என் மலர்![tooltip icon](/images/info-tooltip.svg)
சிறப்புக் கட்டுரைகள்
![எப்போதும் ஒலிக்கும் குரல்! எப்போதும் ஒலிக்கும் குரல்!](https://media.maalaimalar.com/h-upload/2024/08/28/4251853-latha.webp)
எப்போதும் ஒலிக்கும் குரல்!
![மாலை மலர் மாலை மலர்](/images/authorplaceholder.jpg?type=1&v=2)
- லதாவே குடும்பப் பொறுப்பைச் சுமக்க வேண்டியதாயிற்று.
- திரைக்கதையுடன் திரைப்படப் பாடலும் வெற்றிக்குப் பெரிதும் உதவியது.
உலகின் ஏதோ ஒரு பகுதியில் ஒரு நாளைக்கு 24 மணி நேரமும் வருடத்திற்கு 365 நாட்களும் ஒலித்துக் கொண்டிருக்கும் ஒரு இந்தியக் குரல் யாருடையது தெரியுமா? நைட்டிங்கேல் என்று பாராட்டப்படும் பாரத் ரத்னா லதா மங்கேஷ்கரின் குரல் தான் அது!
கடும் உழைப்பால் உயர்ந்து பாரத் ரத்னா பட்டத்தைப் பெற்ற இருவரின் வாழ்க்கை ஒரு அற்புதம் தான்.
பிறப்பும் இளமையும்: லதா மங்கேஷ்கர் 1929-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 28-ம் தேதியன்று இந்தூரில் ஒரு அந்தணர் குடும்பத்தில் பிறந்தார். தந்தையார் தீனநாத் மங்கேஷ்கர் மராத்திய மொழியிலும் கொங்கணி மொழியிலும் சிறந்த பாடகர்.
ஒரு நாடக நடிகரும் கூட. கோவாவில் உள்ள மங்கேஷ் என்ற தனது புராதன கிராமத்தை அடிப்படையாகக் கொண்டு மங்கேஷ்கர் என்பதைத் தன் பெயரில் அவர் வைத்துக் கொண்டார். தாயார் செவந்தி என்ற சுதாமணி குஜராத்தைச் சேர்ந்தவர். குஜராத்திய நாட்டுப்புறப் பாடல்களில் வல்லவர்.
லதாவிற்கு சூட்டப்பட்ட பெயர் ஹேமா. ஆனால் பின்னால் அவரது தந்தை தனது நாடகத்தில் வரும் பாத்திரமான லதிகா என்பதை ஒட்டி அவருக்கு லதா என்று பெயரை மாற்றினார். குடும்பத்தில் லதாவே மூத்த குழந்தை. அவருக்கு மூன்று தங்கைகளும் ஒரு தம்பியும் உண்டு.
வறுமையில் வாட்டம்: தந்தையாரிடமிருந்து இசையைக் கற்ற லதா ஐந்தாம் வயதிலிருந்தே தந்தையாருடன் கூட இருந்து அருமையாகப் பாட ஆரம்பித்தார். லதாவிற்கு 13 வயதே ஆகும் போது அவர் தந்தை மரணமடைந்தார். குடும்பம் வறுமையில் வாட ஆரம்பித்தது. லதாவே குடும்பப் பொறுப்பைச் சுமக்க வேண்டியதாயிற்று.
1942-ல் ஒரு மராத்தியத் திரைப்படத்தில் (கிதி ஹஸால் என்ற படம்) அவர் ஒரு பாடலைப் பாடினார். ஆனால் இறுதியில் அது 'வெட்டப்பட்டது; படத்தில் இடம் பெறவில்லை.
தொடர்ந்து ஆறு வருடங்கள் கடும் போராட்ட வருடங்களாக அமைந்தன. ஏராளமான எதிர்மறை விமர்சனங்களை அவர் எதிர்கொள்ள வேண்டியதாக இருந்தது. ஆனால் தன் திறமையிலும் உழைப்பிலும் நம்பிக்கை கொண்டிருந்த லதா விடவில்லை; வெற்றியே பெற ஆரம்பித்தார்.
1945-ல் லதா மும்பைக்குக் குடி பெயர்ந்தார்.
