search icon
என் மலர்tooltip icon

    சிறப்புக் கட்டுரைகள்

    பிரச்சனை என்றால் என்ன?
    X

    பிரச்சனை என்றால் என்ன?

    • மன நிம்மதிக்காக, காட்டில் வசித்து வந்த ஒரு மகானைத் தேடிச்சென்றார்.
    • பயணக் களைப்புடன் சென்ற அந்த வியாபாரியை வரவேற்று உபசரித்தார் அந்த மகான்.

    ஆன்மா என்றால் என்ன என்பதை எவராலும் சரிவர அறிந்து கொள்ள முடியாது. நமக்குள்ளே அப்படி ஒன்று உள்ளது என்பதும் வெளிப்படையாக அறிய முடியாத ஒன்றாக உள்ளது.

    ஆனால் மனம் என ஒன்று நமக்கு இருப்பது நம் அனைவருக்குமே தெள்ளத் தெளிவாகத் தெரிகிறது.

    அந்த மனம் மகிழ்ச்சியோடு இருப்பதும் தெரிகிறது; நிம்மதியை இழந்து வருத்தத்துடன் இருப்பதும் நமக்குத் தெரிகிறது.

    பிரச்சனைகள் எவையுமே இல்லாமல் வாழவேண்டும் என்று நம்முடைய மனம் தான் கோரிக்கை விடுக்கிறது.

    பிரச்சனை, பிரச்சனை என்று கூறுகிறோம். பிரச்சனை என்றால் என்ன?

    அவர் ஒரு பெரிய வியாபாரி. நிறைய வர்த்தக நிறுவனங்களை நடத்தி வந்தார். எல்லா தொழில்களிலும் உள்ளது போன்ற பிரச்சனைகள் அவரது தொழில்களிலும் இருந்தன.

    இதனால் மன நிம்மதியை இழந்து தவித்தார். அவர் நிம்மதியாகத் தூங்கி பல நாட்கள் ஆகிவிட்டன.

    மன நிம்மதிக்காக, காட்டில் வசித்து வந்த ஒரு மகானைத் தேடிச்சென்றார்.

    பல கிலோமீட்டர்கள் நடந்து சென்று அந்த மகானுடைய ஆசிரமத்தை அடைந்தார். அவர் செல்லும் போது சூரியன் அஸ்தமனம் ஆகத் தொடங்கி விட்டது.

    பயணக் களைப்புடன் சென்ற அந்த வியாபாரியை வரவேற்று உபசரித்தார் அந்த மகான்.

    அந்த வியாபாரியிடம் அவரது பிரச்சனைகள் அனைத்தையும் கேட்டுத் தெரிந்து கொண்டார் அந்த மகான்.

    பிறகு அவர் அந்த வியாபாரியிடம்,

    "நீ மிகுந்த பயணக் களைப்பில் வந்திருக்கிறாய். இன்று இரவு நீ நிம்மதியாக படுத்துத் தூங்கு. நாளைக்கு காலையில் உனது பிரச்சனைகள் அனைத்தையும் ஆய்வுக்கு எடுத்துக் கொள்வோம்...

    "நீ மிகவும் வசதியாக வாழ்ந்தவன். இங்கு என்னுடைய படுக்கை மட்டுமே நல்லதாக இருக்கும். நீ என்னுடைய படுக்கையில் படுத்துக் கொள். எனக்கும் வெளியே சற்று வேலை இருக்கிறது"

    என்று கூறி, தனது படுக்கையை அந்த வியாபாரியிடம் ஒப்படைத்தார்.

    அந்தப் படுக்கை அவருக்கு மிகவும் பிடித்திருந்தது.

    ஸ்பிரிங் வைத்து தொழில்நுட்பத்துடன் தயாரிக்கப்பட்ட மெத்தை அது.

    அவர் புரண்டு படுத்த போதெல்லாம் அந்த படுக்கையும் நெளிந்து கொடுத்தது.

