என் மலர்
சிறப்புக் கட்டுரைகள்

இந்தியாவின் முதல் பெண் மல்யுத்த வீராங்கனை

- 1940 மற்றும் 1950 களில் வட இந்தியாவில் மல்யுத்தம் என்றாலே ஹமீதா பானு என்ற பெயர்தான் கொடிகட்டிப் பறந்தது.
- மகாராஷ்டிராவின் புனே நகரில், ஆண் மல்யுத்த வீரர் ராம்சந்திர சாலுங்கே உடன் ஹமீதா பங்கேற்கும் ஒரு போட்டியை உள்ளூர் மல்யுத்தக் கூட்டமைப்பு எதிர்த்ததால் ரத்து செய்யப்பட்டது.
விளையாட்டு உலகம் எப்போதுமே ஆண்களின் கோட்டைதான். ஆண்களுக்கான வீர விளையாட்டுகளில் பெண்களும் பங்கேற்பதை நினைத்துக் கூட பார்க்க முடியாத காலம் அது. வழக்கம்போல் பெண்களுக்கென்று தனியே விளையாட்டுகளையும் ஒதுக்கி வீட்டுக்குள்ளேயே விளையாட வைத்துக் கொண்டிருந்தது சமூகம்.
முகத்தை மூடி திரையிட்டு முழுவதும் போர்த்திதான் வெளியே வரவேண்டும் என்ற மதத்தின் கட்டுப்பாடுகளை உதறியெறிந்து, நாட்டின் விடுதலைக்கு முன்பே தனக்கான விடுதலையை தானே எடுத்துக்கொண்டு, ஆண்களுக்கான வீரவிளையாட்டான மல்யுத்தத்தி்ல் 320- க்கும் மேற்பட்ட போட்டிகளில் கலந்துகொண்டு அத்தனை போட்டிகளிலும் வென்று வாகை சூடியவர் ஒரு பெண் என்றால் நம்ப முடிகிறதா? நம்பித்தான் ஆகவேண்டும். அவர்தான் "அலிகாரின் அமேசான்" என்று அழைக்கப்பட்ட ஹமீதா பானு.
இந்திய நாளிதழ்கள் மட்டுமல்லாது அமெரிக்க, ஐரோப்பிய நாடுகளின் நாளிதழ்களிலும் இந்திய மல்யுத்த வீராங்கனையான ஹமீதா பானுவின் பெருமை பேசப்பட்டது என்றால் எப்படிப்பட்ட வீரமங்கையாக அவர் இருந்திருக்க வேண்டும்!
மல்யுத்தப் போட்டிகள் நடைபெறும் போதெல்லாம் அங்கே பெண் சிங்கம் போன்று ஹமீதா பானு கர்ஜித்து வெற்றிபெற்றதை ஆங்கில நாளிதழ்கள் வெளியிட்டு வந்தாலும், இந்திய சமூகம் பெருமை மிக்க பெண்களின் வரலாறுகள் பலவற்றை திட்டமிட்டே மறைத்து வந்தது போல், பெண் என்கின்ற ஒரே காரணத்திற்காகவும், வழக்கத்தில் இல்லாத ஒன்றை அவர் உருவாக்குகிறார் என்பதற்காகவும், மற்ற பெண்கள் அவ்வாறு வந்துவிடக் கூடாது என்பதற்காகவும் இந்திய நாட்டின் முதல் மல்யுத்த வீராங்கனையான ஹமீதா பானுவின் வரலாற்றையும் திட்டமிட்டே மறைத்து வந்துள்ளது.
ஒரு விளையாட்டு வீராங்கனையாக ஹமீதா பானுவின் வாழ்க்கையைப் பற்றி அறிந்து கொள்ள வேண்டும் என்றால் 1950-களின் செய்தித் தாள்கள் மூலமும், இந்திய விளையாட்டு வரலாறு குறித்து வெளிவந்துள்ள ஒன்றிரண்டு ஆங்கில நூல்கள் மூலமும் மட்டுமே அறிய முடிகிறது. அதிலும் அவரின் தனிப்பட்ட வாழ்வு குறித்த பதிவுகள் மிகவும் குறைவே.
ஹமீதா பானு வாழ்ந்த காலத்தில் அவர் கிட்டத்தட்ட ஒரு புராணகால அவதாரம் போன்றும், மர்மமான பெண்ணாகவும், வெல்ல முடியாதவராகவும், பெண்மையும், மனிதாபிமானமும் அற்றவராகவும் சித்தரிக்கப்பட்டுள்ளார். இது பெண் மல்யுத்த வீரர்களை ஏற்கவோ அல்லது அவர்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கவோ தயங்கும் இந்திய சமூகத்தின் மனநிலையைத்தான் சுட்டிக்காட்டுகிறது.
