என் மலர்
சிறப்புக் கட்டுரைகள்
முதுமையில் நலம் பயக்கும் உணவுகள்
- முதுமைக்காலத்தில் எளிமையான செரிக்கக்கூடிய உணவு வகைகளை நாடுவது நல்லது.
- அரிசி வகை உணவுகளை குறைப்பதும் நல்லது.
உணவும், உணவு முறைகளும் ஆரோக்கியத்தின் அச்சாணி என்பது பலருக்கு தெரிவதே இல்லை. கையில் காசு இருந்தால் என்ன வேண்டுமென்றாலும் சாப்பிடலாம் என்ற தவறானப் போக்கு இன்றைய வாழ்வியலில் அதிகம் காணப்படுகிறது. ஆரோக்கியத்தை நிலைநாட்ட இளவயதில் மட்டுமல்ல, முதுமையிலும் அக்கறையோடு சாப்பிட வேண்டிய கட்டாயமும், அவசியமும் உள்ளது.
முதுமையில் ஆரோக்கியமாக இருந்தால் தான் சமூக நலனில் பங்கெடுக்க முடியும். அடுத்த தலைமுறையின் வளர்ச்சியிலும் பங்காற்ற முடியும். ஆகவே முதுமைக்கான உணவையும், உணவு முறைகளையும் அறிந்து கொள்வது மிக அவசியம்.
சர்க்கரைச் சத்து புரதச் சத்து, கொழுப்புச் சத்து இவற்றை சரிவிகித உணவாக எடுத்துக்கொள்ள நவீன அறிவியல் வலுயுறுத்துகின்றது. இந்த சரிவிகித ஊட்டச்சத்துக்கள் அடங்கிய உணவுகள், முதுமையில் உடலை தாங்கும் தூண்கள். முதுமையில் முன்கூட்டிய இறப்பு மற்றும் உடல்நலக்கேடுகளுக்கு மோசமான உணவு முறையானது முன்னணி பங்களிப்பாக இருப்பதை ஆய்வுத்தரவுகள் சுட்டிக்காட்டுகின்றன. எனவே சத்தான உணவுமுறையே முதுமையில் இளமைக்கான ரகசியம்.
அதே போல் சித்த மருத்துவம் வாதம், பித்தம், கபம் அடிப்படையிலான உணவு முறையை வலியுறுத்துகிறது. இதன் சிறப்பு என்னவெனில் நோய்க்கு தகுந்தாற் போல், நோயாளிகளுக்கு தகுந்தாற் போல், குறிகுணங்களுக்கு தகுந்தாற் போல் உணவு முறையைக் கூறுகிறது. இன்னும் சொல்லப்போனால், உடல் தேக அமைப்பிற்கு தகுந்தாற் போல் உணவு முறையைக் கூறுவதும் கூடுதல் சிறப்பு.
அரை வயிறு உணவு, கால் வயிறு தண்ணீர், கால் வயிறு காலியாக வைத்தல் என்பதே நலத்திற்கான எளிய வழிமுறையாக நம் முன்னோர்கள் கையாண்டு வந்தனர். முதுமையிலும் அதனைப் பின்பற்றுவது நல்லது. ஆனால், இன்றைய நவீன வாழ்வியலில் செரிமானம் செய்வதற்கு தேவையான நீருக்கும் இடம் கொடுக்காமல் வயிறு நிறைய உணவு உண்பது அசீரணத்திற்கு மட்டுமல்ல, நோய்கள் பலவற்றுக்கும் இடம் கொடுக்கும்.
வயிற்றில் அசீரணம் என்பது வாயுவால் தான். அத்தகைய வாயுவே பல்வேறு நோய்களை உண்டாக்க வல்லது என்பதை "வாதமலாது மேனி கெடாது" என்கிற சித்த மருத்துவக் கூற்றால் அறியலாம். வாயுவோடு சேரும் பித்தமும், கபமும் பல்வேறு நோய்நிலைகளுக்கு காரணமாகின்றன. ஆகவே வாதம், பித்தம், கபம் இவை மூன்றுக்கும் ஏற்றாற்போல், உணவு முறையை பின்பற்றுவது நல்லது.
எப்படி ஒவ்வொரு வியாதிக்கும் தனித்தனியாக பின்பற்ற வேண்டிய உணவு முறை உள்ளதோ அதைப்போலவே ஒவ்வொரு உடலின் அமைப்புக்கும் பின்பற்ற உணவு முறைகளை சித்த மருத்துவம் தனித்தனியே பட்டியலிடுகின்றது.
சித்த மருத்துவக் கூற்றின் படி, 100 ஆண்டுகள் ஆயுட்காலம் உள்ள ஒருவருக்கு முதல் பகுதி வாதத்தின் காலமாகவும், இரண்டாம் பகுதி பித்தம் ஆதிக்கம் செய்யும் காலமாகவும், இறுதி பகுதி கபத்தின் ஆதிக்க காலமாகவும் உள்ளது. அதாவது முதல் 33 ஆண்டுகள் மற்றும் 4 மாதங்கள் வாதத்ததின் ஆட்சிக் காலமாகும்.
