search icon
என் மலர்tooltip icon

    சிறப்புக் கட்டுரைகள்

    மானத்தோடு வாழ்வதுதான் சுயமரியாதை!
    X

    மானத்தோடு வாழ்வதுதான் சுயமரியாதை!

    • மனிதர்க்குப் பெருமையெல்லாம் தனது சுயமரியாதையிலிருந்து சற்றும் நழுவாத வரைக்கும் தான்.
    • சுயமரியாதையோடும் தன்மானத்தோடும் வாழும்வரைதான் மனிதனுக்கு மதிப்பும் மரியாதையும்

    சுயமரியாதை தவறாத வாழ்வு வாழக் காத்திருக்கும் வாசகப்பெருமக்களே! வணக்கம்.

    ஒருவரைப் பார்த்து, 'இவர் மனிதராக வாழ்வதற்குரிய அனைத்துத் தகுதிகளையும் பெற்றிருக்கிறார்' என்றால், அவரைத் தமிழின் உயர்ந்த சொல்லான 'தக்கார்' என்கிற மதிப்புடைய சொல்லைச் சொல்லிப் பாராட்டலாம். அதே சமயத்தில், தகுதிக்குரிய எந்தக் குணத்தையும் பெற்றிருக்காதவரைத், 'தகவிலார்' என்கிற சொல்லால் சொல்லிக் கீழ்மைப்படுத்தலாம்.

    "தக்கார் தகவிலர் என்பது அவரவர்

    எச்சத்தாற் காணப்படும்"

    என்பது வள்ளுவப் பேராசான் மனித வகைமைகளைத் தகுதி அடிப்படையில் பகுத்துக் காட்டும் பாகுபாடு ஆகும். ஒவ்வொரு மனிதரும் தமது எண்ணங்களாலும் செயல்களாலும் தம்மை ஒழுக்க நிலைகளில் தகுதிப்படுத்திக்கொண்டே இருக்க வேண்டும். இத்தகுதிப்பாடுகளால் தம்மைத் தகவமைத்துக்கொண்டே இருப்பவர் தக்கார்; இல்லாதவர் தகவிலார் ஆவர்.

    ஒவ்வொரு மனிதரும் தாம் கடைப்பிடிக்கும் ஒழுக்க நெறிகளாலேயே உயர்ந்த இடத்தில் வைத்துப் போற்றப்படுகின்றனர். ஒழுக்கமே உயர்ந்த மதிப்பையும் மரியாதையையும் பெற்றுத் தருவதால், ஒழுக்க வாழ்வை, உயிரைப் பாதுகாப்பதுபோலப் போற்றிக் கடைப்பிடிக்க வேண்டும். "புகழ் எனின் உயிரும் கொடுக்குவர்" என்னும் புறநானூற்றுச் சிந்தனை, 'எந்த நிலையிலும் தனது புகழுக்கும் பெருமைக்கும் ஒரு சிறு களங்கமும் வந்துவிடக்கூடாது; மீறி வந்துவிட்டால் உயிரையும் இழந்துவிடத் தயங்கக் கூடாது' என்பதை வலியுறுத்துகிறது.

    மானம் என்பது கண்களுக்குப் புலப்படாத ஒழுக்கக் கோட்பாடுகளால் மெலிதான வலைப்பின்னல்போல உயிரைச் சூழ்ந்து நின்று பாதுகாப்புத் தருவது. உயிர் குடியிருக்க உடம்பு உதவுவது போல, உயிரைப் பாதுகாக்க மான உணர்வு மகத்தான பாதுகாப்பாக உறுதியுடன் நிற்கிறது. தன்மானம் என்பது ஒவ்வொரு மனிதரும் தமதான செயற்கரிய செயல்களால் தம்மை உருவாக்கி நிற்பது. தன்மரியாதை, தற்கட்டுப்பாடு, சுய ஒழுக்கம், தன்மானம் போன்றவைகளெல்லாம் தனிமனித ஒழுக்கங்களால் ஒருவரைச் சுற்றி எழுப்பப்படும் கொள்கை அடையாள உணர்வுக் கோட்டைச் சுவர்கள் போன்றவை ஆகும். சுயமரியாதை நிரம்பிய மனிதர் என்பவர் எந்த இடத்திலும் தனக்குரிய மரியாதைக்கு இம்மியளவும் பங்கம் வராமல் பெருமிதத்தோடு செயல்படுபவர்கள் ஆவர்.

