என் மலர்
சிறப்புக் கட்டுரைகள்

சர்வமும் சக்தி மயம்- பகவதித் தாயும் பலவகைக் கோலமும்

- மேற்குக் கடற்கரைப் பகுதிகளில்தாம் பகவதியம்மன் ஆலயங்கள் அதிகம்.
- மகாதேவர் ஆலயத்தின் ஒரு பகுதியாக அம்பாளின் சந்நிதி இருக்கிறது.
அம்பாளை எப்படியெல்லாம் அழைக்கலாம்? அவரவர்க்கு எப்படியெல்லாம் அழைக்கத் தோன்றுகிறதோ அப்படியெல்லாம் அழைக்கலாம்.
'அம்மா' என்றழைக்கும் வகையில், 'பகவதி' என்றும் அழைக்கலாம். அண்டபகிரண்டத்தின் அதிபதியான பரம்பொருளை, அன்புடனும் மென்மையுடனும் தாயாகக் கண்டு வழிபடுவதே பகவதி வணக்கம். எல்லாக் குழந்தைகளும் அம்மாவிடத்தில் ஒரே மாதிரி இருப்பதில்லை. ஒரே அம்மாவின் வெவ்வேறு பிள்ளைகள், ஒவ்வொருவர் ஒவ்வொரு விதமாக இருப்பார்கள். அம்மாவும் ஒவ்வொருவரிடமும், அவரவர்க்கு ஏற்றாற்போல் இருப்பாள்.
அம்மா-பிள்ளை உறவு என்பதாலோ என்னமோ, பூமியில் திருவடிவம் கொண்டு எழுந்தருள்கிற பகவதியம்மன், கருணை காட்டுவதற்கான காரணங்களும் சம்பவங்களும் வேறுபடுகின்றன.
மேற்குக் கடற்கரைப் பகுதிகளில்தாம் பகவதியம்மன் ஆலயங்கள் அதிகம்.
கொடுங்காளூர் பகவதியம்மன் கோயில், வெகு பிரபலமானது. முற்காலத்தில், இப்போதைய கேரளம், அந்நாளைய சேரநாடாக இருந்தபோது, திரு அஞ்சைக்களம் என்னும் ஊர், சேரர்களின் தலைநகரமாகத் திகழ்ந்தது. இந்த ஊர், இப்போது கொடுங்காளூரின் புறநகர்ப் பகுதியாக இருக்கிறது. இங்கேதான், சிலப்பதிகாரக் கண்ணகிக்குச் சேரன் செங்குட்டுவ மாமன்னர் கோயில் எழுப்பினார். கற்புடைநாயகி கண்ணகியே, இப்போது பகவதியம்மனாக வழிபடப்படுகிறாள் என்பது மக்களின் நம்பிக்கை.
துர்கையின் வடிவமாகவும் கொடுங்காளூர் பகவதி பார்க்கப்படுகிறாள். தாருகன் என்னும் அசுரன், பலவிதமான வரங்களை வாங்கிக்கொண்டு, அனைவரையும் ஆட்டிப் படைத்துக் கொண்டிருந்தான். யாராலும் தன்னை அழிக்கமுடியாது என்றும் வரம் வாங்கி இருந்தான். பிராம்மி, வைஷ்ணவி, மாஹேச்வரி, கவுமாரி வாராகி, இந்திராணி ஆகியோரால் தாருகனை அழிக்கமுடியாத நிலையில், அனைத்து வடிவங்களின் சக்தியும் ஒருங்கிணைந்தவளான துர்கை, அவனை அழித்தாள். இங்கு பகவதியாகவும் கோயில் கொண்டாள்.
சிவன் கோயில் பிரதானமாகத் திகழ, ஒரு பக்கம் விநாயகரும் சப்த கன்னியரும் எழுந்தருளியிருக்க, நடுவில் அருள்மிகு பகவதியம்மன் எழுந்தருளி இருக்கிறாள். வடக்கு நோக்கிய கருவறையில் ஏழடி உயரத்தில், எட்டுத் திருக்கரங்களுடன் பகவதியம்மா காட்சி தருகிறாள். பலா மரத்திலிருந்து உருவாக்கப்பட்டிருக்கும் இவளது திருமேனி, எப்போதும் கவசத்தால் மூடப்பட்டிருக்கும். பல்வேறு நகைகளால் இவள் அலங்கரிக்கப்பட்டிருக்கிறாள். அம்பிகையின் மங்கல வடிவமாகவே காணப்படும் மஞ்சள் வஸ்திரத்திற்கும் சிறப்பு வழிபாடு உண்டு. சற்று தொலைவில் உள்ள குரும்பயம்மா ஆலயம்தான் (ஆதி குரும்பா பகவதி கோவில்), ஆதியில் சேரன் கட்டிய கோவில் என்றும் கூறுகிறார்கள்.