    ஸ்ரீ பகவத்

    பயணக் களைப்பில் இருந்த வியாபாரியும் தன்னை மறந்து தூங்கிவிட்டார்.

    வெகு நாட்களாக தூக்கம் இல்லாமல் இருந்த அவர், அன்றுதான் தன்னை மறந்து தூங்கிவிட்டார்.

    இரவு 2 மணி இருக்கும். யாரோ கதவைத் தட்டியது போல் இருந்தது.

    தூக்கத்தில் இருந்து விழித்துக் கொண்ட அவர் எழுந்துசென்று கதவைத் திறந்தார். அங்கே அந்த மகான் தான் நின்று கொண்டிருந்தார்.

    "என்ன சுவாமி இந்த நேரத்தில்...?

    இந்த படுக்கை உங்களுக்கு வேண்டுமா? நீங்கள் இங்கே படுத்துக் கொள்ளுங்கள் சுவாமி. நான் வேறு எங்காவது படுத்துக் கொள்கிறேன் சுவாமி" என்று கேட்டுக் கொண்டார் அந்த வியாபாரி.

    அந்த மகானும்,

    "நீ வேறு எங்கும் செல்ல வேண்டாம். நீ இங்கேயே படுத்துக் கொள்ளலாம். நான் தான் அவசரத்தில் என்னுடைய செல்லப் பிள்ளையை எடுத்துச் செல்ல மறந்து விட்டேன்.

    அவன் மிகவும் நல்ல பிள்ளை. உனக்கு எந்த தொந்தரவும் செய்திருக்க மாட்டான். இப்போது தான் அவனுடைய நினைவு வந்தது. அதனால் தான் அவனை எடுத்துப் போக வந்தேன்" என்று கூறியவாறே,

    அந்த வியாபாரி படுத்திருந்த படுக்கையைத் தூக்கி, அங்கே இருந்த பெரிய கருநாகப் பாம்பு ஒன்றை உருவி எடுத்து தனது தோளில் போட்டுக் கொண்டார்.

    "இனி நீ நிம்மதியாக படுத்துத் தூங்கு!" என்று கூறிவிட்டு அவர் அங்கிருந்து போய்விட்டார்.

    அதன் பிறகும் அந்த வியாபாரி அந்தப் படுக்கையில் தான் படுத்துக் கொண்டார்.

    அவர் புரண்டு புரண்டு படுத்தாலும் தூக்கம் எதுவும் வரவில்லை. புரண்டு படுக்கும் போதெல்லாம், பாம்பு நெளிந்து கொடுத்ததாகவே தோன்றியது.

    மறுநாள் அவர் அந்த மகானை சந்தித்தார்.

    "நன்றாக தூங்கினாயா?" என்று அந்த மகான் கேட்டார்.

    "இரவு 2 மணி வரை நன்றாக தான் தூங்கினேன். எப்போது நீங்கள் உங்கள் செல்லப் பிள்ளையை எடுத்துச் சென்றீர்களோ, அதன் பிறகு எனது தூக்கம் முற்றிலுமாக மறைந்து விட்டது!" என்று அந்த வியாபாரி கூறினார்.

    இப்போது அந்த மகான் கேட்டார்:

    "இரவு 2 மணி வரை நீ அந்த பாம்புக்கு மேலேதான் படுத்திருந்தாய். ஆனால் நிம்மதியாக நீ தூங்கிவிட்டாய்.

    அதற்குப்பிறகு பாம்பு எதுவுமே அங்கு கிடையாது. ஆனால் உனக்கு தூக்கம் இல்லாமல் போய் விட்டது. இப்போது உன்னிடம் ஒரு கேள்வி. உன்னுடைய தூக்கத்தைக் கெடுத்தது எது?

    பாம்பு தான் உனது தூக்கத்தைக் கெடுத்ததா? அல்லது அந்த பாம்பைப் பற்றிய நினைவுதான் உனது தூக்கத்தைக் கெடுத்ததா?"

