என் மலர்![tooltip icon](/images/info-tooltip.svg)
சிறப்புக் கட்டுரைகள்
![ஞானத்தின் வடிவே நெற்றிக் கண்! ஞானத்தின் வடிவே நெற்றிக் கண்!](https://media.maalaimalar.com/h-upload/2023/06/29/1906949-siva.webp)
ஞானத்தின் வடிவே நெற்றிக் கண்!
![மாலை மலர் மாலை மலர்](/images/authorplaceholder.jpg?type=1&v=2)
- சிவன் சீற்றமடைந்தால் அந்த நெற்றிக் கண்ணிலிருந்து அக்கினி வெளிப்படும்.
- சிவபெருமானின் நெற்றிக் கண்ணால் பாதிக்கப்பட்டவர்கள் பலரைப் பற்றிப் புராணங்கள் பேசுகின்றன.
*மும்மூர்த்திகளில் ஒருவர் சிவபெருமான். படைத்தல் காத்தல் அழித்தல் என்ற மூன்று தொழில்களில் சிவபெருமான் அழித்தல் தொழிலைப் புரிபவர். அதாவது தீயவைகளை அழிப்பவர்.
சிவபெருமானுக்கு மூன்று கண்கள் உண்டு. அவற்றில் ஒன்று நெற்றிக் கண். அந்தக் கண்ணே அழித்தல் தொழிலுக்கு ஆதாரம்.
அந்தக் கண் நெற்றியில் செங்குத்தாக இருப்பதாகவும் அது ஞானத்தின் அடையாளமென்றும் ஆகமங்கள் கூறுகின்றன.
சிவன் சீற்றமடைந்தால் அந்த நெற்றிக் கண்ணிலிருந்து அக்கினி வெளிப்படும். அது சீற்றத்திற்கு உரியவரைச் சுட்டெரிக்கும்.
சிவனைக் `கண்ணுதல் கடவுள்` எனத் தமிழ் இலக்கியங்கள் குறிப்பிடுகின்றன. நுதல் என்றால் நெற்றி. நெற்றியில் கண்ணை உடையவர் என்ற பொருளிலேயே அவர் அவ்விதம் அழைக்கப்படுகிறார்.
`நெற்றிக்கண் உடையானை
நீறுஏறும் திருமேனிக்
குற்றம்இல் குணத்தானை
கோணாதார் மனத்தானை
பற்றிப்பாம்பு அரைஆர்ந்த
படிறன் தன் பனங்காட்டூர்ப்
பெற்றொன்று ஏறும்பிரானைப்
பேசாதார் பேச்சென்னே...
என தேவாரத்தில் சுந்தரமூர்த்தி நாயனார் சிவபெருமானின் நெற்றிக் கண்ணைப் போற்றிப் பாடுகிறார்.
மகாகவி பாரதியார் தமது `கொட்டு முரசே!` என்ற பாடலில் சிவபெருமானின் நெற்றிக் கண்ணைப் பற்றிக் குறிப்பிடுகிறார்.
`வெற்றியெட்டுத் திக்கும் எட்டக்
கொட்டு முரசே!
வேதமென்றும் வாழ்க என்று
கொட்டு முரசே!
நெற்றியொற்றைக் கண்ணனோடு
நர்த்தனம் செய்வாள்
நித்த சக்தி வாழ்க வென்று
கொட்டு முரசே!
*சிவபெருமானின் இரு விழிகளையும் விளையாட்டாக ஒருமுறை பார்வதி தேவி தன் தாமரைத் திருக்கரங்களால் மூடினாள்.
பூனை கண்ணை மூடினால் உலகம் அஸ்தமிக்காது என்பது பழமொழி. ஆனால் சிவன் கண்ணை மூடினால் உலகமே நின்றுவிடுமே? மூலப் பரம்பொருள் அல்லவா சிவபெருமான்?
பார்வதி தேவியின் முன்யோசனை அற்ற விளையாட்டுச் செயலால், இயங்கிக் கொண்டிருந்த உலகங்கள் அனைத்தும் திடீரென இயக்கமற்றதாக ஆகிவிட்டன. உயிர்கள் துடிதுடித்தன.
