search icon
என் மலர்tooltip icon

    சிறப்புக் கட்டுரைகள்

    பாதாள லிங்கம் கோவிலில் தியானம்
    X

    பாதாள லிங்கம் கோவிலில் தியானம்

    • பாதைகள் பல இருந்தாலும் பரப்பிரம்மம் ஒன்றே என்று வயதிற்கேற்ப முயற்சிக்கேற்ப அவரவர் வழிகளில் செல்கிறோம்.
    • ஏற்கனவே எல்லாம் நிர்ணயிக்கப்பட்டது. ஆக நிகழ்வுகளிலும், செயல்களிலும் நம் உடலை நாம் இணைத்துக் கொள்ளக் கூடாது.

    பக்தி மார்க்கம் என்பது என்னைப் பொறுத்தவரை எளிதான வழிதான். கோவிலுக்குப் போகின்றோம். அர்ச்சனை, பூ, பரிகாரம் என முழு மனதோடு செய்கின்றோம். எனக்கு எல்லாம் நீயே என சரணாகதி அடைகின்றோம். தேவை என ஒரு பெரிய லிஸ்ட் வைக்கிறோம். ஆடல், பாடல், வாத்தியங்கள், அலங்காரம், தேர் திருவிழா என அமர்க்களப்படுகின்றது. பொதுவில் அநேகரும் இப்படித்தான் இருக்கின்றனர். என் கடவுள் என்னை பார்த்துக் கொள்வார் என்ற அசைக்க முடியாத நம்பிக்கை. பக்தி மார்க்கத்தினை போதித்த மகான்களோ தனக்கு என்று ஒன்றினை கேட்டதில்லை. மக்கள் சேவையே அவர்களுக்கு மகேசன் சேவை என இருப்பவர்கள்.

    சில நேரங்களில் நாம் வேண்டுவது நடக்காத பொழுது பக்தி அநேகருக்கு குறைகின்றது. சரணாகதி அடைவதில் தொய்வு ஏற்படுகின்றது. இது மனித இயல்பு. இந்த இடத்தில் அதிக பிடிப்பு, உறுதி தேவைப்படுகின்றது. மற்றபடி யதார்த்த வாழ்க்கையில் பக்தி என்ற பெயரில் அதனை சரியாக புரிந்து கொள்ளாது மனிதன் வாழும் வாழ்க்கை அப்படியே புரிதல் இல்லாமல் முடிந்து விடுகின்றது. இல்லையெனில் சோகத்தில், கவலையில் மூழ்கி விடுகின்றான்.

    பகவான் ரமண மகரிஷி கூறுவது

    கடவுள், ஆன்மா, குரு இவை அனைத்துமே ஒன்று தான். மனிதனின் மனதிற்கேற்றபடி பல உருவங்கள், பல சின்னங்கள், நாமாக்கள் சொல்லி வழிபடுகின்றோம். பாதைகள் பல இருந்தாலும் பரப்பிரம்மம் ஒன்றே என்று வயதிற்கேற்ப முயற்சிக்கேற்ப அவரவர் வழிகளில் செல்கிறோம்.

    ஓஷோ 'கடவுள் என்பதே பொய்' என்றார். தத்துவ ஞானி ஜே.கிருஷ்ணன் மூர்த்தி கடவுள் என்பதனை ஏற்கவில்லை. தந்தை பெரியாரும் இதனையேதான் சொன்னார்.


    ரமண மகரிஷி கூறியது போல் உடலில் இருப்பது பிரபஞ்சத்தில் இருக்கின்றது. வள்ளலார் கூறியது போல் அண்டத்தில் இருப்பது பிண்டத்தில் இருக்கின்றது. இதனை உணரும் வரை பக்தி வழிபாடு, உருவ வழிபாடு என்ற முறையில் செல்வது எளிது. ஆன்மாவினை நேராய் எளிதாய் உணர முடியாது என்கின்றனர் மகான்கள்.

    அவன் இன்றி ஒரு அணுவும் அசையாது

    ஏற்கனவே எல்லாம் நிர்ணயிக்கப்பட்டது. ஆக நிகழ்வுகளிலும், செயல்களிலும் நம் உடலை நாம் இணைத்துக் கொள்ளக் கூடாது. என் கர்மவினை, தலைவிதி என்று மனதில் வேதனைபடுவதை விட்டு 'சரணாகதி' என்று கடவுளிடம் விட்டுவிட வேண்டும். தீய எண்ணங்கள் ஏற்படாமல் இருக்க, மனம் கண்டபடி ஓடாது இருக்க அனைத்தையும் தாண்டி தூய விழிப்புணர்வு அவசியம் இருக்க வேண்டும்.