இந்தி திரையுலகத்தில் நுழைவு: லதாவிற்கு இசை அமைப்பாளர் குலாம் ஹைதர், 'மஜ்பூர்' (1948) என்ற படத்தில் ஒரு வாய்ப்பை அளித்தார். இந்தி திரையுலகில் நுழையும் வாய்ப்பு கிடைக்கவே கெம்சந்த் பிரகாஷ் இசை அமைத்த மஹால் (1949) உள்ளிட்ட படங்களில் அவர் பாடிய பாடல்கள் ரசிகர்களால் பெரிதும் வரவேற்கப்பட்டது. லதாவின் குரல் மிகவும் சன்னமாக இருக்கிறது என்ற ஒரு இசையமைப்பாளரின் ஆட்சேபணைக்கு குலாம் ஹைதர் கூறிய பதில்: "ஒரு நாள் லதாவின் காலில் விழுந்து என் படத்தில் பாடுங்கள் என்று எல்லோரும் சொல்லப் போகிறார்கள்' என்பதே. பின்னால் தனது 84வது பிறந்த நாள் விழாவில் லதா கூறியது: "உண்மையில் என்னை ஆதரித்து உருவாக்கியவர் குலாம் ஹைதரே"!
ச.நாகராஜன்
திலிப்குமாரின் சந்தேகம்: ஹைதர் எடுத்த படத்தில் லதாவின் இசையை இசையமைப்பாளர் நவுஷத் கேட்டார். உடனே தனது அடுத்த படத்தில் அவரைப் பாட வைக்கலாம் என்று யோசனை கூறினார். அப்போது இந்தி திரையுலகில் சூப்பர்ஸ்டாராக இருந்த திலிப்குமார் இதற்கு ஆட்சேபனை தெரிவித்தார். ஒரு மராத்தியப் பெண்ணுக்கு உருது உச்சரிப்பு எப்படி சரியாக வரும் என்பதே அவரது கேள்வி. இந்த கடுமையான விமர்சனத்தைக் கேட்ட லதா மனம் தளரவில்லை. கடும் உழைப்பை மேற்கொண்டார். உருது உச்சரிப்பை தக்க ஒருவரிடம் கேட்டு முறையாகப் பயின்றார்.
1949-ல் அந்தாஸ் படம் வெளியானது. அதில் ஹிட்டான பாடலைப் பாடியவர் லதா தான்! அந்தப் பாடலில் உருது மொழி உச்சரிப்பைக் கேட்ட திலிப்குமார் அசந்து போனார். பாடியவர் யார் என்றால் அவர் விமரிசித்த அதே லதா தான்! உடனே தான் கூறிய வார்த்தைகளைத் திரும்பப் பெறுவதாகக் கூறினார் அவர்.
அந்த வருடம் வெளியான அவர் பாடல் இடம் பெற்ற ஐந்து படங்களும் இந்தித் திரையுலகில் வெற்றிக் கொடி நாட்டின. திரைக்கதையுடன் திரைப்படப் பாடலும் வெற்றிக்குப் பெரிதும் உதவியது. மஹால் படத்தில் வந்த ஆயகா ஆனேவாலா என்ற பாடல் எங்கும் ஒலித்தது!
பாடகர்களுக்கு லதாவின் பேருதவி: அந்தக் காலத்தில் கிராமபோன் இசைத்தட்டில் பாடியவர் பெயர் இடம் பெறாது. ஒன்று திரைப்படத்தில் அந்தப் பாடலைப் பாடிய கதாபாத்திரத்தின் பெயர் இடம் பெறும் அல்லது அதைப் பாடிய நடிகையின் பெயர் இடம் பெறும்.
இது லதாவிற்குப் பெரும் வருத்தத்தை அளித்தது. பாடியவர் பெயரைப் போடுமாறு அவர் வேண்டினார். ஆனால் தயாரிப்பாளர்கள் இதற்கு ஒத்துக் கொள்ளவில்லை.ஆனால் மஹால் படத்தில் இடம் பெற்ற பாடலைக் கேட்ட ரசிகர்கள் சும்மா இருக்கவில்லை.
ஆல் இந்தியா ரேடியோவில் 'ஆயகா' பாடலைக் கேட்ட ரசிகர்கள் அனைவரும் இதைப் பாடியது யார் என்று திரும்பத் திரும்பக் கேட்க வானொலி நிலையம் படத்தின் தயாரிப்பாளரை நாடி லதாவின் பெயரைக் கேட்டு ஒலிபரப்ப ஆரம்பித்தது. காமினி என்ற கதாபாத்திரத்தின் பெயரைக் கொண்டிருந்த இசைத்தட்டுகள் இனி அப்படி பெயரைப் போடாமல் பாடியவரின் பெயரைப் போட ஆரம்பித்தன. லதாவிற்கு கிடைத்த பெரும் வெற்றி இது. பாடியவருக்கு உரிய மதிப்பைக் கொடுத்து பாடகர்களின் பெயரை இசைத்தட்டுகளில் போட வைத்தவர் அவரே!
