search icon
என் மலர்tooltip icon

    சிறப்புக் கட்டுரைகள்

    எம்.ஜி.ஆர் பிறந்த நாள்- மக்கள் மனதில் நிற்கும் நாயகன்!
    X

    எம்.ஜி.ஆர் பிறந்த நாள்- மக்கள் மனதில் நிற்கும் நாயகன்!

    • உண்மையில் எம்ஜிஆர் இதற்கு எதிராக மக்களைத் திரட்டிப் போராடி இருக்க வேண்டும்.
    • எல்லா மக்கள் மனங்களிலும் இந்தக் கேள்வி ஆழமாய்ப் பதிந்தது.

    இரண்டு வரிகளில் இப்படிச் சொல்லலாம் -

    அவர் மக்களை நம்பினார்; அவரை மக்கள் நம்பினர்.

    1980இல் எம்ஜிஆர் ஆட்சி அநியாயமாகக் கலைக்கப் பட்டது. காழ்ப்புணர்ச்சி தவிர்த்து வேறு காரணம் எதுவும் இல்லை. தில்லியில் தமக்கு இருந்த செல்வாக்கைப் பயன்படுத்தி எம்ஜிஆர் ஆட்சியைக் கலைத்து விட்டார்கள்.

    உண்மையில் எம்ஜிஆர் இதற்கு எதிராக மக்களைத் திரட்டிப் போராடி இருக்க வேண்டும். ஆனால் பாருங்கள்.. 'மீண்டும் தேர்தல் நடத்தித் தானே ஆக வேண்டும்..? அப்போது பார்த்துக் கொள்ளலாம்..' என்று தீர்மானமாக இருந்தார்.

    சில மாதங்களில் தமிழக சட்டமன்றப் பொதுத் தேர்தல் நடைபெற்றது. பிரச்சாரத்தின் போது கூட எம்ஜிஆர் ஆவேசமாக எதுவும் பேசவில்லை. மிகவும் நயமாக மிகவும் நாகரிகமாக பிரச்சாரத்தை மேற்கொண்ட எம்ஜிஆர், தான் சென்ற இடங்களில் எல்லாம் ஒரே ஒரு கேள்வியை மட்டும் முன் வைத்தார் - 'நான் என்ன தவறு செய்தேன்..?'


    இது மட்டுமே போதுமானதாய் இருந்தது. எல்லா மக்கள் மனங்களிலும் இந்தக் கேள்வி ஆழமாய்ப் பதிந்தது.

    'அதானே..? எதுக்காவ கலைச்சாங்க..?' என்று மக்கள் மத்தியில் இருந்து கேள்வி எழுந்தது.

    இந்த ஒற்றைக் கேள்வி, அந்தப் பொதுத் தேர்தல் முடிவை நிர்ணயம் செய்தது.

    முன்பை விட அதிக இடங்கள் வெற்றி பெற்று எம் ஜி ஆர் மீண்டும் முதல்வர் ஆனார். இரண்டாவது முறை முதல்வராகப் பொறுப்பேற்றார். அந்தக் கணமே ஆட்சிக் கலைப்பு பற்றிய எண்ணத்தை, பேச்சை முற்றிலுமாக அகற்றி விட்டார்.

    எதுவுமே நடக்காதது போல இயல்பாக அரசியல், இயல்பாக ஆட்சி நடத்தினார். இதுதான்- எம்ஜிஆர்.


    மக்களாட்சித் தத்துவத்தில் முழு நம்பிக்கை கொண்டிருந்த மகத்தான தலைவர் எம்ஜிஆர்.

    இன்று அவர் மீது நேரடியாக அல்லது மறைமுகமாக விமர்சனம் வைக்கிற யாரும், எம்ஜிஆருக்கு இருந்த அபரிமிதமான மக்கள் ஆதரவுக்கான காரணம் அறியாதவர்கள். அவரிடம் குறைகள் இருக்கலாம்; அவருக்கு எதிராக விமர்சனங்கள் வைக்கலாம். ஆனால் மக்கள் மீது அவர் வைத்திருந்த உண்மையான பாசம், கேள்விகளுக்கு அப்பாற்பட்டது.

    எல்லாருக்கும் தெரிந்ததுதான்- 1977இல் தான் முதல்வராக பொறுப்பு ஏற்ற உடன் எம்ஜிஆர் பிறப்பித்த முதல் உத்தரவு- 'சைக்கிளில் 'டபுள்ஸ்' செல்லலாம்!'

    யோசித்துப் பாருங்களேன்... ஆபத்து இல்லாத சிக்கனமான ஏழைகளின் வாகனம் சைக்கிள். அதில் 'டபுள்ஸ்' (இருவர்) செல்வதை சட்டம் அனுமதிக்கவில்லை; மீறிச் சென்றால் அபராதம். அது ஆங்கிலேயர் காலத்துச் சட்டம். ஆனால் சுதந்திரம் கிடைத்து 30 ஆண்டுகள் கழித்து 1977இல் எம்ஜிஆர் வந்துதான் இந்த சட்டத்தை ரத்து செய்தார்.

    தான் முதல்வராக இருந்தவரை, அத்தியாவசிய பொருட்களின் விலை உயராமல் பார்த்துக் கொண்டார்;

    சின்னஞ்சிறு ஊர்களுக்கும் 'டவுன் பஸ்' அறிமுகப்படுத்தினார்; ரேஷன் கடையில் பொருட்கள் தடையின்றிக் கிடைப்பதை உறுதி செய்தார்; பள்ளிக் குழந்தைகளுக்கு சத்துணவு வழங்கி அவர்களைப் பள்ளிக்கு 'அழைத்து வந்தார்'; எதிர்காலத் தேவையைக் கருத்தில் கொண்டு பொறியியல் உள்ளிட்ட 'தொழில்முறை' படிப்புகளை எல்லாருக்கும் திறந்து வைத்தார். 'ஊருக்குள் செருப்பு அணிந்து வரக் கூடாது' என்கிற சமூகக் கொடுமை நிலவிய காலத்தில், ஏழைக் குழந்தைகளுக்கு அரசு மூலம் இலவச காலணி தந்து, அவர்களின் உரிமையை வெகு ஆழமாகக் கொண்டு சேர்த்தார்.

