என் மலர்
சிறப்புக் கட்டுரைகள்

இளம் வயதினரை பாதிக்கும் மூட்டு வலியை தடுக்கும் பயிற்சிகள்

- மாறி வரும் உணவு முறைகளும் மூட்டு வலிக்கு மற்றொரு காரணம்.
- மூட்டு வலி எதனால் வருகிறது என்று சொல்ல முடியாது.
இன்றைய பரபரப்பான சூழலில் நோய்களுக்குப் பஞ்சமில்லை. சற்று வயதாக ஆரம்பித்தாலே நோய்கள் தேடி வருகின்றன. அந்த வகையில் இப்போது வயதானவர்கள் என்றில்லாமல், வயது வித்தியாசமின்றி பலர் மூட்டுவலியால் பாதிக்கப்படுகின்றனர்.மூட்டு வலி முன்பு முதியவர்களை பாதிக்கும் பிரச்சினையாக இருந்தது. இப்போது இளம் வயதினர் பிரச்சினையாக வளர்ந்து கொண்டிருக்கிறது.
இன்றைய இளம் வயதினருக்கு உடல் உழைப்பு குறைந்து வருவதும், உடற்பயிற்சி இல்லாததும் இதற்கு முக்கிய காரணங்கள். கணினித்துறை வளர்ச்சி பெற்ற பிறகு 35 சதவீத இளைஞர்கள் அதிக நேரம் அமர்ந்தே வேலை செய்கிறார்கள். இவர்களுக்கு மூட்டுத்தசை இறுகி மூட்டு வலி வந்து விடுகிறது. மாறி வரும் உணவு முறைகளும் மூட்டு வலிக்கு மற்றொரு காரணம்.
தற்போதைய இளைஞர்கள் பலரும் துரித உணவுகளையே விரும்பி சாப்பிடுகிறார்கள். இதனால் சிறுவயதிலேயே உடல் பருமன், ஹார்மோன் கோளாறுகள் வந்து அவதிப்படுகின்றனர். இது நாளடைவில் மூட்டு வலிக்கும் வழிவகுத்து விடுகிறது.
மூட்டு வலி என்பது எந்த மூட்டிலும் ஏற்படக் கூடியது தான் என்றாலும் முழங்கால் மூட்டில் ஏற்படும் வலியை தான் மூட்டு வலி என்று சொல்கிறோம். மூட்டு என்பது 2 எலும்புகளை இணைக்கக் கூடிய ஒரு பிணைப்பு. முழங்கால், கணுக்கால், இடுப்பு, கை, முழங்கை, தோள்பட்டை ஆகிய இடங்களில் மூட்டுகள் இருக்கின்றன. கழுத்து பகுதியில் எலும்புகள் பிணைக்கப்பட்டு உள்ளது.
எலும்புகளை இணைக்கும் இந்த மூட்டுகள் இருப்பதால் தான் நம்மால் எந்த செயலையும் செய்ய முடிகிறது. திரும்பி பார்க்க முடிகிறது, கீழே கிடக்கும் பொருளை குனிந்து எடுக்க முடிகிறது. கிரிக்கெட்டில் பந்தை சுழற்றி வீச முடிகிறது. கால்பந்தில் பந்தை துரத்திச் சென்று காலால் கோல் அடிக்க முடிகிறது. எளிதாக சாப்பிட முடிகிறது. சாப்பாட்டில் சாம்பார், ரசம் ஊற்றி நன்றாக பிசைந்து சாப்பிடுகிறோம். இவ்வாறு பிசையவும், அவற்றை வாயில் எடுத்து தருவதிலும் இந்த மூட்டுகள் தான் முக்கிய பணியாற்றுகிறது. மூட்டுகள் இல்லை என்றால் நம்மால் மரக்கட்டை போல், ரோபோ மாதிரி தான் நடக்க முடியும்.
