என் மலர்
சிறப்புக் கட்டுரைகள்
பாராட்டும் பண்பு!
- பாராட்டு என்பது மனித வாழ்வியலின் தலைமையான பண்பாடு ஆகும்.
- பல்வேறு துறைகளில் நம்பணி தொடர்ந்து கொண்டுதான் இருக்கின்றது.
ஒரு செயலை ஈடுபாட்டோடு செய்கிற எவருமே அச்செயலை அடுத்தவர்கள் பாராட்ட வேண்டும் என எதிர்பார்ப்பதில் எந்தத் தவறுமில்லை. பாராட்டு என்பது வளர்கிற பயிருக்கு வார்க்கிற மழைநீர் போன்றது. கிணற்றுநீர் பாய்வதைவிட மழைநீர்த் தெளியல் ஒவ்வொரு பயிரையும் செழித்து வளர்வதற்கான ஊக்கச் சாரல் ஆகும், அதைப்போலக் கடமையாற்றுகிற ஒவ்வொருவரும், அந்தக் கடமை செம்மையாகச் செய்யப்பட்டிருக்கிறது என்று முதலில் வருகிற பாராட்டையே அடிப்படையானதாக விரும்புகின்றனர். பலனை எதிர்பார்ப்பது என்பது இரண்டாவது நிலையிலேயே வைத்து எண்ணப்படுகிறது.
பாராட்டு என்பது மனித வாழ்வியலின் தலைமையான பண்பாடு ஆகும். எந்தவொரு செயலிலும் நன்மையும் இருக்கும்; தீமையும் இருக்கும். அதேபோல எந்தவொரு மனிதரிலும் நல்ல குணங்களும் இருக்கும்; தீய குணங்களும் இருக்கும். அவற்றில் தீயவற்றைப் புறந்தள்ளி விட்டு, நன்மையானவற்றையே கருதத் தொடங்கி விட்டால், எல்லாரையும் பாராட்டுகிற நற்குணம் நம்மையறியாமலேயே நம்மிடம் வந்து ஒட்டிக்கொள்ளும்.
பாராட்டு என்பது ஒரு செயலை ஏற்றுக்கொள்வது; ஏற்றுக்கொண்ட செயலின் மதிப்பை உணர்ந்து மகிழ்ச்சியை வெளிப்படுத்துவது ஆகும். எந்தவொரு செயலும் சிறப்பாகச் செய்யப்பட்டிருந்தால் அதனை உளமார அங்கீகரிப்பதுதான் பாராட்டு ஆகும். பாராட்டுவதன் மூலம் அந்தச் செயலோடு நாம் ஒத்துப்போகிறோம் என்பதும், செயலைச் செய்தவருக்கு நன்றியுணர்வோடு இருக்கிறோம் என்பதும் வெளிப்படுத்தப்படுகிறது.
பாராட்டை இந்த உலகமே எதிர்பார்த்துக் காத்திருக்கிறது. அதனை முதலில் நாம் நமது வீட்டிலிருந்து தொடங்குவோம். நாள்தோறும் சமைத்து வேளாவேளைக்கு உணவு பரிமாறுகிற தாய்க்கும் மனைவிக்கும் நாம் எப்படி நன்றியுள்ளவர்களாக இருக்கப்போகிறோம். அதுதான் வேலைக்குப் போய்ச் சம்பாதித்து வந்து, பணத்தையும் பொருள்களையும் வீட்டில்வந்து கொட்டத்தானே செய்கிறோம்; இதில் சமைப்பதற்கு எதற்கு நன்றியுணர்வு? என்று சிலர் கேட்கலாம். ஆனால் வேலைக்குப் போவதும், கடுமையாக உழைத்துச் சம்பாதிப்பதும் 'உடல் சார்ந்த கடமை' என்றாலும், வீட்டிலேயே அடைபட்டு, சதா குடும்ப உறுப்பினர்கள் நினைவாகவே சமைப்பதும் வீட்டு வேலைகள் பார்ப்பதும் 'இதயம் சார்ந்த சேவை' ஆகும். அதிலும் தற்காலத்தில் பெண்களும் வெளியில் வேலைக்குச் செல்லத் தொடங்கிவிட்டனர்; ஆனாலும் வீட்டுவேலைகள் இன்னமும் அவர்கள் வசம்தான் இருக்கிறது. எனவே வீட்டில் உணவருந்தும்போது, இயந்திரத்தைப்போல அமர்ந்து உணவை வயிற்றுக்குள் நிரப்பிக் கொள்ளாமல், உணவுச் சுவையைக் கொஞ்சம் கூடுதலாகவே பாராட்டிப் பாருங்கள்!; பிறகு நாளடைவில், பாராட்டுப் பெருகப் பெருக, சாதாரணச் சமையல்கூட ராஜவிருந்தாகச் சுவை கூடிப்போகும். பாராட்டு என்பது அன்பையும் ஈடுபாட்டையும் பெருகச் செய்கிற மந்திரச் சொல்லாகும்.
