என் மலர்
சிறப்புக் கட்டுரைகள்
பாலாரிஷ்ட தோஷம் நீக்கும் அஷ்டமி திதி
- பல குடும்பங்களில் ஒருவருக்கு குழந்தை பிறந்த பின்னர் அவரது வாழ்வு முற்றிலுமாக அக்குழந்தையின் நலனுக்காகவே கழிக்கப்படுகிறது.
- குழந்தைக்கு அஷ்டமாதிபதி அஷ்டம ஸ்தானத்தில் நின்று தசை நடத்திக் கொண்டு இருந்தார்.
பூர்வ ஜென்ம புண்ணிய பலத்தால் பிறந்த குழந்தைகளை சீரும் சிறப்புமாக வளர்த்து சமுதாயத்தில் தலை சிறந்த குடிமகனாக மாற்றுவது பெற்றோரின் கடமையாகும். இயல்பான மனித வாழ்க்கையில் பாலாரிஷ்ட தோஷத்தால் சில குழந்தைகள் அதீத உடல் நலக்குறைவால் பாதிக்கப்படுகிறார்கள். அதனால் குழந்தை வளர்ப்பில் சில பெற்றோர்கள் அதிக பாதிப்பை சந்திக்கிறார்கள்.
ஒரு குழந்தையின் பிறப்பு என்பது சஞ்சித கர்மா, பிராப்த கர்மா, ஆகாம்ய கர்மா என்ற மூன்று விதமான கர்ம வினையின் கூட்டணியே. இந்த மூன்றும் மூன்று நிலைகளில் உருவாகுகிறது. 1. தந்தை வழி கர்ம வினை (ராகு - தந்தை வழி) 2. தாய் வழி கர்ம வினை (கேது - தாய் வழி) 3. சுய கர்மா.தந்தை, தாய் என இருவழி முன்னோர்கள் மூலம் கர்ம வினை வந்தாலும் தந்தை வழி முன்னோர்கள் மூலம் வரும் கர்ம வினைத் தாக்கத்திற்கு வலிமை அதிகம்.
ஒருவரின் ஜாதகத்திற்கு பலன் சொல்லும் போது ஆயுள் பற்றி தான் முதலில் கூற வேண்டும் என்றாலும் உண்மையான ஆயுட்காலத்தை கூறினால் மன வேதனை அதிகரிக்கும் என்பதால் ஆயுள் கண்டத்தை கூறி பயமுறுத்துபவர்கள் (பிரபஞ்ச ரகசியத்தை) இறைவனால் தண்டிக்கப்படுவார்கள் என்று சப்த மகரிஷிகள் தங்கள் நூல்களில் குறிப்பிட்டு இருக்கிறார்கள். ஒரு மனிதனின் ஆயுட்காலம் 120 வருடம் என ஜோதிட நூல்கள் கூறுகின்றன. தற்காலத்தில் 75 வயது வரை வாழ்ந்தாலே பெரிதாக இருக்கிறது.மனிதனின் ஆயுட்காலத்தை 4 வகையாக பிரிக்கலாம்.12 வயதிற்குள் ஆயுள் - பாலாரிஷ்டம். 27- 33 வயது ஆயுள் - அற்ப ஆயுள். 50 - 68 வயது ஆயுள் - மத்திம ஆயுள். 68 வயதிற்கு மேல் வாழ்வது - தீர்க்க ஆயுள். பொதுவாக சிறு வயது குழந்தைகளுக்கு ஏழரைச்சனி, அஷ்டமச் சனி, அஷ்டமாதிபதி, பாதகாதி தசை, அஷ்டம பாதக ஸ்தானத்தில் நின்ற கிரகங்களின் தசை புக்தி காலங்களில் பாலாரிஷ்ட தோஷத்தின் தாக்கம் சற்று மிகைப்படுத்தலாக இருக்கும்.
இது போன்ற காலத்தில் நிச்சயமாக குழந்தைகள் தொலைந்துபோய் கண்டுபிடிக்கப்பட்டு இருப்பார்கள. அல்லது தாத்தா வீட்டில் வளர்க்கப்பட்டிருப்பார்கள். அல்லது பள்ளிப்பருவத்தில் இருந்து கல்லூரி காலம் வரை விடுதியில்(ஹாஸ்டல்) தங்கிப் படித்திருப்பார்கள்.
