search icon
என் மலர்tooltip icon

    சிறப்புக் கட்டுரைகள்

    கீர்த்தி மிக்க திருக்கார்த்திகை தீபம்!
    X

    கீர்த்தி மிக்க திருக்கார்த்திகை தீபம்!

    • சிவபிரானின் இடப்பாகத்தில் அன்னை இடம் பெற்றது கார்த்திகை மாதம் கார்த்திகை நட்சத்திர நன்னாளிலே தான்.
    • ஒன்று சேர்க்கப்பட்ட தீபங்கள் கொடிமரம் அருகே அடையாளமாக அசைக்கப்பட மலை மீது தீபம் ஏற்றப்படும்.

    தமிழர் தம் வாழ்வில் தனி இடம் பெறும் மாதம் கார்த்திகை மாதம். தனி இடம் பெறும் நட்சத்திரம் கார்த்திகை.

    தமிழர் துதிக்கும் தனிப் பெரும் வெற்றித் தெய்வமான கந்தனையும் கார்த்திகையையும் இணைத்துப் பேசும் புராணக் கதைகள் ஏராளம் உண்டு.

    முன்பொரு காலத்தில் சூரியன் கார்த்திகை நட்சத்திரத்தில் இருந்த போது சிவனுடைய நெற்றிக் கண்ணில் இருந்து ஆறு பொறிகள் தோன்றி முருகன் அவதரித்ததாகப் புராணங்கள் விளக்குகின்றன.

    அதி உஷ்ண நட்சத்திரமான கார்த்திகை அனைத்து தீமைகளையும் சுட்டுப் பொசுக்கி விடும். ஆகவே தான் திருக்கார்த்திகை தினத்தில் ஒளி விளக்கேற்றி கந்தனை துதித்தல் மரபு.

    இலக்கியம் காட்டும் விளக்கொளி

    விளக்கின் வகைகளையும் அவற்றைத் தமிழ் மகளிர் போற்றித் துதித்து இல்லங்களிலும் கோவில்களிலும் ஏற்றி வந்ததையும் நூற்றுக்கணக்கான குறிப்புகள் மூலம் தமிழ் இலக்கியத்தில் காணலாம். விளக்கு அணைந்தால் அது அபசகுனம் என்று கருதப்பட்டதை 'நெடுநகர் வரைப்பில் விளக்கும் நில்லா' என்ற புறநானூற்று வரி (பாடல் 280) விளக்குகிறது.

    அருளாளர்கள் அனைவரும் விளக்கைப் போற்றுவதை சமய இலக்கியத்தில் காணலாம். நூற்றுக்கணக்கான பாடல்களில் சில எடுத்துக்காடுகள் இதோ :

    மாணிக்கவாசகர்: "ஜோதியே, சுடரே, சூழ் ஒளி விளக்கே"

    ஞானசம்பந்தர்: "விண்களார் தொழும் விளக்கு" என்று சிவபிரானைத் தொழுது ஞான விளக்கினை ஏற்றுவோம் என்ற அறைகூவலை விடுக்கிறார்.

    சுந்தரர்: பொய்யா நா அதனால் புகழ்வார்கள் மனத்தினுள்ளே மெய்யே நின்று எரியும் விளக்கே ஒத்த தேவர் பிரான்"

    அப்பர்: "இல்லக விளக்கு அது இருள் கெடுப்பது

    சொல்லக விளக்கு அது ஜோதி உள்ளது

    பல்லக விளக்கு அது பலரும் காண்பது

    நல்லக விளக்கு அது நமச்சிவாயவே"

    இப்படி 22 இடங்களில் அப்பர்பிரான் விளக்கைச் சுட்டிக் காட்டுகிறார்.

    திருமூலர் : "விளக்கினை ஏற்றி வெளியினை அறிமின்

    விளக்கின் முன்னே வேதனை மாறும்".

    விளக்கை எப்படி எப்போது ஏற்றுவது?