இசையே தெய்வம்: லதா மங்கேஷ்கருக்கு இசை ஒரு தொழில் அல்ல; அதுவே அவருக்கு தெய்வம்! இசையை கடவுளின் குரல் என்றார் அவர். அவரது அற்புதமான குரலைக் கேட்ட ரசிகர்கள் அவரது பாடல் இடம் பெற்ற படங்களை வெற்றிப் படங்களாக்கினர். ஒரு நாளைக்கு பத்துப் பாடல்களை ரிகார்ட் செய்யும் அளவுக்கு அவர் உயர்ந்தார்; அதற்கான கடும் உழைப்பையும் பயிற்சியையும் அவர் விருப்பத்துடன் மேற்கொண்டார்.
பஜனை, கஜல்கள் ஆகியவற்றுடன் சிக்கலான இசை அமைப்புகள் கொண்ட பாடல்களை அவர் சாதாரணமாகப் பாடினார். ராகங்களை அடிப்படையாகக் கொண்ட பாடல்களை அவர் தன் குரல்வளத்தால் மெருகேற்றினார். தொடர்ந்து பல பிலிம் பேர் விருதுகளைப் பெற்றார்.
மராத்தி, இந்தி மொழிகளில் மட்டுமல்லாது கன்னடம், தமிழ், தெலுங்கு, வங்காளம், பஞ்சாபி, குஜராத்தி, ஆங்கிலம், ரஷிய மொழி உள்ளிட்ட இருபது மொழிகளில் அவர் பாடியுள்ளார்..
ஆகப் பெரும் இசையமைப்பாளர்களான எஸ்.டி.பர்மன், சலில் சவுத்ரி, ஆர்.டி.பர்மன், சங்கர்-ஜெய்கிஷன், சி. ராமச்சந்திரா உள்ளிட்ட அனைத்து இசை அமைப்பாளர்களும் அவரை விரும்பி வரவேற்றுப் பாட வைத்தனர். அதே போல சிறந்த பாடலாசிரியர்களான குல்ஜர், ஷகீல் பதாயுனி, ஆனந்த் பக்ஷி உள்ளிட்டோரும் அவர் திறமையை உணர்ந்து பாடல் வரிகளை அமைத்துப் புகழ் பெற்றனர்.
புகழ் பெற்ற பாடகர்களான மன்னாடே, முகேஷ், ஹேமந்த் குமார், முகம்மத் ரபி, கிஷோர் குமார் உள்ளிட்டோருடன் அவர் பாடிய பாடல்கள் காலத்தை வென்ற பாடல்களாக ஆகி விட்டன!
லதாவே பாடல்களை இயற்றியுள்ளார்; இசைஅமைப்பாளராகவும் திகழ்ந்துள்ளார் என்பது குறிப்பிடத்தகுந்தது.
குடும்பம்: லதா திருமணம் செய்து கொள்ளாமலேயே வாழ்நாள் முழுவதும் வாழ்ந்தார். ஆனால் தனது குடும்ப உறுப்பினர்கள் மீது அளவிலாப் பாசம் கொண்டிருந்தார்.
ராஜ்ய சபா உறுப்பினர்: 1999-ல் அவர் ராஜ்ய சபா உறுப்பினராக நியமிக்கப்பட்டார். இதற்கென அவர் சம்பளத்தையோ டெல்லியில் தரப்படும் வீட்டையோ பெறவில்லை.
பாரத் ரத்னா: ஏராளமான விருதுகளைத் தன் வாழ்நாளில் அவர் பெற்றார். 1969-ல் பத்ம பூஷன் விருதையும் 1999-ல் பத்ம விபூஷன் விருதையும் அவர் பெற்றார்.
2001-ம் ஆண்டு மிக உயரிய விருதான பாரத் ரத்னா விருதை அவருக்கு இந்திய அரசு வழங்கி கவுரவித்தது.
ஏழைகளுக்கு உதவி: 2001-ல் அவர் புனாவில் மாஸ்டர் தீனநாத் மங்கேஷ்கர் மருத்துவமனையை நிறுவி ஏழைகளுக்கு உதவி செய்ய ஆரம்பித்தார். காஷ்மீரில் 2005ல் ஏற்பட்ட பூகம்பத்தால் பாதிக்கப்பட்டோருக்கு அவர் நிதி உதவி அளித்தார்.