கர்ம வினையை அனுபவிக்கவே ஒவ்வொரு ஆன்மாவும் பூமியில் ஜனனம் எடுக்கிறது. பூர்வஜென்ம புண்ணிய பாக்கியமே கரு ஸ்தானமாகவும் கர்ப்ப ஸ்தானமாகவும் அமைகிறது அந்த பாக்கியத்தால் கருத்தரித்து கர்ம வினைகளுக்கு ஏற்ப கரு வளர்ந்து கர்ம வினையை அனுபவிக்க கூடிய கிரகங்கள் இருக்கும்போது கர்ப்பசெல் நீக்கி லக்கனம் அமைந்து ஜென்மமாய் பிறக்கிறது. அவரவர் வினைகளே கிரகங்களாக மாறி இல்லங்களில் அமர்ந்து வினைகளுக்கு ஏற்ப தசைகளை அமைத்து கோட்சார கிரக சஞ்சாரம் மூலம் நம்மை நம் வினைகளுக்கு ஏற்றபடி வாழ வைக்கிறது.நம் பூர்வஜென்ம புண்ணிய பாக்கியமே ஏழரைச்சனியாக, அட்டமச்சனியாக, அர்த்தாஷ்ட மச்சனியாக, ஒன்பது கிரகங்களின் யோக, அவயோக தசையாக மாறிவருகிறது .பல குடும்பங்களில் ஏழரை சனி மற்றும் அஷ்டமச் சனி நடக்கும் காலம் வரும் போது ஏதோ நடக்கக் கூடாத தவறு நடந்தது போல் மனக் கலக்கம் அடைகிறார்கள் . அதுவும் பிறந்த குழந்தைகளுக்கு அல்லது பால்ய வயது குழந்தைகளுக்கு ஏழரை, அஷ்டமசனி நடந்தால் வீட்டில் நடக்கும் பிரச்சினைகளுக்கு குழந்தைகள் காரணம் என்ற மனக் கலக்கம் பல்வேறு பெற்றோர்களுக்கு இருக்கிறது.
பல குடும்பங்களில் ஒருவருக்கு குழந்தை பிறந்த பின்னர் அவரது வாழ்வு முற்றிலுமாக அக்குழந்தையின் நலனுக்காகவே கழிக்கப்படுகிறது. குழந்தை பிறந்தவுடன் தான் முக்கியம் இல்லை என்ற எண்ணமும், தன்னை விட குழந்தையே முக்கியம் என்ற உணர்வும் பெற்றோருக்கு வந்து விடுகிறது. அதனால் அவர்களின் அன்றாட நிகழ்வுகளுக்கு கூட முக்கியத்துவம் கொடுத்து மன வருத்தத்தை ஏற்படுத்தி கொள்கிறார்கள். ஒரு குழந்தை சமூகத்தில் தன்னை நிலை நிறுத்த ஆக்கம், ஊக்கம், மன தைரியம், நம்பிக்கை, வெற்றி, தோல்விகளை பகுத்தறியும் பக்குவமும், உடனிருப்போருடன் உறவாடும் பண்பு போன்ற பல்வேறு இயல்புகள் தேவைப்படுகிறது.
மேலும் படிப்பு, கற்றல், போட்டித்தேர்வு, தரவரிசை, மதிப்பெண், பல்வேறு கலை கற்றல் போன்றவற்றை சந்தித்தால் மட்டுமே உன்னத நிலையை அடைய முடியும் என்ற நிலையும் சமுதாயத்தில் நிலவி வருகிறது. . உலக நடப்பு இவ்வாறு இருக்க பல குழந்தைகளின் பெற்றோர்கள் குழந்தைகளுக்கு ஏழரை, அஷ்டமச் சனி நடந்தால் ஹாஸ்டலில் சேர்த்தல் குழந்தைகளால் பெற்றோருக்கும், பெற்றோர்களால் குழந்தைகளுக்கும் பாதிப்பு ஏற்படாது என்று தவறாக வழி நடத்தப்படுகிறார்கள். ஒரு வீட்டில் தந்தை மகன், தாய், மகள் என ஒன்றுக்கு மேற்பட்டவர்களுக்கு ஏழரை, அஷ்டமச் சனியின் தாக்கம் இருந்தாலும் குழந்தைகளால் தான் பாதிப்பு என்ற தவறான கருத்தும் நிலவுகிறது.
