என் மலர்
சிறப்புக் கட்டுரைகள்
மனப்பதற்றத்தை தவிர்ப்பது எப்படி?
- எந்த வேலை செய்தாலும் அதில் மட்டுமே முழுக் கவனத்தையும் செலுத்தி வேலை செய்ய முயல வேண்டும்.
- நலமற்ற சிந்தனைகளைக் கண்டறிந்து மாற்ற முயல வேண்டும்.
இக்காலத்தில் மனப்பதற்றம் என்பது அனைவரின் வாழ்க்கையிலும் ஏதோ ஒரு சூழ்நிலையில் வந்து செல்கின்ற ஒன்றாகிவிட்டது. எனவே மனப்பதற்றத்தை எப்படி எதிர்கொள்வது? என்பதை அனைவரும் அறிந்து கொள்வது நன்று. அப்போதுதான் வாழ்வியல்முறை மாற்றங்களினால் ஏற்படும் நோய்களில் இருந்து விலகி நின்று, நம் ஆயுட்காலத்தை நீட்டிக்கலாம், சிக்கல்களைகளையும் தவிர்க்கலாம்.
இரவு உறங்காமல் சமூக வலைத்தளங்களில் அதிக நேரம் செலவிடுவதுதான் மனப்பதற்றத்திற்கு முதற்காரணமாக உள்ளது.
பொறுப்புகளைச் செய்ய வேண்டும், இந்த வேலையைக் குறிப்பிட்ட காலகட்டத்திற்குள் முடிக்க வேண்டும், என்று வாழ்க்கையோடு போராடிக் கொண்டிருக்கும் பெரியவர்களை மட்டுமே துன்புறுத்தும் இந்த மனப்பதற்றம், தற்போது குழந்தைகளையும் தொற்றிக் கொண்டுவிட்டது. இது காலத்தின் கோலமா? இதற்குத் தீர்வுதான் என்ன? என்பது பற்றி இப்பகுதியில் பார்க்கலாம்.
மனப்பதற்றத்தின் அறிகுறிகள்:-
1.படபடப்பு,
2.பய உணர்வு,
3.எதைப் பற்றியும் சிந்திக்க
முடியாமல் இருத்தல்,
4.வியர்த்துக் கொட்டுதல்,
5.கை மற்றும் உடல் நடுக்கம்,
6.உடல் சில்லிட்டுப் போதல்,
7.வார்த்தைகளில் தடுமாற்றம்,
8.கண்கள் மறைப்பது போன்ற
உணர்வு,
9.பேச நினைத்ததை மறந்து விடுவது,
10.செய்யும் வேலைகளைத் திறம்பட செய்ய
முடியாமல் போவது.
மனப்பதற்றத்திற்கான சிகிச்சை முறைகள்:
இதைக் கண்டு பிடிப்பதற்கென்று சிறப்பான ஆய்வுகள் ஏதுமில்லை. நீங்கள் கூறும் தொந்தரவுகளை வைத்தே இதைக் கண்டுபிடித்து விடலாம்.
ஆலோசனைகள், பதற்றத்தை விரட்டுவதற்கான சில மாத்திரைகள், உறக்கத்தை வரவைப்பதற்கான மாத்திரைகள் என்று அவரவர் மனப்பதற்றத்திற்கு ஏற்றவாறு சிகிச்சை அளிக்கப்படுகிறது.
இயல்பு வாழ்க்கையைப் பாதிக்கும் இந்த மனப்பதற்றத்தை அகற்றச் செய்ய வேண்டிய செயல் திட்டங்கள் பற்றி இங்கே பார்க்கலாம்.
மனப்பதற்றத்தை அகற்றும் செயல் திட்டங்கள்:
முதலில் நேர்மறை எண்ணங்களை உருவாக்குவோம். எடுத்துக்காட்டுக்கு உங்களுக்காக இந்த 6 விதைகளை நான் உருவாக்கியுள்ளேன். இதைக் காலை எழுந்தவுடனும், இரவு உறங்குவதற்கு முன்னும் குறைந்தது 3 முறைகளாவது மனத்திற்குள் சொல்ல வேண்டும்.
