search icon
என் மலர்tooltip icon

    சிறப்புக் கட்டுரைகள்

    திரைப்பட இயக்குநர் ஆல்பிரட் ஹிட்ச்காக்
    X

    திரைப்பட இயக்குநர் ஆல்பிரட் ஹிட்ச்காக்

    • ஒரு நல்ல படத்திற்குத் தேவையானது மூன்று விஷயங்கள்.
    • திரைப்படப் பயணம் வெற்றி மேல் வெற்றியாக மாறி அவரைப் புகழேணியின் உச்சிக்கு ஏற்றியது.

    திரைத் துறையில் நகல் எடுப்பவராக வாழ்க்கையைத் தொடங்கி, பின்னால் உலகில் உள்ள லட்சக்கணக்கான மக்களை தியேட்டருக்கு வரவழைத்து நாற்காலியின் நுனியில் நடுநடுங்கும்படி அமர வைத்த மர்மக் கதை மன்னர் ஒருவர் உண்டு! அவர் யார் தெரியுமா? அவர் தான் மாஸ்டர் ஆப் சஸ்பென்ஸ் என்று எல்லோராலும் அழைக்கப்பட்ட ஆல்பிரட் ஹிட்ச்காக்!

    இதில் சுவையான விஷயம் என்னவெனில் தனது திகில் படங்களை தன்னால் தியெட்டரில் அமர்ந்து பார்க்க முடியாது என்பதை அவரே ஒத்துக் கொண்டதுதான்! எப்படித்தான் மக்கள் தனது திகில் படங்களைப் பார்க்கிறார்களோ என்று வியந்தார் அவர். இவரைப் பற்றிய சுவையான விஷயங்கள் ஏராளம் உண்டு. அவற்றைப் பார்ப்போம்.

    பிறப்பும் இளமையும்: ஆல்பிரட் ஜோசப் ஹிட்ச்காக் 1899ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 13ம் நாள் இங்கிலாந்திலுள்ள லேடன்ஸ்டோன் என்னுமிடத்தில் பிறந்தார். இவர் தந்தையார் ஒரு பலசரக்கு வியாபாரி.

    இளம் வயதிலேயே மோசமான ஒரு அனுபவத்தை இவர் தந்தையார் இவருக்குத் தந்தார். இவரது ஐந்தாம் வயதில் இவர் வீட்டில் ஒழுங்காக இல்லை என்று எண்ணி ஒரு கடிதத்தை இவர் கையில் கொடுத்து அருகில் உள்ள போலீஸ் ஸ்டேஷன் சென்று கொடுக்குமாறு கூறினார் தந்தை. இவரும் அப்படியே செய்தார்.

    சிறையில் அடைத்து வைக்குமாறு கூறப்பட்டிருந்தது. லாக்-அப்பில் சிறிது நேரம் இருந்த இவருக்கு வாழ்நாள் முழுவதும் போலீசைக் கண்டால் பயம் ஏற்பட்டது. ஆனால் இவர் தான் பின்னால் மர்மக்கதை தயாரிப்பாளராகவும் இயக்குநராகவும் திகழ்ந்தார்.

    லண்டனில் பொறியியலும் கலையையும் கற்ற இவருக்கு கதை எழுதுவதில் ஈடுபாடு ஏற்பட்டது. 1920-ல் இவர் டைட்டில் கார்ட் என்று கூறப்படும் ஒரு திரைப்படத்தின் போக்கு பற்றி பிலிமும் வசனமும் எழுதும் கார்டுகளைத் தயாரிப்பவர் ஆனார். அந்தக் காலத்திய திரைப்படங்கள் மவுனப் படங்கள். ஆகவே இந்த டைட்டில் கார்ட் மிக முக்கியம். அத்தோடு காபி ரைட்டர் எனப்படும் நகல் எடுப்பவராக வசனங்களை எழுதுவதும் இவரது தொழிலாக ஆனது.

    பாரமவுண்ட் பிலிம்சில் 1922-ல் அவர் ஒரு சின்ன படத்தை எடுத்தார். 1925-ல் கொலையை மையமாக வைத்த 'தி பிளஷர் கார்டன்' என்ற முழு நீளப் படத்தையும் எடுத்தார்.

