என் மலர்
சிறப்புக் கட்டுரைகள்
உசுரே நீ தானே!... அத்தியாயம்- 10
- திவ்யாவுக்கு சற்று பயம் குறைந்து சகஜமானாள்.
- கார் எந்த சப்தமும் இல்லாமல் மௌனகீதம் வாசித்தது.
பதட்டமாய் காரைவிட்டு இறங்கினர் இருவரும். டேவிட், காரின் பானெட்டை திறந்து பார்க்க, எல்லாமே சரியாய் அவன் பார்வைக்கு தெரிந்தது. 'ஒருவேளை பேட்டரி டவுண் ஆகியிருக்குமோ?!
டேவிட் யோசிக்கும்போது, அவன் தோள் மீது கை வைத்தாள் திவ்யா. திரும்பி அவளிடம் 'என்ன' என டேவிட் புருவம் உசத்தி கேட்க, திவ்யா ரோட்டை நோக்கி கை நீட்ட, டேவிட் பார்க்கவும், அந்த 'டிரக்' வந்து நிற்கவும் சரியாய் இருந்தது.
அதே தலைப்பாகை, கூலிங் கிளாஸ், டிரைவர், டிரக்கில் இருந்து குதித்து இவர்களை நோக்கி வந்தான். பயத்தில் டேவிட்டின் கையை இறுகப்பற்றிக் கொண்டாள். பக்கத்தில் வந்த டிரைவர், இவர்களையும், காரையும் மாறி மாறி பார்த்தான்.
"எந்தா சாரே.. கார் பிராபலமா?" அவனது 'எந்தா சார்' அவனை மலையாளி என உணர்த்தியது.
"ஆமா… என்ன பிராப்ளம்னு தெரியலை.. நான் பார்த்துக்குறேன்…நீங்க போங்க.."
ஏறக்குறைய அவனை விரட்டுவது போல் பதில் சொன்னான் டேவிட்.
"எந்தா சார்.. ஹெல்ப் பண்ணலாம்னு வந்தா இப்படி விருட்டுரிங்க…"
நீங்க ஹெல்ப் பண்ண வந்ததுக்கு நன்றி.. நான் காரை சரி பண்ணிக்கிறேன். நீங்க போங்க.."
"பேடிக்க வேண்டாம்.. சாரி.. பயப்பட வேண்டாம் சாரே.. எண்ட பேரு மனோகர்.. சொந்த ஊரு கொல்லம்.. வாரம் ரெண்டு தடவை சென்னை - கொல்லம்னு லோடு ஏத்திட்டு போற ஆளு நான்.."
திவ்யாவுக்கு சற்று பயம் குறைந்து சகஜமானாள். அவன் தொடர்ந்தான்.
'இப்ப கூட நான் கொல்லம்தான் போகுது. பசி பயங்கரமா எடுத்ததாலேயே நான் ஹார்ன் அடுச்சு உங்க கார ஓவர் டேக் பண்ணி போச்சு.."
அவன் பேச்சில் எதார்த்தம் தெரிந்தது. 'ஒரு நல்லவனை நாம சந்தேகப்பட்டோமோ' என யோசித்தான். தொடர்ந்தான் மனோகர்..
"அதன் பின்னே… நான் உங்களை ஓட்டல்ல வச்சு கண்டு சிரிச்சு… நீங்கள் பயந்து போய் சிரிக்க கூட இல்ல… இப்போ இவ்விட வண்டி ரிப்பேர் ஆகி நிக்குது. ஹெல்ப்புக்கு வந்தா இப்பவும் நம்பலை.. அதானே சாரே.."
அவன் அப்பாவியாய் கேட்டான்.
"அப்படி எல்லாம் இல்லை மனோகர். உங்க தோற்றமும், உருவமும் பயமுறுத்திடுச்சு. அதான்.. ஆங்.. அப்புறம் இவங்க என் மனைவி திவ்யா"
திவ்யாவை அறிமுகம் செய்தான் டேவிட்.
"நமஸ்காரம் மேடம்!" அவன் சிரித்தபடி கும்பிட, திவ்யா பதிலுக்கு கை கூப்பினாள்.
"அப்புறம் சாரே.. நான் காரை நோக்கட்டா… சாரி… என்ன ரிப்பேர்னு பாக்கட்டா" என அவன் கேட்கவும், டேவிட் "சரி.. பாருங்க.."
மனோகர் காரின் பானட் புல்லா துழாவினான். காரில் அமர்ந்து ஸ்டார்ட் செய்து பார்த்தான். கார் எந்த சப்தமும் இல்லாமல் மௌனகீதம் வாசித்தது.
"சாரே.. இ ரோட்டுல பெருசா வண்டிகள் ஏதும் வராது. இது குறுக்கு வழி. மெயின் ரோடுன்னாலும் வண்டிங்க வரும்.. நீங்க எப்படி இந்த குறுக்கு வழியில வந்துச்சு.."
