என் மலர்
சிறப்புக் கட்டுரைகள்
அவரல்லவோ ரமணர்
- ஆத்ம விசாரம் கை கூடிவிட்டால் வாழ்க்கை ஆனந்தமயம் தான்.
- ஆன்மிக அன்பர்களுக்கு வெளிச்சம் தந்து வழிகாட்டிக் கொண்டிருக்கின்றன.
குடும்பத்தைத் துறந்த துறவியர்க்குக் குடும்பமே இல்லை என்று சொல்ல முடியாது. அவர்கள் தங்கள் சொந்தக் குடும்பத்தைத் துறந்தார்களே தவிர, மற்றபடி சமுதாயமே அவர்கள் குடும்பம்தான்.
அதனால்தான் தன்னலம் நீக்கிப் பொது நலத்தோடு வாழும் துறவியர் எழுத்தாளர்களாகப் பரிணமிக்கும் போது அந்த எழுத்து மகத்துவம் நிறைந்ததாக மாறி விடுகிறது. சமுதாயத்தில் பெருமளவு தாக்கத்தை ஏற்படுத்துகிறது.
இருபெரும் இதிகாசங்களை எழுதிய வால்மீகியும் வியாசரும் துறவியரே. அவர்கள் சமஸ்கிருதத்தில் எழுதிய துறவியர்.
தாயுமானவர், பட்டினத்தார், வள்ளலார் போன்றோர் தமிழில் எழுதிய துறவியர். மகான் ஸ்ரீஅரவிந்தர் ஆங்கிலத்தில் எழுதிய துறவி.
இந்த வரிசையில் திருவண்ணாமலையில் வாழ்ந்த ஸ்ரீரமணர் தமிழில் எழுதிய துறவி. அவர் பற்பல உன்னதமான தமிழ் நூல்களை இயற்றியுள்ளார்.
`உபதேச உந்தியார், உள்ளது நாள்பது, ஏகான்ம பஞ்சகம், ஆன்ம வித்தை, அட்சர மண மாலை, அருணாசல அஷ்டகம், அருணாசல நவமணிமாலை, பகவத் கீதாசாரம்` என்றிப்படித் தலைப்புகள் அமைந்து ரமணரால் இயற்றப்பட்ட நூல்கள் ஒவ்வொன்றும் உயரிய ஆன்மிகச் சிந்தனைகளைத் தாங்கியுள்ளன.
ஆதிசங்கரரின் `தட்சிணா மூர்த்தி ஸ்தோத்திரம், ஹஸ்தா மலக ஸ்தோத்திரம்` போன்ற சமஸ்கிருத நூல்களையும் ரமணர் அழகிய தமிழில் ஆக்கித் தந்துள்ளார்.
ரமணர் பேசியது குறைவு என்றாலும் ஆன்மிக நெறியில் எவ்விதம் முன்னேறுவது என்பது பற்றித் தமது பற்பல சிந்தனைகளை எழுத்திலும் பல நேரங்களில் சீடர்களுடனான பேச்சிலும் பதிவு செய்துள்ளார்.
அவற்றின் முக்கியத்துவம் கருதிச் சீடர்கள் பலர் அவற்றை உடனுக்குடன் குறித்து வைத்துள்ளனர். ஸ்ரீரமணரின் சிந்தனைகள் இன்றும் ஆன்மிக அன்பர்களுக்கு வெளிச்சம் தந்து வழிகாட்டிக் கொண்டிருக்கின்றன.
`மூச்சின் ஓட்டத்தை மனத்தால் உற்று நோக்கிக் கொண்டிருந்தால் மனம் கட்டுப்படும். அவ்வாறான நிலைத்த கண்காணிப்பு நமது மூச்சை உறுதிப் படுத்தும். மூச்சை நெறிப்படுத்தினால் போதும். நம் மனம் வலையில் பிடிபடும் பறவை போல அமைதியாகும். மூச்சுக் காற்றும் மனமும் ஒரே சக்தியின் இரு கிளைகள் போன்றவை' என்பது ஸ்ரீரமணர் கருத்து.
