search icon
என் மலர்tooltip icon

    சிறப்புக் கட்டுரைகள்

    இளைஞராக வந்த சிவபெருமான்
    X

    இளைஞராக வந்த சிவபெருமான்

    • ஆனந்த நிலையினை அடைவதற்கு மற்ற மூன்று நிலையினையும் கடக்க வேண்டும்.
    • வாழும் மக்கள் சூரியனைக் கொண்டு இயக்கத்தினை நடத்தலாம்.

    நம் வீடுகளில் குறிப்பாக இந்து மத வழிமுறைப்படி வாழ்பவர்கள் வீட்டில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்வது என்பது தலைமுறை தலைமுறையாக நடைபெற்று வருகின்றது. குறிப்பாக அமாவாசை நாட்களில் இதனைச் செய்வார்கள்.

    தர்ப்பணம் என்றால் என்ன?

    'திருப்தி செய்வது' என்று பொருள் படும். முன்னோர்களை திருப்தி செய்து வழிபடு என்பது நம் மகான்கள் சொல்லிக் கொடுத்த வழிபாடு ஆகும். இதில் உள்ள ரகசியம்தான் என்ன?

    சரீரத்தினை ஸ்தூல சரீரம், சூட்சும சரீரம், குண சரீரம், அஞ்சுக சரீரம், காரண சரீரம் என ஐந்து பிரிவுகளாகப் பிரித்துள்ளனர்.

    இதில் ஸ்தூல சரீரம் என்பது நாம் கண்ணால் பார்க்கக் கூடிய இந்த உடல். மற்ற நான்கும் ஆத்ம அமைப்பாகின்றது.

    இதனை மற்றொரு விதமாகவும் கூறுவார்கள். அன்னமய கோசம், மனோமய கோசம், விஞ்ஞான மயகோசம், ஆனந்த மய கோசம் என்பர்.

    இதில் ஆனந்த மய கோசம் தான் பரமாத்மாவுடன் இணையும் ஆனந்த நிலை.

    இந்த ஆனந்த நிலையினை அடைவதற்கு மற்ற மூன்று நிலையினையும் கடக்க வேண்டும். மனித உடலுக்கு உணவு அவசியம். சூட்சும உடல் பிரபஞ்ச சக்தியினைப் பெறுகின்றது. சந்திரனில் இருந்துதான் இந்த உடல் சக்தி பெறுகின்றது. இதனால்தான் அமாவாசை காலத்தில் இந்த சக்தி கிடைக்க வாய்ப்பில்லை. அதனாலேயே தர்ப்பணம் செய்யப்படுகின்றது. மனிதர் செய்யும் தர்ப்பணமே அந்த ஆத்மாக்களுக்கு சக்தியாகின்றது என்பது முன்னோர் வாக்கு. காற்று இல்லாமல் மனித உடல் இயங்காது என்பது போல் சந்திர ஒளி இல்லாமல் முன்னோர் ஆத்மாக்கள் பரிதவிக்கும் என்பதனை மகான்கள் கூறிச் சென்றுள்ளனர்.

    வாழும் மக்கள் சூரியனைக் கொண்டு இயக்கத்தினை நடத்தலாம். ஆனால் நம் முன்னோர்கள் ஆன்மாக்களுக்கு திதியினை வைத்தே தர்ப்பணம் செய்கின்றோம். ஆன்மாக்களுக்கு உடல் இல்லாவிடினும் அவர்களின் சக்திக்காக எள்ளும், நீரும் திதியன்று தர்ப்பணம் செய்தனர்.

    எள் நீரில் மூழ்கி இருந்தாலும் முளைக்காது. அது போல் ஆத்மாக்கள் பிறவா நிலையினை அடைய வேண்டும் என்கின்றனர். எள்ளுக்கு பிரபஞ்ச ஈர்ப்பு சக்தி இருப்பதால்தான் எள் எண்ணையில் தீபம் ஏற்றுகின்றனர்.

    அன்றாடம் தர்ப்பணம் செய்யச் சொன்னார்கள். அமாவாசைக்கு அவசியம் தர்ப்பணம் கொடுங்கள் என்பதற்காகவே எள் தர்ப்பணம் செய்கின்றனர். ஆடி அமாவாசை, தை அமாவாசை, புரட்டாசி அமாவாசைக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்தார்கள். ஏழு தலைமுறையினை நினைவில் கொண்டு செய்யச் சொன்னார்கள். இப்படி தலைமுறையினரைப் பற்றி யோசிக்கும் போது எல்லா மானிடமும் ஒரு மூலத்தில் இருந்து வந்தவர்களே என்பது புரியும்.