வீட்டில் வளருகிற மழலையின் ஒவ்வொரு சொல்லையும் பாராட்டிப் பாருங்கள்; அவர்கள் பேசுவதெல்லாம் விரைவில் திருவாசகமாக மாறிப்போகும். பிள்ளைகள் மதிப்பெண் குறைவாக எடுத்திருந்தாலும், அடுத்தமுறை அதிகம் எடுக்க வாழ்த்துகள்! என்று வாழ்த்திப் பாருங்கள்! மகிழ்ந்து போவார்கள்; அடுத்தமுறை அவர்களாகவே முயன்று மதிப்பெண்களை அள்ளிக்கொண்டு வருவார்கள். எந்தச் சூழ்நிலையிலும்,'நீ எங்கே படிக்கப் போகிறாய்! மாடுமேய்க்கத்தான் லாயக்கு!" என்று நீங்கள் பெற்ற குழந்தைகளை நீங்களே சபிப்பதுபோல் திட்டிவிடாதீர்கள்; அவர்கள் சோர்ந்து போவார்கள்.
பொதுவாகவே இல்லமாயினும் அலுவலகமாயினும் கோபமாகத் திட்டிக்கொண்டே இருந்தால்தான், வேலை நடைபெறும்; எல்லாரும் அச்சத்தோடு காரியத்தைக் கச்சிதமாகச் செய்வார்கள் என்று சிலர் எண்ணிக் கொண்டிருக்கிறோம். உண்மையில் அது தவறு. பாராட்டும் செயலே இனிய சொற்களை மூலதனமாகக் கொண்டு, நேர்முறை அதிர்வுகளைச் சொல்லிலும் செயலிலும் இருதரப்பிலும் ஏற்படுத்தும் வல்லமை வாய்ந்தது.
சரியாகச் செய்திருந்தால் பாராட்டுவதும், குறையாகச் செய்திருந்தால் திருத்திக்கொள்ள உதவும் வண்ணம் அறிவுரை கூறுவதும் நல்ல முறைமைதான். ஆனால் எதுவுமே செய்யாமல் சோம்பேறியாகவே அமர்ந்திருப்பவரை எப்படிப் பாராட்டி ஊக்குவிப்பது?. இது நல்ல கேள்விதான். வெறுமனே அமர்ந்திருந்தால் எதுவுமே கிடைக்கப்போவதில்லை என்பதை அவர்கள் உணரும்வண்ணம் உணர்த்தி ஊக்குவிக்க வேண்டும். எதைச் செய்தாலும் அது செம்மையாக முடிவதில்லை; தவறாகவே நடந்துவிடுகிறது! என்று விரக்தியில் மனம் தளர்ந்து போய் நிற்பவர்களிடம், 'முதலில் நீங்கள் செயலில் ஈடுபடுங்கள்! அது செம்மையானதா? சீரற்றதா? என்பதைப் பிறகு பார்த்துக் கொள்வோம்!' என்று செயல்பட ஆற்றுப்படுத்துங்கள். செயலாற்றத் தொடங்கத் துணிச்சல் வந்துவிட்டால், பிறகு எந்தக் காரியமும் தோல்வியில் முடிவதில்லை; நிறைவில் அது பாராட்டையே நல்கிநிற்கும்.
பாராட்டு சக மனிதர்களைத் தன்னம்பிக்கை உள்ளவர்களாக உயர்த்தும். தம்முடைய சிந்தனையிலும் செயலிலும் ஒரு பூரணத்துவம் நிறைந்திருப்பதாகப் பாராட்டுப் பெறுபவர் நினைக்கும்போது, அவரது அடுத்தடுத்த செயல்களும் நிச்சயம் பாராட்டும்படியாகவே சிறக்கும். அந்த வகையில் நிறுவனம் சார்ந்த உற்பத்திகளும் வெற்றிச் சாதனைகளைக் குவிக்கும்.
எல்லாரும் பணியாற்றுகிறோம். இல்லங்களில், அலுவலகங்களில், நிறுவனங்களில், தொழிற்சாலைகளில், கலை, இலக்கியம், கல்வி, அரசியல் என்று பல்வேறு துறைகளில் நம்பணி தொடர்ந்து கொண்டுதான் இருக்கின்றது.