பிறந்ததில் இருந்து இருபது வயதுக்குள் ஏற்படும் ஏழரை, அஷ்டமச்சனியின் தாக்கத்தை குழந்தைகளிடம் மிகத் தெளிவாகக் காணலாம். உடல் நலக் குறைவு மிகுதியாக இருக்கும். வீட்டையே ஆஸ்பத்திரிக்கு அருகில் மாற்றி விடலாம் என்று எண்ணும் வகையில் வைத்திய செலவு இருக்கும். பிறக்கும் போது ஏழரை, அஷ்டம சனியின தாக்கம் இருந்தால் குழந்தைகளின் பெற்றோரிடம் டாக்டர் கையெழுத்து வாங்கிக் கொள்ளும் அளவுக்கு உடல்நிலை பாதிக்கும். குழந்தைப் பருவம் முதல் விடலை பருவம் வரையிலான இந்த சுற்றில் படிப்பில் ஆர்வமின்மை, பாடத்தை புரிந்து கொள்ள முடியாத நிலை, மந்தம், மறதி, தூக்கம் என்று இருப்பார்கள். குழந்தைகளால் பெற்றோருக்குள் கருத்து வேறுபாடு, சண்டை என்று பிரச்சினைகள் வந்து நீங்கும் இரண்டு மாதங்களுக்கு முன்பு ஒரு தம்பதியினர் 6 வயது ஆண் குழந்தையின் ஜாதகத்தை கொடுத்து குழந்தையால் பெற்றோருக்கு பாதிப்பு இருக்கிறதா? என்று கேட்டார்கள்.
குழந்தைக்கு அஷ்டமாதிபதி அஷ்டம ஸ்தானத்தில் நின்று தசை நடத்திக் கொண்டு இருந்தார். ஏழரை சனி நடந்து கொண்டு இருந்தது. குழந்தையை தத்து கொடுத்து வாங்கிக் கொள்ளுங்கள் நிலமை சீராகும் என்று கூறினேன். பெற்றோர்கள் விடாபிடியாக கடந்த இரண்டரை ஆண்டுகளாக தொழிலில் பல லட்சம் இழப்பு ஏற்பட்டது. இதற்கு குழந்தையின் நேரம் தான் காரணம் என்று கூறினார்கள். குழந்தையை ஹாஸ்டலில் சேர்த்தால் பணம் கிடைத்து விடுமா? என்று கேட்டார்.
தந்தையின் ஜாதகத்தை ஆய்வு செய்த போது தந்தைக்கும் விரயச் சனி. விரயத்திற்கு உங்கள் குழந்தையின் ஜாதகம் காரணம் இல்லை. உங்கள் ஜாதக குற்றமே காரணம் என்று புரிய வைத்தப் பிறகு குழந்தையை தத்து கொடுத்து வாங்கினால் போதும் என்ற மன நிலைக்கு வந்தார்கள்.
ஏழரைச் சனியின் காலத்தில் யார் உங்கள் காசை சாப்பிட்டாலும் அது ஏற்கனவே நீங்கள்பட்ட கடன். அது பூர்வ ஜென்ம தொடர்பு என்பதை உணர வேண்டும். எது நடந்தாலும் குற்றத்தை அடுத்தவர் மேல் சுமத்த கூடாது. ஏழரை, அஷ்ட சனி காலத்தில் ஏற்பட்ட பண இழப்பு எத்தனை கோவில் ஏறி இறங்கினாலும் கிடைப்பது கடினம். தர்ம கர்மாதிபதி யோகம் இருந்தால் மட்டுமே கிடைக்கும் வாய்ப்பு உண்டு. அந்த தந்தையின் தவிப்பில் பணமா? குழந்தையா? என்ற ஆதங்கம் மிகுதியாக இருந்தது.