    குத்து விளக்கில் அடிப்பாகம் பிரம்மாவையும் நீண்ட நடு தண்டுப்பாகம் விஷ்ணுவையும் மேற்பகுதி சிவனையும் குறிப்பதால் அது மும்மூர்த்திகளையும் குறிப்பதாக ஆகிறது.

    ஒரு முகம், இரு முகம், பஞ்ச முகம் என பலவகை விளக்குகள் உண்டு. அனைத்தும் நன்மைகளையே தரும். பசு நெய் உத்தமம், அடுத்து நல்லெண்ணெய் பயன்படுத்தப்படலாம். பருத்தியால் ஆன பஞ்சு திரி அல்லது தாமரை தண்டு திரி கொண்டு ஏற்றுதல் உத்தமம். கிழக்கு மற்றும் வடக்கு திசை நோக்கி தீபங்கள் ஏற்றப்பட வேண்டும்.

    தீபத்தை வீட்டின் வாயிலில் இரு புறமும் கார்த்திகை மாதம் முழுவதும் ஏற்றுவது மரபு.

    அன்றாடம் காலையிலும் மாலை சந்தியா வேளையிலும் தீபம் ஏற்றுவது நமது மங்கையரின் வழி வழி வந்த மரபுப் பண்பாகத் திகழ்கிறது. கிராமங்களில் இன்றும் பழைய வீடுகளின் திண்ணைச் சுவரில் இரு புறமும் தீபம் ஏற்றுவதற்கான பிறை மாடங்களைக் காணலாம்.

    விளக்கு ஏற்றுவதால் ஏற்படும் பயன்கள்

    விளக்கு ஏற்றுவதால் ஏற்படும் பயன்களைப் பட்டியலிடவே முடியாது. மகாலட்சுமி வாசம் புரியும் இடம் என்பதால் செல்வச் செழிப்பு ஏற்படும். துன்பங்கள் தொலையும். கடன் தொல்லை போகும். திருமணத் தடை நீங்கும். குடும்ப ஒற்றுமை ஓங்கும். சகல விதமான கிரக தோஷங்களும் நீங்கும். பெண்கள் நலம் பெறுவர். இப்படி உலகியல் வாழ்க்கைக்கான பல அம்சங்களில் நலம் பெறுவதோடு ஆன்மீக வாழ்க்கையில் ஏற்றம் பெறச் செய்து அரிதான முக்திக்கும் வழி வகை செய்யும் ஒரு வழிபாடே திருவிளக்கு ஏற்றும் வழிபாடாகும்.

    திருவண்ணாமலை தீபம்

    பஞ்சபூத தலங்களில் அக்கினி தலமாக விளங்கும் திருவண்ணாமலை தலத்தை நினைத்தாலேயே முக்திப் பேற்றைப் பெறுவர் என்பது அறநூல்கள் தரும் அற்புத உண்மை. இந்தத்தலத்தைப் பற்றிய புராண வரலாறு அனைவரும் அறிந்த ஒன்றே!

    ஒருமுறை தமக்குள் யார் பெரியவர் என்ற போட்டி பிரம்மா, திருமால் ஆகியோருக்கு இடையே எழ, சிவபிரான் அவர்களிடம் தனது அடியையோ முடியையோ யார் காண்கிறாரோ அவரே பெரியவர் என்று கூறினார். அவர் பெரும் ஜோதிப்பிழம்பாகத் தோன்ற பிரம்மா, திருமால் இருவராலும் அடி, முடியைக் காண இயலவில்லை. இருவரின் அகங்காரம் அழிந்து பட அந்தக் கணத்தில் ஜோதிப் பிழம்பிலிருந்து சிவபிரான் சிவலிங்கத் திருவுருவில் வெளி வந்தார். ஜோதிப் பிழம்பே அருணாசலம் ஆனது.

    இந்த மலையைப் பற்றி பகவான் ரமண மகரிஷி கூறுகையில், 'கைலாயத்தில் சிவன் உறைகிறார். ஆனால் இந்த மலையே சிவபிரான் தான்" என்று கூறியருளினார். ஆக இங்கு கிரிவலம் பெரும் சிறப்பைப் பெறுகிறது.

