என் மலர்
சிறப்புக் கட்டுரைகள்
அய்யா வைகுண்டர் முன் பசியுடன் வந்த புலி மண்டியிட்ட அதிசயம்
- மன்னனின் நிபந்தனையை சுவாமிகள் நிராகரித்தார்.
- வைகுண்ட சுவாமிகள் தன்னுடைய எஞ்சிய காலம் முழுவதையும் மக்களின் நல்வாழ்விற்காகவே அர்ப்பணித்தார்.
பல்லவனின் சோதனைகளை அப்பர்பெருமான் வென்றருளியது போன்று, அனைத்துச் சோதனைகளையும் சுவாமிகள் புறம் கண்டார். எனவே அவரைக் கொன்று விட சதித்திட்டம் தீட்டப்பட்டது. அதன்படி பாலில் விஷம் கலந்து, அருந்திடச் செய்தனர். உண்மை அறிந்தும், ஒன்றும் தெரியாதவர் போல் விஷம் கலந்த பாலை இயல்பாகக் குடித்தார். விஷம் அமுதமாக சுவாமிகளுக்கிருந்தது. ஆனால் கொடியவர்கள், சுவாமிகள் இறந்தொழிந்தார் என எக்காளத்துடன் மகிழ்ச்சி கொள்ள, நஞ்சருந்திய சுவாமிகள் புதிய தெம்புடன் காணப்பட்டார்.
"பச்சை நாவியைப் போட்டு
பாலென்று கொண்டுதர
பாலாய் இருந்தது"
எனவே சுவாமிகள் எண்ணினார். முயற்சிகள் யாவும் பலன் தராத நிலையில், மன்னன் சுவாமிகளை சுண்ணாம்பு நீற்றறையில் போட்டு நீற்றிவிடுமாறு ஆணையிட்டான். ஆனால் அக்கொடிய செயலும் சுவாமிகளை ஒன்றும் செய்யவில்லை.
"நீற்றுக்கல் கொண்டு வந்து
நீற்றிப்போட வேணுமென்று
நீசனும் செய்தானே
பூ சொரிகின்றான் என்றெண்ணி
நினைத்துக் கொண்டேன்"
என்று சுவாமிகள் அதனை பற்றிக் குறிப்பிடுகின்றார்.
வைகுண்ட சுவாமிகளின் மீது ஏவப்பட்ட கொடிய பாணங்கள் யாவும் எண்ணியவாறு அமையாததால் காட்டிலிருந்து கொடிய புலி ஒன்றைப் பிடித்து வந்து, நன்கு பட்டினி போட்டு வெறியுண்டாக்கி, அதன் கூண்டிற்குள் சுவாமிகளைத் தள்ளிவிட்டனர். ஆனால் அப்புலி அவரை கண்டு தலை குனிந்து மண்டியிட்டது.
"வதை செய்யவிட்ட புலி அதிசயப்பட்டு
என்னை வணங்கியும் நின்றதையோ"
என்று அய்யா இதுபற்றி கூறுகின்றார்.
புலி அடங்கி கிடந்த நிலையைப் பார்த்த பணியாள் ஒருவன் ஈட்டியால் அதனை குத்தினான். ஆனால் எவரும் எதிர்பாராவண்ணம் புலி ஈட்டியைப் பிடித்து இடறிவிடவே, ஈட்டி அருகில் நின்ற பிராமணன் ஒருவன் வயிற்றில் பாய்ந்து அவன் உயிரை மாய்த்தது. இதனைக் கண்ணுற்ற மன்னன் ஆயிரம் பசுவை அடித்துக் கொன்ற தோசம் இதுவல்லோ ஒரு பிராமணனைக் கொன்றது' எனப் பதறினான். அவையில் நடந்ததைக் கண்ட மக்கள் வியப்புற்றுச் சென்றனர்.