புதிதாக வாங்கிய கார் நன்றாக ஓடும். கொஞ்ச காலம் போன பிறகு கர, கரவென காரில் இருந்து சத்தம் வரும். கார் எந்திரங்களின் இணைப்புகளில் தேய்வு ஏற்பட்டு இருக்கும். இதேபோல காலின் மேல் பகுதியும், கீழ் பகுதியும் உராய, உராய 2 பக்கமும் உள்ள மேற்பரப்பு தேய்ந்து விடுகிறது. இதனை ஊசி போட்டு சரி செய்யலாம். ஆனால் எல்லா வகையான மூட்டு வலிக்கும் ஊசி பலன் அளிக்காது.
தேய்ந்து போன மூட்டை சரி செய்ய வேண்டும் என்றால் ஏற்கனவே அதில் உள்ள மூட்டை எடுத்து விட்டு வேறு மூட்டை பொருத்த வேண்டும். தோள்பட்டை மூட்டு தேய்ந்து போகலாம், முழங்கை மூட்டு, கழுத்தில் இருக்கும் இணைப்பு தேய்ந்து போகலாம். நவீன மருத்துவத்துறையில் அனைத்தையும் மாற்ற நல்ல சிகிச்சைகள் வந்து விட்டன. முதுகு தண்டுவடத்தில் எலும்பு தேய்ந்தால் கூட அதனை மாற்றி வைப்பதற்கு சிகிச்சைகள் உள்ளன. கையில் உள்ள பந்து, கிண்ண மூட்டையும் கூட மாற்றும் சிகிச்சைகள் வந்து விட்டன.
மூட்டு வலி வர 3 காரணங்கள் உள்ளன. இதில் ஒன்று வயதானவர்களுக்கு வரும் மூட்டு வலி. 60, 70 வயதுள்ளவர்களுக்கு இந்த மூட்டு வலி வரும். வருடக்கணக்கில் அவர்கள் நடப்பதற்கு இந்த கால்கள் உதவி உள்ளன. அவ்வாறு அவர்கள் அதிகமாக நடந்து, நடந்து கால் மூட்டானது தேய்ந்து விடுகிறது. தேய்வதனால் நேராக நிற்க வேண்டிய கால்கள் வளைந்து நிற்கும். அதற்கு கண்டிப்பாக அறுவை சிகிச்சை செய்து தான் ஆக வேண்டும். ஒரே நேரத்தில் ஒன்று அல்லது 2 மூட்டுகளை கூட மாற்றலாம். மூட்டு மாற்று அறுவை சிகிச்சை என்பது பெரிய டெக்னாலஜி. அவ்வாறு சிகிச்சை அளிக்க அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் சிறந்த டாக்டர்கள் உள்ளனர்.
டாக்டர் ஜி.பக்தவத்சலம்
2-வது காயம்பட்டவர்களுக்கு ஏற்படும் மூட்டு வலி. விபத்தில் சிக்கியவருக்கு முழங்காலில் அடிபட்டு இருக்கும். அதை மட்டும் பார்த்து விட்டு சிகிச்சை அளித்து விடக்கூடாது. முழங்காலுக்கு முன்னால் சிப்பி ஒன்று இருக்கும். அந்த சிப்பியும் உடைந்து போய் இருக்கும். அதனை எடுத்து விட்டு சிகிச்சை அளிக்க வேண்டும். இல்லாவிட்டால் பாதிப்பு அதிகமாகி விடும். இதேபோல தொடர்ந்து விளையாடுபவர்களுக்கும் மூட்டு வலி ஏற்படும். கால்பந்து ஆடுபவர் மைதானத்தில் ஓடி, ஓடி விளையாடுகிறார். அவருக்கு மூட்டுகள் தேய அதிக வாய்ப்புள்ளது. அதனால் அவர்களுக்கும் மூட்டு வலி வரும்.