முப்பத்து முக்கோடித் தேவர்களும் பதறினர். எவ்விதமேனும் உடனடியாக உலகங்களை மீண்டும் இயங்க வைக்க வேண்டும் எனச் சிவபெருமானை வேண்டினர்.
உடனே உலகங்களை இயங்க வைக்கவும் உலகங்களுக்கு வெளிச்சத்தையும் ஆற்றலையும் கொடுக்கவும் சித்தமானார் சிவபெருமான். அதன்பொருட்டே அவர் தமது நெற்றிக் கண்ணைத் திறந்தார்.
நெற்றிக் கண்ணில் விளைந்த நெருப்பின் ஒளியில் உலகங்கள் வெப்பமும் வெளிச்சமும் பெற்று மீண்டும் இயங்கத் தொடங்கின என்று ஒரு கதை சொல்கிறது.
*சிவபெருமானின் நெற்றிக் கண்ணால் பாதிக்கப்பட்டவர்கள் பலரைப் பற்றிப் புராணங்கள் பேசுகின்றன.
மதுரையை ஆண்ட செண்பகப் பாண்டிய மன்னனின் சந்தேகத்தைத் தீர்க்கும் வகையில் தருமிக்குப் பாட்டெழுதிக் கொடுத்தார் சிவன்.
திருப்பூர் கிருஷ்ணன்
`கொங்குதேர் வாழ்க்கை அஞ்சிறைத் தும்பி
காமம் செப்பாது கண்டது மொழிமோ
பயிலியது கெழீஇய நட்பின் மயிலியல்
செறியெயிற் றரிவை கூந்தலின்
நறியவும் உளவோ நீ அறியும் பூவே.'
(குறுந்தொகை இரண்டாம் பாடல்.)
அதில் பெண்களின் கூந்தலுக்கு இயற்கையிலேயே மணமுண்டு என்ற கருத்து சொல்லப் பட்டிருந்தது.
அந்தக் கருத்தை சங்கப் புலவர் நக்கீரர் ஏற்கவில்லை. சிவன் மனைவி பார்வதி தேவியின் கூந்தலாக இருந்தாலும் சரி, பெண்களின் கூந்தலுக்கு ஒருபோதும் இயற்கை மணம் கிடையாது என வாதிட்டார் நக்கீரர்.
சீற்றமடைந்த சிவபெருமான் நெற்றிக் கண்ணைச் சற்றே திறந்து காட்டினார். தான் சிவபெருமான் என்பதை நக்கீரனுக்கு அறிவிப்பதே அந்தச் செயலின் நோக்கம். கடவுளோடு வாதிடுகிறோம் என்ற உண்மையை உணர்ந்தால் நக்கீரர் தன் கருத்தைப் பின்வாங்கிக் கொள்வார் என்பது சிவனின் எண்ணம்.
ஆனால் வந்தவர் சிவன் என அறிந்த பின்னும் நக்கீரர் தன் கருத்தை மாற்றிக் கொள்ளவில்லை. நெற்றிக் கண்ணைக் காட்டினாலும் பாட்டில் உள்ள குற்றம் குற்றமே என முழங்கினார் அவர். சிவன் நெற்றிக் கண்ணைத் திறக்க அதிலிருந்து புறப்பட்ட அக்கினி நக்கீரரைச் சுட்டு அவர் மேனி கருகியது.
பின்னர் நக்கீரர் மன்னிப்பு வேண்டியதையும் பொற்றாமரைக் குளத்தில் மூழ்கி எழுந்து கருகிய மேனியின் வெப்பம் நீங்கப் பெற்றுக் குணமடைந்ததையும் நக்கீரர் வரலாறு சொல்கிறது.
*சிவபெருமானின் விழிகளில் ஒன்றில் குருதி வடியக் கண்ட கண்ணப்பன் தன் கண்களில் ஒன்றை அம்பால் எடுத்து சிவனது குருதி வழியும் கண்ணில் பொருத்தினான். குருதி நின்றது.
