என் மலர்
சிறப்புக் கட்டுரைகள்
மழலை உள்ளமே மகிழ்ச்சி இல்லமே!
- புன்னகை தவழச் செல்வந்தரைப் பார்த்த துறவி ஒரு கதை சொன்னார்.
- குழந்தை உள்ளம் என்பது வஞ்சமும் சூதும் வந்து படியாத தூய்மை உடையது.
மழலை உள்ளம் தான் எப்போதும் மகிழ்ச்சியின் இல்லம் என்பதில் இருவேறு கருத்து இல்லாத இனிய வாசகர்களே! வணக்கம்.
தொல்லைகள் நிறைந்த உலகம் என்று எப்போதும் அலுத்துக் கொண்டுதான் வாழ்க்கை நகர்ந்துகொண்டே இருக்கிறது. துன்பம் யாவற்றையும் இன்பமாக்கவே மனித முயற்சிகள் தொடர்ந்துகொண்டே இருக்கின்றன. ஆயினும் முற்றுப்புள்ளி வைக்கும் வாய்ப்புகள் நழுவிக்கொண்டேதான் போகின்றன. "பிள்ளையாய் இருந்து விட்டால் இல்லை ஒரு தொல்லையடா!" என்னும் கவியரசரின் வரிகள் அறுபதாண்டுகளுக்குப் பின்னாலும் அர்த்தம் செறிந்தவையாகவே இருக்கின்றன.
மகிழ்ச்சி என்பது மனம் சார்ந்ததா? இல்லை பொருள்கள் சார்ந்ததா? என்கிற ஆழமான ஒரு கேள்வியை முன்வைத்து நாம் ஓர் ஆராய்ச்சியைத் தொடங்குவோம். மகிழ்ச்சிக்குப் பொருள்வடிவம் என்பதோ அளவை மற்றும் உருவ வடிவம் என்பதோ கிடையாது எனும்போது அதற்குப் பொருள்கள் காரணமாக இருக்க முடியாது. எனவே மகிழ்ச்சிக்கு மனம் என்பதே பெரும்பாலும் காரணமாக அமைகிறது.
மனித மனம் என்பதற்கு வடிவ அமைப்பு இல்லை என்றாலும், வயதுக்கு ஏற்றவாறு அதில் அறிவுசார்ந்த வளர்ச்சி நிலைகள் உண்டாகின்றன. மனிதன் குழந்தையாக இருக்கும்போது அவனுக்கு அப்பழுக்கற்ற மனம் இயல்பாக அமைகிறது. அந்த வகையில் குழந்தை மனம் என்பது, இயல்பாகச் சிந்திக்கிறது, இயல்பாகச் சிரிக்கிறது, இயல்பாகக் கோபப்படுகிறது, இயல்பாக அழுகிறது. குழந்தை உள்ளம் தம்மால் இயலாத சிக்கல்களுக்குள் வம்படியாக மாட்டிக்கொண்டு அல்லல்படுவதில்லை; வீணான ஆசைகளை வளர்த்துக்கொண்டு, தேவையற்ற பரபரப்பு, மன அழுத்தம், ரத்த அழுத்தம் போன்ற நோய்களுக்குள் அகப்பட்டுப் பெரிய நோய்களுக்கான வாசல் களைத் திறந்து விடுவதில்லை.
ஒரு பெரிய செல்வந்தர், ஒரு துறவியிடம் சென்றார். "வாழ்க்கையில் தேவையான அளவுக்குமேல் சொத்துச் சேர்த்து விட்டேன். மனைவி மக்கள் சுற்றம் என எல்லோரும் புடைசூழப் பெரிய மாளிகையில் வசதி வாய்ப்புகளுடன் வாழ்ந்து வருகிறேன். ஆனாலும் நான் உண்மையான மகிழ்ச்சியுடன் வாழ்க்கையை நடத்தி வருகிறேனா என்பதில் பெரிய சந்தேகம் இருக்கிறது.
இப்போது இருக்கிற செல்வம், பணம், காசு எல்லாமும் ஒருநாள் ஒருநொடியில் இல்லாமல் போய்விடும் என்பதில் தெளிவாக இருக்கிறேன். ஆனாலும் மனைவி, மக்கள், சுற்றத்தினர் அனைவரும் என்னிடம் பாசமாக இருப்பதுபோல் தெரிந்தாலும், ஏதாவதொரு பயன்கருதியே போலி அன்புடன் பழகி வருவதாகவே தோன்றுகிறது. உண்மையான மகிழ்ச்சி என்பது எது? அதை அடைவதற்கு நான் இனிமேல் என்ன செய்ய வேண்டும்?" என்று கேட்டார்.