எதுவும் அறியாத பல குழந்தைகள் சம்பந்தம் இல்லாத காரணத்திற்காக பால்ய வயதில் ஹாஸ்டலில் விடப் படுகிறார்கள். எந்த பிரச்சினையும் இல்லாவிட்டாலும் நவீன யுகத்தில் குழந்தைகளை ஹாஸ்டலில் படிக்க வைப்பது பேஷனாகிவிட்டது. இன்று பெற்றோர்களை விட அதிக கவனமாக குழந்தைகளை பராமரிக்கும் ஹாஸ்டல்கள் இருந்தாலும் உளவியல் ரீதியாக இந்த பிரச்சினையை ஆய்வு செய்தால் பல உண்மைகள் அனைவருக்கும் புரிய வரும். அவை என்ன வென்றால் முதலில் குழந்தைக்கு தாய், தந்தையின் அன்பும் அரவணைப்பும் கிடைக்காது.
உற்றார், உறவினர் மட்டும் குடும்ப உறுப்பினர்களிடம் எப்படி பழக வேண்டும் என்ற அனுபவம் அற்றவர்களாக இருப்பார்கள். இவ்வளவு ஏன் பல குழந்தைகளுக்கு தாய், தந்தையை தவிர உறவினர்களின் அறிமுகமே இருக்காது. பெற்றோர்களின் உணர்வுகளை புரிந்து கொள்ளும் தன்மை இருக்காது. குழந்தைகள் பெற்றோரை பணம் போடும் ஏ.டி.எம். மெஷினாக மட்டுமே பார்ப்பார்கள். பல குழந்தைகளின் தனித் திறமைகளுக்கு முறையான அங்கீகாரம் இல்லாமல் திறமைகள் முடக்கப்படும். தங்களுக்கு நடந்த ஹாஸ்டல் கொடுமைகளை கேட்க ஆளில்லாமல் ஆழ் மனதில் சோர்வின் உச்ச கட்ட உணர்வு மிகுதியாக இருக்கும். ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு பிறகு பெற்றோர்களிடம் எந்த ஒட்டுதலும் இல்லாமல் தனிமையாக வாழத் தொடங்குவார்கள். பெற்றோர்களின் அன்பு, அரவணைப்பு குழந்தைகளுக்கு மிக அவசியம். எந்த பிரச்சினையாக இருந்தாலும் குறைந்த பட்சம் 18 வயது வரை குழந்தைகள் பெற்றோர்கள் பராமரிப்பில் இருந்தால் மட்டுமே தலை சிறந்த குடிமகனாக வாழ முடியும். 20 வருடங்களுக்கு முன்பு வரை பால்ய வயது குழந்தைகளை எந்த பெற்றவர்களும் ஹாஸ்டலில் விட வில்லை. சனியின் தாக்கத்திற்கு பயந்து ஒடி ஒளியவில்லை. பிரச்சினைகளை வழிபாட்டால் மட்டுமே தீர்த்தார்கள்.
ஜாதகம் பார்க்க வருபவர்களில் பல பெற்றோர்கள் என் குழந்தைக்காக நான் முறைப்படி சஷ்டி விரதம் இருக்கிறேன், பிரதோஷ வழிபாடு செய்கிறேன், பல நபர்களுக்கு கோவிலில் அன்னதானம் செய்கிறேன். தர்மப்படி முறையாக வாழ்ந்தாலும் இந்த தீய கர்ம பலன் குறைய வில்லையே நான் என்ன செய்வது. குழப்பமாக உள்ளது என்கிறார்கள். எப்பொழுது ஒரு மனிதன் தான் செய்த தானத்தை பற்றி பேச ஆரம்பித்துவிட்டானோ அந்த கணத்திலிருந்து அவனுடைய அனைத்து வழிபாடும் தர்மமும் செயல் இழந்து விடும்.மகான்களும் இதைத் தான் சொல்கிறார்கள். ஒரு செயலை செய்த பின்பு மனதில் நான் இதை செய்தேன் என்ற எண்ணம் தோன்றி விட்டால் அந்த செயலுக்கு உண்டான பலன் இல்லாமல் போய்விடும்.