ஆக தன் கண்ணால் சிவன் கண்ணில் வழியும் குருதியை நிறுத்த முடியும் என்பதை உணர்ந்து அவன் மனம் ஆனந்தத்தில் ஆழ்ந்தது.
என்ன சோதனை! அடுத்த கணம் சிவபெருமானின் இன்னொரு கண்ணிலும் குருதி வழியலாயிற்று. பதறிய கண்ணப்பன் தன் இன்னொரு கண்ணையும் சிவனுக்கு அளிக்க முற்பட்டான்.
தனது மற்ற கண்ணையும் எடுத்துவிட்டால் தனக்குக் கண் தெரியாது என்பதால் எங்கே தன் கண்ணை வைக்க வேண்டும் என அடையாளம் தெரியும் பொருட்டாகச் சிவனின் குருதி வடியும் கண்ணருகே தன் செருப்புக் காலை உயர்த்தி வைத்துக் கொண்டான்.
பின் தனது இரண்டாம் கண்ணையும் அவன் அம்பால் பெயர்க்க முற்பட்டபோது `நில் கண்ணப்பா!` எனக் கூறி சிவபெருமான் காட்சி தந்து அவனைக் காத்தருளினார் என்கிறது கண்ணப்ப நாயனார் திருச்சரிதம்.
திண்ணன் என்பதே கண்ணப்பரின் இயற்பெயர். சிவபெருமானுக்குக் கண்ணை அப்பியதால் அவர் கண்ணப்பர் ஆனார்.
*சிவபெருமானுக்கு மூன்று கண்கள் என்று புராணங்கள் சொன்னாலும் அவருக்கு உண்மையில் உள்ளது அரைக்கண் தான் என்று சமத்காரமாக வாதிடுகிறார் காளமேகப் புலவர்.
சிவனில் பாதி பார்வதி என்பதால் ஒன்றரைக் கண் அவளுக்குரியது. மீதி உள்ள ஒன்றரைக் கண்ணில் ஒரு கண் கண்ணப்பர் அப்பியது.
எனவே சிவனுக்கு என்றுள்ள சொந்தக் கண் வெறும் அரைக் கண்தானே என்கிறது காளமேகப் புலவரின் அழகிய வெண்பா.
`முக்கண்ணன் என்றரனை முன்னோர் மொழிந்திடுவர்
அக்கண்ணற் குள்ளது அரைக்கண்ணே - மிக்க
உமையாள்கண் ஒன்றரை மற்று ஊன்வேடன் கண்ஒன்று
அமையும் இதனால் என்று அறி.
*இமய மலையில் சிவபெருமான் கடும் தவத்தில் ஆழ்ந்திருந்தார். அவருக்குப் பணிவிடை செய்து கொண்டிருந்தாள் இமவானின் புதல்வியான பார்வதி தேவி.
அவர்களிடையே காதல் உணர்வு தோன்றிக் குழந்தை பிறந்தால்தான் அந்தக் குழந்தை மூலம் அரக்கன் சூரபத்மன் வதம் செய்யப்படுவான் என்பதைத் தேவர்கள் அறிந்திருந்தார்கள்.
சிவன் தவத்திலேயே ஆழ்ந்திருந்தால் அவர் இல்லறம் மேற்கொள்வது எப்போது? பார்வதிக்குக் குழந்தை பிறந்து பின்னர் சூரபத்மன் வதம் நிகழ்வது எப்போது?
பொறுமையை இழந்த தேவர்கள் காதல் கடவுளான மன்மதனின் உதவியை நாடினார்கள். மன்மதன் மறைந்திருந்து, சிவபெருமான் மனத்தில் காதல் தோன்றுமாறு அவர்மேல் கரும்பு வில் மூலம் மலர்க் கணைகளைத் தொடுத்தான்.
தன் தவத்தைக் கலைப்பது யார் எனக் கண்விழித்துப் பார்த்த சிவன் மன்மதன்மேல் கடும் கோபம் கொண்டார். அவர் நெற்றிக் கண்ணைத் திறக்க அதிலிருந்து வெளிப்பட்ட அக்கினியில் மன்மதன் எரிந்தே போனான் என்கிறது மன்மதனைப் பற்றிய கதை.