மனோகர் வண்டியை ஆராய்ந்த படியே கேட்டான்.
"கூகுள் மேப் காட்டின வழிலதான் வந்தோம்.." டேவிட் சொன்னான்.
'கூகுள் மேப் சமயத்துல குறுக்கு வழின்னு இப்படி ஏதாவது ரூட்டை காண்பிச்சுடும்.. அப்பப்ப அங்க அங்க உள்ள கடைகளிலோ, டோல்கேட்டிலோ ரூட் செக் பண்ணிக்கணும் சாரே… இப்போ எந்த ஊருக்கு போறீங்க சாரே…" மனோகர் கேட்டான்.
"மேலூருக்கு… அங்க பக்கத்துல இருக்கிற சின்னூர்ல நாளைக்கு மறுநாள் ஒரு கச்சேரி.."
"ஓ… சார் சிங்கரோ!"
"ஆமா… என் மனைவியும் பாடுவா.." டேவிட் பெருமையாய் சொன்னான்.
"சூப்பர் சாரே… பெரிய பாடகரா, படகியா வாங்க.. குருவாயூரப்பன் அருள் கிடைக்கட்டும்.." கையை துடைத்து ஆசிர்வாதம் செய்தான்.
'வண்டியை செக் பண்ணிட்டீங்களா…? டேவிட் கேட்க,
"பண்ணியாச்சு சாரே… ஸ்டார்ட் ஆக மாட்டேங்குது… எனக்கு நேரம் ஆகுது… காலையில கொல்லம் போகலேன்னா மொதலாளி திட்டும். இந்த ரோட்டில் வேற வண்டி ஏதாவது வந்தா ஹெல்ப் கேட்டு பாருங்க.. என்னால சரி பண்ண முடியல சாரே.. நான் வரட்டா.."
மனோகர் கிளம்ப எத்தனிக்க, இவனையும் விட்டா வேற ஆள் இந்த ராத்திரியில ஹெல்ப்புக்கு கிடைக்கிறது கஷ்டம்!" - யோசித்த திவ்யா, டேவிட்டை தோளில் தட்டி
"இவர் கிட்ட வேற ஏதாவது மெக்கானிக் பக்கத்துல கிடைப்பாரான்னு கேளுங்க.."
அவள் டேவிட்டிடம் சொன்னதை கேட்ட மனோகர், "சிஸ்டர்.. மெக்கானிக் யாரும் பக்கத்தில் கிடையாது. இங்கிருந்து ஒரு 20 கிலோ மீட்டர் தள்ளி போனா, ஒரு சின்ன மெக்கானிக் கடை இருக்கு.. அங்க கேட்டு பாக்கலாம்… இல்லன்னா கார லாக் பண்ணிட்டு வாங்க.. அங்க ட்ராப் பண்ணிட்டு போறேன்… மெக்கானிக்கை கூட்டி வந்து, உங்க கார சரி பண்ணி எடுத்துட்டு போங்க…"
அவன் சொன்னது சரி என்று பட்டது இருவருக்கும். "நீங்க சொல்றதுதான் சரி மனோகர்.." டேவிட் ஆமோதித்தான். காரை பூட்டிவிட்டு, அவன் 'டிரக்'கில் இருவரும் ஏற, டிரக் கிளம்பியது.
முதன்முறையா, ஒரு டிரக்கில், அதன் கேரவனில் அமர்ந்து பயணிப்பது திவ்யாவுக்கு புதுசா இருந்தது. ஏதோ யானை மீது உட்கார்ந்து போவது போல் உயரமாய் இருந்தது.
கார் சீட் போல், டிரக் சீட் மெத்தென்று இல்லாமல், பலகை போட்டு அதன் மேல் ஒரு சிறு மெத்தையை போட்டு உட்கார்ந்து இருப்பது போல் இருந்தது. கண்ணாடி அருகே வைத்திருந்த, கிருஷ்ணன் சிலை மீது போடப்பட்டு இருந்த, மல்லிகை சரம் வாடி தொங்கியது. அதில் வாடி இருந்த மல்லிகை பூ, டிரக் போகும் ஸ்பீடில் வரும் காற்றுக்கு ஒவ்வொன்றாய் பறந்து கொண்டிருந்தது. கேரவன் முழுக்க ஒருவித சாம்பிராணி வாசம். கூடவே மழையில் நனைந்த துணியில் இருந்து வரும் வாசம் போல ஒரு நெடி.
டிரக் ஏறிய பிறகு, மனோகர் பேசவே இல்லை. அவன் கவனம் முழுவதும் ரோட்டிலேயே இருந்தது.
"இந்நேரம் மெக்கானிக் முழுச்சு இருப்பானா?" டேவிட் கேட்டான்.