இவ்வாறு மன்னன் கொடுத்த சோதனைகள் எல்லாவற்றையும் எவ்வித பயமோ கலக்கமோ இன்றி சுவாமிகள் அமைதியுடன் மனமகிழ்வோடு ஏற்றுச் சோதனையில் ஜோதி உருவாக ஒளி வீசினார். வைகுண்டரின் சிறைவாசத்தை அகிலம்,
"ஏழைகளுக்காக ஈரொன்றொரு நாளாய்
மீளாச் சிலுவையிலே முள்ளில் அறைபட்டு
மரித்துப் பிறந்தது போல மாயக் குருநாதன்
ஏழைச் சான்றோர்க் கிரங்கியிருந்தார் சிறையினிலே"
என்று, ஏழைகளின் துயர்துடைக்க இயேசு பிரான் சிலுவையில் அறையப்பட்டது போன்று, ஏழைகளுக்காக சிறை வாழ்க்கையை ஏற்றுக் கொண்ட செம்மல் வைகுண்டநாதர் என்று சிறப்பிக்கின்றது.
மன்னனின் சோதனைகளில் நாட்கள் நடைபயிலலாயின. சுவாமிகளும் தன்னை நாடி வரும் மக்களின் அச்சம் தவிர்த்து, நோய் தீர்த்து, போதனைகளை புகட்டி வரலானார். அது கண்ட மன்னன் கலக்கமுற்றிருக்கையில், மன்னனிடத்து சுவாமிகளின் நற்குணங்களை பூவண்டனார்,
"நல்ல தன்மை மிகு மானமுள்ளோன்
கோணா மனதுடையோன் குணமுடைய நல்லவன்காண்
நேர்மை ஒழுங்குள்ளோன் நேர் சொல்லொருவர்காண்
ஓர்மையுடையோன் உபகாரன் இவன்"
என்று எடுத்துரைத்தார். மேலும் மன்னனிடம் வைகுண்ட சுவாமிகளை விடுதலை செய்திடுமாறு வேண்டி நின்றார். பூவண்டரின் வேண்டுகோளுக்கு செவி சாய்த்த மன்னன்,
"இப்போது இவன் இனத்தில் எத்தனைப் பேர்க்கானாலும்
ஒப்போடுறவாய் ஒத்திருந்து வாழ்வதல்லால்
சர்ப்பம் போலொத்த சகல சாதி தனக்கும்
உத்திரவென்று உபாயமாய் ஏதும் சொல்லாமல்
மற்றபிற சாதிகளை வாவென்று உரையாமல்
தன்னொரு சாதி தன்னோடு இருப்பதல்லால்
பின்னொரு சாதி பிதனம் வைத்துப் பாராமல்
இனத்துடன் சேர்ந்திருப்பேன்"
என எழுதிக் கையொப்பமிட்டுக் கொடுத்தால், வைகுண்ட சுவாமிகளைச் சிறையிலிருந்து விடுதலை செய்வதாக மன்னன் கூறினான். பூவண்டரும் அவ்வண்ணமே எழுதி, சுவாமிகளிடம் ஒப்பமிடக் கொடுத்தபோது அவர் அதை வாங்கிக் கைநகத்தால் கீறித் தரையில் எறிந்தார். ஒடுக்கப்பட்ட பிரிவைச் சார்ந்த சாதியினர் இணைந்திட, ஆளும் வர்க்கம் என்றும் அனுமதித்ததில்லை. கீழ்த்தட்டு மக்களின் ஐக்கியத்தில் மேட்டுக்குடியினரின் வீழ்ச்சி எழுதப்படுகிறது என்பதை நன்கு அறிந்திருந்ததால் இத்தகையதோர் உறுதிமொழியினை, சுவாமிகளிடம் அரசாங்கம் எதிர்பார்த்தது. மன்னனின் நிபந்தனையை சுவாமிகள் நிராகரித்தார். எனினும் வேறு வழியின்றி மன்னன் வைகுண்ட சுவாமிகளை விடுதலை செய்தான்.