    திருமணம்: 1926-ல் திரைப்பட எடிட்டராகப் பணியாற்றிக் கொண்டிருந்த ஆல்மா ல்யூசி ரெவிலி என்பவரை ஹிட்ச்காக் மணம் புரிந்தார். கணவரின் எல்லா திரைப்பட முயற்சிகளிலும் ஆல்மா ஒரு பங்கு வகித்தார்.

    இயல்பாகவே மற்றவரை பயமுறுத்தி ஆனந்திப்பது ஹிட்ச்காக்கின் வழக்கமாக ஆனது. குறும்புத்தனமும் ஏராளம். 39 ஸ்டெப்ஸ் என்ற படத்தில் நடிக்க வந்த நடிக நடிகையரின் கையில் விலங்கு மாட்டி விட்டு சாவி தொலைந்து விட்டதே என்று கூறி அவர்களைத் திடுக்கிட வைத்தார்.

    அதே போல கரப்பான், எலிகளைக் கண்டால் பயப்படுவோருக்கு அவற்றை பார்சலில் அனுப்பி வைப்பதும் இவருக்குப் பிடித்தமான ஒரு பழக்கம்! இந்த வேடிக்கைகள் எல்லாம் ஸ்டுடியோ செட்டில் இருப்பவரை பயமுறுத்தும்; திகைப்படைய வைக்கும்!

    ஹாலிவுட்டிற்குப் பயணம்: காலம் வேகமாக மாறத் தொடங்கியது. படங்கள் அனைத்தும் பேசும் படங்களாயின. பின்னால் அனைத்தும் வண்ணப்படங்களாக ஆயின. இங்கிலாந்தை விட்டு அமெரிக்காவில் ஹாலிவுட்டுக்குச் செல்ல எண்ணினார் ஹிட்ச்காக்.

    அவர் 1940-ல் அமெரிக்கா சென்று கால் பதித்தார். அவர் கால் பதித்த நேரம் முதல் அமெரிக்காவே நடுநடுங்கி ஆட ஆரம்பித்தது. 7 வருட ஒப்பந்தம் ஒன்றை டேவிட் ஓ. செல்ஸ்நிக் என்பவருடன் செய்து கொண்ட அவரது திரைப்படப் பயணம் வெற்றி மேல் வெற்றியாக மாறி அவரைப் புகழேணியின் உச்சிக்கு ஏற்றியது.

    இவரது புகழுக்குக் காரணம் அனைவரது பயமும் திகிலுமே தான்! ஒவ்வொரு மனிதரின் மனதின் ஓரத்திலும் பயம் இருக்கிறது என்கிறார் ஹிட்ச்காக்!

    ச.நாகராஜன்

    ஒரு காட்சியை அமைக்க இவரது கற்பனை வளமும் இவர் மேற்கொண்ட கடுமையான உழைப்பும் இணைந்து இவரது படங்களைப் பார்க்க அனைவரையும் தூண்டியது; ரசிகர்களை ஈர்த்தது. சஸ்பென்ஸ் மன்னனாக இவர் மாறினார்.

    ஒரு காட்சியை மூன்று வருடங்கள் கழித்துப் பார்த்தாலும் அதில் ஒரு குறையும் காண முடியாதபடி அது இருக்க வேண்டும் என்பது இவரது கொள்கை.

    சைக்கோ மற்றும் தி பேர்ட்ஸ்: ஹிட்ச்காக் எடுத்த படங்களில் சைக்கோ, தி பேர்ட்ஸ், டயல் எம். பார் மர்டர், ரியர் விண்டோ உள்ளிட்ட பல படங்கள் மிகவும் புகழ் பெற்றவையாகும்.

    தனது படங்களில் நடிக்க வருபவர்களை கால்நடையை நடத்துவது போல நடத்த வேண்டும் என்று இவர் கூறியதாகச் சொல்வதுண்டு.

    ஆனால் இவரிடம் படாதபாடு பட்டவர்கள் நடிகைகளே. அவர்களது அங்க அசைவு, கண் பார்வை, புன்சிரிப்பு, நடை, உடைகள், கேச அலங்காரம் என எல்லாவற்றிலும் முடிவு எடுப்பவர் இவரே.