1."நான் மன அமைதியுடன் இருக்கிறேன், என் ஒவ்வோர் அணுவிலும் அமைதியானது வாசம் செய்கிறது. நான் தைரியசாலி. தைரியத்துடனும், உறுதியுடனும் இருக்கிறேன். நான் மனமகிழ்ச்சியுடன் இருக்கிறேன், ஒவ்வொரு அணுவிலும் மகிழ்ச்சியை உணர்கிறேன்.
நான் உடல் நலத்துடன் இருக்கிறேன். என் ஒவ்வோர் அணுவும் திறம்பட தன் பணிகளைச் செய்கிறது. நான் என்னை நேசிக்கிறேன். இம்மனப் பயிற்சியை நான் எனக்கேப் பரிசளிக்கிறேன். நான் இயற்கையை நேசிக்கிறேன். இயற்கையோடு இணைந்து வாழ்கிறேன்."
இவற்றை இரு வேளைகள் சொல்வதோடு மட்டும் நிறுத்திவிடாமல், எப்போதெல்லாம் மனப்பதற்றம் தோன்றுகிறதோ, அப்போதெல்லாம் இந்த 6 விதைகளை மீண்டும் மீண்டும் சொல்லி மனத்திற்குள் ஊன்ற வேண்டும். உங்களுக்கு ஏற்றவாறு விதைகளை நீங்களே உருவாக்கியும் கொள்ளலாம்.
2. நாளும் ஒரு மணிநேரம் உடற்பயிற்சி செய்ய வேண்டும். யோகா மற்றும் மூச்சுப் பயிற்சி செய்வது மனப்பதற்றத்தைக் குறைக்கும்.
3. அன்றன்று சமைத்த உணவுகளை மட்டுமே உட்கொள்ள வேண்டும். பதப்படுத்தப்பட்ட மற்றும் துரித உணவுகளைத் தவிர்க்க வேண்டும்.
4.இரவு 7 மணி நேரமாவது ஆழ்ந்த உறக்கம் கொள்ள வேண்டும்.
5.உறங்குவதற்கு 2 மணிநேரத்திற்கு முன்பு அலைபேசி, தொலைக்காட்சி, கணினி மற்றும் மடிக்கணினி போன்றவற்றைத் தவிர்க்க வேண்டும்.
6.எந்த வேலை செய்தாலும் அதில் மட்டுமே முழுக் கவனத்தையும் செலுத்தி வேலை செய்ய முயல வேண்டும்.
7.நீங்கள் கவலையாகவோ, மன அழுத்தமாகவோ, மனச்சோர்வடைந்தவராக அல்லது தனிமையாகவோ உணர்ந்தால், செல்ல பிராணிகளோடு நேரத்தைச் செலவிட வேண்டும்.
8.காபி எடுத்துக்கொள்ளும் பழக்கம் இருந்தால் அதைத் தவிர்த்துவிட வேண்டும்.
9.பதற்றத்தை உருவாக்கும் உணர்ச்சிகளை எதிர்கொள்ள, நலமான வழிகளை உருவாக்க முயன்றிட வேண்டும்..
10.நலமற்ற சிந்தனைகளைக் கண்டறிந்து மாற்ற முயல வேண்டும்.
11.மது மற்றும் புகைபழக்கம், போதைப்பொருட்களுக்கு அடிமையாவது போன்ற கெட்ட பழக்கங்கள் இருந்தால் அவற்றைக் கைவிட வேண்டும்.
12.அவ்வப்போது மகிழ்ச்சியான உங்கள் வாழ்க்கையின் பக்கங்களைத் திருப்பிப்பார்க்க வேண்டும்.
13.உங்களை நீங்களே பாராட்டிக் கொள்ள வேண்டும் மற்றும் உங்கள் நோக்கங்களில் எப்போதும் விழிப்புடனேயே இருக்க வேண்டும்.
கடந்த காலம் ஒரு அனுபவம், எதிர்காலம் ஒரு கனவு, நிகழ்காலம் மட்டுமே உண்மை என்பதை உணர்ந்து, நிகழ்காலத்தில் நாம் செய்ய வேண்டிய வேலைகளைக் கண்ணும் கருத்துமாகச் செய்ய வேண்டும்.