    மனிதன் பேசத் தெரிந்த, சிரிக்கத் தெரிந்த, உணர்ச்சிகள், உணர்வுகள் கொண்ட மிருகம், பிறரால் நமக்கு துன்பம் என்று வரும் பொழுது, தாங்க முடியாத வலி ஏற்படும் பொழுது அவரை சபிப்பதும், திரும்ப பழிக்கு பழி வாங்க நினைப்பதும் இயல்புதான். ஆனால் அவை தீர்வாகாது. சாந்தமான வழியில் போராட வேண்டும். மேற்கூறப்பட்டவை எல்லாம் பகவான் ரமணரின் வாக்குகளில் இருந்து யதார்த்த நடையில் எழுதப்பட்டவை ஆகும்.

    தூய்மை தான் ஆன்மா. அந்த தூய்மையினை தியானிக்க வேண்டும். அந்த ஒரே எண்ணம் வருவதற்கான பயிற்சியாகவும், இயல்பான சுவாசத்தில் கவனம் செலுத்துங்கள் என்று பயிற்சி தருகின்றனர். பகவான் ரமண மகரிஷி பாலகனாக தியானம் செய்த முறையினை பார்த்தாலே அரண்டு போய் விடுவோம்.

    திருவண்ணாமலை கோவிலில் பாதாள லிங்கம் கோவில் உள்ளே செல்லும் வழியிலேயே உள்ளது. இன்று அதன் மேல் கோபுரம் கூட சிறிதாக கட்டியுள்ளனர். பாதாள லிங்கத்தினை தரிசிக்க படிகட்டுகள் உள்இறங்கி செல்லும். இருட்டாக இருக்கும். காலை மெதுவே வைத்து இறங்க வேண்டும். ஆனால் பகவான் ரமணர் சிறு பாலகராய் இங்கு வந்து தியானம் செய்தபோது இந்த வசதிகள்கூட இருந்திருக்காது. உள்ளே லிங்கம் பிரதிஷ்டை செய்யப்பட்டிருக்கும். இருட்டில் எதுவும் தெரியாது.


    இந்த இடத்தில் பகவான் ரமணர் இளம் பாலகராக உள்ளேயே இரவு, பகல் என இல்லாது தொடர்ந்து ஆழ்நிலை தியானத்தில் இருந்தார். பல உண்மை அரியாத சிறுவர்கள் இவர் மீது கற்களை வீசினர். இவர் உணரவில்லை. உடலெல்லாம் எறும்பு, பூச்சி, கரையான் என கடித்து புண்படுத்தி இருந்தது. பகவான் உணரவும் இல்லை. அசையவும் இல்லை. சேஷாத்ரி சுவாமிகளே பல துறவிகளின் உதவி கொண்டு பகவானை அந்நிலையில் இருந்து மீட்டார். அப்பொழுதும் பேச்சு என்பதே இல்லை. அன்ன, ஆகாரம் உள்ளே இறங்கவில்லை. இதனை 'சமாதி' நிலை என்று குறிப்பிடுவர். இங்கு கூறப்படும் வார்த்தைகள் எதுவாக இருந்தாலும் இதில் 1 சதவீதம் நம்மால் செய்ய முடியுமா? ஆக ரமண மகரிஷி போன்றவர்களின் புத்தகங்களை படிப்பது என்பதே நாம் செய்யும் புண்ணிய செயலாக அமையும்.

    பல வருடங்களுக்கு முன்னால் எங்கள் குடும்பம் குழந்தை, குட்டிகளோடு திருவண்ணாமலை சென்றோம். குழந்தைகளுக்கு ஆன்மீக விவரங்களை விளக்கிய படியே பாதாள லிங்கம் கோவில் படிகளில் இறங்கி செல்ல முற்பட்டோம். அப்படி ஒரு இருட்டு. நாங்கள் சுமார் 10 பேருக்கு மேல் இருப்போம். இருட்டில் ஒருவர் கையை ஒருவர் பிடித்தபடி படிகட்டுகளில் இறங்கினோம். 'ஆ' ஊ என்ற சப்தம் வேறு. உள்ளே இறங்கி சமதரையில் நின்றோம். ஒரு சர விளக்கில் தீபம் இருந்தது. ஆனால் அதன் வெளிச்சத்தில் எதனையும் காண முடியவில்லை. குருக்கள் ஒருவர் வந்தார். பழக்கம் காரணமாக சற்று வேகமாய் இறங்கினார். தட்டில் ஒரு சிறிய அகல் தீபம் மற்றும் சற்று பெரிய கற்பூர கட்டி கொண்டு வந்திருந்தார். அதனை ஏற்றி சட்டென திரும்பினார். எங்களின் அருகில் சிவலிங்கம். சற்று பயந்து பின் நகர்ந்தோம். அப்படியே சுற்றி எங்கள் பக்கம் தீபாராதனை தட்டை நீட்டினார். அதைவிட பெரிய அதிர்ச்சி காத்திருந்தது. கருத்த உருவம், மிக ஒல்லியான தேகம், அதிக உயரம், இடுப்பில் கவுபீஷணம். அய்யப்பன் போல் அமர்ந்திருந்தார். உடலில் விபூதி பூச்சு. இமைக்காத அசையாத கண். 'ஆ ஆ' என அலறி விட்டோம். எங்களின் இரைச்சல் அவரது தியானத்தினை சிறிதளவு கூட அசைக்க முடியவில்லை. அவர் இந்த உலக தொடர்புகளுக்கு அப்பால் இருந்தார். அதிர்ச்சியில் அனைவரும் வெளியே குதித்து வந்தோம். சிறிது நேரம் பேச்சு இல்லை.

