search icon
என் மலர்tooltip icon

    சிறப்புக் கட்டுரைகள்

    முக வாதத்தை குணமாக்கும் பயிற்சிகள்
    X

    முக வாதத்தை குணமாக்கும் பயிற்சிகள்

    • வாய் கோணலாக இருப்பதால் பல் தேய்க்க முடிவதில்லை.
    • கண்ணில் இருந்து கண்ணீராக கொட்டுகிறது என்று சொல்லி அந்த பெண் பதறுகிறார்.

    3 மாத கர்ப்பிணி ஒருவர் ஆஸ்பத்திரிக்கு அவரது கணவருடன் பதட்டத்துடன் வந்தார். இதுதான் அவர்களுக்கு முதல் குழந்தை. ஏன் இந்த பதட்டம் என்று கேட்டால் அந்த பெண்ணுக்கு 3 நாளாக வாய் கோணலாகி இருக்கிறது. இரவு நன்றாக பேசி விட்டு தான் தூங்கச் சென்று இருக்கிறார். காலையில் எழுந்து பார்த்தால் வாய் கோணிக் கொண்டு இருந்துள்ளது. 2 நாளில் சரியாகி விடும் என்று நினைத்துள்ளார். ஆனால் வாய் கோணல் சரியாவதற்கு பதிலாக வலி அதிகரித்துக் கொண்டே சென்றுள்ளது. உடனே கணவரை அழைத்துக் கொண்டு ஆஸ்பத்திரிக்கு வந்துள்ளார்.

    வாய் கோணலாக இருப்பதால் பல் தேய்க்க முடிவதில்லை. பல் தேய்த்தால் வாய் ஒருபக்கம் செல்கிறது. தண்ணீரை கொண்டு கொப்பளிக்க முடியவில்லை. சாப்பிட முடியவில்லை. கண்ணில் இருந்து கண்ணீராக கொட்டுகிறது என்று சொல்லி அந்த பெண் பதறுகிறார்.

    இதேபோன்ற பாதிப்புடன் பதட்டமாக வருபவர்களை மருத்துவர்களாகிய நாங்கள் அடிக்கடி பார்த்து இருக்கிறோம். இந்த பெண்ணுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்பு தான் முகவாதம் என அழைக்கப்படுகிறது. பக்கவாதம் (ஸ்டிரோக்) உயிருக்கு ஆபத்தை விளைவிக்க கூடியது. ஆனால் முகவாதம் என்பது அந்த அளவுக்கு ஆபத்தானது அல்ல. ஆனால் பாதிக்கப்பட்ட நோயாளிகளோ தங்களுக்கு உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும் பக்கவாதம் வந்து விட்டது என அச்சம் அடைந்து பதட்டம் ஆகி விடுகிறார்கள்.

    முகவாதம் என்பது முகத்தின் ஒரு பகுதி வாதம் ஆகி விடுவது, அதாவது முகத்தின் ஒரு பகுதி செயல்படாமல் போய் விடுவது. இதைத்தான் முக வாதம் என்று சொல்கிறோம். பொதுவாக நரம்பில் 2 வகை உள்ளது. ஒன்று செயல்படும் நரம்பு, மற்றொன்று உணர்வு நரம்பு. இதில் முகத்துக்கு வரும் நரம்பு, பலகீனமாகி வரக்கூடியது தான் முக வாதம். இந்த வாதத்தால் பாதிக்கப்பட்டவர் கண்ணை மூட முடியாது. கண்ணை மூட முயற்சித்து முடியாமல் தவித்தபடி இருப்பார். மேலும் கண்ணில் இருந்து தண்ணீர் வரும்.

    ஸ்டிரோக் எனப்படும் பக்கவாதத்தால் வரும் பாதிப்பின் போது கண்ணை வழக்கம்போல் இறுக்கி மூட முடியும். நெற்றியையும் சுருக்க முடியும். இடதுபக்க சுருக்கமும், வலது பக்க சுருக்கமும் ஒரே மாதிரி இருக்கும். ஆனால் முகவாதத்தில் கண்ணை முழுவதுமாக மூட முடியாது. நெற்றி சுருக்கமும் சரியாக வராது. இதுதான் முக வாதத்துக்கும், பக்கவாதத்துக்கும் உள்ள வித்தியாசம்.