பின்னர் மன்மதனின் மனைவி ரதிதேவி சிவபெருமானை அழுதும் தொழுதும் வேண்டிக் கொள்ள, சிவன் ரதிதேவியின் கண்ணுக்கு மட்டுமே தெரிபவனாக மன்மதனை உயிர்ப்பித்தார் என்றும் அதே கதை சொல்கிறது.
(இந்தக் கதையைத் தம் சொற்பொழிவின் இடையே சொல்லும்போது, `காமன் எல்லோருக்கும் காமன் - COMMON' எனச் சொல்லித் தன் ரசிகர்களைச் சிரிக்க வைப்பார் வாரியார் சுவாமிகள்!)
இந்தக் காம தகன நிகழ்வு, சமஸ்கிருதத்தில் எழுதப்பட்ட காளிதாசரின் குமார சம்பவம், தமிழில் கச்சியப்ப சிவாச்சாரியார் எழுதிய கந்த புராணம் உள்ளிட்ட பல நூல்களில் சொல்லப்பட்டுள்ளது.
இன்றும் கிராமங்களில் காம தகன நிகழ்ச்சி பாட்டிற்கு எதிர்ப்பாட்டுப் பாடும் லாவணி நிகழ்ச்சியாக நடைபெறுகிறது. சிவனின் நெற்றிக் கண்ணால் மன்மதன் உண்மையில் எரிந்தானா இல்லையா என்பதே லாவணி நிகழ்ச்சியின் கருப்பொருள்.
எரிந்த கட்சி என்றும் எரியாத கட்சி என்றும் இரு பிரிவாகப் பிரிந்து தங்கள் கற்பனைக்கேற்பப் பாடல் புனைந்து பாடும் இந்நிகழ்ச்சி சிந்தனையைத் தூண்டும் வகையிலான இலக்கியச் சுவை நிறைந்தது.
*முருகன் தோன்றியதில் சிவபெருமானின் நெற்றிக் கண் முக்கியப் பங்கு வகிக்கிறது. அவரது நெற்றிக் கண்ணிலிருந்து வெளிப்பட்ட நெருப்பை வாயு பகவான் தாங்கிச் சென்று சரவணப் பொய்கையில் விட, அந்த நெருப்பு ஆறு குழந்தைகளாக ஆறு தாமரை மலர்களில் உருக் கொண்டது.
அந்த ஆறு குழந்தைகளையும் கார்த்திகைப் பெண்கள் வளர்த்தனர். பார்வதி, அந்த ஆறு குழந்தைகளையும் ஒருசேர அணைத்தபோது, ஆறுமுகனான முருகக் கடவுள் தோன்றினார் என்பது கந்தனைப் பற்றிய கதை.
உலகில் முருகன் ஒருவனே ஆண் கடவுளான சிவனின் நெற்றிக்கண் நெருப்பிலிருந்து உருவானதால் `ஆண் பெற்ற பிள்ளை` என்ற வகையில் முருகன் மட்டுமே ஆண்பிள்ளை என்பது வாரியார் சுவாமிகள் கூற்று!
*நெற்றிக் கண் ஆசைகளை நிராகரிப்பதன் குறியீடாகவும் கொள்ளப் படுகிறது. ஞானம் என்னும் நெருப்பால் ஆசைகளைச் சுட்டெரிக்கும்போது பேரின்பம் பெறுவது சாத்தியமாகிறது.
`ஆசை அறுமின்கள்!' என்கிறார் திருமூலர். `பற்று விடவேண்டுமானால் பற்றற்றான் பற்றினைப் பற்றுங்கள்!' என அறைகூவுகிறார் திருவள்ளுவர். `ஆசையே துன்பத்திற்குக் காரணம்!' என்கிறார் புத்தர்.
ஞானம் என்ற நெற்றிக் கண்ணால் ஆசைகளைச் சுட்டெரித்து அவற்றிலிருந்த விடுதலை பெற்றுப் பேரின்பம் அடைய வேண்டும் என்பதே நெற்றிக் கண் சொல்லும் தத்துவம்.
தொடர்புக்கு-thiruppurkrishnan@gmail.com