சுதந்திரப் போராட்டம் சூடுபிடித்த காலகட்டத்தில், பிளவுபடாத இந்தியாவின் பகுதியாக இருந்த அலிகாரின் சிறிய கிராமத்தில், ஒரு மல்யுத்த குடும்பத்தில் 1920-களில் பிறந்துள்ளார் ஹமீதா பானு. மல்யுத்த விளையாட்டில் பெரிதும் ஆர்வம் கொண்ட அவர், மதக்கட்டுப்பாடுகளையும், பாலின ஒடுக்குமுறைகளையும் மீறி தன் வாழ்வே மல்யுத்தம்தான் என்பதை அறிவித்தபடி சிறப்பாக தேர்ச்சிபெற்று வந்துள்ளார்.
1937-ல் ஹமீதா பானு முதன்முதலில் கள மிறங்கியபோதே தன்னை மிக சிறப்பான வீராங்கனையாக நிரூபித்து அனைவரையும் வியக்கவைத்தார். டெல்லியில் இரண்டு ஆண் மல்யுத்த வீரர்களை களத்தில் வீழ்த்தி வெற்றி கண்டார். ஆனாலும் ஹமீதா பானு என்ற வீராங்கனையின் புகழ் லாகூர் வெற்றி மூலம் பரவ ஆரம்பித்தது.
லாகூரின் பெரோஸ் கான் எனும் புகழ்பெற்ற அதிவலிமையான வீரனுடன் மோத தயாராக இருப்பதாக ஹமீதா பானு தெரிவித்தவுடன், முதலில் பெரோஸ் கான் சிரித்தார். ஒரு பெண்ணாவது! தன்னை தோற்கடிப்பதாவது! என்ற எண்ணத்துடன் சரி என தலையாட்டினார். ஆனால் அதற்காக அவர் களத்தில் வருத்தப்படுவதற்குள், அவரை வீழ்த்தி எழமுடியாதபடிக்கு கீழே தள்ளியிருந்தார் ஹமீதா பானு.
தொடர்ந்து ஹமீதா பானு இந்திய மல்யுத்தத்தின் புனிதமான அரங்கமாக கருதப்பட்ட அமிர்தசரஸ் அரங்கில் களமிறங்கிய போது, தன்னுடன் மோதும் எதிராளியை விட, உள்ளூர் பழமைவாதிகளின் கடுமையான எதிர்ப்புகளையும், மோசமான தாக்குதல்களையும் சந்திக்க வேண்டி வந்தது.
பொதுவெளியில் ஒரு பெண் விளையாட்டு உடை அணிந்துவந்ததை காணச் சகிக்காமல், ஹமீதா ஒரு மல்யுத்த வீராங்கனை அதற்கான உடையை அணிந்துதான் அவர் வரமுடியும் என்பதை ஏற்காத அவர்கள், இந்த விளையாட்டை விட்டே அவர் சென்றுவிட வேண்டும் என்ற நோக்கத்தோடும் ஹமீதாவின் ஆன்மாவையே அழித்துவிட வேண்டும் என்ற தீர்மானத்தோடும் கற்களை வீசி கலவரத்தைத் தூண்டினர்.
ருக்மணி
பாலியல் அவமதிப்புகளின் வீச்சு அமிர்தசரஸ் அரங்கம் முழுவதும் எதிரொலித்தது. அவர்களின் கடுமையான கோபமும், எதிர்ப்பும் ஹமீதாபானுவை பஞ்சாப்பை விட்டே வெளியேற வைத்தது. ஆனால் ஹமீதா அந்த மண்ணில் இருந்துதான் வெளியேறினாரே தவிர தன் மனதின் உறுதியில் இருந்து வெளியேறவில்லை.
மல்யுத்தத்தில் பெண்கள் பங்கேற்காத காலமாக இருந்ததாலும், களத்தில் ஆண் வீரர்களை வெற்றிகொள்ளும் வலிமை தனக்கு உள்ளது என்ற தன்னம்பிக்கையாலும் பெரும்பாலும் ஆண் வீரர்களுடனேயே ஹமீதா போட்டியிட நேர்ந்தது. ஆனால் மல்யுத்தத்தில் தன் சொந்த வலிமையால் ஆண்களை வீழ்த்துகின்ற பெண்ணை, அவரது எதிரிகளும், போட்டியாளர்களும் "ஆண்கள், பெண்களால் வீழ்த்தப்படக்கூடாது" என்ற ஆணாதிக்கப் பார்வையிலேயே பார்த்தார்கள்.