    முகவாதம் எதனால் வருகிறது என்று பார்ப்போம். காதில் ஏதாவது தொற்று பாதிப்பு இருந்தாலோ, சிறு, சிறு கொப்புளங்களாக வரும் அக்கி பாதிப்பு இருந்தாலோ, தண்டுவடத்தில் ஏதாவது பாதிப்பு இருந்தாலோ முகவாதம் வர வாய்ப்புள்ளது. ஆனால் இந்த பாதிப்புகள் ஒன்று கூட இல்லாமல் எந்தவித காரணமும் இல்லாமல் முகவாதத்தால் பாதிக்கப்படுபவர்கள் தான் அதிகம்.

    முகத்துக்கு வரும் நரம்பு மூளையில் தொடங்கி காது வழியாக வந்து முகத்தை அடைகிறது. குளிர் காற்றால் முகத்துக்கு வரும் நரம்புகள் பாதிக்கப்பட்டு அதனால் முக வாதம் வரும். உதாரணத்துக்கு பஸ்சில் ஜன்னல் ஓரமாக உட்கார்ந்தோ, காரில் ஏ.சி. போடாமல் ஜன்னல் ஓரம் உட்கார்ந்தோ பயணிக்கிறோம் என்று வைத்துக் கொள்வோம். அப்போது குளிர் காற்று படுகிறது. அல்லது குளிர் சாதன எந்திரத்தில் இருந்து வரும் காற்று வீசும் பக்கம் இரவு முழுவதும் உட்கார்ந்திருக்கிறோம் என்று வைத்துக் கொள்வோம். அந்தசமயம் குளிர் காற்று முகத்தில் தாக்குகிறது. அப்போது நரம்புகள் வீக்கம் அடைகிறது. விளைவு முகவாதத்தில் போய் நிற்கிறது.

    முகவாதத்தால் சிலருக்கு கண்ணில் இருந்து தண்ணீர் வரும். சிலருக்கு காதில் அதிக சத்தம் கேட்கும். எதிரில் நிற்பவர் மெதுவாக பேசினால் கூட நோய் பாதித்தவர்களுக்கு அதிக சத்தம் கேட்கும். நாக்கில் சுவை குறைவாக இருக்கும். இந்த பாதிப்புகளை வைத்து நோயாளி முகவாதத்தால் பாதிக்கப்பட்டுள்ளதை உறுதி செய்கிறோம். காதில் அக்கி வைரஸ் பாதித்தவர்களுக்கும் இந்த மாதிரி முக வாதம் வரும். அவர்களுக்கு அளிக்கப்படும் சிகிச்சையில் எதிர்பார்க்கிற முன்னேற்றம் இருக்காது. அவர்களுக்கு கொஞ்சம் வலியும் அதிகமாக இருக்கும். முதல் நாள் வலி குறைவாக இருக்கும், 3-வது, 4-வது நாள் வலி அதிகமாகும். இப்படி வலி அதிகரித்துக் கொண்டே செல்லும். முகவாதம் வந்தால் அச்சப்பட தேவையில்லை. இன்றைய காலத்தில் நல்ல மருந்துகள் மற்றும் உடற்பயிற்சிகள் கொடுத்து அதனை சரி செய்து விடலாம்.

    முக வாதம் வந்தவருக்கு 2 வாரம் மட்டும் குறிப்பிட்ட மாத்திரை கொடுப்போம். அப்போது கண்ணுக்குள் விடுவதற்கு ஒரு சொட்டு மருந்து கொடுப்போம். கண் திறந்து இருப்பதால் வறட்சி ஆகி விடும். அதற்காக சொட்டு மருந்து கொடுக்கிறோம்.

    பகலில் 2 மணி நேரத்துக்கு ஒரு முறை திறந்திருக்கும் கண்ணுக்கு அந்த மருந்தை போடச் சொல்வோம். களிம்பு ஒன்று கொடுப்போம். அது கண்ணுக்கு உள்பகுதியில் போடக்கூடியது. அப்புறம் வைட்டமின் மாத்திரை கொடுப்போம்.

