவே, திருவாரூரில் இவள் நீலோற்ப லாம்பிகை வடிவம் கொள்கிறாள். தனிச் சந்நிதியில் நின்ற திருக்கோலத்தில் அருள் வழங்கும் அம்பிகையின் வலது திருக்கரத்தில் நீலோற்பல மலர் காணப்படுகிறது. அம்பிகையின் அருகில் நிற்கும் சேடிப்பெண், அம்பிகையின் இளைய மகனான முருகனைத் தன்னுடைய தோளில் இருத்திக் கொண்டிருக்கிறாள். அம்பிகையோ, செல்வ மகனுடைய கைவிரலைப் பற்றிக் கொண்டிருக்கிறாள். தெய்வமானாலும் தாய், தாய்தானே! அதுசரி, முருகனுக்கும், வேண்டுமானால் பிள்ளையாருக்கும்தாம் இப்படிப்பட்ட கரிசனமா என்ன? இல்லையே. . . அம்பாளைப் பொறுத்தவரை, இவளுடைய இந்தக் கரிசனம், ஜீவன்கள் எல்லோருக்கும் (எல்லாவற்றுக்கும்) உண்டு.


    சுதா சேஷய்யன்

    அம்பாளை வெவ்வேறு உறவு நிலையில் மாத்திரமல்ல, வெவ்வேறு வயதினளாகவும் வணங்குகிற வழக்கம் உண்டு. காசியில் சின்னஞ்சிறு குழந்தை, காஞ்சிபுரத்தில் சற்றே வளர்ந்த சிறுமி, நாகப்பட்டினத்தில் பருவமங்கை, திருவாரூரில் பக்குவப்பட்ட இள வயதுக்காரி, மதுரையில் ஆட்சி நடத்தும் சக்கரவர்த்தினி என்பதாக இம்முறை அமையும். நவராத்திரி காலங்களில் இதை பார்க்கலாம்.சின்னஞ்சிறு குழந்தையை பாலையாக அமரச் செய்து வழிபடுவார்கள்; இன்னொரு பக்கம், சுமங்கலிப் பெண்களை உட்காரச் செய்து போற்றுவார்கள். பாதத்தூளிகா பூஜை என்றே ஒன்றுண்டு. பௌர்ணமி நாளில், சுமங்கலிப் பெண்ணைப் பூஜைக்கு அழைக்கவேண்டும். அப்போது, அவள் வரும் வழியில், நதி மணலைக் கொட்டி, அதன்மீது அவளை நடக்கச் செய்யவேண்டும். பின்னர், அதையே அம்பாளின் பாதத் தூளியாகக் கருதி, பெட்டியில் சேகரித்து பத்திரப்படுத்தி, நாள்தோறும் பூஜிக்கவேண்டும்.

    அம்பாளின் பாதத்தூளிக்கு இத்தனை மதிப்பா? ஆம். எவ்வளவு மதிப்பென்பதை ஆதிசங்கரர் கூறுகிறார்:

    தநீயாம்சம் பாம்சம் தவ சரண பங்கேருஹ பவம்

    விரிஞ்சி: சஞ்சின்வன் விரசயதி லோகான் அவிகலம்

    வஹதி ஏனம் சவுரி: கதம் அபி சஹச்ரேண சிரசாம்

    ஹர: சம்சூத்ய ஏனம் பஜதி பசித உத்தூளன விதிம்

    (சவுந்தர்யலஹரி – சுலோகம் – 02)

    'உன்னுடைய திருவடித் தாமரைகளின் அதிநூதனமான தூளிகையை சம்பாதித்துக் கொண்டு, விரிஞ்சியான பிரம்மா, உலகங்களை எல்லாம் தடங்கலின்றி சிருஷ்டி செய்கிறார்.

    ஆயிரம் தலைகளைக் கொண்ட ஆதிசேஷனின் தலைவரான திருமால், அப்பாதத்தூளியால் இவ்வுல கங்களைக் காப்பாற்றுகிறார். (அழிக்கும் கடவுளான) ருத்திரனோ, பாதத் தூளியையே திருநீறாக உடல் முழுவதும் பூசிக் கொள்கிறார்.'

    படைப்புக் கடவுளான பிரம்மாவும் காக்கும் கடவுளான திருமாலும் அழிக்கும் கடவுளான ருத்திரனும், தத்தம் தொழில்களை அம்பாளின் பாதத்தூளியைப் பெற்றுக் கொண்டே செய்கிறார்கள் என்பதுதான் இதன் கருத்து.பாதத்தூளி கிட்டியதால், பிரம்மாவால் படைப்புத் தொழிலைப் பதற்றமில்லாமல் செய்ய முடிகிறது. ஆயிரம் தலைகள் கொண்ட ஆதிசேஷனே இருந்தாலும், பூலோகத்தையும் அதன் எடையையும் தாங்கிக்கொள்வதும், பராமரிப்பதும் அத்தனை சுலபமில்லை; ஆனால், அம்பாள் கால்தூசின் மகிமையால், அதுவும் எளிதாகிறது. இந்த உண்மைகளை உணர்ந்துகொண்டுவிட்ட சம்ஹாரக் கடவுளான சங்கரர், முன்னெச்சரிக்கையாகப் பாதத்தூளியையே திருநீறாக எடுத்து உடல்முழுவதும் பூசிக்கொண்டு தன் பணியைத் தொடங்குகிறார். அவள் கால்தூசுக்கே இத்தனை மகிமையென்றால், இவளின் திருவடிகளைப் பற்றிக்கொண்டால் எவ்வளவு பெருமை!