    தன்மானம் என்பதும் சுயமரியாதை என்பதும் ஒரே நாளில் வந்து ஒட்டிக்கொள்பவை அல்ல; கால காலமாக நன்மதிப்புடன்கூடிய ஒழுக்கங்களால் அவர்கள் ஈட்டிய சொத்துக்களாக அவை திகழ்கின்றன. குடிப்பெருமை, இனப்பெருமை என்று மரபு ரீதியாக வருகின்ற பெருமைகளாலும் அவை பொலிவு கொள்கின்றன. காலச்சுழற்சியில்,பணம், செல்வம், அதிகாரம், செல்வாக்கு, நிலபுலன்கள் போன்ற நிலையற்ற விஷயங்களால் ஒரு மனிதர் திடீரென மேனிலைக்கு வரலாம்; அல்லது அதலபாதாளத்திற்குத் தள்ளப்பட்டுக் கீழ்நிலைக்கும் போகலாம். ஆனாலும் எப்பேர்ப்பட்ட இக்கட்டுநிலை வந்தாலும் ஒவ்வொரு மனிதரும் தனது சுயமரியாதைக்கும் தன்மானத்திற்கும் இழுக்கு நேர்ந்துவிடாமல் வாழ்க்கையைச் செம்மையாக நடத்த வேண்டும்.

    "தலையின் இழிந்த மயிரனையர் மாந்தர்

    நிலையின் இழிந்தக் கடை"

    இந்தத் திருக்குறளில் திருவள்ளுவர், 'மனிதன் எவ்வளவு இக்கட்டு வந்தாலும் தன்னிலை தாழக்கூடாது' என்பதை வலியுறுத்துகிறார். அதே வேளையில், 'வறுமை என்னை இந்தநிலைக்குத் தள்ளிவிட்டது; வாழ்வியல் துன்பங்கள் என்னை இந்தக் கீழ்நிலைக்குத் தள்ளிவிட்டன; என்று தன்மானம் தவறி, சுயமரியாதை இழந்து நிற்பவர்களைத், தலையிலிருந்து உதிர்ந்த மயிருக்குச் சமமானவர்கள் என்று கீழ்மைப்படுத்துகிறார். தலைமுடிக்குப் பெருமையெல்லாம் தலையில் அது இருக்கும் வரைதான்; அதுபோல மனிதர்க்குப் பெருமையெல்லாம் தனது சுயமரியாதையிலிருந்து சற்றும் நழுவாத வரைக்கும் தான்.

    சுந்தர ஆவுடையப்பன்


    தலைமுடி தலையில் இருக்கின்ற வரை அதனை வளர்ப்பதற்கும், பேணிப் பாதுகாப்பதற்கும் நாம் அதற்குச் செய்கின்ற உபசாரங்கள் எண்ணில் அடங்காதவை. நவீன அங்காடிகளுக்குச் சென்றால், தலைமுடிக்காக வந்துள்ள எண்ணெய் வகைகள், ஷாம்பு வகைகள், சீயக்காய் வகைகள், கிரீம் வகைகள், தலைமுடிச்சாய வகைகள், பின்னல் அலங்கார வகைகள் எத்தனை எத்தனை என்று சட்டென்று கணக்குப்போட்டுச் சொல்லிவிட முடியாது; அழகு நிலையங்களுக்குச் சென்றாலும் அதனை வெட்டுவதற்கும், செதுக்குவதற்கும், நீட்டிவிடுவதற்கும், பரப்பிப் பறக்க விடுவதற்கும் என்று அழகுக்கலை நிபுணர்கள் இதற்காகவே படித்துவிட்டு நிறைய இருக்கிறார்கள்.

    இவை அத்தனையும் தலைமுடிக்கு நாம் செலவழித்துச் செலுத்துகிற மரியாதை மதிப்புகள். ஆனால், அதே தலைமுடியில் ஒன்று நம் தலையிலிருந்து உதிர்ந்து நாம் சாப்பிடும்போது நம் தட்டிலோ இலையிலோ குழம்பிலோ விழுந்துவிட்டால் அவ்வளவுதான் அத்தனையையும் குப்பைத் தொட்டியில் கொட்டிவிடுவோம். தலையில் இருக்கும்வரை மதித்துப் போற்றப்படக்கூடிய தலைமுடி, உதிர்ந்து விட்டால் அருவருப்புப் பொருளாக மாறிவிடுகிற பரிதாபம் நிகழ்ந்து விடுகிறது.

    அதைப்போலத்தான் சுயமரியாதையோடும் தன்மானத்தோடும் வாழும்வரைதான் மனிதனுக்கு மதிப்பும் மரியாதையும்; அந்த நிலையிலிருந்து சற்றுக் குறைந்துபோக நேரிட்டாலும் 'தலையின் இழிந்த மயிரின் நிலை' ஏற்பட்டுப்போகும்; அவமான நிலை உண்டாகி, மானமிழக்கும் மதிகெட்ட நிலை உண்டாகிப் போகும். தன்நிலை தாழாமையே எந்நிலைக்கும் உயர்வுதரும் தாரக மந்திரம்.