பகவதியின் அருளாட்சி நடைபெறும் திருத்தலங்களில் சோற்றானிக்கரையும் ஒன்றாகும். கேரள மாநிலத்தில், திருப்புணித்துறை என்னும் ஊருக்கு அருகில், ஏறத்தாழ எட்டுக் கிலோமீட்டர் தொலைவில் உள்ளது இத்தலம். சற்றே உயரமான இடத்தில் அமைந்துள்ள பகவதியம்மன் ஆலயத்தில், மூலஸ்தான சிலா வடிவம், தெளிவான வடிவம் இல்லாதது. சிவப்பு வெட்டுக் கல் ஒன்றுண்டு; அதுவே பகவதி என்றும், அருகிலுள்ள கருங்கல்லை மகாவிஷ்ணு என்றும் வழிபடுகிறார்கள். அன்னையின் சிலை வளர்ந்து வருவதாக நம்பிக்கை; அவளுக்கு ஏராளமான அலங்காரங்கள்.
சோற்றானிக்கரைத் கோவிலில், லட்சுமி நாராயணத் தத்துவமாகவே அம்பிகை திகழ்கிறாள். முன்னொரு காலத்தில், காட்டுப் பகுதியாக இது இருந்தபோது, கண்ணப்பர் என்னும் வயோதிகர் ஒருவர் இங்கு வாழ்ந்து வந்தார். அவருடைய மகள், கன்றுக்குட்டியொன்றை ஆசையாக வளர்த்தாள். விதிவசமாக மகள் இறந்துபோக, முதியவரும் அந்தப் பசுவைப் (கன்று இதற்குள்ளாக வளர்ந்திருந்தது) பாசத்தோடு பராமரித்தார். ஒரு நாள் இரவு....முதியவருக்கு வினோதமான கனவு.....மாடு நின்றிருக்க, அருகில் சிறுவன் ஒருவன். அந்தச் சிறுவனை முனிவர்கள் வழிபட்டுக் கொண்டிருந்தனர். உறக்கம் கலைந்தது. பெரியவருக்கு ஒன்றும் புரியவில்லை. கனவுதானே என்று புரண்டு படுத்து உறங்கிவிட்டார்.
காலையில் எழுந்து பார்த்தால் பசுமாடு கல்லாகி இருந்தது. சிறுவன் நின்றதைக் குறிப்பதுபோல், பக்கத்தில் மற்றொரு கல். பெரியவர் ஸ்தம்பித்து நிற்க, மாடு கல்லாகிவிட்டதே என்று விசனப்படுவதா, கனவு நனவாகிவிட்டதே என்று மகிழ்வதா என்று புரியாமல் தவிக்க....அசரீரி கேட்டது: பசுவே மகாலட்சுமி என்றும் சிறுவனே மகாவிஷ்ணு என்றும் அசரீரி கூற, அதன்படியே வயோதிகரும் வழிபடத் தொடங்கினார்.
கண்ணப்பரின் மாட்டுக் கொட்டில் இருந்த இடமே இப்போது மூலஸ்தானமாக விளங்குகிறது. பகவதி என்று தாயை வணங்கினாலும், இவளை லட்சுமிநாராயண வடிவமாகத் தொழுவதே வழக்கம்.
பகவதியம்மனுக்கு ஒவ்வொரு வேளைக்கும் ஒவ்வொரு வகையான அலங்காரம். காலையில் வெள்ளை ஆடை, மதியம் சிவப்பு ஆடை, மாலையில் நீல ஆடை என்பது வழக்கம். கல்விக்கு உகப்பான காலை வேளையில் சரஸ்வதியாகவும், உழைக்கும் பகல் பொழுதில் லட்சுமியாகவும், இரவு நெருங்கும் நேரத்தில் பாதுகாப்பு கொடுக்கும் துர்கையாகவும் அம்பாள் திகழ்கிறாள் என்பதை நமக்கு உணர்த்துவதற்கான ஏற்பாடு இது.
அன்னைக்குச் செய்யும் அபிஷேகத்தின் தீர்த்தம், கீழே விழுவதில்லை, வெளியேயும் வருவதில்லை. அம்பிகைச் சிலையின் துவாரங்கள் வழியாக மணலில் மறைந்து, ஒன்றரை மைல் தொலைவிலுள்ள ஒணக்கூர் தீர்த்தக் குளத்தில் சேர்ந்து விடுகிறதாம்.