ஸ்ரீரமணரின் ஆன்மிகச் சிந்தனைகள் பலவும் மனத்தை மையமாகக் கொண்டு அதை உற்று நோக்கி ஆராய்பவை. உளவியல் விஞ்ஞானி போலச் செயல்பட்டு மனித மனம் தொடர்பான பல உண்மைகளைக் கண்டு பிடித்துக் கூறியுள்ளார் ரமணர்.
`மனம் என்பது ஓர் அதிசய சக்தி. அதுவே பற்பல நினைவுகளைத் தொடர்ந்து தோற்று விக்கிறது. நினைவுகளையெல்லாம் நீக்கிப் பார்த்தால் மனம் என்று தனியாய் ஒரு பொருள் இல்லை என்பது உறுதிப் படுகிறது. நம் நினைவுகளின் தொகுப்பே நமது மனம் எனப்படுகிறது.
மனம் அளவிறந்த நினைவுகளால் தொடர்ந்து விரிவடைந்து கொண்டே செல்கிறது. அந்தத் தன்மையால் அது பெரிதும் பலவீன மடைகிறது. நினைவுகள் அடங்க அடங்க மனம் ஒருமைப்பட்டு வலிமையை அடைகிறது. அத்தகைய நினைவுகள் அடங்கி விட்ட ஒருமுகப்பட்ட மனத்திற்கு ஆத்ம விசாரம் எளிதாய் சித்திக்கும். ஆத்ம விசாரம் கை கூடிவிட்டால் வாழ்க்கை ஆனந்தமயம் தான்.
மந்திரங்களைச் சொல்லும்போது முழுமையான மன ஒருமைப்பாட்டுடன் இடைவிடாது சொல்லவேண்டும். அப்படிச் சொல்வதால் கட்டாயம் மனம் அடங்கும். பின் மனம் மந்திரம் மூச்சு என எல்லாம் ஒன்றே என்று ஆகும். ஆத்ம விசாரமே தவம். ஆத்ம விசாரமன்றிப் பிறிதொரு தவமில்லை.
யோகம், தவம், மந்திரம் எல்லாமே தான் யார் என்று அறிந்து கொள்ளத்தான். ஆன்மிக நெறியில் தன்னை அறிதல் என்பது மிக முக்கியம். தன்னைச் சரியாக அறிந்து கொண்டாலன்றி ஆன்மிகத்தில் முன்னேற இயலாது.
என்றிப்படியெல்லாம் ஒரு குருவுக்கே உரிய உள்ளார்ந்த ஞானத்துடன் தான் சொல்ல வரும் சிந்தனைகளைத் தெள்ளத் தெளிவாய்த் தெரிவிக்கிறார் ஸ்ரீரமணர்.
அவர் சொல்லிச் சென்றிருக்கும் மகா வாக்கியங்களை ஒருமுறை படித்துவிட்டுக் கடந்துவிட முடியாது. அவற்றை மீண்டும் மீண்டும் படித்துப் பலமுறை யோசித்துப் புரிந்துகொள்ள வேண்டியிருக்கும்.
ஸ்ரீரமணர் அதிகம் மவுனம் பழகியவர் எனச் சொல்லப்படுகிறது. பாதாள குகையில் நெடு நாள் மவுனத்தில் தானே அவர் தவமிருந்தார்?
ஆனால் உண்மையில் ரமணரின் மவுனம் எப்படிப்பட்ட மவுனம்? பேசாமல் வாயை மூடிக் கொண்டிருந்து விட்டால் அது மவுனமாகி விடுமா? மவுனம் என்றால் என்ன என்பது பற்றியும் ஸ்ரீரமணர் கருத்துத் தெரிவித்துள்ளார்.
`மவுனமாக இருப்பது நல்லதுதான். ஆனால் வாயை மட்டும் மூடிக்கொண்டு மனம் பல்வேறு நினைவுகளில் ஓயாது அலைபாய்ந்து கொண்டிருக்குமானால் அத்தகைய மவுன விரதத்தால் எந்தப் பயனும் இல்லை. அது உண்மையான மவுன விரதம் அல்ல' என்கிறார் அவர். வாயளவில் மட்டுமல்லாமல் மனத்தளவிலும் எந்த நினைவுமில்லாமல் மவுனம் பழகவேண்டும் என்கிறார்.
