என் மலர்
சிறப்புக் கட்டுரைகள்
அவனுக்கு வயது 45
- காலத்தின் ஓட்டம் நம் கையில் இல்லை.
- நம் கனவுகள் அர்த்தமற்றவை ஆகிவிடும்.
'எண்ணங்கள் அனைத்தும் உயர்வாக இருக்க வேண்டும். அவற்றை அடைய கடுமையாக உழைக்க வேண்டும். அவற்றின் மூலம் சாதனைகள் படைக்க வேண்டும்'.
-அப்துல் கலாம்
பட்டம் வானில் பறந்தாலும், அதனை ஏற்றுவதும், இறக்குவதும் நம் கையில்தான் இருக்கிறது. எனவே, நம்மை மீறி அது வேறெங்கும் சென்றுவிட முடியாது. ஆனால், காலத்தின் ஓட்டம் நம் கையில் இல்லை. நதியைப்போல் அது முன்னோக்கியே விரைகிறது.
நம் கையில் கடிகாரத்தை நாம் கட்டிக் கொண்டாலும், காலம் நம் முன் கைகட்டி நிற்பதில்லை. அது யாருக்காகவும் காத்திருப்பதும் இல்லை. போகிற வேகத்தில் அது எத்தனையோ பாடங்களை நமக்குச் சொல்லிச் செல்கின்றது. எனினும், மிகச்சிலர்தான் காலத்தின் அருமையை உணர்ந்து செயல்படுகிறார்கள். அதை நன்கு பயன்படுத்திக் கொள்கிறார்கள்.
உருப்படியான சிந்தனை எதுவும் இல்லாமல் பொழுதை எல்லாம் வீண்டித்துக் கொண்டிருப்பவர்கள், திடீரென ஒருநாள் விழித்துக் கொள்ளும்போதுதான் தங்களின் காலம் கடந்துவிட்டதை உணர்கிறார்கள். வாழ்வின் விளிம்பில் வந்து நிற்கும் தருணத்தில், கடந்து போனதை எண்ணுவதில் என்ன பயன்!
சிலருக்குக் காலத்தின் வேகம் புரிவதே இல்லை. வீண்கதைகள் பேசிப் பேசியே வாழ்நாளைக் கடத்திவிடுகின்றனர்.
என் எழுத்துப்பணி சார்ந்த ஒரு முக்கியமான டிஸ்கஷன். துறை சார்ந்த இரண்டு நண்பர்களுடன் 'கபே காபி டே' யில் பேசிக் கொண்டிருந்தேன். அப்போது, எங்களுக்குப் பின்புற இருக்கைகளில் இரண்டு பேர், திரைப்படங்கள் தொடர்பான விஷயங்களை அலசிக் கொண்டிருந்தனர். அந்த இருவரில் ஒருவரின் குரல் சற்று தூக்கலாகவே ஒலித்தது.
'இந்தப் படத்துல ஹீரோயின் செலக்ஷன் சரியில்ல. கொஞ்சம் கிராமியத்தனமான முகஜாடை அவசியம். அது ரொம்ப மிஸ்சிங். கேமரா மேன் நல்ல அனுபவசாலி. ஆனா அவரை சரியா பயன்படுத்திக்கலியே. நீ என்ன நினைக்கிறே?'
'எனக்கும் அப்படித்தான் தோணுது'.
'புதுமையான கதை. ரொம்ப சிறப்பா பண்ணியிருக்கலாம். ஆனா, டைரக்டர் ஸ்கிரீன் பிளே பண்ணத் தெரியாம பண்ணி சொதப்பிட்டாரே. போகட்டும் போகட்டும். என்கிட்ட ஒரு சூப்பர் கதை இருக்கு. டயலாக், ஸ்கிரீன் பிளே எல்லாம் பண்ணிட்டேன். புரொடியூசர் கிடைச்சதும் படத்தை ஸ்டார்ட் பண்ணிடுவேன். அப்புறம் பாரு...நான்தான் நம்பர் ஒன் டைரக்டர்'.
இப்படியே கிட்டத்தட்ட ஒன்றரை மணி நேரம் அந்த நபர் தமது மேதாவித்தனத்தை வெளிப்படுத்திக்கொண்டே இருந்தார். சினிமா நுணுக்கங்களை எல்லாம் விரல்நுனியில் அவர் வைத்திருப்பதாக எனக்குத் தோன்றியது.