விபத்து ஏற்படும்போது கை எலும்பு உடைந்தால் அந்த ஒரு பகுதியில் மட்டும் அறுவை சிகிச்சை செய்து சரி செய்து விடலாம். அதேசமயம் கை மூட்டுப்பகுதியில் எலும்பு உடைந்தால், உடைந்த எலும்புக்கும், சேதம் அடையும் மூட்டுப்பகுதிக்கும் சிகிச்சை அளிக்க வேண்டும். மணிக்கட்டு, முழங்கை மூட்டு மாற்று அறுவை சிகிச்சை செய்யலாம்.
3-வது ஏதோ ஒரு காரணத்தினால் மூட்டு பகுதியை சுற்றி இருக்கும் திசுக்கள் பாதிக்கப்பட்டு மூட்டு தேய்ந்து விடுகிறது. இதற்கு ருமாட்டாய்டு ஆர்த்ரைடீஸ் (Rheumatoid arthritis) என்று பெயர். 30 வயது முதல் 50 வரையுள்ளவர்கள் இந்த பாதிப்பை அதிகம் சந்திப்பர். இந்த மூட்டு வலி எதனால் வருகிறது என்று சொல்ல முடியாது. இந்த பாதிப்புக்கும் மூட்டு மாற்று அறுவை சிகிச்சை வேண்டியது இருக்கும்.
குழந்தைகள் பாதிப்பு
ருமாட்டிக் ஆர்த்ரைடீஸ் ( Rheumatic fever arthritis) என்பது குழந்தைகளுக்கு வரக்கூடியது. சுத்தமாக இல்லாததால் தொண்டை டான்சில்ஸ் பகுதி வீங்கிப் போகும். கையில் அரிப்பு வரும். பின்னர் மூட்டுப்பகுதிகளில் வலி வரும். அப்போது காய்ச்சல் 102 டிகிரி அடிக்கும். நடக்க முடியாத வகையில் முழங்கால் வீங்கி விடும். 2 நாள் ஓய்வெடுத்தால் வீக்கம் குறைந்து விடும். பின்னர் ஒரு வாரம் கழித்து அதேபோல் காய்ச்சல் பாதிப்பு வரும். மற்றொரு மூட்டுப்பகுதியில் வலி ஏற்படும். இதனால் இதய வால்வுகளும் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது. எனவே குழந்தைகளுக்கு இவ்வாறு பாதிப்பு ஏற்பட்டால் மருத்துவரை பார்த்து ஊசிப் போட்டுக் கொள்ள வேண்டும். சுத்தமாக இருந்தால் இந்த பாதிப்பு வராது.
பெண்கள் பாதிப்பு
மூட்டுகளின் நெகிழ்வுத்தன்மைக்கு உதவும் `கார்டிலேஜ்' (cartilage) உருவாக்கத்துக்கு `ஈஸ்ட்ரோஜென்' ஹார்மோன் உதவும். ஹார்மோன் சுரப்பு குறைந்தால், மூட்டுப்பகுதிகளில் பாதிப்பு ஏற்படுவது இயல்பு. பெண்களுக்கு மாதவிடாய் சுழற்சி காரணமாக, இதன் சுரப்பு ஒவ்வொரு மாதமும் குறையும். மெனோபாஸ் காலத்தைத் தாண்டிய பெண்களுக்கு `ஈஸ்ட்ரோ ஜென்' மிகக்குறை வாகவே சுரக்கும். எனவே, மூட்டுவலி ஏற்படுவதற்கான வாய்ப்பும் அதிகம். உடல்பருமன் இருப்பவர்களுக்கு, மூட்டுவலி ஏற்படுவது இயல்பு. உடல்பருமனால் அதிகம் பாதிக்கப்படுபவர்கள் பெண்கள்தான் என்பதால், அவர்களுக்கு மிக எளிதாக மூட்டுவலி பிரச்சினை ஏற்பட்டுவிடுகிறது.