பணிவு மிக நல்லது. பணிவு வர வர ஒருவன் ஆன்மிக ரீதியாக முன்னேறுகிறான் என்று பொருள். அதுசரி. பணிவு வர வரவேண்டு மானால் என்ன செய்ய வேண்டும்? அதற்கும் விளக்கம் தருகிறார்.
`இறைவன் ஒருவன். நாமெல்லாம் அவன் ஏவலுக்கு ஆட்பட்ட அவனுடைய கருவிகளே. இதை ஒவ்வொருவரும் உணரும்போது தானாகப் பணிவு வராமல் போகாது.` என்கிறார்.
`குருவின் அருட்பார்வையில் பட்டவர் அவரால் ரட்சிக்கப் படுவாரே அன்றி ஒருநாளும் கைவிடப்பட மாட்டார்' என்பது ரமணரின் வாசகம்தான்.
அப்படியானால் குருவின் திருவடி சரணம் என எண்ணி நாம் எந்தச் செயலும் செய்யா திருக்கலாமா? அப்படி இருக்கலாகாது என்கிறார்.
`குருவின் திருவடியைச் சரணடைந்தாலும் ஒவ்வொருவரும் தம்முடைய முயற்சியினாலேயே குரு காட்டிய வழிப்படி நடந்து முக்தியடைய வேண்டும். அதுதான் முக்திக்கான வழி` என்கிறார்.
நாம் நமக்கான மகிழ்ச்சியை நமக்கு வெளியே தேடுகிறோம். ஆனால் நிரந்தரமான மகிழ்ச்சி என்பது ஒருபோதும் வெளியில் இருந்து கிட்டாது.
`மகிழ்ச்சி என்பது மனிதனுக்கு உள்ளேயே இருப்பதுதானே அன்றி வெளியேயுள்ள வேறெவ்விதப் புறக்காரணங்களாலும் வருவதன்று' என அறுதியிட்டுக் கூறுகிறார்.
விதியை ரமணர் ஒப்புக் கொள்கிறார்.
`விதிப்படி தான் வாழ்க்கை நடக்கிறது. அதில் சந்தேகமே இல்லை. இந்த வாழ்க்கையில் நன்மை வந்தால் ஆர்ப்பரிக்கா மலும் தீமை வந்தால் ஒரே யடியாய்த் துவண்டு போகாமலும் இருக்க ஆன்மிகம் நமக்குக் கற்றுத் தருகிறது. பக்தியால் பக்குவம் பெற்றவர்கள் மனத்தில் சுகமோ கவலையோ எந்த பாதிப்பையும் ஏற்படுத்துவதில்லை. அவர்கள் மனம் சலனமின்றி உள்ளது.`
என்றெல்லாம் தம் சிந்தனைகளை அடியவர்களிடம் பதிவு செய்துள்ளார் ஸ்ரீரமணர்.
உலகின் முக்கியப் பிரமுகர்களெல்லாம் அவரைத் தேடித் திருவண்ணாமலை வந்தார்கள். அவர் முன்னிலையில் தங்களுக்கு நிம்மதி கிடைப்பதை உணர்ந்தார்கள்.
தம்மைத் தேடி எத்தனை பெரிய பிரமுகர்கள் வந்தாலும் அதனால் ஸ்ரீரமணர் மனம் பாதிக்கப்பட்டதில்லை. பகட்டு கர்வம் போன்ற வார்த்தைகளுக்கு அவர் அகராதியில் இடமே இல்லை.
ஒருமுறை ரமணாஸ்ரமத்தில் அன்பர்கள் ஏற்பாட்டில் ஒரு பெரிய பூஜை நடந்தது. அதன் நிறைவில் அனைவருக்கும் அன்னதானமும் ஏற்பாடாகியிருந்தது.
பல இடங்களில் இருந்து வந்த பல முக்கியப் பிரமுகர்கள் அந்த விழாவில் கலந்து கொண்டார்கள். அவர்களில் அரசியல் பிரமுகர்கள், கலைஞர்கள், வெளிதேசத்தவர்கள் எனப் பல தரப்பட்டவர்கள் இருந்தார்கள்.