கடமைக்காகப் பணியாற்றுகிறோம் என்று பெரும்பாலோர் கருதி உழைக்க, ஒரு சிலரே ஆத்ம திருப்திக்காகப் பணியாற்றுகிறோம் என்று கூறுகிறார்கள். கடமைக்காக உழைப்பது என்பது வேறு; ஆத்ம திருப்திக்காகப் பணியாற்றுவது என்பது வேறு. கடமைக்காகப் பணியாற்றுபவர்கள் சம்பளத்திற்காக மட்டுமே உழைப்பவர்கள்; கொடுத்த வேலைக்குமேல் ஓர் இம்மியளவிகூடக் கூடுதலாக உழைப்பதற்கு இவர்கள் சம்மதிப்பதில்லை; ஆத்ம திருப்திக்காக உழைப்பவர்களும் ஒருவகையில் சம்பளத்திற்காக வேலை செய்பவர்கள்தாம்; என்றாலும் அவர்கள் நிச்சயம் பாராட்டை எதிர்பார்ப்பவர்களாக இருப்பார்கள்; அதற்கேற்ற வண்ணம் செய்நேர்த்தியுடன் அழகியலோடு பணிகளைச் செய்து முடித்திருப்பர்.
பாராட்டுக் கிடைக்கும் என்னும் எதிர்பார்ப்பு எந்தக் கடினப் பணியையும் இலகுவாக்கிவிடுகிறது. ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் மறைந்திருக்கும் தாழ்வு மனப்பான்மைகளை அகற்றித் தன்னம்பிக்கையில் தளும்பி நிற்கும் மனிதர்களாகப் பாராட்டு மாற்றிவிடுகிறது.
எல்லைப்பகுதியில் நடந்த ஒரு சண்டையில் ஒரு ராணுவ வீரன் வீரமரணம் அடைந்து விடுகிறான். சொந்த ஊரில் நல்லடக்கம் செய்யப்படுவதற்காக அவனது உடல் ஊருக்குக் கொண்டு வரப்படுகிறது. உற்றார், உறவினர், உடன்படித்தோர், ஆசிரியர்கள், ஊர்மக்கள் என அந்தப்பகுதியே திரண்டுவந்து உயிர்நீத்த ராணுவ வீரனுக்கு அஞ்சலி செலுத்திக் கொண்டிருக்கின்றனர். வீரனின் பெற்றோர் அந்தக் கூட்டத்தில் நின்றிருந்த செல்வி டீச்சரைத் தனியே அழைத்துப், பலமுறை கிழிந்து ஒட்டுப் போடப்பட்டிருந்த ஒரு தாளினை வழங்குகிறார்கள்.
அந்தத் தாள் பலமுறை மடித்து விரித்துப் பயன்படுத்தப்பட்டிருப்பதால், கிழிந்த மடிப்புகளில் செலபோன் டேப்புகள் ஒட்டப்பட்டிருக்கின்றன. தன் மகன் எல்லையில் கொல்லப்படும்போது, அவனது கால்சட்டைப் பையில் இருந்த பர்ஸில் இந்தக் காகிதம் பத்திரப்படுத்தப்பட்டு இருந்ததாகப் பெற்றோர் கூறினர். செல்வி டீச்சர் பிரித்துப் பார்த்த தாளில் அவரது கையெழுத்தில் பக்கம் முழுவதும் நிறைய எழுதப்பட்டிருக்கிறது.
செல்வி டீச்சர், இறந்த வீரனின் ஐந்தாம் வகுப்பு ஆசிரியை. வகுப்பில் நாற்பது குழந்தைகள். வகுப்பிற்கு வந்த முதல்நாள் நாற்பது வெள்ளைத் தாள்களை ஒவ்வொரு மாணவர் கையிலும் கொடுத்து, உங்கள் வகுப்பில் உங்களோடு பயிலும் உங்கள் நண்பர்கள் பெயர்களை ஒருகோடு இடைவெளி விட்டு ஒவ்வொருவரும் எழுதிக்கொள்ளுங்கள் என்றார். எழுதிய பிறகு, ஒவ்வொரு நண்பன் பெயருக்கும் நேராக அவனிடம் உங்களுக்குப் பிடித்த அவனது ஒரு நல்ல குணத்தை மட்டும் எழுதுங்கள் என்றார். எல்லாரும் எழுதிக் கொடுத்த பிறகு, அந்தத் தாள்களை வீட்டிற்கு எடுத்துச் சென்ற செல்வி டீச்சர், ஒவ்வொரு மாணவனுக்கும் தனித்தனித் தாள்களைப் போட்டு, அவனைப்பற்றிய நல்ல குணங்களாக மற்ற மாணவர்கள் கருதுவனவற்றையெல்லாம் தொகுத்துப் பட்டியலிட்டு எழுதிக் கொண்டு வந்து அவரவருக்குத் தந்துவிட்டார். வாங்கிப் பார்த்த ஒவ்வொரு மாணவனுக்கும் ஆச்சரியம். நாம் உண்மையிலேயே இவ்வளவு நல்லவர்களா? என்று புளகாங்கிதம் அடையத் தொடங்கிவிட்டனர். இதுவரை எப்படியோ, இனிமேலாவது சக நண்பர்கள் பாராட்டியபடி நாம் நிச்சயம் நல்லவர்களாக வாழவேண்டும் என மனதார உறுதியுடன் செயல்படத் தொடங்கிவிட்டனர். அன்று ஐந்தாம் வகுப்பில், செல்வி டீச்சர் கைப்பட எழுதித் தந்த அந்தப் பாராட்டுக் காகிதம்தான், இன்றுவரை அந்த வீரனை உத்வேகப்படுத்தி, இந்த நாட்டிற்காக உயிர்த் தியாகம் செய்யுமளவிற்குத் தூண்டியிருக்கிறது.