    ஒரு கதை. அமெரிக்காவில் பூனைகளுக்கான சர்வதேசக் குத்துச் சண்டைப் போட்டி நடைபெற்றது. இந்தியா, இலங்கை, ரஷியா, சீனா, பாகிஸ்தான் ஆப்பிரிக்கா உள்ளிட்ட உலக நாடுகள் பலவற்றிலுமிருந்து விதவிதமான பூனைகள் கலந்துகொண்டன. இவற்றில் குறிப்பாக அமெரிக்கா, ரஷியா, சீனா ஆகிய நாடுகளிலிருந்து வந்திருந்த பூனைகள் நல்ல கொழு கொழுவென நாய்களின் உயரத்திற்கு வளர்த்தியாய் இருந்தன. அமெரிக்காவின் பூனையோ நடையிலும் பார்வையிலும் தான் திடகாத்திரமாக இருக்கிறேன் என்கிற கர்வத்தோடு மேடையில் காட்டிக்கொண்டது. அதற்கு நாள்தோறும் பால் முட்டை தவிர மீன் இறைச்சியும் ஆட்டிறைச்சியும் போட்டு வளர்க்கப்பட்டுள்ளதாக அங்கு வந்திருந்த அமெரிக்கப் பார்வையாளர்கள் பேசிக்கொண்டனர்.

    பூனைகளின் குத்துச்சண்டைப் போட்டி ஆரம்பமானது. போட்டி தொடங்கியதிலிருந்தே தன்னுடன் மோதவந்த எல்லாப் பூனைகளையும் அமெரிக்கப் பூனை வென்றுகொண்டே வந்தது. மேடையில் நிறைவாக அமெரிக்கப் பூனையுடன் மோதப்போகும் பூனை யார்? என்று பார்வையாளர்கள் ஆவலோடு எதிர்பார்த்துக் காத்திருந்தபோது அந்த அறிவிப்பு வந்தது. சோமாலியா நாட்டைச் சேர்ந்த பூனைதான் இறுதிப் போட்டியாளர்.

    ஏற்கனவே எல்லா நாட்டுப் பூனைகளையும் வென்றுவிட்ட ஆணவத்தோடு அமெரிக்கப் பூனை நின்றிருந்தது. சோமாலியா பஞ்சத்திற்குப் பெயர்போன நாடு; அந்த நாட்டிலிருந்து வந்துள்ள பூனைமட்டும் என்ன கொழு கொழுவெனவா இருக்கப் போகிறது?; வத்தலும் தொத்தலுமாக நோஞ்சானாகவே தட்டுத்தடுமாறிக் கால்களை எடுத்து வைத்து மேடைக்கு வந்தது. ஏளனமாகப் பார்த்த அமெரிக்கப் பூனை ஒரு அசைவுமின்றி நின்றிருந்தது. மேடையில் ஏறியதும் சோமாலியப்பூனை, அமெரிக்கப் பூனைமீது ஒரே பாயச்சலில் பாய்ந்து, ஓங்கி ஒரு குத்து விட்டது. அவ்வளவுதான் தலை கிறுகிறுவெனச் சுற்றித் தரையில் மயங்கி விழுந்து விட்டது அமெரிக்கப்பூனை.

    அமெரிக்கப்பூனை கிறக்கம் தெளிந்து தலையைத் தூக்கிப் பார்க்கும்போது தங்கப் பதக்கத்தைப் பெற்றுக்கொண்டிருந்தது சோமாலியப் பூனை. அதன் காதருகில் சென்று, மெதுவாகக் கேட்டது அமெரிக்கப் பூனை," இது எப்படி நடந்தது?". உடனே சோமாலியப் பூனை பதிலளித்தது, " நான் பூனை அல்லடா; புலி!. பஞ்சத்தில் அடிபட்டு நோஞ்சானாகிப் போனாலும் புலி புலிதான்; அதே வேளையில் பாலும் மீனும் சாப்பிட்டுக் கொழு கொழுவென்று வளர்ந்திருந்தாலும் பூனை பூனைதான்; நீ புலியாகிவிடமுடியாது " என்று கர்ஜித்தது. ஆம்! எவ்வளவு பரிதாப நிலைக்குத் தள்ளப்பட்டாலும் புலி புலியாகவே தன்நிலை தாளாமல் சுயமதிப்போடு இருந்தால் புலியின் வெற்றி எப்போதும் உறுதி செய்யப்பட்டதாகவே இருக்கும்.