புன்னகை தவழச் செல்வந்தரைப் பார்த்த துறவி ஒரு கதை சொன்னார்." ஓர் ஊரில் ஓர் இடத்தில் ஆயிரம் கண்ணாடிகள் கொண்ட அறை என ஓர் அறை இருந்தது. அந்த அறைக்குள் ஒருநாள் ஓர் அழகிய சிறுமி நுழைந்தாள். நுழைந்தவுடன், அந்தச் சிறுமியின் பிம்பம் ஆயிரம் கண்ணாடிகளிலும் பிரதிபலிக்கத் தொடங்கியது. தன்னைச் சுற்றித், தன்னைப்போல ஆயிரம் அழகிய குழந்தைகள் நிற்பதைப் பார்த்து, அவர்கள் அனைவரும் தன்னோடு விளையாட வந்திருப்பதாக மகிழ்ந்தாள். கைதட்டி ஒலியெழுப்பிச் சிரித்தாள். சுற்றிநின்ற ஆயிரம் குழந்தைகளும் கைதட்டி ஒலியெழுப்பிச் சிரித்தனர். இவளுக்கு மகிழ்ச்சி தாங்க முடிய வில்லை. உலகிலேயே மிகவும் மகிழ்ச்சியான இடம் இதுதான் என்று அடிக்கடி அந்த ஆயிரம் கண்ணாடி அறைக்குச் சென்று மகிழ்ச்சியோடு விளையாடி வந்தாள்.
அதே இடத்திற்கு ஒருநாள் மனநிலை சரியில்லாத ஒரு மனிதர் சென்றார். உள்ளே செல்லும்போதே சற்றுக் கோபத்துடன் சென்ற அவர், அறைக்குள் ஆயிரம் கண்ணாடிகளில் இவரைப்போலவே ஆயிரம் மனிதர்கள் தெரிந்ததால் மேலும் கோபமடைந்து விட்டார். அச்சத்துடன், அந்த பிம்பங்களைப் பார்த்தார். அவர்களை அடிக்கப் போவதைப்போலக் கைகளை ஓங்கினார்.
பதிலுக்கு அவர்களும் கைகளை ஒரேமாதிரி ஓங்கியதும், உலகத்திலேயே மோசமான இடம் இதுதான். எல்லா மனிதர்களும் என்னுடன் சண்டையிடவே வருகின்றனர்! என்று சொல்லிக்கொண்டே அந்த இடத்தை விட்டு வெளியேறி விட்டார்.
இந்தச் சமூக வாழ்க்கையும் அந்த ஆயிரம் கண்ணாடி அறை போலத்தான். நாம் மற்றவர்களை எந்த மனநிலையோடு பார்க்கிறோமோ, அதே மனநிலையோடுதான் மற்றவர்களும் நம்மைப் பார்ப்பார்கள். நாம் நமது உள்ளத்தை எப்படி வைத்திருக்கிறோமோ அதற்கேற்பத்தான் மகிழ்ச்சி பெருகுவதும், இல்லாமல் போவதும். மனத்தை ஒரு குழந்தையின் மனம்போல வைத்துக்கொண்டால் எந்நாளும் மகிழ்ச்சிநாளே. மனநிலை குழம்பியவர் மனநிலை வயப்பட்டால் துன்பமும் துயரமுமே மிஞ்சும்" என்று சொல்லி முடித்தார் துறவி.
மனிதனுக்கு வயது ஆக ஆக அவனது பருவங்களும் வளர்ந்து வளர்ந்து மாறிக் கொண்டே போகின்றன. எனவே அவன் தனது வாழ்நாளில் குறுகிய ஒரு பகுதியையே குழந்தைப் பருவமாக வாழ முடியும். அப்படி யானால், அவன் வாழ்நாள் முழுவதும் மகிழ்ச்சி யாக வாழக் குழந்தைப் பருவத்தை எப்படித் தக்கவைத்துக் கொள்ள முடியும்? அப்படியே குழந்தை மனத்தை ஏற்படுத்திக்கொண்டு வாழ்வதென்றால், குழந்தை உள்ளத்திற்கு அப்படி என்ன சிறப்பு?.