இவ்வாறு இருக்க, முதுமைக் காலம் அதாவது கடைசி 33 ஆண்டுகள் மற்றும் 4 மாதங்கள் கபத்தின் ஆட்சி காலமாகும். இக்காலத்தில் கபத்துடன் சேரும் வாதம் பல்வேறு நோய்நிலைகளை உண்டாக்கி உடலையும், மனதையும் சிதைக்கும். இறப்புக்கும் துணை நிற்கும். எனவே முதுமையில் அதற்கு ஏற்றார் போல் உணவுகளை நாடுவது சிறப்பு.
நாம் பிறந்தது முதல் உண்ணும் பொருட்கள் அனைத்தையும் செரித்து இயந்திரம் போல் செயல்பட்டு வந்த சீரண மண்டலம் முதுமையில் பழுதாகி உபாதைகளை உண்டாக்கும். குடலும் சுருக்கமடைந்து விடும், நாவிலும் சுவை மொட்டுக்கள் குறைந்து விடும். ஆகவே முதுமைக்காலத்தில் எளிமையான செரிக்கக்கூடிய உணவு வகைகளை நாடுவது நல்லது.
மேலும் முதுமையில் சீரண மண்டல செயல்பாடு குறையும் என்பது பற்களை இழப்பதில் இருந்தே துவங்கிவிடுகிறது. சேதாரம் அடைந்த பற்களால் உணவினை நன்கு அரைத்து விழுங்கும் தன்மை குறைந்துவிடுகிறது. வாயில் பொருந்தாத பற்களால் உணவை நன்றாக மெல்ல முடியாமல் அப்படியே விழுங்குவதால் உணவு விழுங்குவதில் சிரமங்கள் உண்டாகும். மேலும் இதனால் அசீரணக் கோளாறுகள் ஏற்படக்கூடும். எனவே எளிமையான உணவுகளை, பொறுமையாக மென்று விழுங்குவது கூட நோய்களுக்கு இடமளிக்காமல் ஆரோக்கியத்திற்கு வலுசேர்க்கும்.
ஒரு வேளை உண்பவன் யோகி, இரண்டு வேளை உண்பவன் போகி, மூன்று வேளை உண்பவன் ரோகி என்ற வரிகள் பாரம்பரியமாக நமக்கு பழகிப்போனவை. மூன்று வேளை உண்பவர்கள் நோய்களுக்கு இடம் கொடுக்கும் ரோகிகள் என்று இருக்க, மூன்று வேளை உணவுக்கு இடையிடையே நொறுக்குத்தீனிகளை நொறுக்கும் இயந்திரமாக உடல் இருப்பதால், அது எளிதில் சோர்ந்துவிடுகிறது. முதுமை அத்தகைய சோர்வுக்கு இடமாகிறது.
முதுமைப் பருவத்தில் நுண் ஊட்டச்சத்துக்கள் மிக மிக அவசியம் என்பதால் சத்தான உணவினை நாடுவது நல்லது. இந்த சத்துக்கள் உடல் திசுக்களுக்கு வலுவூட்டும். இன்று நவீன அறிவியல் பயன்படுத்த அறிவுறுத்தும் மைக்ரோ, மேக்ரோ நுண் ஊட்டச்சத்துக்கள் பற்றிய பட்டியல் வருவதற்கு பல நூறு ஆண்டுகளுக்கு முன்னரே, நமது சித்த மருத்துவம் இந்த ஊட்டச்சத்துக்கள் அடங்கிய சிறுதானிய வகைகளையும், பாரம்பரிய அரிசி வகைகளையும் பயன்படுத்த வலியுறுத்தி இருப்பது ஆச்சர்யம் அளிக்கும். இதனால் முதுமையில் உடல் புத்துணர்ச்சி அடைந்து உடல் சோர்வு நீங்கும்.
பாரம்பரிய சித்த மருத்துவம் பாரம்பரிய உணவுக்கும் புகழ் பெற்றது. சம்பா அரிசி வகைகளைப் பற்றியும், அதனைக் கொண்டு செய்யப்படும் அவல், பிட்டுக்கும் கூட மருத்துவ நன்மைகளை விளக்குகிறது சித்த மருத்துவ நூலான பதார்த்த குண சிந்தாமணி. உணவுக்கே இலக்கணம் வகுக்கிறது நமது பாரம்பரிய மருத்துவம் என்பது உலகறியா உண்மை.
முதுமையில் முடிந்த வரை செரிக்க கூடுதலாக நேரம் எடுக்கும் உணவு பதார்த்தங்களை தவிர்ப்பது நல்லது. கருப்பு கவுனி கஞ்சி, கம்பங்கூழ், கேழ்வரகு சோளம் சேர்ந்த கஞ்சி, சிறுதானிய உணவு வகைகள் ஊட்டச்சத்துக்களின் வித்தாக உள்ளது. எனவே அவற்றை நாடுவது வயது மூப்பில் செரிமான உறுப்புக்கு மட்டுமல்லாது நோய்நிலைகளுக்கும் நல்லது. அரிசி வகை உணவுகளை குறைப்பதும் நல்லது.