மல்யுத்தம் ஆண்களின் விளையாட்டாகக் கருதப்பட்டது. ஏனெனில் இது பாரம்பரியமாக ஆண்களின் குணங்களாக கருதப்பட்டு வந்த உடல் வலிமை, ஆக்ரோஷம், போட்டித்தன்மை சார்ந்ததாக இருந்தது. மேலும் பெண்கள் அழகியல் சார்ந்தவர்கள், ஆண்களின் இன்பத்திற்காகவும், குடும்பப் பராமரிப்புக்காகவும் இருப்பவர்கள் என்ற கருத்து ஆழமாக வேரூன்றி இருந்ததால் அவர்கள் மல்யுத்தத்தில் நுழைவது என்பது அநாகரீகமாக கருதப்பட்டது.
இதனால்தான் ஹமீதா பானுவின் போட்டியாளர்களும், ஆணாதிக்க வெறியர்களும் மல்யுத்தத்தில் அவரது முயற்சிகளையும், வெற்றிகளையும் கேலியும் கிண்டலும் செய்து துரத்த முயற்சி செய்தனர்.
அனைத்து தரப்பிலும் இருந்தும் வரும் எதிர்ப்புகளை சமாளித்தவாறே ஹமீதா பானு தான் வெற்றிபெறுவதில் மட்டுமே குறிக்கோளாக இருந்து வந்தார்.
1940 மற்றும் 1950 களில் வட இந்தியாவில் மல்யுத்தம் என்றாலே ஹமீதா பானு என்ற பெயர்தான் கொடிகட்டிப் பறந்தது.
பாம்பே கிரானிக்கள் என்ற செய்தித்தாள், கூங்கா பயில்வான் என்ற வீரர் 1944-ல் ஹமீதா பானுவுடன் போட்டியிட தயாராகி பின்வாங்கியது பற்றி கூறுகிறது. போட்டியைக் காண 20000 பேர் கூடியிருந்த நிலையில் கூங்கா பயில்வான் அதிக தொகை கேட்டும் சாத்தியமில்லாத சில கோரிக்கைகளை முன்வைத்தும் போட்டியில் இருந்து விலகினார். இதனால் ஆத்திரமடைந்த மக்கள் வன்முறையில் ஈடுபட்டு அனைத்தையும் போட்டு உடைத்தனர்.
1954 பிப்ரவரியில் வடக்கு பஞ்சாப்பின் வீரரையும், கல்கத்தாவின் வீரர் ஒருவரையும் வெற்றி கண்டார். அடுத்ததாக மே மாதம் குஜராத் புறப்பட்டுச் சென்றார் ஹமீதா பானு. குஜராத்தில் உள்ள பரோடா (வதோதரா) பகுதியில் அப்போது சிறுவனாக இருந்த சுதீர் பராப் என்பவர் அந்தக் காட்சிகளை இப்படி விவரிக்கிறார்.
பரோடாவிற்கு போட்டியிட ஹமீதா பானு வருகிறார் என்ற செய்திதாங்கிய விளம்பரப் பதாகைகள் லாரிகள் உள்ளிட்ட அனைத்து வாகனங்களிலும் கட்டப்பட்டிருந்தன. ஊரெங்கும் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டிருந்தன.
பரோடா மகாராஜாவால் ஆதரிக்கப்பட்டு வந்த மல்யுத்த வீரர் சோட்டேகாமா பயில்வானுடன் போட்டியிடத்தான் முதலில் ஹமீதா பானு வந்திருந்தார். ஆனால் கடைசி நேரத்தில் ஒரு பெண்ணுடன் போட்டியிட மாட்டேன் என்று சோட்டேகாமா விலகிக் கொண்டதால், அடுத்து மிகப்பெரும் சவாலாக விளங்கும் பாபா பயில்வான் என்ற அகங்கர்வம் கொண்ட வீரரை களமிறக்கினார் மகாராஜா.
"என்னை திருமணம் செய்து கொள்ளவேண்டும் அல்லது என்னை வீழ்த்த வேண்டும்" என்றும், ஒருவேளை தான் தோற்றுவிட்டால் இதுவே எனது கடைசி போட்டியாக இருக்கும் என்றும் சவால் விட்டிருந்தார் பாபா பயில்வான்.
1954 மே 2-ம் நாள் பரோடாவில் போட்டி ஆரம்பமானது. போட்டியைக் காண மிகப் பெரும் கூட்டம் கூடியிருந்தது. அடுத்த நாளின் நாளிதழ்கள் எல்லாம் மல்யுத்தப் போட்டியைப்பற்றி இப்படி எழுதியிருந்தன. "போட்டி 1 நிமிடம் 34 வினாடிகளே நீடித்தன. அதற்குள் அந்தப் பெண் பாபா பயில்வானை தரைமட்டமாக்கி இருந்தார்" மேலும் பாபா பயில்வான் இனி, தான் விளையாடப் போவதில்லை என்றும் அறிவித்திருந்தார்.