    கதாநாயகி கிரேஸ் கெல்லி இவரிடம் அகப்பட்டுக் கொண்ட பெரும் நடிகை. ரியர் விண்டோ, டு கேட்ச் எ தீப், டயல் எம் பார் மர்டர் ஆகிய மூன்று ஹிட்ச்காக்கின் வெற்றிப் படங்களில் நடித்த இவர், பின்னால் மொனாகோ இளவரசரைக் கரம் பிடித்தார். 'டு கேட்ச் எ தீப்' என்ற படத்தில் வரும் கார் ரேஸ் காட்சி அருமையாகப் படம் பிடிக்கப்பட்ட ஒரு காட்சியாகும்.

    1960-ல் எடுக்கப்பட்ட சைக்கோ படத்தின் முடிவை யாரும் தெரிந்து கொள்ளக் கூடாது என்று அந்த நாவலின் பிரதிகள் முழுவதையும் இவர் வாங்கி விட்டார். அத்தோடு படம் ஆரம்பித்த பின்னர் யாரும் தியேட்டருக்குள் வரக் கூடாது என்றும் உத்தரவு போட்டார். அதை தியேட்டர் உரிமையாளர்களும் அப்படியே கடைப்பிடித்தனர். 109 நிமிடங்கள் ஓடும் இந்தப் படம் இவருக்கு 320 லட்சம் டாலரை ஈட்டித் தந்தது. இவரது தயாரிப்பு செலவு எட்டுலட்சத்து ஏழாயிரம் டாலர்கள்.

    குளியலறைக் காட்சி 78 கேமராக்களை வைத்து 45 வினாடிகளில் 52 'கட்'களுடன் படமாக்கப்பட்டது. இதில் கதாநாயகியாக நடித்த நடிகை ஜேனட் லீயின் கண் பார்வையை மட்டும் 26 முறை படமாக்கினார் ஹிட்ச்காக்!

    இதில் நடிப்பவர்கள் எந்தக் காட்சியைப் பற்றியும் முடிவைப் பற்றியும் யாருக்கும் சொல்லக் கூடாது என்று உறுதிமொழியையும் எடுக்கச் சொன்னார் ஹிட்ச்காக். அத்தோடு தொலைக்காட்சியில் தனக்காகப் பணியாற்றிய குழுவினரையே படம் பிடிக்க அழைத்தார்.

    1963-ல் எடுக்கப்பட்ட தி பேர்ட் படத்திற்கு 3000 நிஜப் பறவைகளும் இன்னும் இரண்டு லட்சம் டாலர் செலவில் உருவாக்கப்பட்ட பல்லாயிரம் மெக்கானிக் பறவைகளும் பயன்படுத்தப்பட்டன.

    பறவைகள் கேமராவைப் பார்த்து வர வேண்டும் என்பதற்காக ஒரு இறைச்சித் துண்டு காமராவின் லென்ஸ்களுக்குப் பக்கத்தில் வைக்கப்பட்டிருந்தது.

    பறவைகள் தாக்கும் காட்சியை இன்று பார்த்தாலும் பார்ப்பவர் கதிகலக்கம் அடைவது இயல்பே. இதில் கதாநாயகியாக நடித்தவர் டிப்பி ஹெட்ரன். 119 நிமிடங்கள் ஓடும் இந்தப் படத்தில் ஹெட்ரனைப் பறவைகள் தாக்கும் காட்சி மட்டும் 7 நாட்கள் படமாக்கப்பட்டது. இதில் நடித்த அவர் ஒரு வாரம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அந்த அதிர்ச்சியில் இருந்து விடுபட!

    லண்டனில் பேர்ட் திரைப்படத்தைப் பார்த்து விட்டு தியேட்டரில் இருந்து வெளியேறிய ரசிகர்கள் அலறிவிட்டார்கள். தாங்கள் திரைப்படத்தில் பார்த்து விட்டு வந்த பறவைகள் நிஜமாகவே அலறும் சத்தத்தைக் கேட்டு! ஆம், வெளியே யாருக்கும் தெரியாதபடி மரக்கிளைகளில் வைக்கப்பட்டிருந்த ஸ்பீக்கர்களில் பறவைகள் அலறும் ஒலி ஒலிபரப்பப்பட்டது!

    இசையை ஹிட்ச்காக் பயன்படுத்திய விதம் அனைவராலும் பிரமிக்க வைக்கும்படி அமைந்திருந்தது. ஒரு காட்சி முடியும்போது அடுத்த காட்சி ஆரம்பிக்கும் சில விநாடிகளில் அவர் இசையைப் பயன்படுத்திய விதம் அனைவரையும் வியப்படைய வைத்தது!