    அதற்கு அடுத்து முகத்தில் பிளாஸ்டர் ஒன்று ஒட்டச் சொல்வோம். வெளியில் எங்காவது போனால் கண்ணுக்கு பெரிய கண்கண்ணாடி அணியக் கேட்டுக் கொள்வோம். குளிரான பகுதிக்கு சென்றால் காதை மூடும் வகையில் எதாவது அணியச் சொல்வோம். முக வாதத்தின் தீவிரத்தை பொறுத்து வைரஸ் எதிர்ப்பு மாத்திரை கொடுப்போம். அது 7 நாள் சாப்பிட வேண்டியது இருக்கும்.


    பக்தவத்சலம்

    2-வது முகவாதம் உள்ளவர்களுக்கு நரம்பு பரிசோதனை மேற்கொள்வோம். முகவாதத்தின் தீவிரம் எவ்வாறு இருக்கிறது என்பதை லேசான, மிதமான, கடுமையான பாதிப்பு என 3 விதமாக பிரித்துக் கொள்வோம். இதில் மிதமான, கடுமையான பாதிப்பாக இருந்தால் குணமாக 4 அல்லது 6 வாரங்கள் ஆகும். 4 வாரம் ஆகியும் கொஞ்சம் கூட முன்னேற்றம் இல்லை என்றால் எம்.ஆர்.ஐ. ஸ்கேன் பரிசோதனை செய்து பார்க்க வேண்டும். ஏன் என்றால் வேறு ஏதாவது நோய் தாக்கத்தை கூட நாம் முக வாதமாக கருதி இருக்கலாம்.

    முகத்தில் இடதுபக்கம் வாதம் இருக்கிறது என்றால் வாயின் வலது பக்கமாக கோணிக் கொண்டு இருக்கும். நோயாளிகள் என்ன செய்வார்கள் என்றால் வலது பக்கம் இழுத்து இருக்கிற இடம் தான் பிரச்சினை என்று எண்ணி வலது பக்கம் பயிற்சி செய்வார்கள். அப்படி செய்யக் கூடாது. அதனால் நாங்கள் முக்கியமாக சொல்வது கண் எந்த பக்கம் மூட முடியாமல் இருக்கிறதோ, அந்த பகுதி தான் பிரச்சினை, எனவே அந்த பக்கம் தான் பயிற்சி மேற்கொள்ள வேண்டும் என்போம்.

    முக வாத சிகிச்சையில் மருந்து, மாத்திரைகளை விட பிசியோதெரபி மருத்துவர்கள் அளிக்கும் உடற்பயிற்சியே அதிக பலனை கொடுக்கும். நாங்கள் கொடுக்கும் மாத்திரை, மருந்துகள் 40 சதவீதம் முதல் 50 சதவீதம் முக்கியம் என்றால் அதேஅளவு பிசியோதெரபிஸ்ட் கொடுக்கும் பயிற்சியானது 50-ல் இருந்து 60 சதவீதம் முக்கியத்துவம் பெறும்.

    பிசியோதெரபிஸ்ட் உடற்பயிற்சி சொல்லி கொடுப்பார்கள். மசாஜ் செய்யச் சொல்வார்கள். சில நோயாளிகளுக்கு எலக்ட்ரிக்கல் சிகிச்சையும் தேவைப்படும். இவை அனைத்துக்கும் மேலாக முகவாதத்தால் பாதிக்கப்பட்டோர் என்ன செய்ய வேண்டும், என்ன செய்யக்கூடாது என்பது முக்கியம் ஆகும். உதாரணத்துக்கு சோப்பு போட்டு குளிக்கும் போது மிகவும் கவனமாக இருக்க வேண்டும். குளிக்கும் போது கண்ணுக்குள் சோப்பு போகாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். முதல் ஒன்று அல்லது 2 வாரங்களுக்கு தலைக்கு குளிப்பதை தவிர்க்கலாம். தலைக்கு குளிக்கும் போது காதுக்குள் தண்ணீர் சென்று விடும். காதுக்குள் இருக்கும் தொற்றினால் கூட முக வாதம் வரலாம். அதனால் தலைக்கு குளிப்பதை தவிர்ப்பது நல்லது.