தனது நூற்றுப் பத்து நாட்கள் சிறை வாழ்வினை முடித்து விட்டு, சுவாமிகள் 1838-ம் ஆண்டு மார்ச் திங்களில் விடுதலையாகி வெளி வந்தார். அவருடைய அன்பர்கள் அவரை தொட்டிலில் வைத்து மகிழ்ச்சி ஆரவாரங்களுடன் அழைத்து வந்தனர். வரும் வழியில் பழவாறு எனும் கிராமத்தில் இரவு தங்கினார். அவ்வூரில் சிறு தெய்வங்களுக்கு பலியிடுவதற்காக 21 ஆட்டுக்கடாக்கள் நிறுத்தப்பட்டிருந்தன. சுவாமிகள் இதனை அறிந்து, கோவில் பொறுப்பு வகித்த சீதப்பன் நாடாரிடம், இறைவனுக்கு உயிர்ப் பலியிடுவது ஏற்புடையதல்ல என்பதை எடுத்துரைத்தார். கிராம மக்கள் 'பலியிடுவதை நிறுத்தினால் வாதைகள் (பேய் தெய்வங்கள்) தங்கள் குடும்பங்களைத் துன்புறுத்தும்' என்று அச்சம் கொண்டபோது, சுவாமிகள் அவர்களைச் சாந்தப்படுத்தி, 21 வாழை இலைகளில் 21 மா உருண்டைகளை அன்புடன் வழங்கி வழிபடுங்கள். வாதைகள் ஏற்றுக்கொள்ளும்' என்று உறுதி கூறினார்.
சுவாமிகளின் அருளுரையினை ஏற்று, கிராம மக்கள் ஆட்டுக்கடாக்களை அவிழ்த்துவிட்டனர். மாவுருண்டைகள் தெய்வங்களுக்கு வழங்கப்பட்டன. சுவாமிகளின் உயிர்ப்பலி எதிர்ப்புக்கணைகள், தம் இலக்கை அடைந்து உரிய பலனை தந்தன. வைகுண்ட சுவாமிகள் தன்னுடைய எஞ்சிய காலம் முழுவதையும் மக்களின் நல்வாழ்விற்காகவே அர்ப்பணித்தார். மக்களின் வாழ்வு ஏற்றம் பெற்றிட, பல்வேறான சீர்திருத்தங்களை புகுத்தினார். மக்களை தூய வாழ்வில் இட்டுச் செல்லத் துவையல் பந்தி கண்டார். ஒன்றே குலம் என்று முத்திரிகிணறு மூலம் தெளிவுறுத்தினார். தர்மமிட்டு ஏழையின் சிரிப்பிலே இறைவனைக் காணுமாறு அறிவுறுத்தினார். அச்சமில்லா வாழ்விற்குத் தலைப்பாகை அணியும் பழக்கத்தை அருளினார். சமத்துவம் ஏற்படுத்திட, சமத்துவச் சங்கம் கண்டார், பெண்ணின் பெருமையை காக்க, தோள்சேலை அணிந்திடச் செய்தார். தீண்டாமை ஒழிய சமபந்தி போஜனம் செய்தார், நோய் தீர்த்தார், ஆறுதல் அளித்தார். பேய் வழிபாட்டினை வன்மையாக கண்டித்தார், பலியிடும் பழக்கத்தை நீக்கிடச் செய்தார், சிறு தெய்வவழிபாட்டைப் புறத்தே ஓட்டிடச் செய்தார். அன்பே உலகாளும் என அகில அமைதி வாழ்வுக்கு அன்புக் கொடி ஏற்றினார்.
இவ்வாறாக, சீர்திருத்தம் பல கண்ட வைகுண்ட சுவாமிகள் மிகக்குறைந்த நாட்களே இவ்வவணியில் வாழ்ந்திட முடிந்தது. கொல்லம் வருடம் 1026-ம் ஆண்டு வைகாசி திங்கள் 21-ம் நாள் (1851 ஜூன் 2) திங்கள் அன்று நண்பகல் 12 மணியளவில் சுவாமிகள் வைகுண்டமேக வழிகொண்டார். தனது இறுதி மூச்சில் கூடத் தன்னை சுற்றியிருந்த மக்களிடம்
"பதறாமல் நீங்கள்
பண்பாய் ஒருப் போலே
சிதறாமல் நீங்கள்
செய்யவனு கூலமுமாய்
இருந்து மிக வாழும்" ...
என்று ஆசி கூறி விடை பெற்றார்.
சமுதாயம் பல பிரிவுகளாகப் பிளவு பட்டுக் கிடந்த வேளையில், எல்லாப் பிரிவு மக்களும் 'சமத்துவம்' என்ற போதிமரத்தின் கீழ் ஒன்றுபட்டு இளைப்பாறிடச் சங்கம் ஒன்றினை வைகுண்ட சுவாமிகள் ஏற்படுத்தினார். அதனை அடுத்த தொடரில் பார்க்கலாம்.