    ஊராட்சி நிர்வாகத்தில், 'மணியம்' 'கர்ணம்' என்று இருந்த பரம்பரைப் பதவிகளை ஒழித்தார். அந்த இடத்தில், கிராம நிர்வாக அலுவலர் என்கிற அரசுப் பணியைக் கொண்டு வந்தார்.

    பாஸ்கரன் கிருஷ்ணமூர்த்தி

    முன்னர், மணியம் கரணம் முன்பாகக் கைகட்டி நின்ற மக்களின் புதல்வர்களை புதல்விகளை, அதே பதவியில், கிராம நிர்வாக அலுவலர் என்கிற அரசுப் பணியில் அமர வைத்து அவர்களுக்கு அதிகாரம் வழங்கினார். இதற்கு இணையான சமூக நீதி நடவடிக்கை வேறு எதுவும் இருக்க முடியுமா..?

    எம்ஜிஆர் பின்பற்றியது- மோதல் அரசியல் அல்ல; ஒரு 'மாடல்' அரசியல்.

    தேர்தல் கால அரசியலை அரசின் நடவடிக்கைகளில் நுழைக்க முயற்சித்ததே இல்லை. இலவச சத்துணவு திட்டம் சிறப்பாக செயல்பட, மத்திய தொகுப்பில் இருந்து பங்களிப்பு அவசியம் என்பதை உணர்ந்த எம்ஜிஆர், தானே நேரடியாக தில்லிக்கு சென்று மத்திய உணவுத் துறை அதிகாரிகளிடம் பேசி தேவையான உதவியைப் பெற்று வந்தார். 'என் மக்களுக்காகக் கையேந்துவதை நான் அவமானமாகக் கருதவில்லை' என்று வெளிப்படையாக அறிவிக்கும் துணிச்சல் பெற்று இருந்தார்.

    மத்திய மாநில உறவுகள் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு 'எம்ஜிஆர் மாடல்' - ஒரு சிறந்த உதாரணம். கண்மூடி ஆதரவு/கண்மூடி எதிர்ப்பு அவரிடம் இருந்ததே இல்லை.

    தமிழகத்துக்கு என்ன வேண்டும்; அதனை மத்திய அரசிடம் இருந்து எவ்வாறு பெற வேண்டும்; எங்கே விட்டுத் தர வேண்டும், எங்கே கண்டிப்புடன் இருக்க வேண்டும் என்பதை எம்ஜிஆர் நன்கு அறிந்து வைத்து இருந்தார்.

    அரசியல் வேறு; அரசு வேறு என்பதில் மிகத் தெளிவாக இருந்தார்.

    தனது அரசியல் வரலாற்றில் ஒரு முறை கூட, தப்பித் தவறியும், சாதி மதம் மொழி என்று எந்தப் பாகுபாட்டையும் அரசியல் லாபத்துக்காக எம்ஜிஆர் பயன்படுத்தியதே இல்லை. எல்லா மக்களையும் ஒன்றுபோல் பாவித்தார்; எல்லாரையும் ஒன்றுபோல் நேசித்தார்.

    அவருக்கு எதிரான பேச்சுகளை எதிர்க்கட்சி முன்வைத்த போதும், அவர்களுக்கு எதிராக, தனிநபர் விமர்சனங்களை எம்ஜிஆர் ஒருபோதும் முன்னெடுத்ததே இல்லை.

    ஏளனம் அவமானம் எதிர்ப்பு... அனைத்தையும் ஒரு புன்சிரிப்புடன் கடந்து சென்றார்.

    எம்ஜிஆர் மறைந்து சில ஆண்டுகளுக்குப் பிறகு, அவர் எழுதி வைத்த உயில் பத்திரத்தைக் காண நேர்ந்தது. ஒருகணம், கண்கள் இமைக்க மறுத்தன. 'அப்ப்ப்பா.. என்ன இது?

    புகழின் உச்சியில் இருந்த, அதிகாரம் மிக்க ஒரு திரைப்பட நாயகன், பத்தாண்டு காலம் தமிழக முதல்வர்...

    அவரிடம் இருந்த சொத்துகள்! நேர்மையான ஓர் அரசு அலுவலருக்கு எவ்வளவு இருக்கக் கூடுமோ அவ்வளவே அவரிடம் இருந்தது. அதையும் தானம் தந்து விட்டுத் தானும் மறைந்து போனார்! இதுதான் அவரின் பொது வாழ்க்கை சரித்திரம்.

    எம்ஜிஆர் - மதுவை ஏற்காத, வன்முறைக்கு எதிரான, காந்தியத்தில் நம்பிக்கை கொண்ட பொதுவுடமைவாதி. எம்ஜிஆர் - கடின உழைப்பின் அடையாளம்.

    எம்ஜிஆர் - கலையின் மகத்துவம் அறிந்த கதாநாயகன்.

    எம்ஜிஆர் - பொதுமக்கள் நலன் காத்த முதல்வர்.

    அனைத்தையும் விட,

    எம்ஜிஆர் - மக்களை மறக்காத, மக்கள் மறக்காத ஒரு மாபெரும்....மக்கள் திலகம்!

    Next Story
    ×