மனிதர்களுக்கு ஏற்படும் தீமைகளை அழிப்பதில் அஷ்டமி திதி முன்னணி வகிக்கிறது. ஸ்ரீ மகாவிஷ்ணுவின் அவதாரங்களில் அற்புதங்களும் லீலைகளும் நிறைந்த அவதாரம் கிருஷ்ணா அவதாரம். கம்சனையும், சிசுபாலனையும், நரகாசூரனையும் வதம் செய்வதற்காக அவதாரம் எடுத்தவர் கண்ணன். ஆவணி மாதம் அஷ்டமி திதியில் ரோகிணி நட்சத்திரத்துடன் கூடிய நல்ல நாளில் அவதரித்தவர். பகவான் ஸ்ரீகிருஷ்ணர் பிறந்த தினத்தை ஸ்ரீ ஜெயந்தி என்றும், கோகுலாஷ்டமி என்றும் கொண்டாடப்படுகிறது. கிருஷ்ணர் தனக்காக இல்லாமல் பிறருக்காக வாழ்ந்தவர். அதனால்தான் இவரை "கண்ணா'' ''முகுந்தா'' என்று பல பெயர்களில் அழைக்கிறோம். கண்ணைப் போல காப்பவன் என்றும், முகுந்தா என்றால் வாழ்வதற்கு இடம் அளித்து, முக்தி அளிப்பவன் என்று பொருள். கிருஷ்ண ஜெயந்தி தினத்தில் பகவான் கிருஷ்ணர் நம் வீட்டிற்கு வந்து அருள்பாலிப்பதே கோகுலாஷ்ட மியின் முக்கிய அம்சமாக பார்க்கப்படுகிறது. ஸ்ரீ கிருஷ்ணர் கீதையில் அல்லும் பகலும் என்னை பூஜித்து யாரெல்லாம் எதை என்னிடம் வேண்டுகிறார்களோ அதை அவர்களுக்கு அளிப்பேன் என்று கூறுகிறார்.
இந்த அற்புதம் நிறைந்த கிருஷ்ண ஜெயந்தி 6.9.2023, ஆவணி 20-ம் நாள், புதன்கிழமை கொண்டாடப்பட உள்ளது. எனவே கிருஷ்ண ஜெயந்திக்கு முதல்நாளில் வீடுகளை சுத்தம் செய்ய வேண்டும். பூஜை செய்யும் நாளில் வாசலில் இருந்து பூஜை அறை வரைக்கும் அரிசி மாவில் குட்டிக்குட்டி பாதங்கள் வரைந்து கண்ணனை அழைக்க வேண்டும். வீட்டின் நுழைவாயிலில் குழந்தை நடந்து வந்தது போன்ற பாதச்சுவட்டினை அரிசி மாவால் பதியச் செய்ய வேண்டும். கிருஷ்ணர் சிலைக்கு பூக்களால் அலங்காரம் செய்ய வேண்டும். அதில் துளசி இருந்தால் இன்னும் சிறப்பு. பிறகு கிருஷ்ணருக்கு பிடித்த தயிர், வெண்ணை, அவல் கண்டிப்பாக வைக்க வேண்டும். சீடை, முறுக்கு, லட்டு போன்ற இனிப்பு உணவுகளை வைக்க வேண்டும். கிருஷ்ணர் பிறந்தது நள்ளிரவு என்பதால் பூஜையை மாலையில் செய்ய வேண்டும். பாத கோலம் போட்டு அலங்கரித்தால் குட்டிக்கண்ணன் நம் வீடு தேடி வருவான் என்பது நம்பிக்கை. வீட்டில் குழந்தைகளுக்கு கண்ணன் ராதை வேடம் போட அவர்களின் ஜாதக ரீதியான தோஷம் விலகி ஆயுள், ஆரோக்கியம் மேம்படும். மகிழ்ச்சி தங்கும். அகந்தை அகலும். குழந்தைகளுக்கு மூர்க்க குணம் ஏற்படாது. குடும்பத்தில் அமைதியும் நிம்மதியும் அதிகரிக்கும்.