அப்படிச் செய்யும்போது எந்த வித மனக்கசப்பும், மனக்கவலைகளும், எதிர்மறை எண்ணங்களும் நம்மைப் பாதிக்க முடியாது, என்பதை மனத்தில் கொண்டு மேற்கூறிய 6 விதைகளையும், 6 செயல் திட்டங்களையும் பின்பற்றி, வாழ்வியல் முறை மாற்றங்களினால் ஏற்படும் நோய்களில் இருந்து விலகி நின்று, நலமுடனும், மகிழ்வுடனும் வாழ முயல்வோமாக.
குழந்தைகளுக்கு ஏற்படும் மனப்பதற்றம்:
25 ஆண்டு கால மருத்துவச் சேவையில் குழந்தைகள் மனப்பதற்றத்துடன் வருவதைக் கொரோனாக் காலகட்டத்திலிருந்து பார்க்க நேரிடுகிறது. இதற்கு முதற்காரணம் இரவில் சரியாக உறங்காமல் இருப்பதும், காணொலி விளையாட்டில் அதிக ஆர்வம் கொள்வதும் மற்றும் அலைபேசியில் அதிகநேரம் செலவிடுவதும்தான். இன்னும் பல காரணங்கள் இருந்தாலும் இவையே குழந்தைகளை அதிகமாய்ச் சீர்குலைக்கின்றன. எனவே குழந்தைகளை அலைபேசி மற்றும் சமூக ஊடகங்களிலிருந்து விலகி இருக்க நாம் என்ன செய்யலாம்? என்பதை இங்கே காண்போம்.
குழந்தைகள் அலைபேசி பார்ப்பதைக் குறைக்க என்ன செய்ய வேண்டும்?
உங்கள் குழந்தை படிக்காமல் தொடர்ந்து அலைபேசியைப் பார்த்துக்கொண்டே இருந்தாலோ அல்லது தொலைக்காட்சியில் மூழ்கிக்கிடந்தாலோ, உடனே குழந்தையை அடிக்கப் பாயாமல், "இங்க பாருடா கண்ணா...! தினமும் ஈவ்னிங் அரை மணிநேரம் அலைபேசி பார்க்க அப்பா, அம்மா உன்னை அனுமதிக்கிறோம். ஆனா அதையும் தாண்டி அப்பா, அம்மா பேச்சைக் கேட்காமல், நீ தொடர்ந்து மொபைல் பாக்குற, டிவி பாக்குற இனிமேல் இப்படிச் செய்தா, இனி நீ வழக்கமா பாக்குற நேரத்தில்கூட அலைபேசி, தொலைக்காட்சி பார்க்க முடியாது. அதனால கவனமா நடந்துக்கோ" என்று உறுதியான குரலில் தெரிவியுங்கள்.
மறுநாள், உங்கள் பேச்சை மதித்து, குழந்தை அலைபேசி பார்க்கும் நேரம் முடிந்ததும் அதை வைத்துவிட்டுப் படிக்கவந்தால் நலம். அப்படி இல்லாமல், முதல் நாள் போலவே அலைபேசியைப் பார்க்க ஆரம்பித்தால், அதற்கடுத்த நாள்களில் உங்கள் குழந்தை முற்றிலும் அலைபேசி பயன்படுத்துவதை அனுமதிக்காதீர்கள்.
இதற்காகக் குழந்தை அழுது அடம்பிடித்தால், அதை அடிக்காதீர்கள். உங்கள் முடிவில் உறுதியாக இருங்கள். தொடர்ந்து இதுபோல் உங்கள் உறுதியைக் காண்பித்தால், குழந்தைகள் இனி அம்மா, அப்பாவ ஏமாற்ற முடியாது என்று முடிவுசெய்து உங்கள் வழிக்கு வருவார்கள்.
ஆனால், ஒரு நாளிலேயே இந்த மாற்றம் குழந்தைகளிடம் வந்துவிடாது. உங்களின் தொடர்ந்த உறுதியும், பொறுமையும் மட்டுமே அவர்களை உங்கள் வழிக்குக் கொண்டுவரும். எனவே தொடர்ந்து முயலுங்கள்.
மனப்பதற்றத்தைத் தவிர்க்க மேற்கூறிய வழிமுறைகளைப் பின்பற்றி மனஅமைதியுடனும் மனமகிழ்ச்சியுடனும் வாழலாமே.
போன்- 75980-01010, 80564-01010.