    3-வது எந்த காரணத்துக்காகவும் பயணத்தின் போது கண்ணை திறந்த நிலையில் வைத்து இருக்கக் கூடாது. கண் கண்ணாடி அணிந்து செல்ல வேண்டும். கண்ணுக்கு நேராக காற்று அடித்தால் கண்கள் உலர்ந்து போய் விடும். உலர்ந்து போனால் அதில் இருந்து கண்ணீர் வர வாய்ப்புள்ளது. அதற்காக மருத்துவர் ஒரு சொட்டு மருந்து கொடுப்பார். அதனை நாம் தொடர்ச்சியாக போட்டுக் கொள்ளலாம். அதற்கு அடுத்தது மின்விசிறிக்கு நேர் கீழே படுக்கக் கூடாது. மின்விசிறியில் இருந்து வரும் காற்று பட்டு கண் உலர்ந்து போகும்.

    அதற்கு மேல் நீங்கள் தொடர்ந்து செய்ய வேண்டியது உடற்பயிற்சி தான். இந்த உடற்பயிற்சியோடு நம் வேலையும் சேர்த்துக் கொள்ளலாம். தண்ணீர் குடிக்கும் போது டம்ளரில் வெறும் வாயால் குடிக்காமல் ஸ்டிரா வைத்து குடிப்பது ஒரு பயிற்சியாக அமையும். ஸ்டிராவில் உறிஞ்சி குடிக்கும் போது கன்னத்தின் 2 பகுதியில் இருக்கக் கூடிய தசைகள் வேலை செய்யும்.

    நிறைய பேர் வாயை அசைத்துக் கொண்டே இருந்தால் சீக்கிரம் பாதிப்பு சரியாகி விடும் என்று தவறான எண்ணம் கொள்கிறார்கள். அதற்காக பபுள்கம் மெல்ல சொல்வார்கள். சர்க்கரை நோயாளி என்றால் கோதுமையை அள்ளி வாயில் போட்டு மெல்ல சொல்வார்கள். அதெல்லாம் செய்யும் போது என்ன ஆகும் என்றால் அனைத்து தசைகளும் வேலை செய்யும். அப்போது பாதிக்கப்பட்ட தசைகள் மட்டும் அல்லாமல் இயல்பான தசைகளும் வேலை செய்யும். அதனால் நிச்சயமாக பாதிக்கப்பட்ட தசைக்கு பலன் கிடைக்காது. எனவே இந்த முறை பலனை கொடுக்காது. இந்த முறை தவறானது.

    முக வாதம் வந்தால் கண்களை மேலே தூக்குவது, புருவத்தை மேலே தூக்குவது, கண் இமைகளை மூடுவது என்பது கடினமாக இருக்கும். 10 முறை உங்கள் கண் புருவத்தை மட்டும் மேலே உயர்த்துங்கள். அப்போது நெற்றியில் சுருக்கம் வந்து விடும். 10 முறை கீழே இறக்குங்கள். கீழே இறக்கும் போது கண்ணை நன்றாக இறுக்கமாக மூடுங்கள். இதே மாதிரி 10 முறை செய்யுங்கள். தொடர்ந்து செய்தால் நல்ல பலனை தரும். உடற்பயிற்சிகளை காலை, மாலை என இருவேளை செய்யலாம். ஒவ்வொரு பயிற்சியையும் 10 முறை மேற்கொள்வது சிறப்பானது. கண்ணாடி முன்பு அமர்ந்து செய்வதால் நாம் என்ன செய்கிறோம் என்பதை தெரிந்து கொள்ள முடியும். இதேபோல பல உடற்பயிற்சிகளை பிசியோதெரபிஸ்ட் கற்றுத்தருவார்கள்.

    மேலும் கைகளால் பாதிக்கப்பட்ட கன்னத்தை வருடும் மசாஜ் சிகிச்சையும் சொல்லி தருவார்கள். அவர்கள் சொல்வதை போல் தொடர்ந்து உடற்பயிற்சிகள், மசாஜ் செய்து வந்தால் முக வாதம் கண்டிப்பாக குணமாகி இயல்பு நிலைக்கு திரும்பலாம். முக வாதம் வந்து விட்டதே என்று அச்சம் கொண்டு முடங்க தேவையில்லை. சரியான மருத்துவர், பிசியோதெரபிஸ்ட் ஆலோசனை பெற்று பாதிப்பில் இருந்து மீண்டு வந்து விடலாம்.

    தொடர்புக்கு:info@kghospital.com, 98422 66630

    Next Story
    ×