    ஆக காலம் எத்தனை மாறுதல்கள் பெற்றாலும் ஆன்மீகம் அதன் பாதையில் அழகாக சென்று கொண்டிருக்கின்றது என்பதனை புரிந்து கொள்ள முடிந்தது.

    இதெல்லாம் படிக்கவும், கேட்கவும் நன்றாகத் தான் இருக்கின்றது. ஆனால் நம் வாழ்க்கையில் எத்தனை விதமான அடுக்கடுக்கான சோதனைகள்? இவற்றுக்கெல்லாம் நம் கர்ம வினைதான் காரணம் என்கிறார்கள். ஒவ்வொரு நிகழ்வும் முன்பே விதிக்கப்பட்ட விதிப்படி நிகழ்கின்றது என்கிறார்கள். இப்படியெல்லாம் பேசினால் எப்படித் தான் வாழ்வது? இதற்கு பதிலாக ஏதோ 'காமா, சோமா' என்று வாழ்ந்து விடலாமே?என்று அங்கலாய்ப்பவர்கள் ஏராளம். ஏராளம்.

    நாம் நினைத்து நம் பெற்றோர்களை தேர்ந்தெடுக்கவில்லை. அப்படி ஒரு அமைப்பு இருந்திருந்தால் அனைவரும் அம்பானி, டாடா, பிர்லா, பில்கேட்ஸ் போன்ற மிக பணக்கார இடங்களை தேர்ந்தெடுத்து இருப்பார்கள். ஒரே நேரத்தில் பிறக்கும் குழந்தைகளின் வாழ்வு ஒருபோல இருப்பதில்லை. ஏன்? இதற்கு என்ன காரணம்? நம்முடைய கர்ம வினைப் பதிவுகளே திடீரென ஒவ்வொரு சூழ்நிலையிலும் பல தாக்குதலகளை ஏற்படுத்துகின்றன என்பது ஆன்மீகம் சார்ந்த கருத்து. அந்த சூழ்நிலையில் எப்படி சரியான முடிவினை எடுத்து கையாளுகின்றோம் என்பதே வருங்கால விதியினை நிர்ணயிக்கின்றது. இதையேத் தான்

    'தினை விதைத்தவன் தினை அறுப்பான்

    வினை விதைத்தவன் வினை அறுப்பான்'

    என்கின்றனர்.

    கோபம், ஆத்திரம் இன்றி நிதானமான, சரியான முடிவுகளை எடுக்க தியானம் வெகுவாய் உதவுகின்றது என்பது வலியுறுத்தப் படுகின்றது. எடுத்தவுடன் பி.எச்.டி. படிப்பு படித்துவிட சாதாரண மனிதர்களால் முடியாது. எல்.கே.ஜி முதல் ஆரம்பிக்க வேண்டும். அதற்கு தான் மனம் கட்டுப்பட உருவ வழிபாடு, சுலோகங்கள், விரதங்கள் மவுன விரதம், மூச்சு பயிற்சி, யோகா, உணவு கட்டுப்பாடு என படிப்படியாக முன்னேற வேண்டி உள்ளது.

    சிலர் சில கதைகளை மனித சமுதாயம் பயன்பெற வேண்டி பயன்படுத்துவார்கள். சிலர் தன் சுய லாபத்திற்காக பயன்படுத்துவார்கள். இங்கும் விதி அவரவர் செயல்களுக்கேற்ப வினைப் பதிவினை ஏற்படுத்துகின்றது. லாபம் அறியாமல் ஒருவர் ஒரு செயலை செய்து விட்டோம் என்று நினைக்கவே முடியாது. இயற்கை என்றாலும் இறைவன் என்றாலும் கண்ணுக்குத் தெரியாத ஒரு சக்தி அனைத்தினையும் இம்மி தவறாமல் பதிவு செய்து கொண்டு இருக்கின்றது என்பதை அனைவரும் உணர வேண்டும்.

    'எண்ணங்கள் என்பதே தொந்தரவுதான்'

    எண்ணங்களுக்கு ஏற்பதான் வாழ்க்கை. ஆகவே தான் நல்லதையே நினைக்க வேண்டும் என்கின்றனர். இந்த எண்ணங்கள் அப்படி வந்து விடுமா என்ன? நல்லது அல்லாதவற்றில் ஊறி திளைத்த மனதினை ஒடுக்கி பிடித்து கட்டுக்குள் கொண்டு வருவதே தியானம்.

    Next Story
    ×