    இப்படி நாம் நமது வாழ்க்கையில் எத்தனையோ பிரச்சனைகளை சந்திக்கிறோம்.

    அந்தப் பிரச்சனைகள் தான் பிரச்சனையா அல்லது அந்த பிரச்சனைகளைப் பற்றிய நினைவுதான் பிரச்சனையா?

    பிரச்சனைகள் அனைத்தும் நிஜமானவை. அந்த பிரச்சனைகளைப் பற்றிய நினைவுகள் அனைத்தும், வெறும் நிழல்களைப் போன்றவையே.

    நிஜம் தான் நம்மை பயமுறுத்துகிறது என்று எண்ணுகிறோம்.

    ஆனால் நிஜம் நம்மை பயமுறுத்துவது இல்லை.

    பிரச்சனைகள் சம்பந்தமான நினைவுகள் தாம் நம்மை பயமுறுத்துகின்றன.

    நிஜம் நம்மை பயமுறுத்தவில்லை; நிழல் தான் நம்மை பயமுறுத்துகிறது.

    ஒரு பெரிய மரத்தின் மீது ஏற வேண்டிய அவசியம் நமக்கு ஏற்படுகிறது என்று வைத்துக் கொள்வோம்.

    அப்படி மரத்தில் ஏறி நமக்குப் பழக்கம் இல்லை.

    மரத்தில் ஏறுவதைத் தவிர வேறு வழி எதுவும் இல்லை. என்ன செய்வது?

    மரத்தில் ஏறுகிறோம். பாதி உயரம் ஏறி விட்டோம். கீழே பார்த்தால் பயமாக இருக்கிறது. நழுவி கீழே விழுந்து விடுவோமோ, கிளை முறிந்து கீழே விழுந்து விடுவோமோ என்று பயந்து கொண்டே மரத்தில் ஏறுகிறோம்.

    நாம் பயந்தபடியே நாம் பிடித்துக்கொண்ட கிளை முறிந்து, கிளையுடன் சேர்ந்து நாமும் கீழே விழுந்து கொண்டிருக்கிறோம் .

    இப்போது நமக்கு என்ன விதமான உணர்வுகள் ஏற்படும்?

    பயம் ஏற்படுமா?

    சில விநாடிகள் அவகாசம் எடுத்து சிந்தித்துப் பாருங்கள்.

    என்ன உணர்ச்சி ஏற்படும்?

    பயம் ஏற்படுமா?

    நிச்சயமாக பயம் ஏற்படாது.

    நாம் கீழே விழும் போது நம்மை காப்பாற்றிக் கொள்ளும் முயற்சியும் அதற்குத் தேவையான உணர்வுகளும் தான் ஏற்படும்.

    மரத்தில் ஏறும் போது கீழே விழுந்திடுவோமேயானால் அது தான் உண்மையான பிரச்சனை.

    அந்தப் பிரச்சனை நிகழும்போது பயம் ஏற்படுவதில்லை. அது நிகழ்ந்து விடுமோ என்ற எண்ணம் தான் நம்மை பயமுறுத்துகிறது.

    அந்த பிரச்சனைகளைப் பற்றிய நினைவுகள் நமக்குள்ளே இருக்கின்றனவா அல்லது நமக்கு வெளியே இருக்கின்றனவா?

    உண்மையான பிரச்சனைகள் அனைத்தும் நமக்கு வெளியே இருந்தாலும் கூட,

    அது சம்பந்தமான நமக்குள்ளே இருக்கும் நினைவு அம்சம் மட்டுமே நம்மைப் பொறுத்தவரையிலும் பிரச்சினையாக உள்ளது.

    அரசவை கூடி இருந்தது. அரசரும், மந்திரிப் பிரதானிகளும் கூடி இருந்தார்கள்.

    அந்த அரசவைக்கு ஞானி ஒருவரை சிறப்பு விருந்தினராக அழைத்திருந்தனர்.