    வாழ்வியல் பாடமும் இப்படிப் பட்டதாகவே இருக்கவேண்டும். பொருளாதாரப் பின்னடைவுகளோ, உடல்நலக் குறைபாடுகளோ அதிகார ஏற்றத் தாழ்வுகளோ ஏற்பட்டுவிட்டாலும், தன்னுடைய தன்மானத்திற்கு எந்தநிலையிலும் தாழ்வு நேர்ந்துவிடாமல் நடந்துகொள்ள வேண்டும்.

    சுயமரியாதை என்பது நம்முடைய நடத்தை, நம்முடைய எண்ணம், நம்முடைய செயல் எல்லாவற்றிலும் முதலில் நாம் நம்பிக்கையுள்ளவர்களாக இருப்பது. நாம் நேர்மையாக இருக்கிறோம் என்பதில் ஆழமான நம்பிக்கை கொண்டிருந்தால் போதும், வேறு யாருக்காகவும் வேறு எச்சூழலுக்காகவும் நாம் நம்நிலை தாழாமல் தன்மானத்தோடு வாழ்ந்து காட்டலாம்.

    நாம் நமக்கு நாமே வகுத்துக்கொண்டு வாழ்கின்ற கோட்பாடுகளாலேயே, நம்மை மற்றவர்கள் மதிக்கக்கூடிய அளவுக்கு நமது செல்வாக்கு உயர்ந்து போகும். நாம் யார்? நமது எண்ணங்களின் உயரம் என்ன? என்பதை உண்மையாக உணரத் தொடங்கிவிட்டால் போதும்; நாம் சுயமரியாதைக் காரர்களாக நெஞ்சம் நிமிர்த்தி இந்தச் சமூகத்தில் உலா வரமுடியும்.

    ஒரு சாதாரண வழக்கறிஞராகத்தான் தென்னாப்பிரிக்க ரெயிலொன்றில் உரிய முதல் வகுப்புப் பயணச் சீட்டுடன் பயணம் செய்துகொண்டிருந்தார் மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி. ஆனால் அவர் கறுப்பாக இருப்பதனால், உரிய பயணச்சீட்டு வைத்திருந்தாலும், வெள்ளையர்கள் மட்டுமே பயணம் செய்யக்கூடிய அந்த முதல்வகுப்புப் பெட்டியில் பயணிக்கத் தகுதியற்றவர் என்று ரெயிலதிகாரி ஒருவரால் தள்ளிவிடப்படுகிறார். பீட்டர்ஸ்மாரீஸ்பர்க் ரெயில் நிலையத்தில் நிகழ்ந்த இந்தக் கொடுஞ் செயல் தனது சுயமரியாதைக்கு இழுக்கான செயல் என்று உணர்ந்து உடனே சத்தியாக்கிரகப் போராட்டத்தில் ஈடுபடத் தொடங்குகிறார். அந்த நொடியிலேயே மோகன் தாஸ் கரம்சந்த் காந்தி என்கிற சாதாரண மனிதர் மறைந்து, மகாத்மா காந்தி என்கிற மாமனிதர் பிறப்பெடுத்து விடுகிறார். காந்தியடிகளின் சுயமரியாதைச் சிந்தனை அவரை மகாத்மா காந்தியாக உயர்த்திக் காட்டியது.

    ஒவ்வொரு மனிதரும் ஒவ்வொரு நொடியும் தம்மைப் புடம்போட்டுக்கொண்டே இருக்க வேண்டும்; அன்றாடம் நிகழும் வேலைப் பளுக்களிலிருந்தும், துயர நேர்வுகளிலிருந்தும் விடுபட்டு நமக்குள் நாமே நம்மை மதிக்கவும், அன்பில் நம்மை நேசிக்கவும் கற்றுக் கொண்டே இருக்க வேண்டும். மனசாட்சியின் துணைகொண்டு நம்மை உள்முகமாகத் தேடினால், நமது நேர்மையும் அன்புகனிந்த கருணையும் பளிச்செனப் புலப்பட வேண்டும். நம்முடைய பெருமைகளால் முதலில் நமக்குநாமே பெருமிதம் மிக்கவர்களாக மாறவேண்டும்; இது தற்பெருமை அல்ல; சுயமாக மதிக்கின்ற சுய மரியாதை.

    சுய ஒழுக்கத்திலும். சுயகட்டுப்பாட்டிலும், சுய நேர்மையிலும் அக்கறை கொண்டு அவற்றின்மீது தளராத நம்பிக்கை கொண்டிருப்பவர்கள் எந்த நாளிலும் எந்த நிலையிலும் தன்மானம் இழக்காத சுயமரியாதைக்காரர்களாக மிளிரவே செய்வார்கள்.

    தொடர்புக்கு 9443190098

    Next Story
    ×