    இந்த உலகில் இப்போது இருப்பவர்கள், முன்பு இருந்தவர்கள், இனி வரப்போகின்றவர்கள் அனைவருமே ஒரு பரம்பொருளிடம் இருந்து வந்தவர்கள்தான்.

    'ஒன்றே குலம், ஒருவனே தேவன்'. இதனை ஒரு பெரியவர் சொல்ல நான் படித்தேன். பகிர்ந்து கொள்கிறேன். நம்ப வேண்டும் என்ற கட்டாயம் இல்லை. ஆனால் படித்துப் பார்ப்பதில் தவறேதும் இல்லை.

    திருவண்ணாமலை கிரிவலத்தின் சிறப்பைப் பற்றி பகவான் ரமண மகரிஷி சொன்ன உண்மை வரலாறு.

    கால்கள் இரண்டும் உணர்விழந்து தொங்கி போன ஒரு பெரியவர், வட்டுக் கட்டைகளின் உதவியுடன் மிகவும் கஷ்டப்பட்டு கிரிவலம் வந்து கொண்டிருந்தார். அவர் அதுபோல் அடிக்கடி கிரி வலம் வருவது உண்டு. ஆனால் இந்த முறை வழக்கமான உற்சாகமின்றி மிகுந்த சோர்வுடனும், கலக்கத்துடனும் அந்த மாற்றுத் திறனாளி மலையை சுற்றி வந்து கொண்டிருந்தார்.


    அதற்கு காரணம் இருந்தது. பலமுறை கிரிவலம் வந்திருந்தாலும் இதுதான் கடைசி முறை என்ற முடிவுக்கு அவர் வந்திருந்தார். ஏன்? கால்கள் தொய்வுற்றதால் தன் குடும்பத்திற்கு பாரமாக இருந்து வருவதாக அவருக்குத் தோன்றியது.

    குடும்பத்தினருக்குத் தன்னால் எந்த பிரயோஜனமும் இல்லை. அவர்களுக்கு சிரமம் மட்டும் கொடுப்பது சரியில்லை என்று அவருக்குப் புலனாகவே, அவர்களுக்கு பாரமாக இருக்கக் கூடாது என்பதற்காக, அவர்களை விட்டு விலகி, யாரிடமும் சொல்லாமல் கண்காணாமல் ஏதாவது ஒரு கிராமத்துக்குச் சென்று விடலாம் என்று அந்த பெரியவர் முடிவெடுத்தார். அதனால் கடைசி முறையாக திருவண்ணாமலைக்கு கிரிவலம் செய்ய வந்திருந்தார்.

    விந்தி, விந்தி சுருங்கிய கால்களுடன் பெரியவர் திருவண்ணாமலையை வலம் வந்து கொண்டிருந்த போது பாதி வழியில் ஒரு வாலிபர் எதிர்பட்டார்.

    பெரியவரை நெருங்கிய அந்த வாலிபர் 'ஓய் கால் சரியில்லாத நீ கவட்டை கட்டையுடன் கிரிவலம் வர வேண்டும் என்று யார் அழுதார்கள்? இப்படி எல்லாம் நடந்தால் நீ மலையை சுற்றி வர முடியாது. இதெல்லாம் உனக்கு சரி படாது என்று கூறிக் கொண்டே, எதிர் பாராத ஒரு செயலைச் செய்தார்.

    ஆமாம். அந்தப் பெரியவருக்கு உதவியாக இருந்த கோல்கள் இரண்டையும் வெடுக்கெனப் பிடுங்கி தூர எறிந்து விட்டு, அவர் பாட்டுக்குச் சென்று விட்டார்.

    அந்தப் பெரியவருக்குத் தாங்க முடியவில்லை. கோபம் பொத்துக் கொண்டு வந்தது. வந்தார், திட்டினார், கவட்டைக் கட்டைகளை தூர எறிந்தார். இப்படி ஒருத்தர் மனிதாபிமானம் இல்லாமல் இருப்பாரா? ஆவேசத்துடன் அந்த இளைஞரை திட்ட ஆரம்பித்தார். ஒரு நிமிடம் தன்னைப் பார்த்தார். உடம்பும், மனமும் சிலிர்த்தது. அப்படியே நின்றார்.