    இப்படி ஹிட்ச்காக்கைப் பற்றிய ஏராளமான செய்திகள் உண்டு.

    முக்கியமான காட்சிகளைப் பார்க்கவில்லையே என்று யாரும் கவலைப்பட வேண்டாம். இந்த இணையதள யுகத்தில் இந்த மூன்று நிமிடக் காட்சிகளை இணையதளத்தில் எப்போது வேண்டுமானாலும் பார்க்கலாம். (நிச்சயம் பார்க்கப்பட வேண்டியவை டு கேட்ச் எ தீப் – கார்ரேஸ், சைக்கோ -குளியலறைக் காட்சி, தி பேர்ட் - பறவைகள் தாக்கும் பைனல் அட்டாக் காட்சி)

    அவரை வருத்திய ஒரே விஷயம்தனது உடலைப் பற்றி அவர் வெகுவாக அதிருப்தி கொண்டிருந்தார். அப்படி ஒரு பருமன்! வாழ்நாள் முழுவதும் அவரை வருந்தச் செய்த விஷயம் இது தான்!

    மறைவு: 1980-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 29-ம் நாள் ஹிட்ச்காகக் சிறுநீரகக் கோளாறால் லாஸ் ஏஞ்சல்ஸில் தனது இல்லத்தில் மரணமடைந்தார். அவரது இறுதிச் சடங்குகள் பெவர்லி ஹில்சில் நடைபெற்றது. அவரது உடல் எரிக்கப்பட்டு, அஸ்தி பசிபிக் மகா சமுத்திரத்தில் தூவப்பட்டது.

    அறுபது ஆண்டுகளில் அவர் எடுத்த படங்கள் 50.

    46 முறை அகாடமி விருதுக்காக அவர் பரிந்துரைக்கப்பட்டாலும் ஒரு முறை கூட அவர் அந்த விருதைப் பெறவில்லை. என்றாலும் கூட லட்சோபலட்சம் ரசிகர்களின் மனதில் அவர் பெற்றிருக்கும் இடம் அந்த விருதை விடப் பெரியதே!

    2018-ல் அமெரிக்க நேஷனல் பிலிம் பதிவில் தேர்ந்தெடுக்கப்பட்ட பாதுகாக்கப்பட வேண்டிய படங்களில் அவரது எட்டுப் படங்கள் இடம் பெற்றுள்ளன.

    அவருக்கு க்னைட் விருது 1980-ல் அவர் மறைவதற்கு நான்கு மாதங்கள் முன்பாக பிரிட்டிஷ் அரசால் வழங்கப்பட்டது.

    வெற்றிக்குக் காரணம்: ஏராளமான நகைச்சுவை கலந்த பொன்மொழிகளை அவர் உதிர்த்துள்ளார். அவற்றில் அவர் கண்ட அனுபவ உண்மைகள் பொதிந்திருக்கின்றன. எடுத்துக்காட்டிற்கு இரண்டு இதோ:

    ஒரு நல்ல படத்திற்குத் தேவையானது மூன்று விஷயங்கள். 1. ஸ்க்ரிப்ட் 2. ஸ்கிரிப்ட் 3.ஸ்கிரிப்ட் (கதையின் எழுத்து வடிவம்)

    ஒரு படத்தின் நீளம் பார்ப்பவர் டாய்லெட் டுக்குப் போக வேண்டும் என்ற தாக்குப் பிடிக்கும் நேரத்தை விடக் குறைவாகவே இருக்க வேண்டும். தனது வெற்றிக்கான காரணத்தைப் பற்றி அவரே கூறி இருக்கிறார் இப்படி: தர்க்கத்தை விட முக்கியமானது கற்பனை வளம்.

    இமாஜினேஷன் என்ற இதே காரணத்தை தனது வெற்றிக்குக் காரணமாகக் கூறிய இன்னொருவர் - உலகின் ஆகப் பெரும் விஞ்ஞானியான ஆல்பர்ட் ஐன்ஸ்டீன்!

    நகல் எடுப்பவரை லட்சோபலட்சம் மக்களின் மனதில் ஏற்றி வைத்த கற்பனை வளம் வெற்றிக்கு வழி காட்டும் அஸ்திவாரம் அல்லவா!

    தொடர்புக்கு:- snagarajans@yahoo.com

    Next Story
    ×