    இங்கு கார்த்திகை தீபத் திருவிழா பத்து நாட்கள் நடைபெறும். பத்தாம் நாள் பரணி நட்சத்திரத்தில் பரணி தீபம் ஏற்றப்படும். இறைவனின் கர்ப்பக்கிரகத்தில் கற்பூரம் ஏற்றப்பட அதிலிருந்து ஒரு மடக்கில் (அகல்) நெய்த்திரியிட்ட விளக்கு ஏற்றப்படுகிறது. நந்திதேவர் முன்னிலையில் ஏற்றப்படும் ஐந்து நெய்விளக்குகள் பஞ்ச மூர்த்தங்களைக் குறிக்கும். அம்மன் சந்நிதியில் ஏற்றப்படும் ஐந்து நெய்த்திரி மடக்குகள் பஞ்ச சக்தியைக் குறிக்கும். மாலையில் அனைத்து தீபங்களும் ஒன்று சேர்க்கப்பட்டு, அனைத்தும் இறைவனில் ஐக்கியம் என்ற உண்மையைப் புலப்படுத்தும். அன்று மட்டும் ஆண்டு முழுவதும் வெளிவராத அர்த்தநாரீஸ்வரர் திருவீதி உலா வருவார்.

    சிவபிரானின் இடப்பாகத்தில் அன்னை இடம் பெற்றது கார்த்திகை மாதம் கார்த்திகை நட்சத்திர நன்னாளிலே தான்.

    ஒன்று சேர்க்கப்பட்ட தீபங்கள் கொடிமரம் அருகே அடையாளமாக அசைக்கப்பட மலை மீது தீபம் ஏற்றப்படும்.

    பல மைல் தூரம் தெரியும் இதைப் பார்த்தாலேயே அனைத்துப் பாவங்களும் போகும். நன்மைகள் ஏற்படும் என்பது ஐதீகம்.

    ஐந்து அடி உயரமுள்ள பிரம்மாண்டமான கொப்பரையில் பசுக்களின் நெய் தாரை தாரையாக ஊற்றப்பட்டு தீபம் ஏற்றப்பட லட்சக்கணக்கான மக்கள் அதை தரிசித்து வழிபடுவது இன்றளவு நடக்கும் ஒரு தெய்வீக நிகழ்வாகும்.

    ச.நாகராஜன்

    வள்ளலார் விளக்கும் தீப மகிமை

    அருட்பெருஞ்ஜோதி தனிப்பெரும் கருணை என்ற தாரக மந்திரத்தை வழங்கிய வள்ளலார் பெருமான், இல்லத்தில் தீபம் ஏற்றுவதன் முக்கியத்துவத்தைப் பலவாறாக விளக்கியுள்ளார். அவற்றில் ஒரு சிறு பகுதி இது (அவரது சொற்களிலேயே தரப்படுகிறது) :-

    "இரவில் தீபமில்லாத இடத்தில் இருக்கப்படாது. ஏனெனில், அப்படியிருந்தால் அது ஆயுள் நஷ்டத்தை உண்டுபண்ணும் ஆகையால் நாம் வாழுகிற வீட்டில் தீபத்தை வைத்து ஆயுளை விருத்தி செய்து கொள்ள வேண்டும்."

    "தீபத்தில், ஒளி, சோபை, பிரகாசம் என்ற மூன்றில் பிரகாசம் காரண அக்கினி. சோபை காரணகாரிய அக்கினி. ஒளி காரிய அக்கினி."

    ஆயுளை தீர்க்கமாக்கும் தீபமேற்றுதல் குறித்த முழு விளக்கத்தையும் அவரது உபதேசக் குறிப்புகளில் காணலாம்.