குழந்தை உள்ளம் என்பது வஞ்சமும் சூதும் வந்து படியாத தூய்மை உடையது. அதனால் அது எதைச் செய்தாலும் நேரடியான பயனை நோக்கியதாக இருக்கும். சிரிப்பு வந்தால் சிரிக்கும். அழுகை வந்தால் அழும்!. அவ்வளவுதான். எதைச் செய்தாலும் நெஞ்சுக்குள் ஒரு சூழ்ச்சியை வைத்துக்கொண்டு, முகத்தளவில் போலியாய் ஒரு புன்னகையை உருவாக்கிக் காட்டாது.
அதனால் குழந்தையின் சிரிப்பில் ஒரு பூவின் மலர்ச்சி, தெய்வத் தன்மையோடு வெளிப்பட்டு நிற்கும். குழந்தை உள்ளம் அப்பழுக்கற்ற தன்மையில் முழுமையும் தனது மகிழ்ச்சியைச் சிரிப்பாய் வெளிப்படுத்தும்போது, மகிழ்வின் முழுப்பலனும் உடல்முழுவதும் பரவி நோய்த்துன்பம் அகன்று போகும். உடம்பும் மனமும் புத்துணர்வில் பொங்கிச் சிலிர்க்கும்.
மனிதன் குழந்தையாக இருக்கும்போது ஒருநாளைக்குக் குறைந்தது முந்நூறு தடவை சிரிக்கிறானாம். யாரைப்பார்த்தாலும் சிரிப்பு! எது அசைந்தாலும் சிரிப்பு! எந்த ஓசை கேட்டாலும் சிரிப்பு! அடுத்தவர் குழந்தையைப் பார்த்துச் சிரித்தால் கேட்கவே வேண்டாம், துள்ளிக் குதிக்கிற சிரிப்பு! இப்படிச் சிரிப்பும் மகிழ்ச்சியுமாய் வாழ்ந்த மனிதன், வயது ஏறஏறப் பருவம் வளர வளர எங்கே தொலைத்தான் தனது சிரிப்பையும் மகிழ்ச்சியையும்?. அறிவும் சிந்தனையும் பெருகப் பெருகப் பொதுநலமும் பரந்த மனப்பான்மையும் சிந்தையில் வளராமல் சுயநலமும் குறுகிய மனப்பான்மையும் கொள்கலமாகிப் போனதே காரணமாகிப் போனது.
" சீரகம் இல்லாத குழம்பும் குழம்பல்ல! சிறு குழந்தை இல்லாத வீடும் வீடல்ல!" என்கிற ஒரு பழமொழியை என்னுடைய தாயார் அடிக்கடி கூறக் கேட்டிருக்கிறேன். இதன் பொருள், 'பெரியவர்களாகக் கூடியிருக்கும் வீட்டில் குதூகலம் என்பது குடியிருக்காது!; எதைப்போல என்றால் சீரகம் போடாத குழம்பில் சுவையிருக்காது! என்பதைப் போல'. சோர்ந்துகிடக்கும் ஒரு தந்தை தாயின் முகத்தை, ஒருகுழந்தையின் புன்னகை மாற்றிவிடும். தூங்கி வழிந்து சென்று கொண்டிருக்கும் ஒரு பேருந்துக்குள், கைக் குழந்தையோடு ஒரு தாய் ஏறியதும், அந்தக் குழந்தையின் மகிழ்ச்சி முகத்தையும் குதூகலமாகத் துள்ளிக்குதிக்கும் அழகையும் பார்த்து ஒட்டு மொத்தப் பயணிகளும் மகிழ்ச்சியில் மாறிப்போனதைக் கி.ரா.வின் சிறுகதையொன்று விளக்கும்.
குழந்தை அழுவதும் அப்படித்தான். தேவைக்காக அழும்; கிடைத்துவிட்டால் அடுத்த நொடியே அழுகை கையை நிறுத்திவிடும். கிடைக்காமல் போனாலும் அதை நினைத்து ஏங்கியே அழுகையைத் தொடராது.
அடுத்ததில் கவனத்தை மாற்றி மறந்து போகும். பசிக்காக அழும் குழந்தை பசி அடங்கியதும் நிறுத்திவிடும். அடுத்த இரண்டு, மூன்று மணி நேரங்களில் பசித்தால் என்ன செய்வது என்று இப்போதே மனத்தைப்போட்டு உலுக்கித் துன்பப் படுத்தாது. அப்போது வரும்போது அதை நினைக்கும்; முடிந்துபோனால் மறந்து போகும்.