நான் எனது டிஸ்கஷனை முடித்துவிட்டு எழும்பிய அதே நேரத்தில், அந்த நபர்களும் எழுந்தனர். திரைப்பட நுணுக்கங்கள் பற்றி விலாவாரியாகப் பேசிய அந்த நபர் எழுந்து என் பக்கமாகத் திரும்பிய போது, ஏற்கனவே எப்போதோ பார்த்த முகம்போல் இருந்தது.
தலைமுடி பாதி நரைத்திருந்தது. தடிமனான மூக்குக் கண்ணாடி. கொஞ்சம் தளர்வான தேகம். கூர்ந்து பார்த்தேன். இருபது வருடங்களுக்கு முன், எங்கள் வீட்டின் அருகில் குடியிருந்த குடும்பத்தின் பையன்தான் அவன் என்பதைக் கண்டு கொண்டேன்.
அப்போதே அவனுக்குள் சினிமா மோகம்தான். பார்த்துக் கொண்டிருந்த வேலையை விட்டுவிட்டு, 'சினிமா டைரக்டர் ஆகப்போகிறேன்' என்று சொல்லிக்கொண்டு, தினந்தோறும் அதற்காக அலைந்து திரிவான். பெற்றோர் எவ்வளவோ சொல்லியும் அவன் கேட்கவில்லை.
தன்னிடமுள்ள கதைகளைச் சிலாகித்துப் பேசுவான். 'அடுத்த வாரமே ஷூட்டிங். இந்த வருஷம் என்னோட படம்தான் சூப்பர் ஹிட்' என்பான். ஓரிரு படங்களில் உதவி இயக்குநராகப் பணியாற்றினான். அப்போது வரை, அவ்வளவுதான் எனக்குத் தெரியும். அதன்பிறகு, வேறொரு பகுதியில் வீடு பார்த்து அவர்கள் சென்றுவிட்டனர்.
நீண்ட கால இடைவெளிக்குப்பின் எதிர்பாராதவிதமாக என்னைப் பார்த்ததும், அவன் கொஞ்சம் சங்கடப்படத்தான் செய்தான். இருந்தாலும் சமாளித்துக்கொண்டு, என் கைகளைப் பற்றினான்.
'எப்படி இருக்கீங்கண்ணே. வீட்ல எல்லாரும் சவுக்கியமா?'
'எல்லாரும் சவுக்கியம் தம்பி. அப்பா அம்மா நல்லாருக்காங்களா?'
'பரவாயில்லண்ணே. அப்பாவுக்கு உடம்புக்கு முடியல'.
'அப்படியா... உனக்கு எத்தனை குழந்தைங்க?'
'அண்ணே எனக்கு இன்னும் கல்யாணம் ஆகல. சினிமா டைரக்டர் ஆனப்புறம்தான் கல்யாணம்னு ஒரு முடிவோடு இருக்கேன். சூப்பர் கதை வச்சிருக்கேன். இன்னும் ஒரு மாசத்துல ஷூட்டிங் ஆரம்பிச்சிடுவேன். இந்த வருஷம் என்னோட படம்தான் சூப்பர் ஹிட்' என்று சொல்லிவிட்டு மெல்ல நழுவினான் அவன்.
இந்த ஒரே டயலாக்கை சொல்லிச் சொல்லி இருபது வருடங்களை வீண்டித்துவிட்டானே. நாற்பத்தைந்து வயதாகியும்கூட, தனது எதார்த்த நிலை பற்றிய உணர்வு கொஞ்சமும் இல்லையே. அவன் மீது எனக்குக் கோபம்தான் வந்தது.
இப்படி ஏதோ ஒரு கனவுலகில், பலர் தங்கள் வாழ்க்கையைக் கரைத்துக்கொண்டுதான் இருக்கிறார்கள். வேலைக்குச் செல்ல மனமிருக்காது. சம்பாத்தியத்தைப் பற்றிய கவலையும் இருக்காது. ஆனால், எதையோ சாதிக்கப்போவதைப்போல் மனக்கோட்டை கட்டிக் கொண்டிருப்பார்கள்.
லட்சியம் முக்கியம். அதனை அடைவதற்குக் காலத்தின் அருமை குறித்த ஞானமும், உண்மையான உழைப்பும் மிக முக்கியம். அவர்கள் தங்கள் லட்சியத்தில் தோற்றுப்போவதே இல்லை. ஆனால் சிலர், லட்சியம் என்ற போர்வையில் வாழ்க்கையை விரயம் செய்து கொண்டிருப்பார்கள்.