சுதா சேஷய்யன்
பூரணமான இயல்புகள் அனைத்தையும் கொண்டவளே பகவதியம்மா. எப்போதெல்லாம் இவள் திருவடிவம் எடுக்கிறாள்? எப்போதெல்லாம் இவளுடைய குழந்தைகள், இவளுடைய அன்பையும் அருளையும் வேண்டி நிற்கிறார்களோ, அப்போதெல்லாம் இறங்கி வருகிறாள். எப்போதெல்லாம் அரக்க குணங்கள் வெளிப்பட்டு ஆர்ப்பாட்டம் நடக்கிறதோ, அப்போதெல்லாம் வெளிப்பட்டு அவற்றை அடக்குகிறாள். இதனால்தான், ஒரு பக்கம் தர்மத்தை நிலைநாட்டுகிற காருண்யவதியாகவும், இன்னொரு பக்கம், அதர்மத்தை அழிக்கும் துர்காதேவியாகவும், பகவதியம்மனை வழிபடுகிறோம்.
கேரளத்தின் மாவேலிக்கரை அருகிலுள்ள தலம் செங்கன்னூர். தட்சிண கைலாயம் என்று போற்றப்படுகிற இத்தலத்திலும், மேற்கு நோக்கிய திருமுக மண்டலத்தோடு பகவதியம்மன் காட்சி தருகிறாள். இங்கேயும், மகாதேவர் ஆலயத்தின் ஒரு பகுதியாக அம்பாளின் சந்நிதி இருக்கிறது.
தட்சனுடைய மகளாக அவதாரம் செய்து, தாட்சாயணி என்னும் பெயர் கொண்டாளே அம்பிகை, அந்தக் கதை நினைவிருக்கிறதா? தந்தை யாகம் செய்தபோது, சிவனை அழைக்கவில்லையாயினும், தான் போகவேண்டும் என்று ஆசை கொண்டாள். அதன்படிப் போகவும் செய்தாள். ஆனால், போன இடத்தில் அவமானப்படுத்தப்பட்டாள். தட்சனுடைய மகள் என்னும் பிறவியே வேண்டாம் என்னும் எண்ணத்துடன், அக்னி குண்டத்தில் பாய்ந்துவிட்டாள். அந்த சமயம் பார்த்து அங்கு வந்த சிவனார், மனைவியின் உடலை எடுத்துத் தோளில் இட்டுக்கொண்டு, கோபாவேசத்தில் அங்குமிங்கும் திரிந்தார்.
சிவனாரின் கோபத்தை எப்படித் தணிப்பது? அம்பிகையின் தூல வடிவத்தைப் போக்கி, இவள் வேறு யாருமில்லை, சிவனாரின் பகுதியே என்பதைப் புரியவைத்தால், கோபம் தணிந்துவிடும் என்று கருதிய திருமால், தம்முடைய சக்கரத்தால் அம்பிகையின் உடலைக் கூறு போட்டார். உடலின் பாகங்கள் பல்வேறு இடங்களில் வீழ்ந்தன. அவ்வாறு விழுந்த இடங்களே சக்தி பீடங்களாயின.
அம்பாள் உடலின் மத்திய பாகம் விழுந்த இடமான செங்குன்று என்பதே பிற்காலத்தில் செங்கன்னூர் ஆகிவிட்டதாகச் சொல்கிறார்கள். இன்னொரு கதையும் இங்கு உண்டு. மதுரையை எரித்த பின்னர், மனம் அமைதியடைவதற்காகக் கண்ணகி தவம் செய்த இடம் இது என்கிறார்கள். இங்கிருந்துதான் கண்ணகி விண்ணுலகம் ஏறினாளாம். ஆகவே, இது செங்குன்றம் (மேலேற உதவிய உயரமான இடம்) ஆனது. இந்த இடத்திலேயே அவளுக்குக் கோவில் எழுப்பிய சேர மன்னர், செங்கமலவல்லி என்றும் பெயர் சூட்டினாராம்.
செங்கன்னூர் பகவதியின் தனிச் சிறப்பு, மானுடப் பெண்களுக்கு உள்ளதுபோல், அம்பாளுக்கும் மாத விடாய் உண்டு என்பதுதான். திருப்பூத்து என்றழைக்கப்படும் அந்நாட்களில் அம்பாளின் திருமுன் மூடப்பட்டுவிடும்.
பகவான் என்றொரு சொல் உண்டு. 'பக' என்றால் ஆறு. பகவான் என்பதன் பெண்பால் சொல், பகவதி எனலாம். ஞானம், வீரம், ஐஸ்வரியம், பேரொளி, தலைமைத்துவம், கருணை ஆகிய ஆறையும் பரிபூரணமாகத் தன்னிடத்தே கொண்டவள் பகவதி.
பகவதியம்மனின் திருக்கோலமும் தலக்கதையும் இடத்திற்கு இடம் மாறுபடலாம். எந்தக் குழந்தையை எப்படி கவனித்துக் கொள்ளவேண்டுமோ அப்படித்தானே அம்மா கவனிப்பாள்! கோலமும் கதைகளும் மாறினாலும், ஜகன்மாதாவின் அன்பும் அருளும் மாறுவதில்லை. பகவதியை வணங்குவோம், வழிபடுவோம்.
தொடர்புக்கு:- sesh2525@gmail.com