குழந்தைக்கு வருகிற கோபமும் அப்படித்தான். அடுத்த சில நொடிகளிலேயே அது மாறிப்போகும்.
வளர்ந்த மனிதனுக்கு ஒருவர் மீது கோபம் வந்தால், சண்டைபோடத் தூண்டும்; புண்படுத்தும் வார்த்தைகளால் வசைமாரி பொழியும்; கைகலப்பில் தொடங்கிக் காவல் நிலையம் வரை இட்டுச் செல்லும். பிறகு சமாதானமாகப் போனாலும், மனத்தில் வஞ்சத்தை உருவாக்கிப் பழிவாங்குவதையே குறியாகக் கொண்டு திரியும்.
குழந்தைகள் போட்டுக்கொள்கிற சண்டையே விளையாட்டைப் போன்றுதான் அமையும். குழந்தைகளை முன்னிட்டுப் பெரியவர்கள் போட்டுக்கொள்கிற சண்டையில்கூட ஒரு தீவிரத் தன்மை இருக்கும். ஆனால் குழந்தைகள் வெகு எளிதாகக் கை விரல்களை நீட்டியே 'உன் பேச்சுக் காய்!' என்றும் 'உன் பேச்சுப் பழம்!' என்றும் நொடிக்கு நொடி சண்டைபோட்டு, அடுத்தடுத்த நொடிகளிலேயே சமாதானமாகிக் கொள்வார்கள். இன்று சண்டைபோட்டுக் கொள்வதையே விளையாட்டாக விளையாடுகிறார்கள் இன்றைய சிறுவர்கள். பொறாமை என்பது துளியும் இருக்காது. குழந்தை மனத்தில் எல்லா உணர்வுகளுக்கும் தற்காலிகத் தன்மையே உண்டு.
மகிழ்வது ஒன்றே மனிதவாழ்வின் எல்லையற்ற குறிக்கோள். அதை நோக்கிய பயணத்தில், பணம், செல்வம், வீடு, வாகன வசதிகள் எல்லாம் உதவிடும் துணைக் காரணங்களாக அமைகின்றன. ஆனால் மனிதர்கள் இவற்றை முதன்மைக் காரணங்களாக எண்ணி மயங்கி, தேவையற்ற துன்பங்களில் சிக்கி அல்லாடித் தவிக்கிறார்கள். நிம்மதியை இழக்கிறார்கள். நிம்மதி மனம் சார்ந்ததாக இருக்கின்ற பட்சத்தில், அந்த நிம்மதியைப் பெறுகிற தகுதி வாய்ந்ததாகக் குழந்தை மனமே திகழுகிறது.
குழந்தைப் பருவத்தை தாண்டிவிட்ட நிலையில் குழந்தை மனத்தைப் பெறுவது எவ்வாறு? குந்தை மனத்தை எந்த வயதிலும் பெற முடியுமா?. குழந்தை மனம் என்பது வேறு எங்கிருந்தோ, பயிற்சி எடுத்தோ அல்லது காசு கொடுத்தோ பெற வேண்டியது அல்ல. நாம் கடந்து வந்த பருவம்தான். அன்றாடம் நாம் நம்மைச் சுற்றியுள்ள குழந்தைகளைக் கூர்ந்து கவனிக்கத் தொடங்கினாலே போதும். குழந்தைகளோடு குழந்தையாய் நம் மனத்தை ஆக்கிகொண்டு பழகத் தொடங்கினாலே போதும்.
நம் மனத்திற்குள் வேர்விட்டுப் பரவிக்கிடக்கும் விஷத் தன்மைகள் எல்லாம் அமுதத் தன்மைகளாய் மாறிப்போகும். வஞ்சக மனித மனங்களோடு பழகிப் பழகிக் கலங்கிக் கிடக்கும் நமது உள்ளம் தெளிவான மழைத்துளிப் பிரயாகை போல் புனிதப் பட்டுப்போகும். வளர்ந்து பக்குவம் பெற்றுள்ள அறிவின் துணைகொண்டு பிள்ளை உள்ளமெனும் வெள்ளை உள்ளம் பெறுவோம்! கொள்ளை மகிழ்வை அடைவோம்!.
தொடர்புக்கு 9443190098