ஞானம் இல்லாத உழைப்பு பயன்படாது. காலம் அறியாத காத்திருப்பு பலன்தராது.
நமது இலக்கு; அதை அடைவதற்கான கால அளவு; வழிவகை - இவற்றைப் பற்றிய தெளிவு நமக்குத் தேவை. இல்லையெனில், இலக்கு என்பது வெறும் கனவாகத்தான் இருக்கும்.
தங்கள் கனவு நிறைவேறுமா என்பதை அறிந்து கொள்வதற்கு ஜோதிடர்களைத் தேடிச் செல்பவர்கள் உண்டு. கஷ்டப்படாமல் சுலபமாக அதனை அடைவதற்கு உபாயம் ஏதும் உண்டா என்றெல்லாம்கூட கேட்பார்கள்.
'உங்களுக்கு இப்ப நேரம் சரியில்ல' என்று அவர் சொல்லிவிட்டால், அதையே காரணம் காட்டி ஏழரை வருஷம் சும்மா சுற்றிக் கொண்டிருப்பார்கள்.
காலம் கடந்தபின் வாழ்ந்திட ஆசைவரும்; ஆனால் வாழ்க்கை வராது. பார்வை இழந்தபின் பார்த்திட ஆவல் வரும்; ஆனால் காட்சிகள் தெரியாது.
ஏதோ ஒன்றை உடும்புப்பிடியாகப் பிடித்துக்கொண்டு, 'இதை முடித்தபின்தான் மறுவேலை' என்றிருப்பவர்களில் பலர், தங்கள் வாலிபத்தை இழந்துவிடுகிறார்கள். காலம் தன் கால்களில் சலங்கை கட்டி மேடையில் ஆடிக் கொண்டிருப்பதில்லை; அது ஓடிக்கொண்டிருப்பது. அந்த உணர்வு நமக்கு இல்லை என்றால், நம் கனவுகள் அர்த்தமற்றவை ஆகிவிடும்.
நம் இலக்கு என்பது நம் ஆற்றல் சார்ந்ததாக இருக்க வேண்டும். நமக்கு சம்பந்தமே இல்லாத விஷயத்தில் இறங்குவதும், எதுவுமே புரியாமல் பின்னர் விழிபிதுங்கி நிற்பதும் அறிவுடைய செயல் அல்ல.
ஆர்வம் கொள்வதில் தவறில்லை. தெரியாததைத் தெரிந்து கொண்டு, அதில் தேர்ச்சி பெற விரும்புவது நல்ல விஷயம்தான். ஆனால், தனக்கு வரவே வராது என்று தெரிந்த பின்னும், அதையே பற்றிக்கொண்டு நேரத்தைப் பாழாக்குவது நியாயமில்லை. சிலரின் வாழ்க்கையே தோல்வியாகிப் போவதற்கு இதுதான் காரணம்.
தண்டவாளமே இல்லாத ஊரில், ரெயிலுக்காகக் காத்துக் கொண்டிருப்பவன் என்றைக்கு ஊர்போய்ச் சேர்வான்! விதைநெல், நாற்று, நடவு என்பன பற்றிய விபரம் எதுவுமே தெரியாதவன், வயற்காட்டில் இறங்கி என்ன செய்யப் போகிறான்!
தன்னைத்தான் அறிதல் என்பதே, ஒருவன் தன் ஆற்றலை அறிதல் என்பதுதான். நமக்குள் இறங்கிப் பார்க்க வேண்டும். அப்போதுதான், நம்முடைய ஆழம் நமக்குத் தெரியவரும்.
எந்த விஷயம் நமக்குக் கைவருமோ, அந்த விஷயத்தில் நாம் சாதிக்க முடியும். சவாலான எந்த விஷயத்தை நம்மால் வசப்படுத்த முடியுமோ, அதில் தனிச்சிறப்புடன் நாம் உயர்ந்து நிற்க முடியும். எல்லாவற்றிற்கும் தேவை தீர்க்கமான பார்வை; விரயமாகாத உழைப்பு.