"இந்த மாதிரி ரோடுங்கள்ல இருக்கிற மெக்கானிக் தூங்கினாலும் கதவை தட்டினதும் முழுச்சுடுவாங்க…"
பேசியபடியே தன் சீட்டுக்கு பக்கத்தில் இருந்து, ஒரு ஜூஸ் பாட்டிலை எடுத்து நீட்டினான். "ஓட்டல்ல வாங்கின ஜூஸ்.. குடிங்க சார்..." என்று நீட்டினான் மனோகர்.
"வேண்டாம் மனோகர்... தாகமில்லை..." என டேவிட் மறுத்தான். இவ்வளவு நேரம் அந்த ரோட்டில் நின்றதால், வியர்த்து போய் களைப்பாய் நின்ற திவ்யாவுக்கு அதை குடித்தால் தேவலை என்று தோன்றியது.
"எனக்கு தாங்க டேவிட்.." என ஜூஸ் பாட்டிலை வாங்கினாள். அதன் மூடி திறக்கப்படாமல், புதுசா வாங்கின பாட்டில் என தெளிவாய் தெரிந்தது. பாட்டில் மூடியை ஒரு திருகு திருகி திறந்து மடமடவென்று குடித்தால். தொண்டைக்கு இதமாய் இருந்தது. அரை பாட்டிலை குடித்து டேவிட்டிடம் நீட்டினாள்.
"நீங்க கொஞ்சம் குடிங்க டேவிட்.."
டேவிட் தலையாட்டி 'எனக்கு வேணாம்' என மறுத்து பாட்டிலை மூடி மனோகரிடம் கொடுத்தான். மனோகர் பாட்டிலை வண்டியை ஒட்டியபடியே, வாங்கி தன் சீட் அருகே வைத்தான்.
"இன்னும் எவ்வளவு நேரம் ஆகும் மெக்கானிக் கடை வர.."
"இதோ.. இன்னும் 20 நிமிசத்துல போயிடலாம்.."
அந்த 'டிரக்'கின் என்ஜின் ஓடும் சத்தம் தவிர, வேறு எந்த சத்தமும் இன்றி அந்த குறுக்கு ரோடு வெறிச்சென்று இருந்தது. டிரக் 70 கிலோ மீட்டர் வேகத்தில் செல்ல, திவ்யாவுக்கு தூக்கம் கண்ணை சுழற்றியது.
இருபது நிமிடத்துக்கு பின் டிரக் ஓர் இடத்தில் நின்றது. அதற்குள் திவ்யா நன்றாக தூங்கி இருந்தாள். அவள் தலை டேவிட்டின் தோள் மீது சாய்ந்து இருந்தது.
"அதோ.. தெரியுது பாருங்க.. மெக்கானிக் கடை.."
மனோகர் காட்டிய இடம், ரோட்டின் மறுபுறம், "5 ஸ்டார் மெக்கானிக் கடை" என்று போர்டு போட்டு டயர்கள் அடுக்கி வைக்கப்பட்ட சின்ன கடையாக இருந்தது. பக்கத்திலேயே மஞ்சள் கலர் பெயிண்ட் அடித்த ஒரு சின்ன வீடு இருந்தது. 40 வாட்ஸ் பல்ப்பு எரிந்து கொண்டு இருந்தது.
"தூங்கிட்டான் போல… சார்.. இறங்கி போய் அந்த மஞ்சள் வீட்டு கதவை தட்டி, மனோகர் வந்து இருக்கேன்னு சொல்லுங்க… மெக்கானிக் பேரு மணி.."
தோளில் சாய்ந்து தூங்கும் திவ்யாவை பார்த்தான் டேவிட்.
"அவங்களை அப்படியே சீட்ல சாச்சு விட்ருங்க. தூங்கட்டும்… நீங்க போய் மணிய கூட்டிட்டு வாங்க… ஏன்னா.. டிரக்கை நிப்பாட்டி நா இறங்கி போனா திரும்ப டைம் ஆகும்.." என மனோகர் கூறவும், டேவிட் திவ்யாவை சீட்டில் படுக்க வைத்துவிட்டு, இறங்கினான்.
டிரக்கை தாண்டி, ரோட்டை கிராஸ் பண்ணி, அந்த மெக்கானிக் வீட்டை நெருங்கும் சமயம்… டிரக் வேகமெடுத்து அந்த இடத்தை விட்டு பறந்தது. சுதாரித்து, டேவிட் டிரக் பின்னாடி ஓடி வந்து, முடியாமல் மூச்சுவாங்க நிற்க, திவ்யாவுடன் டிரக் கண்ணை விட்டு மறைந்தது.
(தொடரும்)
E-Mail: director.a.venkatesh@gmail.com வாட்ஸப்: 7299535353