ஆனால் அன்னதானம் நடைபெறும் நேரத்தில் அந்த இடத்தில் நெருக்கடி அதிகமாகியது. பிரமுகர்களுக்காக ஒதுக்கப்பட்டிருந்த இருக்கைகளில் கிடுகிடுவென்று பற்பல பரதேசிகள் விவரமறியாமல் வந்து அமர்ந்து விட்டார்கள்.
ஆசிரம நிர்வாகி திடீரென நிகழ்ந்த இந்தக் களேபரத்தைக் கண்டு திகைத்தார். பிரமுகர்களுக்கு அங்கீகாரம் தரவேண்டியது முக்கியமல்லவா? இப்போது என்ன செய்வது? அவர்களுக்கான இருக்கையில் பரதேசிகள் வந்து அமர்ந்திருக்கிறார்களே?
பரதேசிகளிடம் அவர்களுக்கு கிழக்குப் பந்தலில் அன்னதானம் நடக்கிறது என்று எடுத்துச் சொல்லி அவர்களை அங்கு செல்லுமாறு வேண்டினார் நிர்வாகி.
பரதேசிகள் இங்கிதம் அறிந்தவர்கள். மறுபேச்சுப் பேசாமல் தாங்கள் தவறுதலாய் வந்துவிட்டதாய்ச் சொல்லி, உடனே விலகி கிழக்குப் பந்தலுக்குச் சென்று அங்கே உணவு உண்ண வரிசையில் அமர்ந்துவிட்டார்கள்.
அன்னதானத்தைத் தொடங்கும் முன் எப்போதும் ஸ்ரீரமணரிடம் ஆசி பெறுவது நிர்வாகியின் வழக்கம். ரமணரைத் தேடினால் அவரை எங்குமே காணோம்.
நிர்வாகி தேடித் தேடிச் சோர்ந்து போனார். இறுதியில் ரமணரையே பிரார்த்தித்து அவர் இருக்கும் இடத்தைத் தமக்குக் காட்டியருளுமாறு வேண்டினார்.
பின்னர் ஸ்ரீரமணர் கிழக்குப் பந்தலில் பரதேசிகளோடு பரதேசியாய் வரிசையில் சாப்பிட அமர்ந்திருப்பதை அவர் கண்டுபிடித்தார். அவர் மனம் பதறியது.
`சுவாமி, ஏன் இங்கு வந்து அமர்ந்தீர்கள்? இப்படிச் செய்யலாமா? உங்கள் இருப்பிடம் இது வல்லவே?` எனக் கண்ணீருடன் வினவினார்.
`நானும் பரதேசி தானே? நீங்கள்தானே பரதேசிகளுக்குக் கிழக்குப் பந்தல் வரிசை என்று சொன்னீர்கள். நீங்கள் அறிவுறுத்தியபடி எனக்குரிய வரிசை இதுதான்! அதனால்தான் உங்கள் சொல்படி நான் இங்கு வந்து உட்கார்ந்தேன்!` என்று முகத்தில் எந்தச் சிணுக்கத்தையும் காட்டாமல் சாந்தமாய் பதிலளித்தார் ஸ்ரீரமணர்.
பிரமுகர்களுக்குக் கூடுதல் மதிப்பளித்து பரதேசிகளை ஒதுக்கியது தவறு என்பதை நிர்வாகியின் மனம் புரிந்துகொண்டது. உலகில் எல்லோரும் பிரமுகர்களே என்பதை அவர் அறிந்துகொண்டார். ஸ்ரீரமணரிடம் மனப்பூர்வமாக மன்னிப்பு வேண்டினார் அந்த நிர்வாகி.
ஸ்ரீரமணர் வாழ்வில் இதுபோல் ஏராளமான செய்திகள் கொட்டிக் கிடக்கின்றன. ரமணர் தாம் எழுதியது போலவும் பேசியது போலவும் வாழ்ந்தவர். தம் ஓயாத தவத்தால் கடவுளென்றே பலரால் கருதப்பட்டவர், இன்றும் கருதப்படுபவர் பகவான் ஸ்ரீரமணர்.
தொடர்புக்கு-thiruppurkrishnan@gmail.com