முதுமையில் பொதுவாகவே அதிக உப்பு, காரம், மசாலாப் பொருட்கள் சேர்ந்த உணவுகளை தவிர்ப்பது நல்லது. இவை ரத்த அழுத்தத்தை மேலும் அதிகரிக்கும் வாய்ப்புள்ளதால் ஆரோக்கிய அக்கறையோடு அவற்றை தவிர்ப்பது நல்லது. வயது மூப்பில் முக்கியமாக சிறுநீரக மற்றும் இதய நோயாளிகள் இதனை அவசியம் கடைபிடிக்க வேண்டும்.
முதுமையில், பழங்களை அதிக அளவில் உணவில் சேர்ப்பது நல்லது. பழங்கள் சீரணத்தை துரிதமாக்கி, மலச்சிக்கலைப் போக்கும். முதுமை பருவத்தில் பெரிஸ்டால்சிஸ் எனும் குடல் இயக்கங்கள் குறைவதாலும், நாட்பட்ட நோய்நிலைகளாலும் மலச்சிக்கல் தோன்றும் என்பதால் பழங்களை நாடுவது பலனளிக்கும். பழங்களின் இயற்கை தன்மை நம் உடலுக்கு குளிர்ச்சியைத் தந்து கபத்தைக் கூட்டும். ஆகையால், கபம் சார்ந்த குறிகுணங்களான இருமல், மூக்கடைப்பு, மூச்சிரைப்பு, உடல் வலி போன்ற குறிகுணம் உள்ளவர்கள் தவிர்ப்பது நல்லது. அதே போல் இரவு நேரம், கபம் இயற்கையாக கூடும் என்பதால் பகலில் பழங்களை எடுத்துக்கொள்வது சிறந்தது.
காய்கறிகள் எடுத்துக்கொள்வதும் கூட செரிமான மண்டலத்துக்கு உதவும். தினசரி உணவில் 300 கிராம் காய்கறிகளை சேர்த்துக்கொள்ள உலக சுகாதார நிறுவனம் அறிவுறுத்துகின்றது. எனவே அரிசி உணவுகளை குறைத்து காய்கறிகளை அதிகம் சேர்ப்பது நல்லது.
நார்ச்சத்துக்கள் பல்வேறு நலன்களை அள்ளித்தரும் என சமீபத்திய ஆய்வுகள் கூறுவதால் வயது மூப்பில் இவற்றை நாடுவதும் நல்லது. காய்கறிகளில் நார்சத்துள்ளவற்றைத் தவிர கிழங்கு வகைகள் நிச்சயம் தவிர்க்கப்பட வேண்டியன. "மண்பரவு கிழங்குகளில் கருணை மட்டும் புசிக்க" உடலுக்கு நன்மை தரும் என்கிறது சித்த மருத்துவ பாடல் வரிகள். முதுமையில், இரவு உறங்க செல்வதற்கு 2 முதல் 3 மணி நேரத்திற்கு முன்னரே எளிய உணவினை எடுத்துக்கொள்வது நல்லது. உணவு உண்ட பின் குறுகிய நடைபயிற்சி செய்வதும் நல்லது. இதனை "நண்பு பெற உண்ட பின் குறுநடை கொள்வோம்" என்ற தேரையர் சித்தர் வரிகளும் நடைப்பயிற்சியை பழக உரக்க கூறுகின்றது.
முதுமையில் வதைக்கும் நோய்களான நீரிழிவு, இருதய நோய்கள், மூட்டு வலி, சிறுநீரக நோய்கள், செரிமான மண்டலக் கோளாறுகள் போன்ற இவற்றுக்கெல்லாம் தனித்தனியான உணவு முறைகளை கையாள்வது அவசியம். இவையெல்லாம் ஒட்டுமொத்தமாக ஒன்று சேர்ந்து வதைக்கும் போது எப்படி தனித்தனியான உணவு முறைகளை கையாள்வது என்ற எண்ணம் பலருக்கும் ஏற்படும். முதுமையில் தோன்றும் நோய்களும் எண்ணங்களும், ஆரோக்கியத்திற்கான பாதையில் முட்களை எறிந்து கடினமாக்குகின்றன. குறைவான எண்ணெய் தோய்ந்த உணவுகளும், குறைவான அரிசி வகை உணவுகளும், அதிக புரதச் சத்து நிறைந்த சுண்டல் வகைகளும், சிறுதானிய உணவும், பாரம்பரிய அரிசி உணவுகளும், நார்ச்சத்துள்ள பழங்களும், கீரைகளும், காய்கறிகளும், அவ்வப்போது நுண்ணூட்ட சத்துக்கள் அடங்கிய சூப் வகைகளும், சிறிது மாமிச உணவும், குறைவான உப்பும், காரமும் இவை அனைத்தும் சேர்ந்த முதுமைக்கான உணவுத்தட்டில் சுவை மட்டுமல்ல, ஆரோக்கியமும் ததும்பி நிற்கும்.
தொடர்புக்கு:drthillai.mdsiddha@gmail.com