எத்தனை பாடல்களை அவர் பாடினார்?
லதா எத்தனை பாடல்களைப் பாடியுள்ளார் என்பது பற்றிய தொடர் விவாதம் கின்னஸ் ரிகார்ட் 25000 பாடல்களை அவர் பாடியுள்ளார் என்று தெரிவித்ததையொட்டி எழ ஆரம்பித்தது.
லதாவோ தான் பாடிய பாடல்களுக்கான எண்ணிக்கை குறிப்பைத் தான் குறித்து வைத்துக் கொள்ளவில்லை என்று குறிப்பிட்டார்.
சிலர் 20000 பாடல்கள் என்று சொல்ல இன்னும் சிலரோ 30000 பாடல்கள் என்று சொல்ல இந்த விவாதம் தொடர் விவாதமாக ஆகி விட்டது!
ஆனால் ஒன்று மட்டும் நிச்சயம். ஏராளமான நாடுகளில் அவர் குரல் இசைத்துக் கொண்டே இருக்கிறது.
அவரது பாடல்களைக் கேட்டு தங்களின் அபிப்ராயத்தைத் தெரிவிப்போர் மிகுந்த மன நெகிழ்வுடன், "இது சிறு வயதில் நான் கேட்ட பாடல். இன்னும் இதைக் கேட்டுக் கொண்டிருக்கிறேன்", இந்தப் பாடலைக் கேட்கும் போதெல்லாம் மறைந்து விட்ட எனது தாயாரின் நினைவு வருகிறது". "இந்தப் பாடல் என் தந்தையாருக்குப் பிடித்தமானது; இதைப் கேட்காமல் அவர் உறங்க மாட்டார்", 'எனக்கு பாடப்படும் பாடலின் மொழி தெரியாது, ஆனால் இந்த இனிய குரலைக் கேட்டுக் கொண்டே இருக்கிறேன்' என்பன போன்ற ஆயிரக்கணக்கான விமர்சனங்களைப் பதிவிடுகின்றனர்
பல்லாயிரக்கணக்கான ரசிகர்களின் வாழ்வில் நல்ல விதத்தில் தாக்கத்தை ஏற்படுத்திய இசை ராணி அவர் என்பதில் ஐயமே இல்லை!
மறைவு: 2022-ல் ஜனவரி மாதம் 8-ம் தேதி அவருக்கு கோவிட் -19 நோய்க்கான அறிகுறிகள் இருப்பதாகத் தெரிய வந்தது. வென்டிலேட்டர் பொருத்தப்பட்டு அவர் மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வந்தார்.
2022 பிப்ரவரி 6-ம் தேதி அவர் மரணமடைந்தார். அப்போது அவருக்கு வயது 92. பல நாடுகளின் பிரதம மந்திரிகள், மற்றும் தலைவர்கள் தங்களின் இரங்கலைத் தெரிவித்தனர். மும்பையில் அரசு மரியாதையுடன் அவரது உடல் எரியூட்டப்பட்டது. அவரது அஸ்தி கோதாவரி நதியில் கரைக்கப்பட்டது.
அனுபவ மொழிகள்:
தனது அனுபவத்தின் அடிப்படையில் அவர் கூறிய பொன்மொழிகள் பல. அவற்றில் சிலவற்றைக் காணலாம்.
ஒவ்வொரு பாடலிலும் எனது ஒரு துளி உள்ளது. எனது உணர்வுகள், அனுபவங்கள், கனவுகள் ஆகியவற்றின் ஒரு சிறிய பகுதி உள்ளது. பாடுவது என்பது எனது தொழில் மட்டுமல்ல, அது எனது உயிர். அது எனது வாழ்க்கை முறை!
இசைக்கு எல்லைகளே இல்லை; அது ஆன்மாவின் மொழி!
இந்தி திரையுலகின் பிரபலமான நடிகரும் பாடகரும் தயாரிப்பாளருமான கிஷோர் குமார் லதாவைப் பற்றி மிகச் சரியாக இப்படிக் கூறினார்: "லதா மங்கேஷ்கரைப் புகழ்வது என்பது சூரியனுக்கு முன் அகல் விளக்கைக் காட்டுவதைப் போலத் தான்!"
இந்த அவரது கூற்று லதா மங்கேஷ்கரைப் பற்றிய சரியான விளக்கம் தான், இல்லையா!