    ஆமாம். அவரது ஊனம் காணாமல் போய், கவட்டு கட்டைகளின் உதவியின்றி ஜம்மென்று நேராய் நின்று கொண்டிருந்தார் அந்த பெரியவர்.

    அந்த இளைஞர் சென்ற திசை நோக்கி தொழுதார். அவர் கண்களில் இருந்து ஆனந்தம் அலை பாய்ந்தது.

    அதன் பிறகு திருவண்ணாமலையை விட்டு அந்த பெரியவர் எங்குமே செல்லவில்லை.

    இந்த உண்மை சம்பவத்தினை பக்தர்களிடம் சொல்லி இருக்கிறார் பகவான் ரமணர்.

    அந்த பெரியவர் பல ஆண்டுகள் இதே திருவண்ணாமலையில் வாழ்ந்ததையும் பலரும் அறிவார்கள்.

    அருணாசலமலையினை சுற்றி வருவதால் அத்தனை பலன் உண்டு என்பதனை சுட்டிக் காட்டவே ரமண மகரிஷி இதைச் சொல்வார் எனப் படித்தேன்.

    கமலி ஸ்ரீபால்

    ஆம். நம் பகவான் அண்ணாமலையார்தான் அந்த இளைஞர். கால்கள் கொடுத்தவர் அந்த இறைவன்தான். கடவுள் எல்லா நன்மைகளையும் செய்து விட்டு நான்தான் செய்தேன் என சொல்லி இருக்கிறாரா என்ன?

    அப்போது மட்டும் இல்லை, இப்போதும் அண்ணாமலையார் சன்னதி முன் நின்று வேண்டினாலும் சரி, நினைத்து வேண்டினாலும் சரி அதையெல்லாம் உடனே தருவார் என்பதே உண்மை.

    ஈசனே தான் திருவண்ணாமலை.

    'ஓம் அருணாசலேஸ்வராய நமக' நான் படித்ததை இங்கு பகிர்ந்து கொள்கிறேன். பகவான் ரமண மகரிஷியின் வார்த்தைகள் அந்த பரமேஸ்வரனின் வார்த்தைகள் அல்லவா. அப்படியிருக்க அவர் கூறியிருக்கும் 'நான் யார்?' என்ற ஆத்ம விசாரணை, தியானம் இவற்றை நாம் கண்டிப்பாய் பின்பற்ற வேண்டும் அல்லவா? செய்வோமே!

    கல்வி அறிவு, அனுபவ அறிவு என்று சொல்வது உண்டு. இதில் அனுபவ அறிவு என்பதற்கே கூடுதல் சிறப்பினைச் சொல்கின்றனர். எந்த வேலைக்கும் நேர்முகக் காணலில் முன் அனுபவம் இருக்கின்றதா? என்று கேட்பார்கள்.

    'வாழ்க்கையே அனுபவம்தான், அந்த அனுபவமே நான்தான்" என கடவுளின் பதிலாக கவிஞர் குறிப்பிட்டுள்ளார்.

    உலகின் கோடானு கோடி அனுபவப் பாடங்களை நாம் வாழ்க்கை முழுவதும் கற்றுக் கொண்டே இருக்க முடியுமா என்ன? இங்குதான் தகுதி பெற்ற அனுபவங்கள் நமக்கு அனுபவப் பாடங்களாக கிடைக்கின்றது. இதே போன்றுதான் பலரின் தவறுகளும் இப்படி இருக்கக் கூடாது என்ற அனுபவ பாடமாக அமைகின்றது.

    அனுபவ அறிவினைப் பெறுவது என்பதே ஒரு பொக்கிஷத்தினைப் பெறுவது போல்தான். அதுவே நம் வாழ்விற்கு சிறந்த வழிகாட்டி. எங்கும் நம்மை விழிப்புணர்வுடன் வைக்கும் நம் தவறினை திருத்தும்.

    இந்த அறிவினைத்தான் பகவான் ரமண மகரிஷி மற்றும் பல மகான்கள் தருகின்றனர். நம்பிக்கை உள்ளவர்கள் இதனை கடை பிடிக்கலாமே.

    Next Story
    ×