    நட்சத்திரமாலை விளக்குகள்

    பாரத தேசத்தில் இமயம் முதல் குமரி வரை உள்ள ஆலயங்களில் தினமும் ஏற்றப்படும் தீப வகைகள் ஏராளம். விளக்குகளில் மட்டும் சுமார் ஐநூறு வகைகள் உண்டு. இவை அனைத்துமே நலம் தருபவையே. ஒளிச் சுடர் விளக்குகள் ஆங்காங்கே உள்ள மக்களின் வாழ்க்கையை வளம்பெறச் செய்ய ஏற்றப்படுகின்றன.

    ஆலயங்களுக்குச் செல்வோர் இறைவனைத் தொழும் போது ஏற்படும் நலன்களை இந்த விளக்குகள் தூண்டி விடுகின்றன. இந்த வகையில் எடுத்துக்காட்டாக, ஒரே ஒரு தலத்தை மட்டும் இங்கு பார்ப்போம்.

    பாண்டி வளநாட்டில் வெள்ளாற்றின் தென்கரையில் உள்ளதும் பழம்பெரும் நூல்களால் போற்றிப் புகழப்படுவதுமாகிய ஒரு சிவத் தலம் திருப்பெருந்துறை ஆகும்.

    இந்தத் திருக்கோவிலில் இடப்படும் தீப வகைகள் சிறப்புப் பெயர் பெற்று விளங்குகின்றன.

    அவையாவன:

    நட்சத்திரமாலை : இதிலுள்ள தீபங்கள் இருபத்தேழு. சக்கரத்தில் இருபத்துநான்கு. மேலே மூன்று. இது இங்குள்ள ஆறு சபைகளுள் ஒன்றான ஆனந்தசபையின் மூலஸ்தானத்திற்குப் பின்னால் உள்ளது.

    கலா தீபம் : இதிலுள்ள தீபங்கள் ஐந்து. இது சித் சபையில் உள்ளது.

    வர்ண தீபம் : வர்ணம் என்றால் எழுத்து என்று பொருள். இதில் உள்ள தீபங்கள் ஐம்பத்தொன்று. இது சத்சபையில் உள்ளது.

    தத்துவ தீபம் : இதிலுள்ள தீபங்கள் முப்பத்தாறு. இது தேவ சபையிலுள்ளது. முப்பத்தாறு தத்துவங்களை இவை குறிக்கின்றன.

    புவன தீபம் : இதிலுள்ள தீபங்கள் 224. இது தேவ சபையில் தத்துவ தீபத்திற்கு முன்னேயுள்ளது. இதனை தீப மாலை என்றும் கூறுவர்.புவனம் 224ஐக் குறிப்பது புவனதீபம்.

    பத தீபம் : இதிலுள்ள தீபங்கள் எண்பத்தொன்று. இது இங்குள்ள குதிரைச் சேவகர்க்குப் பின் உள்ளது. பதங்கள் எண்பத்தொன்றைக் குறிப்பது பத தீபம்.

    மகாபாரதத்தில் தீபதானம் பற்றிய விளக்கம்

    தானங்களில் தீப தான மகிமையைப் பற்றி பீஷ்மர் தர்மபுத்திரருக்கு விளக்கும் போது சுக்ராசாரியாருக்கும் பலிக்கும் இடையே நடந்த உரையாடலைக் குறிப்பிடுகிறார்.

    "தனக்கு மேன்மையை விரும்புபவன் கோவிலிலும் சபாமண்டபத்திலும் நாற்சந்தியிலும் மலையிலும், உயர்ந்த மரத்திலும் தீபங்களை நித்தியமாக வைக்க வேண்டும். தீபம் வைக்கும் மனிதன் மனித குலத்திற்கே பிரகாசமாகவும் பரிசுத்த ஆத்மாவாகவும் பெயர் பெற்றவனாக இருந்து தேஜோலோகத்தை அடைவான். தீபத்தை தானமாகக் கொடுப்பவன் சொர்க்கலோகத்தில் தீபமாலைகளின் நடுவில் விளங்குவான்."

    தொடர்புக்கு:- snagarajans@yahoo.com

    Next Story
    ×