பாராட்டுவது என்பது எதையாவது பாராட்டுவது; எல்லாவற்றையும் பாராட்டுவது என்பது கிடையாது. கண்ணை மூடிக்கொண்டு பாராட்டுவது பாராட்டிலேயே வராது; கருத்தில் நிறைந்தவற்றை மட்டுமே பாராட்ட வேண்டும். ஒரு கவிதையைப் பாராட்டுகிறோம் என்றால் கருத்து, வடிவமைப்பு, உத்தி போன்றவற்றில் கவிஞர் கையாண்டுள்ள புதுமைகளைப் பாராட்டலாம். இதுவரை வெளிவந்துள்ள கவிதைகளைவிட அந்தக் கவிதை எந்த விதங்களிலெல்லாம் மாறுபட்டு நிற்கிறது என்பதைச் சொல்லிப் பாராட்டலாம்.
உழைப்பு என்பது எல்லாருக்கும் ஒரே தரமானவை என்றாலும் கடின உழைப்பு, நளின உழைப்பு என இருவகைகள் உள்ளன. கடினமாகச் செய்யவேண்டியதை நளினமாகச் செய்ய முடியாது; அதேபோல நளினமாக ஆற்ற வேண்டியதைக் கடினமாகக் கையாளவும் கூடாது. இவற்றின் திறமறிந்து பாராட்டவேண்டும். சந்தித் தெருப்பெருக்குவதற்கும் சாத்திரங்கள் உருவாக்கப்படவேண்டும் என்ற தனது பேரவாவை வெளிப்படுத்தும் மகாகவி பாரதி, அத்தொழிலையும் கற்றுத் தேர்ந்தவரே கையாளவேண்டும் என்று வலியுறுத்துகிறார். தெருப்பெருக்கும் தொழிலின் தரமுயர்த்திப் பாராட்டுகிறார். கணினித் தொழிலும் கற்கப்பட வேண்டும்; கைத்தொழில்களும் கற்கப்பட வேண்டும்; அப்போதுதான் அவ்வத் தொழில்களில் உள்ள நுட்பங்கள் வெளிப்பட்டு நல்ல பலன்களை அளிக்கும்.
நாம் செய்ய முடியாத செயல்களையும் பொருள்களையும் அடுத்தவர் செய்து முடிக்கும்போது நம்மையறியாமலேயே நாம் பாராட்டியே ஆக வேண்டும். பாராட்டு என்பது நாம் அடுத்தவர்க்குச் செலுத்துகிற நன்றியுணர்வு. நன்றியுணர்வோடு நாம் இருக்கிறோம் என்றால், நமக்குப் பயன்படுகிற செயல்களை, நம்மால் செய்ய முடியாத செயல்களை அடுத்தவர் செய்யும்போது மனமுவந்து பாராட்டவேண்டும். பாராட்டுவதால் நமது எண்ணங்களில் ஒட்டியிருக்கும் பொறாமை போன்ற தீய எண்ணங்கள் கழுவப்பட்டு மனத்தில் மகிழ்ச்சி எண்ணங்கள் குடியேறுகின்றன. பாராட்டுப்பெறுபவரும், இந்தப் பாராட்டின்மூலம் தன்னுடைய அரிய பணிக்குக் கிடைத்துள்ள அங்கீகாரத்தை எண்ணி மகிழ்வார்; புதிய ஊக்கத்தை அடைவார்.
பாராட்டு மதிப்பு மிக்கது; அது மதிப்பிற்குரியோரின் மதிப்புமிக்க செயல்களை, மதிக்கத் தெரிந்தவர்கள் அங்கீகரிக்கக் கையாளும் ஆனந்தமயமான உத்தி.
பாராட்டுவோம்! பாராட்டுப் பெறுவோம்!.
தொடர்புக்கு - 94431 90098