ஒருவன் விறுவிறு என முன்னேறிக் கொண்டிருப்பான். 'அவன் பிறந்த நேரம் அப்படி' என்று சிலர் சொல்வார்கள். அதுவா காரணம்? இல்லை! அவனின் திட்டமிடல் அப்படி! அவனின் செயல்திறன் அப்படி! அவனின் உறுதிப்பாடு அப்படி!
ஐ.ஏ.எஸ். தேர்வில் தேர்ச்சி பெற்று, இளவதிலேயே ஒருவன் மாவட்ட ஆட்சியர் ஆகிவிடுகிறான். அது என்ன சாதாரண விஷயமா? அந்த உயர்வுக்குப் பின்னால் எத்தனை பெரிய உழைப்பு இருக்கிறது! ஒரு நிமிடத்தைக்கூட வீணாக்கிவிடாத கவனமும், ஒவ்வொரு நொடியையும் வெற்றிப்படியாக பயன்படுத்துகிற சாமர்த்தியமும் அல்லவா சாதிக்க வைக்கின்றன.
செலவுக்குத் தினந்தோறும் தந்தையின் கையையே எதிர்பார்த்துக் கொண்டிருப்பவனுக்கு, அதைத் தாண்டி எந்தச் சிந்தனையும் இருக்காது. அவரிடம் பணத்தை உரிந்து, ஊதாரித்தனமாய் ஊர்சுற்றுவதுதான் அவனைப் பொறுத்தவரையில் சாதனை.
'ஆள் செய்யாததை நாள் செய்யும்' என்றொரு பழமொழி உண்டு. அப்படி ஏதாவது தானாக வந்துவிடாதா என்னும் எதிர்பார்ப்புடன் சும்மா உட்கார்ந்திருப்பவன், தன் வாழ்நாள் முழுவதும் அப்படியேதான் இருப்பான். ஓர் அங்குல அளவுகூட உயர மாட்டான்.
படித்து முடித்துப் பட்டம் பெற்ற ஓர் இளைஞன். வேலை தேடுவதில் அவனுக்கு நாட்டம் கிடையாது.
வருமானம் ஈட்டுவதைப் பற்றிய எண்ணமும் இல்லை. ஆனால், வசதியுடன் நல்ல நிலையில் இருப்பவர்களைப் பார்த்துப் பார்த்துப் பெருமூச்சுவிடுவான். இவர்களுக்கு மட்டும் இவ்வளவு காசு பணம், கார், பங்களா எப்படி என்று புலம்புவான்.
அந்த ஊரில் பிரசித்தி பெற்ற பெரியவர் ஒருவர் இருந்தார். அவரிடம் சென்றான்.
'சிலர் வசதி மிக்கவர்களாக இருக்கிறார்கள். அவர்களுக்கு மட்டும் எப்படி அவ்வளவு கிடைத்தன?' என்று கேட்டான். அந்தப் பெரியவர் சிறிது நேரம் மவுனமாக இருந்தார். பின்னர் அவனைப் பார்த்து, 'உனக்கு மிகவும் பிடித்த பழம் எது?' என்று கேட்டார். 'மாம்பழம்' என்றான்.
'மாடியிலுள்ள அறைகளில் ஏதோ ஒன்றில்தான் மாம்பழம் இருக்கிறது. போய் எடுத்துக்கொள்' என்றார்.
மாடியில் பல அறைகள். ஒவ்வொன்றிலும் தேடி, இறுதியில் மாம்பழத்தைக் கண்டுபிடித்துச் சுவைத்தான். தேவாமிர்தத் தித்திப்பு.
'மாம்பழம் உன் கைக்கு எப்படிக் கிடைத்தது?' என்று கேட்டார் பெரியவர்.
'நான் போய் தேடிப் பார்த்தேன், கிடைத்தது' என்றான் அந்த இளைஞன்.
'எதுவுமே தானாக நம் கையில் வந்து சேர்ந்திடாது. தேடிச் சென்றால் கிடைக்கும்' என்று சொல்லிப் புன்னகைத்தார் பெரியவர். அந்த இளைஞன் அப்போதுதான் அந்தப் பேருண்மையை உணர்ந்தான்.
வளர்ச்சி, வெற்றி, மகிழ்ச்சி ஆகியவற்றில் எதுவும் யோகத்தினால் வருவதல்ல; நம் உயர்ந்த எண்ணங்களால், உழைப்பினால் வருவது. இதை நாம் பின்பற்றினால் போதும். லட்சியம் வெல்வது நிச்சியம்.
போன்: 9940056332