5 அடி 3 அங்குலம் உயரமும் 237 பவுண்ட் எடையும் கொண்டிருந்த ஹமீதா பானுவைப் பற்றி உத்தரபிரதேச பத்திரிகையாளர் ஒருவர், "ஒரேயொரு முறை பானுவைப் பார்த்தாலே போதும். நாடிநரம்புகளில் எல்லாம் உதறலும் பயமும் தோன்றிவிடும்" என்று எழுதுகிறார்.
ஹமீதாவின் புகழ் இந்தியாவைத் தாண்டியும் பரவியது. பம்பாயில் 1954-ல் நடந்த போட்டி ஒன்றில் ஹமீதா பானு, ரஷ்யாவின் "பெண் கரடி" என்று அழைக்கப்பட்ட 'வெரா சிஸ்டிலின்' எனும் வீராங்கனையை ஒரே நிமிடத்தில் வீழ்த்தி வெற்றி பெற்றார் என்று அப்போதைய பத்திரிகை தகவல்கள் தெரிவிக்கின்றன.
எத்தனைதான் திறமைசாலியாக இருந்தாலும் எவ்வளவு வெற்றிகள் பெற்றாலும் ஒரு பெண்ணின் வெற்றி என்பது அத்தனை சீக்கிரம் அங்கீகரிக்கப்படுவதில்லை என்கின்ற கசப்பான உண்மை ஹமீதாவின் வாழ்விலும் தொடர்ந்துகொண்டே இருந்தது.
மகாராஷ்டிராவின் புனே நகரில், ஆண் மல்யுத்த வீரர் ராம்சந்திர சாலுங்கே உடன் ஹமீதா பங்கேற்கும் ஒரு போட்டியை உள்ளூர் மல்யுத்தக் கூட்டமைப்பு எதிர்த்ததால் ரத்து செய்யப்பட்டது.
மகாராஷ்டிராவில் பெண்கள் மல்யுத்தத்தில் கலந்துகொள்வது தடைசெய்யப்பட்டுள்ளதாக ஒரு செய்தி வந்தவுடன், அப்போதைய மகாராஷ்டிரா முதல்வர் மொரார்ஜி தேசாயைச் சந்தித்து விளக்கம் கேட்டார் ஹமீதா. அதற்கு அவர், பெண்ணினம் விளையாடுகிறது என்பதற்காக தடைசெய்யவில்லை. விளையாட்டை நடத்துபவர்கள் மீது பல்வேறு புகார்கள் வருவதாகவும், ஹமீதாவிற்கு எதிராக டம்மிகள் நிறுத்தப்படுவதாக தகவல்கள் வருவதாகவும் கூறினார். மனம் நொந்துபோய் வெளியே வந்தார் ஹமீதா.
1954-ல் இந்தியாவில் பெற்ற வெற்றிகளை அடுத்து ஐரோப்பிய நாடுகளுக்கு பயணம் மேற்கொண்டு அங்கு போட்டிகளில் பங்கேற்கச் செல்ல தயாரானார் ஹமீதா பானு. ஆனால் ஹமீதாவுடன் வாழ்ந்துவந்ததாக சொல்லப்படும் அவரின் பயிற்சியாளரான சலாம் பயில்வான் ஹமீதா ஐரோப்பா செல்வதைத் தடுக்க அவரை கடுமையாகத் தாக்கி கை கால்களை உடைத்துவிட்டார் என்று ஹமீதாவின் வளர்ப்புப் பேரன் ஷேக்கும் பக்கத்து வீட்டுக்காரர் ரஹில்கானும் உறுதிபடுத்தி உள்ளனர்.
கைகால்கள் உடைக்கப்பட்ட பின்னர் மல்யுத்தப் போட்டிகளில் கலந்துகொள்வதில் இருந்து மாயமானார் ஹமீதா. 1987-ல் இறக்கும் வரை தன் வாழ்க்கையை பால் மற்றும் தின்பண்டங்கள் விற்பதன் மூலம் நடத்திவந்தார்.
கொண்டாடப்பட வேண்டிய வீராங்கனையை தெருக்கோடியில் நிறுத்திய சமூகம் இனிமேலாவது விழித்துக்கொண்டு அங்கீகாரம் தருமா என்பதை நீங்களே சிந்தியுங்கள்.
தொடர்புக்கு-ruckki70@yahoo.co.in