    அவையிலுள்ளோர் அனைவரும் தங்கள் தங்கள் பிரச்சனைகளைக் கூறி, தீர்வு கேட்டனர்.

    அந்த ஞானியும், "உங்களது பிரச்சனைகளை எல்லாம் என்னிடம் ஒப்படைத்து விடுங்கள். அவற்றை எல்லாம் தீர்த்து வைக்கிறேன்!" என்று கூறினார்.

    அனைவரின் சார்பாக மன்னர் பேசினார்:

    "சுவாமி! பிரச்சனைகள் வெளியே இருந்தால் அவற்றை எல்லாம் உங்களிடம் சுலபமாக ஒப்படைத்துவிட முடியும். ஆனால் அந்தப் பிரச்சனைகள் அனைத்தும் எங்கள் மனதுக்குள்ளே அல்லவா இருந்து கொண்டிருக்கின்றன. மனதுக்குள்ளே இருந்து கொண்டிருக்கும் பிரச்சனைகளை உங்களிடம் எப்படி சுவாமி ஒப்படைப்பது?"

    அந்த ஞானியும், "வெளியே இருக்கும் பிரச்சனைகளை என்னிடம் ஒப்படைப்பது சுலபமானது தான். மனதிலுள்ள பிரச்சனைகளை என்னிடம் ஒப்படைப்பது கடினம் தான். உண்மையிலேயே உங்கள் பிரச்சனைகள் அனைத்தும் உங்கள் மனதினுள்ளேதான் இருக்கின்றனவா?" என்று கேட்டார்.

    "எங்களால் நிச்சயமாக சொல்லமுடியும். எங்கள் மனதுக்குள்ளே தான் எங்களுடைய பிரச்சனைகள் அனைத்தும் உள்ளன. ஆனால் அவற்றை உங்களிடம் எப்படி ஒப்படைப்பது என்றுதான் தெரியவில்லை" என்று அரசர் கூறினார்.

    அந்த ஞானியும், "அந்த பிரச்சனைகள் உங்கள் மனதினுள் இருக்குமேயானால், அவை உங்கள் மனதில் எங்கே தங்கி இருக்கின்றன என்பதை மட்டுமாவது கண்டுபிடியுங்கள். நான் அவற்றை அங்கு வந்தே சரி செய்கிறேன்" என்று கூறினார்.

    அரசரும், தனது பிரச்சனைகள் தனது மனதினுள் எங்கே தங்கி இருக்கின்றன என்று தனக்குள்ளேயே ஆழ்ந்து உற்று நோக்கினார். பிறகு அவர்,

    "சுவாமி! உள்ளே எட்டிப் பார்த்தால் எதுவுமே காணப்படவில்லையே!"என்று கூறினார்.

    இப்போது அந்த ஞானி கேட்டார்:

    "நீ தான் பிரச்சனை இருக்கிறது என்று கூறினாய். அதுவும் உனது மனதுக்குள்ளே இருக்கிறது என்று கூறினாய். இப்போது உள்ளே எதுவுமே காணப்படவில்லை என்று கூறுகிறாய். உண்மையிலேயே பிரச்சனை என்று ஏதாவது இருக்கிறதா அல்லது இல்லையா? இருக்கிற பிரச்சினைக்கு தீர்வு கேட்கிறாயா அல்லது இல்லாத பிரச்சனைக்கு தீர்வு கேட்கிறாயா?" ஏகப்பட்ட பிரச்சனைகள் நமக்கு இருப்பதாகத் தோன்றுகிறது.

    ஆனால் அருகில் சென்று பார்த்தால் எதுவுமே இல்லாமல் போய் விடுகிறது.

    உண்மையில் பிரச்சனை என்றால் என்ன? அது உண்மையில் இருக்கிறதா அல்லது இல்லையா?

    தொடர்புக்கு - sribagavathji@gmail.com

    Next Story
    ×