    இப்படியெல்லாம் விதவிதமாக அம்பாளை வழிபடமுடியுமா? இலக்கியத்திலும் புராணத்திலும் சொல்லியிருக்கிற இவற்றை, நாம் செயல்படுத்தமுடியுமா? சாத்தியமா? அம்மாவிடத்தில் எல்லாம் சாத்தியம்.

    அது 17-ம் நூற்றாண்டு மதுரை. திருமலை நாயக்க மன்னரின் ஆட்சிக் காலம். மீனாட்சியம்மன் ஆலயத்தில், அம்மன் சந்நிதிக்கு முன்பாக முகமண்டபம் ஒன்றுண்டு (இப்போதும் உள்ளது). மீனாட்சி – சொக்கேசரைத் தொழுவதற்காகவும் மன்னரைச் சந்திப்பதற்காகவும் மதுரைக்கு வந்த குமரகுருபரரின் புலமையை மன்னர் வியந்து பாராட்டினார். அம்பாள் மீது பாடல்கள் பாடும்படி வேண்டினார். மீனாட்சியம்மையையே குழந்தையாக பாவித்து, பிள்ளைத் தமிழ் பாடல்களை இயற்றிய குமரகு ருபரர், அப்பாடல்களை முகமண்டபத்தில், மன்னர் முன்னிலையில் அரங்கேற்றினார்.

    பெண் குழந்தை வளரும் போது, அந்த வளர்ச்சியின் பருவங்களைப் பத்தாகப் பகுத்து, ஒவ்வொரு பகுப்புக்கும் பத்துப் பத்துப் பாடல்கள் பாடினார். இதில், ஆறாவது பருவம், வருகைப் பருவம் என்பதாகும்; ஒரு வயதுப் பெண் குழந்தை, தளர் நடையிட்டு நடக்கிற பருவம்; ஆடியாடி நடந்துவரும் குழந்தையை 'வா,வா' என்று அழைத்து விளையாடும் நிலை. இந்தப் பருவத்தின் ஒன்பதாவது பாடல்:

    தொடுக்கும் கடவுள் பழம்பாடல் தொடையின் பயனே நறைபழுத்த

    துறைத் தீந்தமிழின் ஒழுகு நறுஞ்சுவையே அகந்தைக் கிழங்கை அகழ்ந்து

    எடுக்கும் தொழும்பர் உளக்கோயிற்கு ஏற்றும் விளக்கே வளர்சிமய

    இமயப் பொறுப்பில் விளையாடும் இளமென் பிடியே எறிதரங்கம்

    உடுக்கும் புவனம் கடந்துநின்ற ஒருவன் திருவுள்ளத்தில் அழகு

    ஒழக எழுதிப் பார்த்திருக்கும் உயிரோவியமே மதுகரம் வாய்

    மடுக்கும் குழல் காடேந்தும் இளவஞ்சிக் கொடியே வருகவே

    மலயத்துவசன் பெற்ற பெருவாழ்வே வருக வருகவே– இந்தப் பாடலைக் குமரகுருபரர் பாடிக்கொண்டிருந்தபோது, கோவில் அர்ச்சகருடைய மகளான சின்னஞ்சிறுமி, தளர்நடையிட்டு வந்தாள். பிஞ்சுப் பாதங்களைப் பதித்து மன்னரின் ஆசனத்தில் ஏறினாள். மன்னருடைய மடியில் அமர்ந்தாள். மன்னர் கழுத்திலிருந்த மணிவடத்தைக் கழற்றினாள். இறங்கி ஓடிவந்து எதிரில் இருந்த குமரகுருபரருடைய கழுத்தில் போட்டாள் குழந்தையின் சூட்டிகையைக் கண்டு குழுமியிருந்தோ ரெல்லாம் வியந்துகொண்டிருக்கும்போதே. . . . . பட்டுப் பாவாடை அணிந்திருந்த அந்தச் சிறுமி மறைந்து போனாள். மறைந்து போனாளா. . . . ? ஆமாம், மறைந்து போனாள்.

    அப்படியானால். . . . . ? அம்பிகை மீனாட்சியே அர்ச்சகர் மகளாக வேடம் தாங்கிவந்து, தனக்கான பாடலைத் தானே கேட்டுச் சுவைத்துப் பரிசும் கொடுத்தாள்! வாக்குக்கும் சொல்லுக்கும் அப்பாற்பட்ட இவளை, சொல்லால் வர்ணித்து, பிள்ளையாய் விவரித்து, குழந்தை வடிவில் கூப்பிட்டவுடன், அதற்கேற்பக் குழந்தையாகி. . . . வந்தேவிட்டாள்.

    உறவுகளின் பந்தங்களால் ஏற்படுவதே சம்சாரம். அத்தகைய சம்சாரத்தில் இருந்தும் பந்தங்களிலிருந்தும் நம்மை விடுவிப்பதற்காகத் தன்னையே உறவாக்கித் தருகிறாள் லோகமாதா. அம்மன், அம்பிகை, ஆத்தாள், தாயார் போன்ற திருநாமங்கள், இவளே ஜகன்மாதா என்பதை உணர்த்தினாலும், எல்லாவகையான பிற உறவுகளாகவும், உறவுகளுக்கு அப்பாற்பட்ட பேரரசியாகவும் இவளே இலங்குகிறாள்.

    தொடர்புக்கு:- sesh2525@gmail.com

    Next Story
    ×