ஆகவே, பெண்கள் தங்கள் உடல்நலனில் மிகவும் கவனமாக இருப்பது அவசியம். முக்கியமாக, உடல் எடையை எப்போதும் கட்டுக்குள் வைத்திருக்க வேண்டும். உடலுழைப்பு நிறைந்த ஏதாவதொரு பழக்கத்தை அன்றாடப்பழக்கமாக வைத்துக்கொள்ள வேண்டும். உதாரணமாக நடைப்பயிற்சி, சைக்கிளிங், நீச்சல் ஏதாவதொன்றில் தினமும் உங்களை ஈடுபடுத்திக் கொள்ளுங்கள். தசைக்கான உடற்பயிற்சிகளைத் தினமும் செய்ய வேண்டியது அவசியம்.
சோயா பீன்ஸ், காலிபிளவர், அடர் பச்சை நிற காய்கறிகள், கீரைகள், முட்டை பால், பருப்பு, பயறுகள் ஆகிய உணவுகள் மூட்டு தேய்மானத்தை தடுக்கும். மூட்டு வலி மற்றும் வீக்கத்துக்கு மருத்துவர் ஆலோசனைப்படி தான் மாத்திரை, மருந்துகளை சாப்பிட வேண்டும். எக்காரணம் கொண்டும் சுயமாக மருந்து வாங்கி சாப்பிடக் கூடாது. இந்த வலி மாத்திரைகள் சிறுநீரக பாதிப்பை ஏற்படுத்தும்.
நாட்பட்ட மூட்டு வலி உள்ளவர்கள் பிசியோதெரபிஸ்ட்டை சந்தித்து ஆலோசனை பெறுவது நல்லது. அவர் மூட்டுகளை ஆரோக்கியமாக வைத்து கொள்வதற்கும், மூட்டுகளை முறையாக பயன்படுத்துவதற்கும் பயிற்சிகள் செய்வதை கற்றுக் கொடுப்பார். இந்த பயிற்சிகளை தொடர்ந்து செய்து வர மூட்டு வலி குறையும்.
மூட்டு வலி ஏற்படாமல் தடுக்க 50 வயதுக்கு மேல் உள்ளவர்கள் முழங்கால், முழங்கைக்கு வலிமை தரக்கூடிய பயிற்சிகளை செய்ய வேண்டும். இவ்வாறு பயிற்சி செய்யும் போது தசைகள் வலுவாகும். இதனால் மூட்டு வலி தள்ளிப்போகும். வலி இருந்தால் கூட குறைந்து போகும்.
மூட்டு வலி வந்தவுடன் அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்று இல்லை. பிசியோதெரபி, ஆயுர்வேத மசாஜ், நேச்சுரபதி போன்ற சிகிச்சைகளை எடுக்கலாம். அந்த சிகிச்சைகள் பலன் அளிக்காத பட்சத்தில் மூட்டு மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ளலாம்.
இளம் வயதினருக்கு மூட்டு வலி பாதிப்புகள் வராமல் இருக்க வேண்டும் என்றால் உடற்பயிற்சி செய்வதை தொடர்ந்து கடைபிடிக்க வேண்டும். 8 மணி நேரம், 10 மணி நேரம் உழைக்கிறோம், ஆனால் உடலை கவனிக்க தவறி விடுகிறோம். உடலை நாம் ஒரு மணி நேரம் கவனித்தால் அந்த உடல் நமக்கு 23 மணி நேரம் நல்ல பலனை கொடுக்கும்.
எனவே தினமும் ஒரு மணி நேரம் உடற்பயிற்சி, மூச்சுப்பயிற்சி, தியானம் செய்வதை கடைபிடியுங்கள். கெட்ட பழக்கங்களை ஒழித்து நல்ல பழக்க வழக்கங்களை கடைபிடித்து ஆரோக்கியமாக வாழுங்கள்.
தொடர்புக்கு: info@kghospital.com, 98422 66630